[ஈமானிய மொட்டுகள் 2024 சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை ]
"பாசித் ஸ்கூலுக்கு நேரமாச்சு இன்னுமா கிளம்பல" என அம்மா கேட்கிறாள். "இந்தா ரெடி ஆயிட்டேன்" என அவசர அவசரமாக தனது பையைத் தூக்கிக் கொண்டு செல்கிறான் பாசித். "மறக்காம சாப்பாடு டப்பாவை எடுத்துட்டு போ" என அம்மா சொல்ல, அதை எடுத்துக்கொண்டு தனது சைக்கிளையும் எடுத்துக்கொண்டு தனது நண்பன் அப்சல் விட்டுக்குச் செல்கிறான். "அப்சல் நேரமாச்சிடே சீக்கிரம் வா" என அழைக்க, "இதோ வந்துட்டேன்" என அடுத்த நொடிப்பொழுதில் வீட்டை விட்டு வெளியே வந்த அப்சல், "நேராய்ட்டு சீக்கிரம் வா" என அழைக்கிறான். சைக்கிளை அழுத்தியபடியே இருவரும் பள்ளிக்குச் செல்கின்றனர். "லே பாசித்தே சைன்ஸ் ப்ராஜெக்ட் முடிச்சிட்டியா?" ஆமா ல நீ? "இல்ல ல பாதிதான் முடிச்சிருக்கேன் இங்கிலிஷ் பீரியட் ல உக்காந்து மீதிய முடிச்சிற வேண்டியது தான்".
"சரி அப்சலே உன்கிட்ட கேட்கணும்னு நினைச்சேன், அந்த அசார் ஓட அடிக்கடி சுத்துற மாதிரி தெரியிது?", "நம்ம தெரு பையன் தானே, சின்ன வயசுல இருந்தே பழக்கம் அதான் சும்மா எப்பவாச்சு கூட எங்கயாச்சும் போவேன் வேற ஒன்னுமில்ல". அவன் கூடலாம் அவ்வளவா வச்சிக்காத, அவனுங்க கஞ்சா கேங்க் தெரியும் தானே உனக்கு எப்போ எப்படி இருப்பானுங்கனு தெரியாது. "அவ்வளவா வச்சிக்கிறது இல்ல எப்பவாச்சு தான்" என அப்சல் பதில் கூறுகிறான். அவ்வாறு பேசிக்கொண்டே சென்ற இருவரும் சிறிது நேரத்தில் பள்ளியை அடைகின்றனர்.
அன்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்றுவிட்ட சிறிது நேரத்தில் பாசித் வீட்டுப் பாடம் பற்றி தனக்கு இருக்கும் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள அப்சல் விட்டுக்குச் செல்கிறான். பாசித் அப்சலின் வீட்டுக்கு அருகில் செல்லும்போது ஓர் அதிர்ச்சி, வீட்டு வாசலில் அசார் நின்றுகொண்டிருக்கிறான். பாசித்தைக் கண்டவுடன் அசார் தன் பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்புகிறான். "என்ன அப்சலே என்ன விசயம், அசார் கூட எதோ சீரியஸா பேசிட்டு இருந்த மாதிரி தெரியிது?"அது ஒன்னும் இல்ல பா, சும்மா இந்த வழியா போகும்போது பாத்து பேசுனான் வேற ஒன்னுமில்ல. "சரி நீ வந்த விசயத்த சொல்லு" என அப்சல் கேட்க, "Mathsல ஒரு சந்தேகம்" என தன் புத்தகத்தை எடுத்து கேட்கிறான் பாசித். பின் தன் வீட்டுக்குச் செல்கிறான்.
ஞாயிற்றுக்கிழமை வருகிறது. கிரிக்கெட் ஆட்டத்துக்காக மைதானத்தில் நண்பர்கள் ஒன்றுகூடுகிறார்கள். பாசித், அப்சல் மற்றும் நண்பர்கள் கொண்ட 'வாரியர்ஸ்' அணி மேலத்தெரு அணியான 'ஸ்ட்ரைக்கர்ஸ்' அணியுடன் மோதுகிறது. காலை 8 மணிக்கு மைதானத்தில் அனைவரும் ஒன்றுகூடுகிறார்கள். வாரியர்ஸ் அணி பேட்டிங்க் செய்கிறது. ஓப்பனிங்க இறங்கிய பாசித் விக்கெட்டைப் பறி கொடுக்க அடுத்து அப்சல் களம் இறங்குகிறான். அப்சல் பேட்டை எடுத்துக்கொண்டு களத்தை நோக்கிப் போகையில் அங்கு எதார்த்தமாக வந்த அசாரின் நண்பனான ஆஷிக், "என்ன அப்சலே நேத்து சரக்கு வாங்க வரல?" என கேட்டுவிட்டான். "லே கிறுக்கன்" என கடிந்த முகத்தோடு கிரீசுக்குள் நுழைந்து பேட்டிங்க் செய்யத் துவங்கினான் அப்சல்.
