கல்வி கற்பது என்பது,இரு கண்களைப் போன்றது எனச் சொல்வர். அதையே, எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்பது, மூத்தோர் வாக்கு.
கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக
என்றார், வள்ளுவர்.
இந்த குறளின் சிறப்பு, எந்த இடத்திலும் துணைக்கால் (ா) இல்லாமல் அமைந்துள்ளது.
இந்தத் திருக்குறளை வள்ளுவர் துணைக்கால் இன்றி எழுதியது ஏன் தெரியுமா?
ஒருவன் கற்க வேண்டிய முறைப்படிக் கல்வி கற்றால் எவருடைய துணையும் இன்றி வாழ்வில் சொந்தக் காலில் நிற்கலாம் என்று உணர்த்தவே துணைக்கால் இல்லாமல் எழுதியிருக்கிறார்
ஒருவன் கற்ற கல்வியானது அவனுக்கு வாழ்நாள் முழுவதும், அவனது கால்கள் போல் துணை வரும் என்பதை குறிக்கவும் துணைக்கால் இல்லாமல் எழுதியிருக்கிறார்.
மேலும் இந்த குறளில் துணைக்கால் இல்லை என்பது மட்டுமல்ல, ஒற்றைக் கொம்பும் இரட்டைக் கொம்பும்கூட இல்லை என்பதை கவனியுங்கள்!
வள்ளுவர் ஏன் அப்படி ஒற்றைக் கொம்பும் இரட்டைக் கொம்பும்கூட இல்லாமல் எழுதினார் என்றால் நீ எவ்வளவு வேண்டுமானாலும் படி. ஆனால், நான் படித்தவன், அறிவாளி, என்னைப் போல் யாருண்டு? என்று அகம்பாவம் கொண்டுவிடாதே! *படித்ததால் உனக்கு ஒன்றும் கொம்பு முளைத்துவிடவில்லை* என்று உணர்த்தத்தான் வள்ளுவர் அப்படி எழுதியிருக்கிறார்.
இன்றைய சூழ்நிலையில் நாடிருக்கும் நிலையைக் கவனித்தால் இன்னொரு கருத்தும் சொல்லலாம்.
எவ்வளவுதான் படித்தால் என்ன? பட்டம் வாங்கிய பிறகு வேலை கிடைக்காமல் துணை இன்றித் தனியாகத்தான் நிற்கப் போகிறாய்! என்று இந்தக் குறள் சொல்வதாக கூட பார்க்கலாம்.
உண்மையில், துணைக்காலும் கொம்புகளும் இல்லாமல் இந்தக் குறள் இருப்பது இரண்டு விஷயங்களை நாம் வாழ்வில் சமனம் (’Balance’) செய்து வாழ வேண்டும் என்று காட்டுகிறது போலும்.
அதாவது, நீ கற்கும் கல்வியால் ’சொந்தக் காலில் நிற்கும்’ தகுதி உனக்கு உண்டாகும். அதற்காக அகம்பாவம் கொண்டு, நீ நிற்க எவரின் தயவும் தேவை இல்லை என்று நினைத்துவிடாதே.
கொம்பும் காலும் இல்லாத குறள் இப்படி நமக்குத் தெம்பும் தெளிவும் தருகிறது.
திருவள்ளுவர் இந்தக் கருத்தையெல்லாம் நினைத்துத்தான் எழுதினாரா? என்று கேட்டால் 'ஆமாம்'என்று உறுதியாகச் சொல்ல இடமில்லை.
ஏனெனில், அவர் காலத்தில் தமிழில் கொம்பு துணைக்கால் எல்லாம் இல்லை.
அதெல்லாம் ஜோஸஃப் பெஸ்கி என்னும் வீரமாமுனிவர் தமிழுக்குக் கொண்டுவந்த குறியீடுகள்.
எனவே மேலே சொன்ன கருத்துக்களில் வள்ளுவர் அந்தக் குறளை எழுதியிருக்க வாய்ப்பில்லை.
ஆனால் இப்படியெல்லாம் சிந்தித்துப் பார்க்கும்போது நம் மனதிற்கு இனிமையாக இருப்பதோடு வாழ்வுக்கு வழி காட்டி வெளிச்சமிடும் உயர்ந்த கருத்துக்களும் கிடைக்கின்றன அல்லவா?. |