தொற்று நோயின் போது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சிறந்த சுகாதார வழிகாட்டல்களையும் தனிமைப்படுத்தும் முறையையும் பரிந்துரைத்தவர் யார் தெரியுமா? இந்த கேள்வியை தனது கட்டுரையில் எழுப்பிய அமெரிக்க பேராசிரியர் கிரேக் கான்சிடைன் , அதற்கான பதிலை இவ்வாறு குறிப்பிடுகிறார்.
"1400 வருடங்களுக்கு முன்னர் இருந்த இஸ்லாத்தின் தூதுவர் முஹம்மத் என்பவர்தான்" இதற்கு ஆதாரமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இந்தக் கொள்ளைநோய் "உங்களுக்கு முன்னிருந்தவர்கள்மீது" அல்லது "பனூ இஸ்ராயீல் சமுதாயத்தி(ல் ஒரு பிரிவினரி)ன் மீது" சாட்டப்பட்ட தண்டனையாகும். (நீங்கள் வசிக்கும்) ஓர் ஊரில் அது ஏற்பட்டிருந்தால், அதிலிருந்து தப்பிப்பதற்காக அங்கிருந்து வெளியேறாதீர்கள். ஓர் ஊரில் அது ஏற்பட்டிருந்தால் அங்கு நீங்கள் செல்லாதீர்கள். இதை உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். “நோயுற்ற கால்நடைகள் நோயற்ற கால்நடை களுக்கு அருகே சென்று தண்ணீர் குடிக்க வைப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்” (புகாரி) போன்ற ஹதீத்களை தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார். (https://www.newsweek.com/prophet-prayer-muhammad-covid-19-coronavirus-1492798)
தொற்றுநோய் இருப்பவர் மற்றவர்களுடன் தங்குதல் கூடாது. அவ்வாறு தங்குவதைத் தடை செய்யவேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்: “நோயுற்ற மனிதரை ஆரோக்கியமானவருக்குப் பக்கத்தில் கொண்டு வரவேண்டாம்”. (புகாரி, முஸ்லிம்)
அல்ஹம்துலில்லாஹ்... ஒவ்வொரு காலத்தில் தோன்றும் பிரச்னைகளுக்குமான தீர்வுகளை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள். பெரும்பாலும் அதனைப் பின்பற்றாமல் நாம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறோம். தற்போது ஏற்பட்டுள்ள இந்த கொரானா பாதிப்பினையும் நம் தூதர் வழியில் எப்படி தீர்ப்பது என பார்ப்போம்.
இது ஊருக்கு மட்டுமில்லை, நமது வீடுகளுக்கும் பொருந்தும். வீட்டில் யாருக்கேனும் காய்ச்சல், தலைவலி, இருமல், உடல்வலி இருக்குமேயானால் கீழ் கண்ட முறைகளை நடைமுறைப்படுத்தி நோயை ஏர்வாடியை விட்டே அகற்ற உறுதியேற்போம்.
நோயாளியை மருத்துவரிடம் காண்பித்து உரிய மருந்துகளை கொடுக்கவும். வயோதிகத்தை தவிர அனைத்து நோய்களுக்கும் மருந்து உண்டு என்றார்கள் பெருமானார் ஸல் அவர்கள். அனைவரும் பாதுகாப்பாக இருக்க ஒவ்வொருவரும் கவனமாக இருக்க வேண்டிய காலத்தில் இருக்கிறோம். மருத்துவர்கள் அறிவுறுத்தும் பாதுகாப்பு முறைகளை அலட்சியமின்றி கடைப்பிடிப்பதும் நமது மார்க்கம் வலியுறுத்தும் செயலாக இருக்கிறது. தன்னுடைய கை மற்றும் நாவின் மூலம் (ஏற்படும் தீங்குகளை விட்டும்) சக முஸ்லிம்கள் பாதுகாப்பு பெற்றால் தான் அவர் உண்மை முஸ்லிமாக முடியும் என்பதை அறிந்தவர்கள்தானே நாம்?