இரண்டு ஆட்டங்கள் முடிந்தது. ஒன்றில் வாரியர்ஸும், மற்றொரு ஆட்டத்தில் ஸ்ட்ரைக்கர்ஸும் வெற்றி பெற்றார்கள். ஆட்டத்தை முடித்துக்கொண்டு அனைவரும் வீட்டுக்குக் கிளம்புகிறார்கள். "அப்சலே வா நம்ம பள்ளிக்குப் போய் ளுஹர் தொழுதுட்டுப் போவோம்" என பாசித் அழைக்க, "டைம் ஆகிட்ட ல.." என அப்சல் கூறுகிறான். "அதுலாம் இல்ல இன்னும் 2 நிமிசம் இருக்கு வா போகலாம்" என பாசித் அழைக்கிறான். இருவரும் பள்ளிக்குச் செல்கிறார்கள். தொழுதுமுடித்துவிட்டு வெளியே வருகையில் பாசித் அப்சலிடம் கேட்கிறான், "என்ன அப்சலே ஆஷிக் எதோ ஏன் சரக்கு வாங்க வரலனு கேட்குறான்?" அதற்கு அப்சல் "அது ஒன்னுமில்ல சும்மா எதாச்சும் உளறிட்டு இருப்பான் வா போவோம்" என்கிறான். "உண்மைய சொல்லு அப்சல் அவனுங்க கூட சேர்ந்து கஞ்சா அடிக்குற அப்படி தானே? கொஞ்ச நாளா ஏன் கூட ஒழுங்கா பேசவும் மாட்டேங்குற, இது நல்லதுக்கு இல்ல இதோட அவங்க ஃப்ரெண்ட்ஷிப்ப கட் பண்ணிரு". "தேவை இல்லாம பேசாத பாசித், அது எல்லாம் ஒழுங்காதான் இருக்கோம் உன் வேலைய பாரு". "அவனுங்க ஃப்ரெண்ட்ஷிப்ப கட் பண்ணு இல்லைனா நம்ம கட் பண்ண வேண்டியது இருக்கும்". "அப்போ நம்ம கட் பண்ணிப்போம் கெளம்பு" என அப்சல் கோபத்துடன் தனது சைக்கிளை எடுத்துவிட்டு கிளம்புகிறான். இருவருக்கும் இடையிலான உறவில் விரிசல் விழுகிறது.
சிறிது நாட்கள் இருவரும் பள்ளிக்கு தனித்தனியாகவே செல்கிறார்கள், பேசிக்கொள்வதில்லை. திடீரென்று ஒரு வெள்ளிக்கிழமை இரவு பன்னிரண்டு மணி அளவில் அப்சலின் தாயார் பாசித்தின் வீட்டிற்கு கைபேசியில் அழைத்து "பாசித்! அப்சல் உன் கூடவா இருக்கான்?" என கேட்கின்றார். "இல்லையே என்னாச்சு ம்மா?". "இல்ல சாய்ங்காலம் அசார் கூட தான் வெளியே போனான் இன்னும் ஆளக்காணோமே, எனக்கு வேற பயமா இருக்கே மா" என அப்சலின் அம்மா பதட்டமடைந்த குரலில் கேட்கின்றார். பாசித் நிலைமையை உணர்கிறான். தனது தந்தையுடன் அப்சலைத் தேடிச் செல்கிறான். உடன் தனது பள்ளித் தோழன் மீரானையும் அழைத்துக்கொண்டு செல்கிறார்கள்.
