ஹிஜிரி 15 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கும், ரோமர்களுக்கும் மத்தியில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க யுத்தம்தான் யர்மூக் எனும் யுத்தம் ஆகும்.
தற்போதைய ஜோர்டான் மற்றும் சிரியாவின் யர்மூக் ஆற்றின் அருகே நடைபெற்றதால் இதற்கு யர்மூக் யுத்தம் எனப் பெயர் வந்தது.
ஹாலித் பின் வலீத் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் முஸ்லிம்களின் படைத் தளபதியாக இருந்தார்கள்.
இந்த யுத்தத்தில் ரோமர்களின் படை இரண்டு லட்சத்தி நாற்பதாயிரத்திற்கும் அதிகமான படைவீரர்களைக் கொண்டிருந்தது.
ஆனால் முஸ்லிம்களின் அணியிலோ 38 ஆயிரம் படைவீரர்கள்தான் இருந்தனர்.
எனினும் இறை உதவியினால் ரோமர்களின் பெரும்படை முஸ்லிம்களிடம் வீழ்ந்தனர்.
ஃபலஸ்தீன், ஜோர்டான் போன்ற பல பகுதிகள் முஸ்லிம்களின் கைவசம் வந்தது.
ரோமர்களின் தோல்வி ஹிர்கல் மன்னரை வந்தடைந்த போது அவர் மிகப் பெரும் கவலையிலும, கலக்கத்திலும் இருந்தார். அவர் தனது படைவீரர்களை அழைத்து தோல்விக்கான காரணத்தைக் கேட்கிறார்.
அப்போது ஹிர்கல் மன்னருக்கும் அந்தப் படைவீரர்களுக்கு மத்தியில் நடைபெற்ற உரையாடலை இப்னு கஸீர் அவர்கள் தமது “அல்பிதாயா வந்நிஹாயா” எனும் வரலாற்று நூலில் பின்வருமாறு பதிவு செய்கிறார்.
அவ்வுரையாடல் உங்கள் பார்வைக்கு,
البداية والنهاية (7/ 19) فقال هرقل وهو على إنطاكية لما قدمت منهزمة الروم: ويلكم أخبروني عن هؤلاء القوم الذين يقاتلونكم أليسوا بشرا مثلكم ؟ قالوا: بلى. قال: فأنتم أكثر أم هم ؟ قالوا: بل نحن أكثر منهم أضعافا في كل موطن. قال: فما بالكم تنهزمون ؟ فقال شيخ من عظمائهم: من أجل أنهم يقومون الليل ويصومون النهار، ويوفون بالعهد، ويأمرون بالمعروف، وينهون عن المنكر، ويتناصفون بينهم، من أجل أنا نشرب الخمر، ونزني، ونركب الحرام، وننقض العهد، ونغضب ونظلم ونأمر بالسخط وننهى عما يرضي الله ونفسد في الارض. فقال: أنت صدقتني.
ஹிர்கல் மன்னர் அந்தியோக்கியா நகரில் இருக்கும் போது ரோமர்களின் தோல்விச் செய்தி அவரை வந்தடைந்தது.
ஹிர்கல் மன்னருக்கும், படைவீரர்களுக்கும் மத்தியிலான உரையாடல் இதுதான்.
ஹிர்கல் : “உங்களுக்கு நாசம்தான்! உங்களுடன் போரிட்ட அவர்களைப் பற்றி எனக்கு எடுத்துரையுங்கள்! அவர்கள் உங்களைப் போன்ற மனிதர்கள்தானே?
படைவீரர்கள் : ஆமாம்! அப்படித்தான்.
ஹிர்கல் : எண்ணிக்கையில் நீங்கள் அதிகமா? அல்லது அவர்களா?
படைவீரர்கள் : இல்லை. எல்லா இடங்களிலும் அவர்களை விட நாங்கள்தான் பலமடங்கு அதிக எண்ணிக்கையில் இருந்தோம்.
ஹிர்கல் : அப்படியென்றால், நீங்கள் தோற்பதற்கு உங்களுக்கு என்னதான் நேர்ந்தது?
இக்கேள்விக்கு அவர்களுடைய முக்கியப் பிரமுகர்களில் ஒரு பெரியவர் பின்வருமாறு பதிலளித்தார் :
(மன்னரே!) அவர்கள் இரவில் நின்று தொழுகின்றனர்.
பகலில் நோன்பு நோற்கின்றனர்.
உடன்படிக்கைகளை நிறைவேற்றுகின்றனர்.
நன்மையானவற்றை எடுத்துரைக்கின்றனர்.
தீமையானவற்றைத் தடுக்கின்றனர்.
தமக்கிடையே ஒருவருக்கொருவர் நீதத்தைப் பேணுகின்றனர்.
இதனால்தான் (அவர்கள் குறைந்த எண்ணிக்கையிலும் வெற்றி பெறுகின்றனர்.)
