முஹம்மத் பகீஹுத்தீன்
நாம் வாழும் காலம் கொஞ்சம். அதற்குள் எத்தனையோ மேடு பள்ளம். எது வந்த போதும் சத்தியத்தில் நிலை கொள்வதன் மூலமே வெற்றி நிச்சியமாகும்
எதிர்பார்க்கப்படும் இறுதி வெற்றியை அடைய விரும்பும் மனிதன், கொண்ட கொள்கையில் கடைசி வரை நிலைத்து நிற்க வேண்டும். மனதில் உறுதி வேண்டும். வாழ்க்கையில் அது தொடர வேண்டும். எனவே உறுதியை காப்பாற்றும் தேடல் என்றும் நிலைத்திருக்க வேண்டும்.
சோதனைகள் வரும்போது மனிதர்கள் நிலை மாறலாம். உறுதி குலைந்து தடம் மாறலாம். உண்மையில் உறங்காத உள்ளங்களே என்றும் நிலைத்து நிற்கும். இறுதி வரை உறுதியாக வாழும். அவை இறையருள் பெற்ற உயர்ந்த உள்ளங்கள்.
துன்பங்கள், துயரங்கள் அலையலையாக பாய்ந்து வரும் போது உள்ளங்கள் தாங்க முடியாமல் சிதறுண்டு போவதுண்டு.
சோதனைகள் விதவிதமாக வரலாம். ஓயாத சுனாமி அலைகளாக வரலாம். ஏப்ரல் 21 ஆக வெடிக்கலாம். சிறைவாசம் அனுபவிக்கும் படலமாகலாம். சொத்துக்கள் பறிக்கப்படலாம். வீடுகள் சோதிக்கப்படலாம். விரட்டப்படலாம். என்னென்னவோ எல்லாம் நடக்கலாம். அத்தனையும் சோதனையின் வடிவங்களே.
அப்போது சிலர் தடம் புரண்டு திசை மாறிச் செல்வார்கள்.. இன்னும் சிலர் அங்கும் இங்குமாக தடுமாற்றம் கண்டு நிற்பார்கள்.. சொற்பமானவர்களே உறுதியாக நிலைத்து நிற்பார்கள்..அவர்கள் தான் பாக்கியம் பெற்றவர்கள்.
வாழ்கையில் வரும் மிகப் பெரிய துயரம் யாதெனில் உச்சம் சென்ற பிறகு வழுக்கி விழும் துர்ப்பாக்கியமாகும். நேரான பாதையில் உறுதியாக நிலைத்து வாழ்ந்த பின்னர் சறுக்கி விடுவது தான் சோதனை மேல் சோதனையாகும்.
இங்கு ஆபத்து ஏற்படுவது வழிகெட்டவனுக்கோ அல்லது தடுமாறி நிற்பவனுக்கோ அல்ல, மாறாக உறுதி ஏற்று வாழ்ந்தவனுக்கே அந்த சோதனை வருகிறது. அதனை அல்குர்ஆனும் கூறுகிறது.
அந்த உண்மையை "நேரான பாதையில் பாதம் உறுதியான பிறகு சறுக்கிவிடும்" என அருள் மறை கூறுகிறது. வாழ்க்கை ஒரு சோதனைக் களம். சத்தியத்தில் நிலைத்து நிற்பது கடினமான ஒரு பரீட்சை. அதில் தேர்ச்சி பெறுவதே எமது இலக்காக இருக்க வேண்டும்.
உறுதிக்கு பிறகும் சறுக்கும் நிலை தோன்றலாம் என்ற உண்மையை அல்குர்ஆன் கற்றுத் தந்தது. எனவே மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீழ்வது எழும்புவதற்காக என்ற எண்ணம் வேண்டும். பிரார்த்தனையுடன் கூடிய விடாமுயற்சி இருந்தால் தான் பயணத்தை தொடர முடியும்.
எப்பொழுதும் வாழ்க்கை பயணத்தில் உறுதியாக நிலைத்து நிற்பதற்கு இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும். இறையருளை சதாவும் யாசிப்பதே அதற்கான ஒரே வழியாகும்.
