[ஈமானிய மொட்டுகள் 2024 சிறுகதைப் போட்டியில் சிறப்பு பரிசு பெற்ற கதை ]
- காஜா காதர், ஏர்வாடி
அந்தி சாயும் மாலை பொழுது, மறையக் காத்திருக்கும் சூரியனின் இளவெயிலோடு சாரல் மழையின் ஈரக்காற்றில் முகம் நனைந்தவனாக குளக்கரையில் தனியாக அமர்ந்திருந்தான் சுஹைப். கண்ணெட்டும் தூரம் வரை மலைத்தொடர்கள், புதுமழையால் பூத்துக் குலுங்கி ரம்மியமாய் காட்சியளித்தது. திறல் திறலாய் மேகங்கள் மெது மெதுவாய் நகர்ந்து சென்று மலைமுகட்டை கட்டியணைத்துக் கொண்டிருந்தது. குளக்கரையில் முளைத்து நின்ற புத்தம் புது பூவை தொட்டு விளையாடும் பட்டாம்பூச்சியை வைத்தக்கண் வாங்காமல் பார்த்தபடியே ஏதோ யோசனையில் மூழ்கி இருந்தான் அவன். சுகைப் ஒரு இயற்கைநேசன், இயற்கையில் வெளிப்படும் இறை படைப்பின் அழகியல் கோலங்களை அனுவனுவாய் ரசிக்க தெரிந்த நுண்ணுணர்வு ரசனைக்காரன்.அதனால் இயல்பிலேயே அவனுக்கு எழுத்து வசப்பட்டிருந்தது. ரசனையோடு சேர்ந்து சமூகத்தின் மீது அன்பும், அக்கறையும் அவனுக்கு அதிகமுண்டு. சமூகத்தின் மீது அவனுக்கிருந்த நேசமும், கவலையும் அவனது பேனா நுனிகளில் எப்போதும் எதிரொலிக்கும்.
இயற்கையின் பேரழகில் தன்னையே தொலைத்து, லயித்துப் போயிருந்த சுஹைபுக்கு அப்போதுதான் நூலகத்தில் மசூரா இருப்பது ஞாபகம் வந்தது. உடனே நேரம் தாழ்த்தாமல் தனது ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு ஊருக்கு திரும்பினான் அவன். வழிநெடுக தான் சேகரித்து வைத்திருந்த விதை பந்துகளை வீசியவாரே நூலகம் வந்தடைந்தான். நல்ல வேலை சரியான நேரத்தில் வந்து சேர்ந்தேன் என்று கூறியவாரே உள்ளே நுழைந்த அவன் சலாம் கூறியவனாக நண்பன் செய்யத் அருகில் சென்று அமர்ந்தான்.
அன்பு சகோதரர்களே! நாம் கூடிய நோக்கம் நீங்கலெல்லாம் அறிவீர்கள். நமதூரில் வட்டியும், போதையும், சமூக சீர்கேடுகளும் தலை விரித்தாடுகிறது. வருங்கால சந்ததிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இதை தடுப்பதற்கான வழிவகைகளை ஆலோசிப்பதற்கு தான் இந்த ஷூராவில் நாம் ஒன்றுகூடி இருக்கிறோம். உங்கள் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் தயங்காமல் முன்வையுங்கள் என சூராவை ஆரம்பித்து வைத்தார் சபீர் பாய். ஒவ்வொருவராக தங்கள் ஆலோசனைகளை சொல்ல ஆரம்பித்தார்கள். "இதுக்கெல்லாம் ஒரே தீர்வு மதுவிலக்கு தான் பாய்" என்றார் ஒருவர், ஒரு இளைஞர் குழுவை கண்காணிப்புக்காக ஏற்படுத்தி கஞ்சா விற்பவனை, வாங்குபவனை கண்டுபிடிக்க வேண்டும் என்றார் இன்னொருவர்.
சபீர் பாய் பொறுமையாக குறுக்கிட்டார், சகோதரர்களே! நடைமுறை சாத்தியங்களை முன்வையுங்கள் அரசும் அதிகாரிகளும் செய்ய வேண்டியதை நம்மால் செய்ய முடியுமா ? நம்மால் மதுக்கடைகளை மூட முடியாது மக்களை மதுவுக்கு அடிமையாகாமல் மட்டுமே காக்க முடியும். போதைப்பொருள் விற்பனையை தடுக்க முடியாது அதன் பயன்பாட்டை மட்டுமே தடுக்க முடியும். இதுதான் நமது எல்லைகள். இதை உணர்ந்து உங்கள் ஆலோசனைகளை முன் வையுங்கள் என்று பேசி முடித்தார். சூராவில் சிறிது நேரம் நிசப்த அலைகள் நிலவியது, மௌனமே உருவாய் ஒவ்வொருவரும் ஒவ்வொருவர் முகத்தைப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தனர்.
