அன்றைய அரபுலகத்தில் செயல்படுவதற்கான களம் விசாலமானதாகவே இருந்தது. நபி (ஸல்) அவர்கள் நினைத்திருந்தால் தமக்கு ஆதரவாக பெரும் மக்கள் திரளை ஒரே வீச்சில் உருவாக்கியிருக்க முடியும். அதற்கான வாய்ப்பு அங்கே இருந்தது.
அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் அரபுப் பிரதேசத் தலைவராகத் தன்னைக்காட்டி தேசியத் தலைவர் போல அரசியல் வழிகாட்டி போல அந்தச் சமுதாயத்தில் நடைபோட்டிருப்பார்களேயானால் அரபுச் சமூகத்திற்கான கொடியை ஏந்தியிருப்பார்கள். அப்படி ஏந்தியிருந்தால் குரைஷிகளும் இதர அரபுக் குலத்தினரும் நபி (ஸல்) அவர்களோடு அணி திரண்டிருப்பார்கள் இதன் மூலம் தனித்துவம் மிக்க வலிமையானதோர் அரேபிய அரசு உருவாகியிருக்கும். பெருமானார் (ஸல்) அதன் தலைவராக ஆகியிருப்பார்கள்.
ஆம்! அபூஜஹ்ல், உத்பா முதலிய மக்காவின் பெருந்தலைகளெல்லாம் அரேபிய இனவாதக் கொடியின் கீழ் அணிவகுத்து நின்றிருப்பார்கள். கண்ணை மூடிக் கொண்டு பெருமானார் (ஸல்) அவர்களைத் தலைவராக ஏற்றுக் கொண்டிருப்பார்கள். அவர்கள் ஏந்தியிருக்கும் அரபு தேசியக் கொடியின் கீழ் நின்று போர் பல புரிந்திருப்பார்கள். இதில் எள்ளளவும் ஐயமில்லை.
ஆம், இந்த நபி பெருமானார் (ஸல்) அவர்கள் 'வாய்மையாளர் நம்பகத் தன்மை மிக்கவர்' என்றெல்லாம் பெருமைபொங்கிடப் பறைசாற்றியவர்கள் தானே இந்தக் குறைஷிகள்.! கஅபா எனும் இறையில்லம் புனர் நிர்மாணம் செய்யப்பட்டபோது 'அல்ஹஜருல் அஸ்வத்' எனும் கருங்கல்லை அதற்குரிய இடத்தில் பொருத்திடும் பெருமைக்குரிய பொறுப்பை முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் நபியாகிடும் முன்னரே மனமுவந்து ஒப்படைத்தவர்கள் தானே இந்தக் குறைஷிகள்!
"முஹம்மதே! உங்களுக்கு அரசியல் தலைமைதான் வேண்டுமென்று விரும்பினால் அதை நாங்கள் தாராளமாக உமக்கு வழங்குகின்றோம்" என்று குறைஷிகளெல்லாம் ஒன்றிணைந்து உத்பா என்ற நபர் மூலம் நபி (ஸல்) அவர்களிடம் கூறத்தானே செய்தார்கள். (நூல்: அல்பிதாயா வந்நிஹாயா, இப்னு கஃதீர் திமிஷ்கீ, பாகம்:3, பக்:43)
எனவே குறைஷிகளெல்லாம் பெருமானாருக்குப் பின்னால் அணி திரண்டு நின்றிருப்பார்கள். அரபு தேசியவாதத்தை முன்னிறுத்தி நபி (ஸல்) அவர்கள் களம் கண்டிருந்தால் சிரமங்கள் ஏதுமின்றி மக்கள் தலைவராகவும் நபி (ஸல்) அவர்கள் ஆகியிருக்க முடியும்.
அரபுத் தேசியத்தின் இனத்தலைவராக ஆன பிறகு அரபுநாட்டின் குதிரை வீரர்கள், தீரர்கள் ஆகியோரை வைத்து அன்றைய வல்லரசான பாரசீகத்தை வீழ்த்தியிருக்க முடியும். எமன், எத்தியோப்பியா உள்ளிட்ட பக்கத்து நாடுகளைப் பிடித்து அரபுலகத்துடன் இணைத்திருக்க முடியும். மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரபு இனவாதத்துக்கு வெற்றி தேடித் தந்திருக்க முடியும். இப்படி நபி (ஸல்) அவர்களுக்கு அன்றைய உலக நாடுகளுக்கு எதிராகச் செயல்படுவதற்கான களங்கள் விசாலமாகவே இருந்தது.
பொய்யைப் பொய்யால் வீழ்த்த முடியுமா?
நபி (ஸல்) அவர்கள் மேற்கண்ட தந்திரங்களையோ குறுக்கு வழிகளையோ கடைப்பிடிக்கவில்லை. ஓர் அநீதியை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இன்னொரு அநீதியை வைத்திடவோ ஒரு பொய்யை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இன்னொரு பொய்யை வைத்திடவோ ஒரு இனத்திடமிருந்து அதிகாரத்தைப் பறித்து இன்னொரு இனத்திடம் ஒப்படைத்திடவோ இறைத்தூதராக்கப்படவில்லை நபி(ஸல்) அவர்கள்.
