Posted By:peer On 10/14/2020 10:36:17 AM |
|
தமிழை ஒட்டு மொழி என்று சொல்வார்கள். எழுத்தினை ஒட்டிக் கொண்டே சென்றால் எழுத்து எப்படி ஒட்டப்படுகிறதோ அத்தகைய ஓசையுடைய சொல் கிடைக்கும். ஆனால், ஆங்கிலத்தில் சொற்களின் ஒலிப்பு அவ்வாறு அமைவதில்லை. சி ஓ எம் இ என்ற எழுத்துகளை ஒட்டினால் தான் COME என்ற சொல் கிடைக்கும். அதனைச் சியோயெம்மி என்ற சொல்லாக ஒலிக்க முடியாது. எழுத்தின் ஒலிப்புக்கும் சொல்லின் ஒலிப்புக்கும் தொடர்பே இல்லாமல் கம் என்று ஒலிக்க வேண்டும்.
ஆங்கிலத்தில் எழுத்தின் ஒலி ஒன்றாக இருக்கும். அவை சேர்ந்து தரும் ஒலி முற்றிலும் வேறாக இருக்கும். அப்படித் தான் எல்லா இடங்களிலும் மாற்றி மாற்றி ஒலிக்கிறோமா என்றால் அதுவும் இல்லை.
I AM என்ற தொடரைப் பாருங்கள். ஐ ஏம் என்று எழுத்தின் ஒலிப்பிலேயே வரும். சில இடங்களில் எழுத்தாய் ஒலிக்காது. சில இடங்களில் எழுத்தாகவே ஒலிக்கும். ஆங்கிலத்தில் இந்தக் குழப்பம் எப்போதும் உண்டு. தமிழில் இத்தகைய குழப்பம் எப்போதும் இல்லை.
தமிழைப் பாருங்கள். அ, ம், மா ஆகிய எழுத்துகளை ஒட்டினால் அம்மா என்ற சொல் கிடைத்துவிடுகிறது. எழுத்துக்குரிய ஒலிப்பைச் சொல்லிக் கொண்டே சென்றால் போதும். சொல்லுக்குரிய ஒலிப்பும் கிடைக்கும். தமிழ்ச் சொற்களில் எவ்விடத்திலும் எழுத்துக்கு மாறான ஒலிப்பு இல்லை. எவ்வளவு பெரிய சொல்லாயினும் தமிழில் அப்படியே படித்துக் காட்டலாம்.
அல்லோலகல்லோலப்பட்டது – இந்தச் சொல்லைப் பாருங்கள். பதின்மூன்று எழுத்துகள் இருக்கின்றன. தமிழில் ஏழுக்கும் மேற்பட்ட எழுத்துகள் இருப்பின் அது பெரிய சொல் ஆகும். ஆனால், எவ்வளவு பெரிய தமிழ்ச்சொல் ஆனாலும் ஒரே மூச்சில் படிக்கலாம். எங்கேயும் தயக்கம் வராது. அந்தச் சொல்லை அறியாத போதும் படித்து விடலாம்.
ஆங்கிலத்தில் நிறைய எழுத்துகளைக் கொண்ட சொற்கள் மிகுதியாக இருக்கின்றன. அவர்கள் சொற்களை (சொற்பகுதிகளை) ஒட்டியொட்டியே பெரிய சொற்களை ஆக்குவார்கள். அவற்றை ஒரே மூச்சில் படித்து விட முடியுமா ? ஆங்கிலம் நன்கு அறிந்தவர்களே கூடத் தயங்குவார்கள்.
Incomprehensibilities என்பது ஓர் ஆங்கிலச் சொல். எழுத்துகளை எண்ணிப் பாருங்கள். இருபத்தொன்று. இதனைப் படிக்கையில் யாராயினும் தடுமாறுவார்கள். எழுத்தின் ஓசைக்கும் சொல்லின் ஒலிப்புக்கும் இடையே முன்னே சொன்ன வேறுபாடுகள் இருக்கும். ஆங்கிலத்தில் ஓரளவு பயிற்சி பெற்றவர்கள் தாம் அத்தகைய சொற்களை எடுத்த எடுப்பில் ஒலிக்க முடியும்.
பள்ளிக் காலத்தில் ஒருவர் படிப்பார். இன்னொருவர் ஒவ்வோர் எழுத்தாகச் சொல்லிப் பார்த்துப் படிப்பார். அதனை “எழுத்துக் கூட்டிப் படிக்கிறான்” என்று சொல்வார்கள். படிக்கத் தெரியாத போதும் தமிழ் எழுத்துகளை ஒவ்வொன்றாகக் கூட்டிப் படித்து விடலாம். அதாவது எழுத்துக் கூட்டிப் படித்து விடலாம். அந்தச் சொல் வந்து விடும். ஆங்கிலத்தில் அப்படி எழுத்துக் கூட்டிப் படிக்க முடியாது. படித்தாலும் அந்தச் சொல் வராது.
அதனால் தான் தமிழ் மிகவும் எளிமையான மொழி என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். எளிமைக்கு எளிமை, வளமைக்கு வளமை, தொன்மைக்குத் தொன்மை, இளமைக்கு இளமை என்று தமிழின் அருமைகளை உலகோர் வியக்கின்றார்கள். |