நீண்ட அமைதிக்குப் பின் ரவுப் பேச ஆரம்பித்தான் சபீர் காக்கா சொன்ன மாதிரி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவர்களை எஜுகேட் செய்வதும் தான் நமக்கான சிறந்த வழிகள். அதற்காக நாம் விழிப்புணர்வு தெருமுனை கூட்டம் நடத்தலாம், பள்ளிக்கூடங்களில் மாணவர்களுடன் சென்று உரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம், போதை பொருள் பாவனை எவ்வாறு தொடங்குகிறது, எவ்வாறு சீரலிக்கிறது என அவர்களிடமே கருத்துக்கேட்டு கலந்துரையாடலாம், விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை திரையிட்டு கலந்துரையாடலாம், இதிலிருந்து மீள போராடுபவருக்கு இலவச உளவியல் ஆலோசனை வழங்குவதோடு உரிய வழிகாட்டலையும், உதவிகளையும் வழங்கலாம் என ஆலோசனைகள் வந்து வந்து குவிந்தது.
சபீர் பாய் குனிந்த தலை நிமிராமல் கவனமாக ஒவ்வொன்றாய் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். பரிமாறப்பட்ட எல்லா கருத்துக்களையும் மௌனமாய் கேட்டுக் கொண்டிருந்த சுஹைப் பேச ஆரம்பித்தான். சகோதரர்களே! நாம் ஒரு கலைக்கூடம் உருவாக்கலாமே என்றான். சூராவில் உள்ள அத்தனை பேரும் சொல்லி வைத்தார் போல் ஒரு சேர பார்வையை அவன் பக்கம் திருப்பினர், சிலருக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வேறு வந்தது, சிலர் சிரித்தும் விட்டார்கள். கலைக்கூடமா? கலைக் கூடத்திற்கும் கலாச்சார சீரழிவுக்கும் என்னப்பா சம்பந்தம் ? என தடித்த குரலில் கேட்டார் அப்சல் மாமா. அன்பு தோழர்களே! நீங்கள் முன் வைத்திருக்கும் ஆலோசனைகள். அருமையானவை, அவசியமானவை, கட்டாயம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இருப்பினும் நான் சொல்வதை கொஞ்சம் பொறுமையாக கேளுங்கள்.
நேற்று நாம் வாழ்ந்த உலகமல்ல இன்று நம் சந்ததிகள் வாழும் உலகம். அதுபோல் நாளையும் இன்று போல் இருக்காது, அது இதைவிடவும் மோசமாயிருக்கும். அது எல்.ஜி.பி.டி, நிகிலிசம் என பல பரிணாமங்களை கூட எடுக்கலாம். இன்றைய சமூகம் சிந்தனை காலனியாதிக்கத்தால் சிக்கித் தவிக்கிறது. சமூக வலைத்தளங்களும் காட்ரூன் கதாபாத்திரங்களும் தான் அவர்களுக்கான கலாச்சார முன்மாதிரிகளை உற்பத்தி செய்து கொடுக்கிறது.தவறை சரி என்றும் சரியைத் தவறென்றும் தவறாக மூளை சலவை செய்யப்படுகிறார்கள்.வாழ்க்கை பற்றியும், வாழ்வின் நோக்கம் பற்றியும் உறவுகள் பற்றியும் பாலினம் பற்றியும் பாதகமான கண்ணோட்டங்கள் கற்பிக்கப்படுகிறது. அது பாடதிட்டம் வரை கூட பாயலாம். போதை என்பது ஹீரோயிசத்தின் குறியீடாகவும், ஆண்மையின் அடையாளமாகவும் சித்தரிக்கப்படுகிறது. இந்த சிந்தனைகளை எல்லாம் உள்வாங்கிச்செரித்த சமூகத்திற்கு மத்தியில் தான் நம் சந்ததிகள் தங்கள் அடையாளங்களை தொலைக்காமல் அன்றாடங்களை கழித்தாக வேண்டிய அவலமும் இருக்கிறது. இவற்றை எதிர்த்துப் போராட, சரியானதை போதிக்க, நமக்கான ஊடகம் என்ன இருக்கிறது, நம் கையில் என்ன வழிமுறையை வைத்திருக்கிறோம் ? அப்சல் மாமா குறுக்கிட்டு நீங்கள் என்ன வழிமுறையை வைத்துள்ளீர்கள் அதை முதலில் சொல்லுங்கள் என்று கேட்டார். சுஹைப் தொடர்ந்து பேசினான் இன்று மக்களின் காதுகள் கதைகளுக்கும், கலைகளுக்கும் அகல திறப்பதை போல் வேறு எதற்கும் திறப்பதில்லை. கலை இலக்கிய வழியில் தான் தலித் மக்களின் சமூக எழுச்சி இன்று சாத்தியமாகியிருக்கிறது. நாமும் இதே ஆயுதத்தை கையில் எடுக்க வேண்டும், இஸ்லாமிய சிந்தனைகளை பேசும் கலைக்கூடம் வேண்டும் என சொல்லி தன் கருத்தை நிறைவு செய்தான்.
