2015 ஆண்டு மே 30ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் இறைச்சிக்காக மாடுகளை கொன்றதாகக் கூறி அப்துல் குரோஷி என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.
அதே ஆண்டு 2015, செப்டம்பர் 28ம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் வீட்டிற்குள் மாட்டிறைச்சி சமைத்து சாப்பிட்டார்கள் என்று கூறி தாத்திரியில் 70 வயதான முகம்மது அக்லாக் என்ற முதியவரை அடித்தே கொன்றார்கள் பசுப் பாதுகாவலர்கள். அக்டோபர் 9ம் தேதி காஷ்மீர் மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி பெட்ரோல் குண்டு வீசி ஒருவர் கொல்லப்பட்டார்.
2016 ஜனவரி 13ல் மத்திய பிரதேச மாநிலத்தில் ரயில் நிலையம் ஒன்றில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக பொய் சொல்லி கணவர் மற்றும் மனைவி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
2016 மார்ச் மாதம் 18ல் ஜார்கண்ட் மாநிலத்தில் இறைச்சிக்காக மாடுகளை கொண்டு சென்றதாகக் கூறி 3 இஸ்லாமிய இளைஞர்களை பசு பாதுகாவலர்கள் சிறைபிடித்தனர். கொடூரமாக தாக்கப்பட்ட பின்னர் அவர்கள் மூவரையும் தூக்கிலிட்டு படுகொலை செய்தனர் இந்துத்துவ அடிப்படைவாதிகள். ஏப்ரல் 2ம் தேதி ஹரியானா மாநிலத்தில் இறைச்சிக்காக வேறு மாநிலத்திற்கு மாடுகளை கொண்டு சென்றதாகக் கூறி அப்பாஸ் என்பவர் கொல்லப்பட்டார்.
2016ம் ஆண்டு ஜூன் மாதம் 2ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி தலித் இளைஞர்கள் 5 பேர் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்டனர்.
2016 ஜூன் 10ம் தேதி ஹரியானா மாநிலம் குர்கானில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் 2 பேரை மாட்டு சாணத்தை உண்ண வைத்து ‘அழகு' பார்த்தனர் இந்துத்துவவாதிகள்.
2016 ஆண்டு ஜூலை 15ல் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள ஊனா எனும் நகரில் மாட்டுத் தோலை உரித்ததாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரமாக தாக்கப்பட்டனர்.
2016ம் ஆண்டு ஆகஸ்டு 18ம் தேதி கர்நாடக மாநிலம் உடுப்பியில் பாஜக தொண்டர் ஒருவரே பசுவின் பெயரால் பசு பாதுகாவலர்களால் கொல்லப்பட்டார்.
2016ம் ஆண்டு ஆகஸ்டு 24ல் ஹரியானா மாநிலத்தில் மாடுகளை கொன்றதாகக் கூறி இஸ்லாமிய தம்பதியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர்.
ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் நகரில், 2017ம் ஆண்டு ஜீலை 29ம் தேதி, காரில் மாட்டிறைச்சி கடத்துகிறார் என அன்சாரி என்பவரை கடத்திய ஒரு கும்பல் அவரை படுகொலை செய்கிறது. இது தொடர்பாக உள்ளூர் பாஜக பிரமுகர் உள்பட 12 பேர் மீது அன்சாரி மனைவி புகார் தெரிவிக்கிறார். குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி எந்த கருத்தையும் வெளியிடவில்லை, இதை நிறுத்துவதற்குரிய முயற்சிகளையும் கூட தவிர்த்துவிட்டார். இந்த சம்பவங்களால் எழுத்தாளர்கள், தங்களது சாகித்ய அகாடமி விருதுகளை திரும்ப ஒப்படைத்ததும் இந்தியாவில் நடந்தது
டெல்லி பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பாடம் எடுக்கும் நபானிப்பா பட்டாச்சார்ஜி, இந்தியாவில் எந்த சமூகத்துக்கும், ஒரே மாதிரியான உணவு கலாச்சாரம் இல்லை என்பதனை நாம் நினைவில் கொள்ள வேண்டும். உயர் வகுப்பு பிரிவினரான, இந்து பிராமணர் சமூகத்தினர் அனைவரும் சைவ உணவு பழக்கம் கொண்டவர்கள் இல்லை. அதே போல், இஸ்லாமியர்கள் அல்லது கிறிஸ்துவர்கள் அனைவரும் அசைவ உணவுப் பழக்கம் கொண்டவர்கள் இல்லை'' என்றும் தெரிவித்தார். மேலும் இந்தியாவின் உணவு கலாச்சாரத்தை 'சைவ உணவு' என்று விவரிக்கும் முயற்சி என்பது சோம்பல் மற்றும் விஷமத்தனமான செயல் எனக் கூறலாம் என்றார்.
