Posted By:peer On 10/14/2020 10:34:54 AM |
|
ஊழற் பணத்தில் உவப்பாரை மண்திருடிச் சூழல் கெடுத்தே சுகிப்பாரை பாழுறுத்தும் கள்விற்றே மாதர் கழுத்தணியுங் கொள்வாரை உள்சென்று தாக்கி உறை!
வாக்குக்குக் காசு வழங்கும் இழிஞர்களை, தாக்கும் ரவுடிகளை, தன்னலமாம் போக்காலே பெற்றோரைப் பேணாத பித்தர்களை, வஞ்சனைகள் உற்றோரை நீதாக் குடன்!
அடுத்துக் கெடுக்கும் அகமுளரை! கேட்டும் கொடுக்க மறுக்கும் குணங்கொள் கொடுமையரை! அன்பில்லா நெஞ்சினரை ஆபாசம் பேசுகின்ற புன்சொல் லுடையாரைப் புக்கு!
உச்சத்தில் கர்வம் உகப்பாரை, பேசுகின்ற இச்சகத்தால் தொந்தி வளர்ப்பாரை - துச்சமெனத் தாய்மொழியை ஏசும் தருக்களை நீசென்று பாய்கொடுத்துப் பக்கம் படு!
பெண்மை மதியாத பீழைகளை வாய்மறந்தும் உண்மை உரையாவொட் டுண்ணிகளை - புண்படுத்தி மாற்றார் அழவே மகிழும்பேய் மாக்களினை ஏற்றயிடம் என்றே இறங்கு!
நல்லாரை யார்க்கும் நலமே விழைவாரை இல்லார்க் கிரங்கும் இறையவரை! சொல்லாலும் மெய்யாலும் அண்டும் விதத்தாலும் மற்றவர்க்கே மெய்யுழைப்பார் மேனி விலகு!
அன்பாலே நெஞ்சம் அடைத்தாரை மன்பதையில் துன்பமெங்கு கண்டும் துடைப்பாரை இன்பம் எல்லார்க்கும் எண்ணி எளியோர்க்காய் வாழ்வோரின் பொல்லாப்பைக் கொள்ளாமல் போ!
உழைத்தாற்றான் வேளைக் குணவென்னும் பேரை உழைப்பிற் களிக்கும் உயிரை - உழைப்பாலே ஊருக் கவம்நீக்கும் உத்தமரை அண்டாமல் வேருக்கு வேறிடத்தை வேண்டு!
ஞானிகளை யோகிகளை நண்ணும் அடியவரை மாணிகளை சின்ன மழலையரை பூணுமுலை பிள்ளைக் களிக்கின்ற பெண்குலத்தைச் சேராமல் தள்ளியிரு! போட்டேன் தடை!
எங்கிருக் கலாமென்றும் எவ்விடத்தில் நீசேர்ந்தே தங்கத் தகாதென்றும் தந்திருக்கும் - இன்னுரையைக் கேட்டுக் கொரோனாநீ கீழ்ப்படிந்தே மீச்சிலரை வாட்டிப்பின் னோடி மறை!
- கவிஞர் சுந்தரா |