சூரா உறுப்பினர்கள் இக்கருத்தை ஆமோதித்தார்கள், இதற்கான முயற்சி எடுக்கப்பட்டால் அதற்கு முழு ஆதரவு தருவதாக கூறினார்கள்.இத்தோடு சூரா முடிந்து எல்லோரும் வீட்டுக்கு கலைந்து சென்றார்கள், சுஹைப் மட்டும் தன்னந்தனியாக ஆற்றுப்பாலத்தில் சென்று அமர்ந்தான். பௌர்ணமி இரவில் ஆற்றங்கரை அமர்வு அவனுக்கு அவ்வளவு பிடிக்கும். மின்சாரம் இல்லாமல் தெருவிளக்குகள் அணைந்து கிடந்தது.ஆற்று நீரில் எதிரொளிக்கும் நிலவின் பேரழகும், நிலவொளியில் படர்ந்திருந்த மர நிழல்களும், காற்றில் அசைந்தாடும் தென்னை மர கீற்றின் சப்தங்களும்... ஆஹா! வாழ்க்கை எவ்வளவு பெரிய அருட்கொடை! இறைவன் எவ்வளவு மகத்தானவன்! என்ற எண்ணத்தை அவனுக்கு கொடுத்தது. பிறகு ஷூராவில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் பக்கம் தன் சிந்தனையை செலுத்தினான். எங்கிருந்து இவற்றை ஆரம்பிக்கலாம் என நீண்ட நேரம் யோசித்த பிறகு தான் அவனுக்கு புலப்பட்டது"எங்கிருந்து ஆரம்பிக்கலாம் என்ற கேள்விக்கு எங்கிருந்தாவது ஆரம்பித்தால் தான் விடை கிடைக்கும் என்று ". மனதில் ஒரு தீர்க்கமான முடிவோடு வீட்டுக்கு சென்று நிம்மதியாக உறங்கிப் போனான்.
அடுத்த நாள் இரவு வீட்டு வராண்டா முழுவதும் அண்டை வீட்டு குழந்தைகளின் சிரிப்பொலியால் நிரம்பி இருந்தது. சுஹைப் தான் எழுதிய கதைகளை அவர்களுக்கு சொல்லிக் கொண்டிருந்தான். பிஞ்சுகளின் கண்களில் அவ்வளவு மகிழ்ச்சி, வாய் முழுக்க புன்னகை. கொஞ்சம் விளையாட்டும்,கொஞ்சம் கதைகளுமாக இரவு ஒரு மணி நேரம் எப்படி போகுமென்றே தெரியாது. சுஹைபின் கதைகளால் வசீகரிக்கப்பட்டு, கண் இமைக்காமல்,சப்தமில்லாமல் கதைகளிலே கட்டுண்டு கிடப்பார்கள் அக்குழந்தைகள். சுஹைப் எழுதும் கதைகள் அனைத்தும் இஸ்லாத்தின் கருப்பொருள்களிலேயே மையம் கொண்டிருக்கும். சுஹைபின் கதை சொல்லலுக்கு குழந்தைகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. கதைகளின் வழியே வரலாறும், வாழ்வியலும்,அறவிலிமிய போதனைகளும், அடக்குமுறைக்கு எதிரான அரசியலும், வாழ்வின் லட்சியமும் அவர்களே அறியாமல் அவர்களுக்கு ஊட்டப்பட்டது. சில நாட்கள் கழித்து நண்பர்களோடு சேர்ந்து மஸ்ஜித் அருகே உள்ள சிறிய இடத்தை விளையாட்டு அரங்கமாக மாற்றி அமைத்தார்கள். சிறுசுகளும், இலசுகளும் சென்று அழைக்காமலேயே வந்து சேர்ந்தார்கள். மைதானத்தின் உள்ளே புகை பிடிப்பதோ, சும்மா அமர்ந்து போன் பார்ப்பதோ, மணிக்கணக்காக போன் பேசுவதோ, கேம் விளையாடுவதோ தடை செய்யப்பட்டிருந்தது. அதே மைதானம் பெண்களுக்கான நடைப்பயிற்சி கூடமாகவும், கற்றல் கூடமாகவும் மாறியிருந்தது. புதிய மொழிகளை பேச கற்று கொடுக்கும் (Language Lab), புதிய திறன்களுக்கான பயிற்சியளிப்பது என பல பரிணாமம் எடுத்தது. மைதானத்தின் மையத்தில் சுஹைபின் கனவு திட்டமான கலையரங்க மேடையும் அமைக்கப்பட்டது.