ஆனால் நாமோ,
மது அருந்துகின்றோம்,
விபச்சாரத்தில் ஈடுபடுகின்றோம்.
தடைசெய்யப்பட்டவற்றைச் செய்கின்றோம்.
உடன்படிக்கையை முறிக்கின்றோம்.
கோபமுறுகின்றோம்,
அநீதி இழைக்கின்றோம்,
வெறுப்புக்குரியவற்றை எடுத்துரைக்கிறோம்,
அல்லாஹ் பொருந்திக் கொள்ளும் செயல்களை விட்டும் தடுக்கின்றோம்,
பூமியில் குழப்பம் செய்கின்றோம்.
இதனால்தான் (நாம் அதிக எண்ணிக்கையில் இருந்தும் தோல்வியைத் தழுவுகின்றோம்.
“நீர் என்னிடம் உண்மையைத்தான் உரைத்தீர்” என ஹிர்கல் கூறினார்.
நூல் : அல்பிதாயா, வந்நிஹாயா
உண்மைதான்.
இஸ்லாமிய சமுதாயத்தின் வெற்றி எண்ணிக்கையிலோ, ஆயுத பலத்திலோ இல்லை.
மாறாக இறைத்தூதர் காட்டிய வழிநடந்தால் மட்டுமே இச்சமுதாயம் இம்மையிலும் மறுமையிலும் வெற்றியடைய முடியும்.
இதைத்தான் யர்மூக் நமக்கு பாடம் கற்றுத் தருகிறது.
இறைவழி மறந்து மதுவிலும், விபச்சாரத்திலும், அநீதியிலும், அக்கிரமத்திலும் வீழ்ந்து கிடந்தால் எக்காலத்திலும் இழிவு நீங்க வழியில்லை. எப்பெரும் எண்ணிக்கையில் இருந்தாலும் சரியே!
அல்லாஹ் கூறுகிறான் :
மனம் தளராதீகள்! கவலைப்படாதீர்கள்! இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால் நீங்களே மேலோங்குபவர்கள்.
(அல்குர்ஆன் 3 : 139)
அல்லாஹ் கூறுகிறான் :
1. இறைநம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்றுவிட்டனர்.
2. அவர்கள் தமது தொழுகையில் பணிவுடன் இருப்பார்கள்.
3. அவர்கள் வீணானவற்றைப் புறக்கணிப்பார்கள்.
4. அவர்கள் ஸகாத்தையும் வழங்குவார்கள்.
5, 6, 7. அவர்கள், தமது மனைவியர் அல்லது அடிமைப் பெண்களைத் தவிர (மற்றவர்களிடம்) தமது கற்புநெறியைப் பேணிக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட மாட்டார்கள். ஆனால் இதற்குப் புறம்பாக யார் (தவறான வழிகளைத்) தேடுகிறார்களோ அவர்களே வரம்பு மீறியவர்கள்.
8. அவர்கள், தம்மை நம்பி ஒப்படைக்கப்பட்டவற்றையும், தமது வாக்குறுதியையும் பேணிக் கொள்வார்கள்.
9. அவர்கள் தமது தொழுகைகளில் பேணுதலாக இருப்பார்கள்.
10, 11. அவர்களே ஃபிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்தைச் சொந்தமாக்கிக் கொள்வோர். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
(அத்தியாயம் : 23)
ஆயுத பலமோ, அதிக எண்ணிக்கையோ, எம்பி, எம்எல்ஏ, போன்ற பதவிகளோ இஸ்லாமியர்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தராது.
மாறாக இவையெல்லாம் பயனளிக்க வேண்டுமென்றால் தொழுகையும், பிரார்த்தனையும், மனத்தூய்மையுடன் செய்யும் நல்லறங்களும் அவசியமாகும்.
நன்மக்கள் பலவீனர்களாக இருந்தாலும் அவர்களே வெற்றியாளர்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இந்த சமுதாயத்திலுள்ள பலவீனமானவர்களின் பிரார்த்தனையினாலும், தொழுகையினாலும், மனத்தூய்மையினாலும்தான் நிச்சயமாக அல்லாஹ் இச்சமுதாயத்திற்கு உதவி செய்கிறான்.
அறிவிப்பவர் : ஸஃத் (ரலி) நூல் : நஸாயீ (3178) . (இறைவனைத் தொழுதும், அவனிடம் பிரார்த்தித்தும். மனத்தூய்மையுடன் வாழும்) உங்களிடையேயுள்ள பலவீனர்களின் (சாமானிய மக்களின்) பொருட்டால் தான் உங்களுக்கு (இறைவனின் தரப்பிலிருந்து) உதவி கிட்டுகின்றது என்று கூறினார்கள்.
நூல் : புகாரி (2896)
இறைவழி நடக்காதவரை இழிவு நீங்க வழியில்லை. |