ஊரில் பல இடங்களில் விசாரிக்கிறார்கள், யாருக்கும் தெரியவில்லை. கடைசியில் மெயின்ரோட்டில் உள்ள டீ கடை ஒன்றில் கடையைப் பூட்டிக்கொண்டிருக்கும் கடைக்காரரிடம் கேட்கையில் கரீம் நகர் பக்கத்தில் உள்ள வயக்காட்டின் பக்கம் சென்றதாக கூறுகிறார் கடைக்காரர். பாசித்துக்கு அப்போது தான் புழப்படுகிறது அசாரின் நண்பன் ஆஷிக்கின் தோட்டம் அங்கே தான் உள்ளது என்று. உடனே அத்தோட்டத்தை நோக்கிச் செல்கிறார்கள். தோட்டத்தின் வெளியே அப்சலின் சைக்கிள் விழுந்து கிடக்கிறது. ஆனால் இரும்புக் கதவோ வெளியே பூட்டுப்போடப் பட்டிருக்கிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை அவர்களுக்கு. வெளியே இருந்து சத்தம் கொடுத்துப் பார்க்கிறார்கள் யாரும் வரவில்லை. உடனே பாசித்தின் தந்தை பக்கத்தில் உள்ள கொஞ்சம் வளைந்த நிலையில் உள்ள முள்வேலியை இன்னும் வளைத்து உள்ளே போவதற்கு ஏதுவான இடைவெளியை உருவாக்குகிறார். அனைவரும் உள்ளே நுழைகிறார்கள். தோட்டம் முழுவதும் இரு பக்கமும் தென்னை மரங்கள். சிறிது தூரம் நடந்தவுடன் ஒரு கிணறு இருக்கிறது. அதன் பக்கத்தில் மோட்டார் அறை. அதன் சிறிது தூரம் தள்ளி மது பாட்டில்கள், சிகரெட் துண்டுகள் கடக்கிறது. யாரும் அங்கு இல்லை. தோட்டத்தைச் சுற்றி தேடியவண்ணம் "அப்சல்..!அப்சல்..!!" எனக் குரல் கொடுக்கிறார்கள் எங்கேயும் கிடைக்கவில்லை. இறுதியாக கிணற்றின் உள்ளே டார்ச் லைட் அடித்துப் பார்க்கிறார்கள். ஓர் பேரதிர்ச்சி! அப்சலின் உடல் உள்ளே சடலமாக மிதந்துகொண்டிருக்கிறது.
உடலைப் பார்த்த அதிர்ச்சியில் பாசித்தும் மீரானும் அலறுகிறார்கள். பாசித்தின் வாப்பா அவர்களை ஆறுதல்படுத்துகிறார். சம்பவத்தை அவனது வீட்டிற்கும் ஜமாஅத்தார்கள், ஊர்த்தலைவர் மற்றும் கவுன்சிலருக்கும் தெரியப்படுத்துகிறார்கள். பொழுது விடிகிறது விசயம் ஊர் முழுவதும் தெரிந்து கூட்டம் கூடுகிறது. போலீசார் அசார்,ஆஷிக் உள்ளிட்ட 5 பேரைக் கைது செய்கின்றனர். அன்று மாலை தோட்டத்தில் கூடியவர்கள் ஒன்றாகக் கூடி மது அருந்திவிட்டு கஞ்சா அடித்துள்ளனர். பின்னர் அப்சலோடு அவர்களுக்கு வாக்குவாதம் ஆகியுள்ளது. அதன் விளைவாக அவனை அனைவரும் சேர்ந்து தாக்கியுள்ளனர். பாட்டிலால் மண்டையில் அடித்துள்ளனர். பின்னர், அவன் உடலைத் தூக்கி கிணற்றில் வீசித் தப்பியுள்ளனர். இவ்வாறாக போலீஸ் விசாரணையில் அவர்கள் தெரிவித்துள்ளனர். அப்சலின் உடல் உடற்கூறாய்வு முடிந்து அவன் இல்லத்திற்கு கொண்டு வரப்படுகிறது. துபாயிலிருந்து தனது மகன் இறந்த செய்தி கேட்டு அப்சலின் வாப்பாவும் வந்து சேர்கிறார். அப்சலின் அம்மா உலகத்தையே மறந்து சோகக் கடலில் மூழ்கி உள்ளார். பாசித் தனது நண்பனின் இழப்பைத் தாங்க முடியாமல் அவன் உடலுக்கு அருகே நின்று அழுகிறான். "என் நண்பனே! சிறு வயதிலிருந்து ஒன்றாகவே இருந்தோம், ஒன்றாகவே திரிந்தோம், சிறு சண்டைகள் வந்தாலும் பின் சேர்ந்துகொள்வோம்; ஒருவரையொருவர் விட்டுக்கொடுத்ததில்லை. ஆனால், நீ எப்போது தடம் மாறினாய் என்று தெரியவில்லையே! எல்லாம் முடிந்தது. இந்த போதையால், கூடா நட்பால் தானே எல்லாம். அதை முதலில் ஒழிக்கணும்" என தனது மனதோடு பேசுகிறான் பாசித். அவன் நண்பனின் நினைவுகள் மனதில் நிழலாடுகிறது. அப்சலின் உடலும் அடக்கம் செய்யப்படுகிறது.
