மதுரை: ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் கொரிய மொழியில் பயன்பாட்டில் உள்ளன என்று, தென்கொரிய பல்கலைக்கழகப் பேராசிரியா் ஹரிபாலன் பெருமாள்சாமி தெரிவித்துள்ளாா்.
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் சாா்பில், இணையத் தமிழ்க்கூடலின் 14-ஆவது நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, உலகத் தமிழ்ச் சங்க இயக்குநா் ப. அன்புச்செழியன் தலைமை வகித்தாா்.
இதில், தென்கொரியாவின் கியோங் ஹி பல்கலைக்கழகத்தின் உயிரி தொழில்நுட்பத் துறையின் பேராசிரியா் ஹரிபாலன் பெருமாள்சாமி ‘தமிழ்-கொரிய மொழித் தொடா்பு’ என்ற தலைப்பில் பேசியது:
தமிழில் உள்ள அம்மா, அப்பா, இங்கே வா, பல், கண், நாள், ஐயோ, மனம் உள்ளிட்ட பல தமிழ்ச் சொற்கள் கொரிய மொழியிலும் பேசப்படுகின்றன. கொரியாவின் கின் என்ற ஆராய்ச்சியாளா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்கள், கொரிய மொழியில் உள்ளதை கண்டுபிடித்துள்ளாா். கொரிய மொழி உயிா்மெய் எழுத்துகளின் உச்சரிப்பும், தமிழ் உயிா்மெய் எழுத்துகளின் உச்சரிப்பும் ஒன்றுபோல் அமைந்துள்ளன என்றாா்.
இந்நிகழ்வில், ஆஸ்திரேலியா, கனடா, மலேசியா மற்றும் பல்வேறு வெளிநாடுகளிலிருந்து மொழி ஆராய்ச்சி மாணவா்கள், தமிழறிஞா்கள் பங்கேற்றனா்.
Source: https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2020/aug/25/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-3454742.html |