நபி (ஸல்) அவர்களே தும்மினால் கையையோ அல்லது துணியையோ வாயருகில் வைத்துக்கொள்வார்கள். தும்மலின் சப்தத்தை தாழ்த்திக் கொள்வார்கள்.(அபூதாவூத் 4374) நபிகள்நாயகம் (ஸல்) அவர்ளுடைய எச்சிலை பரக்கத்தாக நினைக்கும் நபித்தோழர்கள் முன்னால் இருக்கும் போது கூட நபி (ஸல்) அவர்கள் தும்மல் நீர் யார் மேலும் பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது நமது முன்மாதிரியை முதல் மாதிரியாக நாம் பின்பற்றினால் நமது வாழ்வு அனைத்து துறைகளிலும் சிறப்பானதாக இருக்கும்.
அவ்வாறே "ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக- அல் குர்ஆன் 9-51 " என அல்லாஹ் நமக்கு தெளிவுபடுத்துகிறான். எனவே எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்ற தேவையற்ற பயம், கலக்கம் நமக்கு தேவையில்லாத ஒன்று. இறைவன் மீது முழுமையான நம்பிக்கை வைத்து நமது செயல்பாடுகளை அமைத்து கொள்ளும்போது எந்த சூழலிலும் மன நிம்மதியுடன், மன உறுதியுடன் நாம் இருக்க முடியும்.
உலகம் இறைவனின் கட்டளையினால் இயங்குகிறது. அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நவின்றார்கள் - " மரத்திலிருந்து ஒரு இலை உதிர்வதானாலும் அது அவனுடைய அனுமதியில்லாமல் நடப்பதில்லை" - எனவே எந்த சூழலிலும் பதற்றமடைய வேண்டாம்.
வீட்டில் அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூறவும். அல்லாஹ் உடைய திக்ருகள் நமது நாவில் எப்போதும் திளைத்திருக்கட்டும். (இத்துடன் இணைக்கப்பட்டுள்ள துஆக்களை அதிகம் கேட்டு வரவும்)
அனைத்து கடமையான , ஸுன்னத்தான தொழுகைகளுடன் , நஃபில் தொழுகைகளையும் வீட்டில் அனைவரும் கடைப்பிடித்து, வல்லமை படைத்த அந்த இறைவனிடம் பாதுகாவல் தேடுவோம். அல்லாஹ்விடம் நமது பாவ மன்னிப்பிற்காக ( தவ்பா) தினமும் மன்றாடுவோம்.
மேலும் அவர்கள் பாவமன்னிப்பைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்பவனாக இல்லை" - அல் குர்ஆன் 8:33 ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ - அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.- அல்குர்ஆன் 25:70
பாவம் என்பது நாம் நினைத்து கொண்டிருக்கும் பெரும் பாவங்கள் மட்டுமல்ல. அல்லாஹ் வலியுறுத்திய கடமைகளையும், ஒழுக்க மாண்புகளையும் கடைப்பிடிக்காமல் இருப்பதும் பாவமாகும். புறம் பேசுவது, பொய் சொல்வது, பெருமை கொள்வது உள்ளிட்ட அனைத்து பாவமான காரியங்களிலிருந்தும் தவிர்ந்திருப்போம். நிச்சயமாக பாவிகளை அல்லாஹ் நேசிக்கமாட்டான் என்பதை நினைத்து பயந்திருப்போம்.
அனைத்து விதமான பாவங்களிலிருந்தும் நாம் விலகி தவ்பா செய்து அல்லாஹ்வின் பக்கம் நாம் திரும்பிவிடும்போது, திருந்தி விடும்போது அல்லாஹ் அனைத்து வித சோதனைகளையும் நீக்கி விடுவான். இன்ஷா அல்லாஹ்.
இந்த ஆன்மீக வழிமுறைகளையும் கடைபிடிப்பதன் மூலம் இந்த நோயை நம் நமது ஊரை விட்டே ஒழித்து விடலாம். இன்ஷா அல்லாஹ். இணைந்து போராடி இறையருளால் கொரோனாவை விரட்டுவோம் |