ஜனாஸா நல்லடக்கத்திற்குப் பின்னால் பேசிய பள்ளியின் இமாம் நமது பிள்ளைகளை நாம் எவ்வாறு பாதுகாக்கப்போகிறோம்? இந்த போதையை எப்படி ஒழிக்கப்போகிறோம்? என்ற கேள்வியோடு முடிக்கிறார். பின் அனைவரும் கலைந்து செல்கின்றனர். பாசித் சிறிது நாட்கள் பள்ளி செல்லவில்லை. அதன் பின் சில நாட்கள் கழித்து போதை ஒழிப்பு சம்பந்தமாக அனைத்து ஜமாஅத் மற்றும் இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிப்பு வருகிறது. பாசித்தும் நண்பர்களும் இது சம்பந்தமாக தங்களுக்குள்ளேயே பேசிக்கொள்கிறார்கள். "என்ன மச்சான் இதுல எதுவும் தீர்வு கிடைக்கும்?" என மீரான் கேட்க "இன்ஷா அல்லாஹ்! இந்த முயற்சியே நல்ல முன்னெடுப்பு தான். துவா செய்வோம். அப்புறம் நாமும் கலந்துக்கிட்டு நம்ம கருத்தை பதிவு செய்வோம்" என பாசித் கூறுகிறான்.
திட்டமிட்டபடி அடுத்த வெள்ளிக்கிழமை இரவு கூட்டம் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் ஊரின் முக்கியப் பிரமுகர்கள், தலைவர்கள் மற்றும் இளைஞர்கள் எல்லாம் கலந்துகொள்கிறார்கள். பாசித்தும் நண்பர்களும் உடன் கலந்து கொள்கிறார்கள். ஊரின் முக்கியப் பிரமுகர் ஒருவர் பேசத்துவங்குகிறார். "எல்லா முஸ்லிம் ஊர்களையும் மையமாக வைத்து போதை தலைவிரித்தாடுகிறது. பல முறை நமக்குள்ளேயே பேசியுள்ளோம், ஆனால் இதுவரை அதைத் தடுப்பதற்கான நடவடிக்கையாக எதுவும் செய்ய முடியவில்லையே" எனக் கூறுகிறார். அதற்கு பதில் அளிக்கும் விதமாகப் பேசிய இயக்கத் தோழர் ஒருவர் "போதை கும்பலின் தொடர்புகள் மிகப்பெரிய அளவில் உள்ளது. அதிகார வர்க்கமே அவர்களுக்குத் துணை நிற்கிறது. முக்கிய அதிகாரிகளே இதற்கு உடந்தையாக உள்ளார்கள்" என்று கூறுகிறார். உடனே, ஊர் ஜமாஅத்தின் முக்கியத் தலைவர் ஒருவர் "இப்படியே பேசினால் இதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாதா?" எனக் கேட்கிறார். கூட்டத்தில் இருந்த ஒருவர் பேசத் துவங்குகிறார். "முதலில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சிறுவயதில் இருந்தே போதை விசயத்தில் மிகக் கவனமாக வளர்க்க வேண்டும். தங்களது குழந்தைகளின் சேர்க்கை சரியாக உள்ளதா? என கண்கானிக்க வேண்டும். குறிப்பாக, மதரஸாவுக்கு இந்த விசயத்தில் முக்கியப் பொறுப்பு உள்ளது. மதரஸா ஆசிரியர்கள் போதையின் தீங்கு அதன் விளைவாக மறுமையில் ஏற்படும் தண்டனைகள் குறித்து அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த வேண்டும்" என்று கூறுகிறார். அங்கிருந்த இளைஞர் ஒருவர் எழுந்து "ஒவ்வொரு முஹல்லாவுக்கும் ஒரு குழு அமைக்க வேண்டும். அவர்கள் அந்த பகுதியைக் கண்கானிக்க வேண்டும். மேலும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்" எனக் கூறுகிறார். இறுதியில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன,
- ஒவ்வொரு முஹல்லாவுக்கும் ஒரு கண்கானிப்புக் குழு அமைக்க வேண்டும்.
- அந்தந்த முஹல்லா ஜமாஅத்தின் சார்பாக பெற்றோர்களுக்கு போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும், ஊரைச் சுற்றிய பள்ளிக்கூடங்களை அணுகி போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வலியுறுத்த வேண்டும்.
- மதரஸா பாடத்திட்டத்தில் போதை ஒழிப்பு உள்ளிட்ட பண்பியல் சார்ந்த பாடங்கள் அழுத்தமாக பதிவு செய்யப்பட வேண்டும்.
- போதைக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்கும் நோக்கில் போதை மறுவாழ்வு மையங்களுடன் தொடர்புகள் ஏற்படுத்தி குறிப்பிட்ட கால இடைவெளியில் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் ஆலோசனைக்கூட்டம் முடிவுற்றது. அனைவரும் கலைந்து சென்றனர்.
பள்ளியின் முஆதினார் பள்ளிவாசலின் விளக்குகளை எல்லாம் அணைத்துவிட்டு, பள்ளியைப் பூட்டிவிட்டுச் செல்கிறார். பள்ளி இருட்டாக காட்சியளிக்கிறது. எதிரில் உள்ள மின்விளக்கு மட்டும் விட்டுவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. விடியும்வரை தானே இரவு...!!
Author: Mohamed Suhail S Eruvadi – 627 103
|