விமர்சனங்கள் இல்லாத மனிதர்கள் இல்லை. விமர்சனம் இல்லாத எந்த செயல்பாடுகளும் இல்லை. விமர்சனங்கள் இல்லாமல் உலகமும் இல்லை. விமர்சனங்கள் தான் மனிதர்களையும், செயல்பாடுகளையும் மாற்றி அமைக்கிறது. தவறுகளை உணரச் செய்கிறது.
ஆனால் விமர்சனங்கள் செய்பவர்கள் தூய எண்ணத்தோடு, கண்ணியமாகவும் மரியாதையாகவும் விமர்சனம் செய்ய வேண்டும். அது போன்று விமர்சனங்களை எதிர்ப்பவர்களும், தூய எண்ணத்தோடு, நடுநிலையோடு, கருத்துக்களில் ஆழங்களையும், அர்த்தங்களையும் புரிந்து, ஒரு சார்பில்லாமல் தங்களுடைய கருத்துக்களை முன் வைக்க வேண்டும். இதுவே ஆரோக்கியமான விமர்சனங்களும் கருத்துக்களுமாகும்.
ஆனால் விமர்சனங்களை செய்பவர்களை விட, விமர்சனங்களை எதிர்ப்பவர்கள் ஒருதலைபட்சமாக, தங்களிடம் தவறுகளே இல்லாததை போன்று, தாங்கள் பரிசுத்தமானவர்களைப் போன்று, தங்களிடம் தவறுகளே வராது என்ற மனப்போக்கோடு, அந்தக் கருத்துக்களை எதிர்க்கிறோம் என்ற பெயரில், கண்ணியம் இல்லாமல், மரியாதை இல்லாமல், தனிமனித தாக்குதலோடு, தன் கருத்துக்களை முன்வைப்பவர்கள் அந்த கருத்துக்களுக்கு மரியாதை இல்லாமலேயே செய்துவிடுகிறார்கள்.
மனிதர்கள் தவறிழைப்பவர்களே.. தவறிழைப்பவர்கள் சரியானவர்கள் தங்களுடைய தவறை (திருத்திக் கொள்பவர்களே) மன்னிப்பு கேட்பவர்களே என்பது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருள்வாக்காகும் என்பதை மறந்து விடக்கூடாது.
எனவே விமர்சனம் செய்யுங்கள். கனிவோடு, கண்ணியத்தோடு, துணிவோடு, தூய எண்ணத்தோடு.
விமர்சனத்தை எதிருங்கள். கனிவோடு, கண்ணியத்தோடு, துணிவோடு, தூய எண்ணத்தோடு.
தனக்கு வேண்டியவர் என்பதற்காக ஒரு நிலையும், வேண்டாதவர் என்பதற்காக ஒரு நிலையும் எடுப்பவன், விமர்சனம் செய்வதற்கே தகுதியற்றவன்.
விமர்சனங்கள் அடுத்தடுத்து வீரியம் பெறுவதற்காக வேண்டி அமைய வேண்டும் தவிர வீழ்த்துவதை நோக்கமாகக் கொண்டு அமையக்கூடாது.
மன்னிப்பு கேட்பவர்கள் எல்லாம் தவறு செய்தவர்களாகவும் இல்லை. தவறு செய்பவர்கள் எல்லாம் மன்னிப்பு கேட்பவர்களாகவும் இல்லை.
அல்லாஹ் அருள் புரிவான்.
விமர்சனம் என்ற பெயரில் பிறரின் மானம்,மரியாதையை குலைக்காதீர்கள்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
ஒருவர், தன் சகோதரனுக்கு அவனுடைய மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ, இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின்,
அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெறட்டும்.
தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெறட்டும்.)
(ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனுடைய அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும்.
அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரின் தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும்.
அறிவிப்பாளர்:- ஹழ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு.
நூல்:- புகாரி.
நீங்கள் இணைவைப் பவர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் பயப்படவில்லை;
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ;
அல்லாஹ்வின் மீதாணையாக என(து இறப்பு)க்குப் பின்னால் நீங்கள் இணைவைப் பவர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் பயப்படவில்லை; ஆனால், (உலகத்திற்காக) நீங்கள் ஒருவரோடொருவர் (போட்டியிட்டுக் கொண்டு) மோதிக் கொள்வீர்களோ என்றே பயப்படுகிறேன்” என்று கூறினார்கள்.
நூல்;- புகாரி
இந்த உலகில் ஓரிறைகொள்கையை நிலை படுத்த வந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே நீங்கள் இணைவைப் பவர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் பயப்படவில்லை. உலகாதாயத்திற்காக மோதிக்கொள்வதையே பயந்தார்கள்.
ஹாபிழ் M,S, முஹம்மது ரபீக், மிஸ்பாஹி. |