கொண்ட கொள்கையில் நிலைத்து நிற்கின்றோம் என்பது எமது கெட்டித்தனம் அல்ல. அது ஓர் இறை அருளாகும். அந்த இறையருள் மரணம் வரை நிலைப்பதற்கு சதாவும் இறைவனிடம் இறைஞ்ச வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட இறை அருளால் தான் உறுதியாக இருந்தார் என்பதை அருள் மறை பறைசாற்றுகிறது. " நாம் உம்மை உறுதிப்படுத்தியிருக்காவிட்டால் நீர் அவர்களின் பக்கம் சிறிதளவேனும் சாயந்திருப்பீர்" (இஸ்ரா 74)
ஒரு மனிதன் வாழ்க்கை பயணத்தில் உறுதியாக நிலைத்து வாழ்ந்தான். அதன் பிறகு வந்த சத்திய சோதனையின் போது தலைகீழாக மாறிவிட்டான். ஏன் அவனுக்கு அப்படி நேர்ந்தது என ஒரு ஞானியிடம் வினவபட்டது. அதற்கு அவர் அளித்த பதில்...
ஒன்று, அவன் இறைவழிகாட்டலின் படி சத்தியத்தில் நிலைத்திருப்பதற்காக தினமும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ கேட்கும் வழக்கத்தை கடைப்பிடிக்காமல் இருந்திருக்கலாம்.
இரண்டாவது, அவனுக்கு மார்க்த்தில் நிலைத்து நிற்கும் அருள் கிடைத்தும் கூட அதற்கு நன்றியுடையவனாக வாழ்ந்திருக்கமாட்டான்.
எனவே கொண்ட கொள்கையில் உறுதியாக வாழ்கிறேன் என்று இறுமாப்பு கொள்ளக் கூடாது. நிலைத்து நிற்றல் எமது முயற்சியால் வந்த சாதனை என்று நினைக்கவே கூடாது. அது ஒரு அருட்கொடை. அதற்கு முயற்சியும் தேவை. அழுது தொழுது பிரார்த்திக்கும் மனமும் தேவை.
காலங்கள் மாறலாம். பாதை மாறிப் போகலாம். மனிதர்கள் தடுமாறலாம். சிந்தை கலங்கிப் போகலாம். சடுதியான மாற்றங்கள் தோன்றலாம். எனவே இறை அருளின் பேருதவி காரணமாகவே சத்தியத்தில் நிலைத்து வாழுகிறோம் என்ற ஈமான் இருக்க வேண்டும்.
நபிகளாரைப் பார்த்து எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகிறான் :" நாம் உம்மை உறுதிப்படுத்தியிருக்காவிட்டால் நீர் அவர்களின் பக்கம் சிறிதளவேனும் சாய்ந்திருப்பீர். (இஸ்ரா 74)
சோதனைகள் நிறைந்த காலத்தில் வாழும் நாம், கொண்ட கொள்கையில் உறுதியாக நிலைத்து நிற்பதற்கு ஐந்து விடயங்களில் கவனம் செலுத்துவோம்.
1) அல்குர்ஆனுடனான தொடர்பை இறுக்கமாக வைத்துக் கொள்வோம். அல்குர்ஆனிய சிந்தனையை தினமும் படிப்பதற்கு நேரம் ஒதுக்குவோம்.
2) நபிகளாரின் ஸீராவையும் நபிமார்களின் வரலாறுகளையும் படித்து உணர்வு பெறுவோம்.
சூரா ஹூதில் நபிக்கு அல்லாஹ் கூறுகிறான் " நாம் தூதர்களின் வரலாற்றில் இருந்து அனைத்தையும் உமக்கு எடுத்துக்கூறி அதன் மூலம் உமது உள்ளத்தை உறுதிப்படுத்துகிறோம்."
3) கற்றதை கொண்டு அமல் செய்வோம். " அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அறிவுறுரைகளின் படி அவர்கள் செயற்பட்டிருந்தால் அது அவர்களுக்கு சிறந்தாகவும் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாகவும் இருந்திருக்கும். (சூரா நிஸா 66)
4) என்றும் எப்பொழுதும் உறுதியை கேட்டு இறைவனிடம் பிராத்திப்போம். உள்ளங்களை புரட்டுகிறவனே! எமது உள்ளத்தை உனது மார்க்கத்தில் நிலைப்படுத்துவாயாக!
5) நல்லோர்களின் தொடர்பையும் அவர்களின் சகவாசத்தையும் பேணுவோம். "ஈமான் கொண்டோர்களே நீங்கள் இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள். மேலும் உண்மையாளர்களுடன் சேர்ந்து இருங்கள். (சூரா தெளபா 119)
யா அல்லாஹ் எமது உள்ளங்களை மரணிக்கும் வரை சத்தியத்தில் நிலைக்கச் செய்வாயாக.
|