அக்லாக் கொலை வழக்கை விசாரித்து, முதன்மை குற்றவளாகிகளை உடனடியாக கைது செய்த காவல்துறை ஆய்வாளர் சுபோத்குமார் அதே வருடமான 2015 டிசம்பர் மாதம் இந்துத்வா தீவிரவாதிகளால் ஒரு வன்முறையில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்திய விமானப்படையில் பணியாற்றி வரும் இக்லாக்கின் மூத்த மகன் சர்தார்ஜ், 'இன்னமும் இந்த தேசத்திடம் நம்பிக்கை இருப்பதாகவும், தொடர்ந்து தேசத்திற்காக பாடுபடுவேன் என்று அப்போது தெரிவித்தார்
மாட்டிறைச்சி விவகாரத்தில் பல மனித உயிர்கள் பலியாகியுள்ளன. 30க்கும் மேற்பட்ட இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. எண்ணிலடங்கானவர்கள் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.
மாட்டிறைச்சி உணவரசியலின் சர்ச்சையை தடுத்து நிறுத்துங்கள் இல்லையெனில் இந்தியா அளவிலும் சர்வதேச அளவிலும் இந்தியா தனது மதிப்பை இழக்க நேரிடும் என்று சர்வதேச பொருளாதார மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் வெளியிட்ட அறிக்கை இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையில் எத்னிக் டென்ஷன் (Ethnic tension) என்ற வார்த்தை பிரயோகம் பயன்படுத்தப்பட்டது.
சர்வதேச அளவில் இந்தியாதான் அதிக அளவில் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்து வருகிறது. 30,000 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் ஆகிறது என்பதும் ஒரு செய்தியாக நம்மிடம் தொங்கி நிற்கிறது.
இந்தியாவின் வடமாநிலங்களிலும், அரிதாக கர்நாடகாவிலும் நாம் கேள்விப்பட்ட மதத்தை முன்னிலைப்படுத்தி, பசுவின் பெயரால் நிகழ்த்தப்பட்ட கொலைகளும், வன்முறைகளும் நமக்கு ஒரு செய்தியாகவே இருந்தது. நாமும் இந்த வன்முறைகளை கண்டித்து ஒரு வரி பதிவுகளை எழுதிவிட்டு கடந்து சென்று விட்டோம்.
அப்போதெல்லாம் எனக்கு பலவித சந்தேகங்கள் எழுந்தன. ஒருவன் மாட்டுக்கறி சாப்பிடுவதற்காகவோ, வைத்திருப்பதற்காகவோ, விற்பனை செய்வதற்காகவோ சக மனிதனால் கொடூரமாக கொல்லப்படுவது சாத்தியமா? மாட்டுக்கறி வைத்திருந்ததாக, தான் பார்க்க வளர்ந்த தன் பகுதி இளைஞர்களாலேயே வீடு புகுந்து கொல்லப்பட்ட அக்லகின் குடும்பம், அது மாட்டுக்கறியல்ல, ஆட்டுக்கறி என்று கதறியது இன்னும் நெஞ்சை அழுத்தியது. ஆட்டுக்கறி என்று சொல்வதன் மூலம், அது மாட்டுக்கறியாக இருந்தால் கொல்லலாம் என்பதை நியாயப்படுத்தும் செயலாகவே பார்க்கும் இந்த சமூகம், மதவாதத்தால் புரையோடிக் கிடக்கின்றதே என. நம் தமிழ்நாட்டில் அதற்கு சாத்தியமே இல்லை. இது ஒரு முற்போக்கு மாநிலமாகவும், சமத்துவம், சமூக நல்லிணக்கத்தை முன்னிறுத்தும் நிலமாக இருப்பதுமே அதற்கு முக்கிய காரணமே என்று சமாதனம் கொண்டேன்.
