நானும் என் தந்தையும் ஓர் இரவு தூங்கிக் கொண்டிருந்தோம், நாங்கள் தங்கியிருந்த இடத்தில் எங்களை சுற்றி நிறையப்பேர் தூங்கிக்கொண்டிருந்தார்கள்; என் தந்தையிடம் நான் சொன்னேன்: இவர்கள் யாரும் இன்று காலை இரண்டு ரக்அத் சுப்ஹு தொழுகைக்கு எழவில்லை!
தந்தை கூறினார்: மகனே, நீ மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை விட நீ தூங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்; உங்கள் நேர்மை மற்றவர்களின் தவறுகளை கேலி செய்யும் உரிமையை உங்களுக்கு வழங்காது, அதனால் அவர்களைப் பார்க்காதீர்கள்!
உள்ளங்கள் மாபெரும் கிருபையாளனின் இரண்டு விரல்களுக்கு இடையில் உள்ளன; அவன் விரும்பியபடி அவற்றைப் புரட்டுகிகிறான்; (நபிமொழி: அல்ஜாமிவுஸ் ஸஹீர்)
எனவே இறைவன் தனது நேரான பாதைக்கு உங்களைத் தேர்ந்தெடுத்திருப்பது, நீங்கள் வித்தியாசமானவர், அல்லது மிகுந்த இறை வணக்கம் உடையவர் என்பதற்காக அல்ல! அவனுடைய கிருபை உங்களை சூழ்ந்திருக்கிறது என்பதற்காகத்தான்.
எந்த நிலையிலும் அவை உங்களில் இருந்து அகற்றப்படலாம். ஆகவே உங்களுடைய நற்செயல்களையும், உங்களுடைய வணக்கங்களையும் மகிழ்ந்து, நீங்கள் ஏமாந்து விடாதீர்கள்!
யாருடைய செயல்களையும் பார்த்து குறைவாக மதிப்பிடாதீர்கள்! இறைவன், உங்கள் மீது கருணை காட்டாமல் இருந்திருந்தால், நீங்கள் அவருடைய இடத்தில் இருப்பீர்கள்;
மேலும் நீங்கள் வணக்கங்களில் உறுதியாக இருப்பது உங்கள் தனிப்பட்ட சாதனைகளில் ஒன்று என்று நினைக்காதீர்கள்! ஏனென்றால் இறைவன், وَلَوْلَاۤ اَنْ ثَبَّتْنٰكَ لَقَدْ كِدْتَّ تَرْكَنُ اِلَيْهِمْ شَيْــٴًـــا قَلِيْلًا ۙ மேலும், நாம் உம்மை உறுதிப்படுத்தி வைத்திருக்கவில்லை என்றால் நீர் அவர்கள் பக்கம் சிறிதேனும் சாய்ந்து போயிருத்தல் கூடும். (17:74) என்று தனது நபி ஸல்.. அவர்களிடம் கூறும் பொழுது நாமெல்லாம் எம்மாத்திரம்? என்று சிந்தித்துப் பாருங்கள்!
கலீஃபா உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ்... அவர்கள் கூறுகிறார்கள்: நமது முன்னோர்களான மார்க்க அறிஞர்களிடம் ஆய்வு செய்தோம்; அவர்கள் நோன்பிலோ தொழுகையிலோ வணக்கம் முழுமை அடைந்ததாக திருப்தி அடையவில்லை; மாறாக மனிதர்களின் தனிப்பட்ட விசயங்களில் தலையிடுவதை விட்டும் தன்னை பாதுகாத்துக் கொள்வதுதான் முழுமையான வணக்கம் என்று கூறுகிறார்கள்.
எனவே இரவில் நின்று வணங்கக் கூடியவன், பகலில் நோன்பு நோற்கக் கூடியவன், தனது நாவைப் பேணா விட்டால் மறுமை நாளில் தோல்வியடைந்தவனாகவே இருப்பான்.
இவ்வார்த்தைகள் நம் ஒவ்வொருவரையும் சுய பரிசோதனை செய்யத் தூண்டுகின்றன.
(ஹிஜ்ரி 390 களில் வாழ்ந்த அபூ இஸ்ஹாக் அஸ்ஸீராஜி ரஹ்.. அவர்கள் கூறியதாக டெலிகிராமில் அரபியில் வந்தது.)
அல்குர்ஆன்சிந்தனைகள்
ஜேஎஸ்ரிஃபாயீ |