மக்களின் எண்ணங்களுக்கு ஏற்பப்பேசி மக்களை மயயக்கித் தலைவராகி விடுகினன்ற அரசியல் தலைவராகவோ, தேசிய தலைவராகவோ அவர்கள் அனுப்பப்படவில்லை. ரோம, பாரசீகர்களின் ஆட்சியிருந்து மக்களை மீட்டு காப்பாற்றி அத்னான், கஹ்தான் (என்ற அரபுக் குழுக்களின் ஆட்சியின் கீழ் வைத்திட வந்தவர்கள் அவர்கள்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அகிலத்துக்கு வழிகாட்ட வந்த ஒளி சிந்தும் மணிவிளக்கு பாவிகளை எச்சரித்து நற்குண சீலர்களை வாழ்த்தி வழி நடத்த வந்தவர்கள். மனிதனை மனிதனுக்கு அடிமைப்படுவதிலிருந்து காப்பாற்றி எல்லோரும் அல்லாஹ்வின் அடிமைகளே. எவருக்கும் எவரும் அடிமையில்லை என்ற உன்னத லட்சியத்தை நிலைநாட்ட வந்தவர்கள். அவனிதாழ் மக்கள் அளைவரையும் அவனியின் சிக்களிலிருந்து விடுவித்து இம்மை மறுமையின் தாராளத்துக்கு ஏற்றிச் செல்ல வந்தவர்கள்.
மனிதக் கொள்கைகள் மனிதனுக்குச் செய்திடும் அநியாயங்களை நீக்கி இஸ்லாம் என்ற பொன்னிய மார்க்கம் நோக்கி மக்களைத் திரட்டிட வந்தவர்கள். நன்மைச் செய்திடப் பணிந்து தீமையை விலக்கிட வந்தவர்கள். தூயதை அனுமதித்து தீயதை தடுத்திட வந்தவர்கள்.
மனிதர்கள் மீது இருந்து வந்த சுமைகளை இறக்கி, மனிதனைப் பிணைத்திருந்த (அடிமை) விலங்கை உடைத்திட வந்தவர்கள். அவர்களின் அறப் போதனைகள், ஒரு குழுவுக்கோ ஒரு தேசத்துக்கோ மட்டும் உரியதல்ல. மொத்த மனித இனத்துக்கும் உரியவை அவை.
அவர்களின் பிறப்பிடமான (மக்கா) உம்முல் குராவும், அரேபிய தீபகற்பமும் அரசியல் மற்றும் பூகோள ரீதியில் தனித்து நின்றன. எனவே அந்த நில வெளியே இறைத்தூது நிலை கொண்டிட ஏற்ற உகந்த இடமானது.
திறந்தது பூட்டு
சமூகத் தீமைகளைக் களைந்திட விரும்பும் சீர்திருத்தவாதிகள் நேரடியாக அவற்றைக் கண்டிக்கமாட்டார்கள். மறைமுகமாக அவற்றை எதிர்ப்பார்கள். இவ்வாறு வீட்டின் மேற் கூரையைப் பொத்துக் கொண்டு அல்லது ஜன்னல் வழியாகப் புகுந்து வீட்டைப் பிடிக்க முயற்சிக்கும் சீர்திருத்தவாதிகளைப் போல் பெருமானார் (ஸல்) அவர்கள் செயல்படவில்லை.
சில சீர்திருத்தவாதிகள் எல்லாச் சமூகத் தீமைகளையும் ஒரேடியாக எதிர்க்க மாட்டார்கள். சிலவற்றை மட்டுமே எதிர்ப்பார்கள். சிலர் சில குறிப்பிட்ட காலங்களுக்கு சில குறிப்பிட்ட ஊர்களுக்கு மட்டும் இத்தீமைகள் கூடாது என்பார்கள்.
இதனால் மரணம் வரை பாடுபட்டும் கூட லட்சியத்தை அடையாமல் தோற்றுப்போன சீர்திருத்தவாதிகளும் உண்டு.
இவர்களில் எவரைப் போலும் பெருமானார் இல்லை. நபி (ஸல்) அவர்களின் வழி உறுதியானது, நேர்மையானது. நபி (ஸல்) அவர்கள் சமூக சீர்திருத்தம் மார்க்கப் பணி இவற்றை தலைவாசல் வழியாகத் தொடங்கினார்கள். புறவாசல் வழியாக அல்ல.
ஈஸா நபியின் காலத்துக்கும் நபி (ஸல்) காலத்துக்கும் இடையில் எந்த இறைத் தூதரும் வரவில்லை. இந்த இடைக்காலத்தில் நல்லோர்கள் அனைவரும் மனித சுபாவங்கள் மீது பூட்டப்பட்டிருந்த பூட்டுகளை திறக்க முயன்று தோற்றுப் போயிருந்தனர்.
வேறு சிலர் தவறான சாவியால் அதைத் திறக்க முயன்றனர். இப்படி யாராலும் திறக்க முடியாத அந்தப் பூட்டை அதற்குரிய சாவியால் திறந்தார்கள் நபி (ஸல்) அவர்கள்.
ஏக இறைவனை மட்டுமே நம்ப வேண்டும். சிலைகளையும் அவற்றை வணங்குவதையும் விட்டொழிக்க வேண்டும்.
மனித குலத்தின் நல்வாழ்வுக்கு எதிரான தீய சக்திகளை அவை எந்த வடிவத்தில் வந்தாலும் புறக்கணிக்க வேண்டும்.
“மனிதர்களே! வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. எதுவுமில்லை என்று நம்பி முழங்குங்கள். அப்போதுதான் வெற்றி பெறுவீர்கள்." மறுமையையும், இறைத் தூதரையும் நம்புங்கள் என்று கூறி அம்மக்களை நேர் வழிக்கு அழைத்து, அந்தப் பூட்டை நபி (ஸல்) திறந்தார்கள்.
நூல்: முஸ்லிம்களின் வீழ்ச்சியால் உலகம் இழந்தது என்ன
விலை: 300/- (+கூரியர் 50/-)
தொடர்புக்கு: 8148129887 |