கடந்த பத்து வருடங்களாக பாசிசத்தின் கூறுகள் பண்பாட்டு தளத்தில் நிகழ்த்திய சேதாரங்களை திமுக அரசு உன்னிப்புடன் கவனித்து சமத்துவ சிந்தனைகளை உயிர்ப்புடன் இயங்க வழிவகை செய்யும் எனவும் எதிர்பார்க்கிறேன்.
ஆனால் நாம் எதிர்பார்த்ததை விட அதிகமாக, ஒரு அரசு அதிகாரியே மாட்டிறைச்சிக்கு எதிராக கோவை மாவட்டம் அவினாசியில் பேசிய, மிரட்டிய காணொலி அதிர்ச்சியை உள்ளாக்கியது. எது நடந்துவிடக்கூடாதென எதிர்பார்த்தோமோ அது நாம் நினைத்ததை விடை வேகமாகவும், மோசமாகவும் நடந்திருக்கிறதே என்ற கவலை நம்மை ஆட்கொள்கிறது.
ஆனாலும் நடப்பது திமுக ஆட்சியல்லவா என ஆசுவாசப்படுத்திய போது, அமைச்சர் இச்சம்பவம் குறுத்து ஆட்சியர் விசாரணைக்கு உத்திரவிடப்பட்டிருப்பதாக டிவிட்டரில் தெரிவித்தபோது நம்பிக்கை உருவாகியது. அதே நேரத்தில் இன்றைய செய்தியான, மாட்டிறைச்சி தடை குறித்து பேசிய அதிகாரி பக்கத்து ஊருக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார் என்பதை அறிந்தவுடன் பயமாக இருக்கிறது. பாசிசத்தின் கூறுகளை வெளிப்படையாக முன்வைத்து ஒரு அரசு அதிகாரி பேசியதை ஆதாரத்துடன் கண்ட போதும் கூட பணியிடை மாற்றம் என்ற கண்துடைப்பு தான் அவர்களுக்கான தண்டனையா என?
தமிழ்நாடு முதலமைச்சருக்கு என் பணிவான வேண்டுகோள்…
கடந்த பத்து வருடங்களாக பாசிசவாதிகளின் துணையுடன் சீரழிந்த தமிழ்நாட்டை தூக்கி நிறுத்தும் உங்களுடைய அரசியல், சமூக நடவடிக்கைகளுக்கு என்றும் ஆதரவளிப்பவனாக, துணையிருப்பவனாக…
தமிழ்நாட்டு நிலப்பரப்பை பெரியார் மண்ணாகவே வைத்திருப்பதற்கு உண்டான சீரிய நடவடிக்கைகளையும், சமூக நல்லிணக்கத்திற்கான முற்போக்கு சிந்தனைகளை அரசு மட்டத்திலும், அரசு அதிகாரிகள் மட்டத்திலும் உருவாக்கவும், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தாமதமில்லாமல் செயல்படுத்த வேண்டுமெனவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும் சாதி, மத, இன, மொழி, உணவரசியல் துவேசத்தை வைத்து சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் சக்திகளின் மீதான நடவடிக்கையில், தாமதமும், பாரபட்சமும் காட்ட வேண்டாம் என்றும் கேட்டு கொள்கிறேன்.
மாநிலத்தை பொருளாதாரம், சுகாதாரம், கல்வி மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் முன்னேற்றும் உங்களுடைய அயராத உழைப்பிற்கு பாதகமாகவும், உங்களுடைய செயல்பாடுகளை திசைதிருப்ப திட்டமிட்டு உருவாக்கப்படும் விசயங்களை முளையிலேயே கிள்ளி எறிந்து தமிழ்நாட்டை இந்தியாவின் முண்ணனி மாநிலமாக மாற்றுவீர்கள் என்று அபார நம்பிக்கை கொண்டவனாக!!!!
பிலால் அலியார் 29/06/2021 |