நடிப்பில் திறமையுள்ளவர்களையும், மதரஸா மாணவர்களையும் வைத்து வார இறுதியில் கலை இரவு நடத்தப்பட்டது. அதில் கதை சொல்லல், நாடக அரங்கேற்றம்,கவிதை வாசிப்பு,விழிப்புணர்வு பாடல்கள், பட்டிமன்ற பேச்சுக்கள் என சுவாரசியமான பல நிகழ்வுகள் நடைபெறும். பேசப்படாத பல சமூக சிக்கல்களையும்,முரண்பாடுகளையும் சுஹைப் தன் கதை மாந்தர்களின் வாய் வழியே நாசூக்காக பேசுவான். நாடகத்தில் உமர் முக்தாறும்,திப்பு சுல்தானும்,மவ்தூதியும் செய்யத் குத்துபும் கதாபாத்திரமாக அவர்கள் கண் முன்னே வாழ்வார்கள். மேற்கத்திய வாழ்முறையின் அவலங்களும், அளங்கோலங்களும் நகைப்புக்குறியதாய் காட்சிபடுத்தபடும். சில போது சமூகப் பிரச்சனைகளை பேசும் நல்ல திரைப்படங்களும் திரையிடப்பட்டு கலந்துரையாடப்படும். இடை இடையே கொஞ்சம் நகைச்சுவையும், விளையாட்டும் நடக்கும்.இந்த கலைக்கூடத்தில் பங்களிப்பு செய்யும், கலந்து கொள்ளும் அனைவருக்கும் விளையாட்டு மைதானத்தின் கட்டணத்தில் சிறப்பு சலுகை வழங்கப்பட்டதால் இளைஞர்கள் தவறாமல் வந்து ஆஜராகி விடுவார்கள். குஞ்சானி மறைக்காயர் முதல் மாப்பிளாக்கள் வரையுள்ள முஸ்லிம்களின் விடுதலை போராட்ட வரலாறுகள் தொடர் நாடகமாக ஒவ்வொரு வாரமும் அரங்கேற்றப்பட்டது. இமாம்களின் தியாக வரலாறுகளை தானே எழுதி அரங்கேற்றிக் கொண்டிருந்த ஒரு மாணவர் "வாள்களைவிட பேனா முனைகள் கூர்மையானது" என சொன்னதைக் கேட்டு எழுந்த ஆரவாரத்தையும், கைதட்டளையும் பார்த்து கூட்டத்தின் கடைசி வரிசையில் அமர்ந்திருந்த சுஹைபின் கண்கள் கண்ணீரால் நிரம்பியது.
பின்னால் இருந்து ஏதோ ஒரு கை அவனது தோள்களை தட்டுவது போல் இருந்தது. யார் என்று திரும்பிப் பார்த்தான் கையில் காப்பியோடு அவனது படுக்கையருகில் உம்மா நின்று கொண்டிருந்தார். ஆழ்ந்த பெருமூச்சுடன் கண்களை கசக்கி கண்ணீரை துடைத்துக் கொண்ட அவன்,கண்டது கணவென்பதை ஏற்பதற்கே கண நேரம் எடுத்தது.பின் மணியை உற்றுப் பார்த்துவிட்டு தொழுகைக்காக பள்ளிக்கு செல்ல தயாரானான். தொழுகை முடிந்து வெளியே வந்து பார்த்தான் கதிரவனின் காலைக்கதிர்கள் மெல்லமாக எட்டி பார்க்க துவங்கியிருந்தது.நண்பர்களோடு உரையாடியபடி கால்நடையாக நடந்து செல்லும் போது "அவன் என்றோ வீசிய விதைபந்து அன்று முளைத்திருப்பதை கூர்ந்து நோக்கினான்". அதில் சில இலைகள் முளைத்து வருவதை பார்த்த அவன் "விதைகள் எப்போதும் முளைக்க தயாராகத்தான் இருக்கிறது விதைப்பதற்கு ஆள் இருந்தால்" என தனக்குத்தானே கூறியபடி முகத்தில் புன் சிரிப்போடு தனது பயணத்தை தொடர்ந்தான்.
|