நேர்மை என்பது... யாருக்கும் அஞ்சாத, யாரையும் ஈர்க்க நினைக்காத, தவறிழைக்கும் யாரோ ஒருவரைக் காயப் படுத்தும் என்று அறிந்திருந்த போதும் துணிந்து பேசப் படுகிற உண்மை. நேர்மை என்பது... வெறும் வெற்றி முழக்கமல்ல, வெளி வேசமும் அல்ல, விளம்பரத்துக்கான உத்தியும் அல்ல, வீரநாயக பிம்பமும் அல்ல, அது அடிமன ஆழத்தின் அழகிய ஆன்ம வெளிப்பாடு.
ஒரு காலத்தில் நேர்மை தவறாமல் வாழ்ந்தார்கள். இப்போதோ நேரத்துக்குத் தகுந்தாற்போல வாழ்பவர்களே அதிகம். ஏமாற்றிப் பிழைப்பது புத்திசாலித்தனம் ஆகி விட்டதால் நேர்மையாக வாழ்பவர்கள் பிழைக்கத் தெரியாதவர்கள் ஆகிவிட்டனர். பலர் இன்னும் கஷ்டப் பட்டுக் கொண்டு இருப்பது திறமை இல்லாமல் அல்ல. நேர்மையான எண்ணங்கள், நியாயமான வாழ்க்கை முறை கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
கடின உழைப்பு, நேர்மை, பொறுமை, விடாமுயற்சி, தன்னம்பிக்கை ஆகியவையே வெற்றியின் அடிப்படை கள். நேர்மை நம்மை அவ்வப்போது பரிசோதிக்குமே தவிர என்றும் அது நம்மைக் கைவிடாது. எனவே, முயற்சி எனும் படியில் நேர்மையாக முன்னேறுங்கள். வெற்றி எனும் படி தானே கீழிறங்கும். நேர்மையைப் போல மிகச் சிறந்த தோர் கவசமுமில்லை. மனசாட்சியை விட மிகப்பெரிய கடிவாளமுமில்லை.
நேர்மையால் நீங்கள் நிரந்தரமாக பலரை இழக்கலாம். ஆனால், ஒருபோதும் உங்களது நிம்மதியை இழக்க மாட்டீர்கள். பொய்யுரைத்து பலபேரால் நீங்கள் பகட்டு இன்பம் பெறலாம். ஆனால், ஒருபோதும் உங்களால் நிம்மதியைப் பெறமுடியாது.
செய்யும் பணியில் நீங்கள் நேர்மையாக இருந்தால் யாருக்கும் அடிபணிய வேண்டிய அவசியமும் இல்லை. எல்லா வகையிலும் நம்மை விட கீழ்நிலையில் உள்ளவ னிடம் போய் நின்று கூழைக் கும்பிடு போடவேண்டிய அவசியமுமில்லை.
பொய் சொல்லி தப்பிக்க நினைக்காதீர்கள். உண்மை சொல்லி மாட்டிக்கொள்ளுங்கள். ஏனெனில், பொய்யும் புரட்டும் ஒருபோதும் நம்மை வாழவிடாது. உண்மையும் நேர்மையும் ஒருபோதும் சாகவிடாது. நம்மில் ஒரு சிலருக்கு... நேர்மை தவறி நடக்கும்போது எந்தவோர் உறுத்தலும் இருக்காது. குற்றவுணர்வும் ஏற்படாது. அவர்களுக்கு இந்த நபிமொழி சமர்ப்பணம் :
'நேர்மை ஒரு மிகச்சிறந்த ஒழுக்கம். இன்ன செயலைச் செய்யலாமா கூடாதா என்று உங்களது ஆழ்மனதை எது அலைக்கழிக்கிறதோ அதுவும்... ஒரு செயலைச் செய்யும் போது மக்கள் அதைத் தெரிந்துகொள்ளக் கூடாது என்று எதை எண்ணுவீர்களோ அதுவும்... இரண்டுமே நேர்மைக்கு மாற்றமானவையே!' [நூல் : முஸ்லிம்]
▪︎இறுதியாக ஒரேயொரு வார்த்தை :
'நேர்மையாக இருந்து எதையப்பா சாதித்து விட்டாய்?' என்று ஏளனமாக எவனாவது கேட்டால், தைரியமாக இப்படிச் சொல்லுங்கள் : 'நேர்மையாக இருப்பதே ஒரு மிகப்பெரிய சாதனைதானப்பா!' என்று.
* கே. ஆர். மஹ்ளரீ
|