Posted By:sisulthan On 3/15/2006 |
|
விட்டுவிடுங்கள்
அவனை...
அவனது இருவருட
சேமிப்பும்
அந்த
அறுபதுகிலோ பெட்டிக்குள்தான்
ஜீன்ஸும் பூப்போட்ட
சட்டையும்
அவன் ஆடும் கூத்தில்
இன்றைய உடைகள்
நேற்றுவரையில்
அவன்
பாலைமணலில்
வியர்வை நாற்றமேறிய
காலுறைகள் புதைய
நின்றவன்
விட்டுவிடுங்கள்
அவனை...
வளைகுடாவின்
வளத்திற்கு
வாழ்க்கைப்பட்டதுபோல்
பேசுவான்
தனிமைப் புழுக்கத்தில்
வியர்த்த இதயமல்லவா
சிறிது விசிறிக்
கொள்ளட்டும்
அன்னியச் செலாவணி
பணமாற்றுவீதமெல்லாம்
அவனுக்குத்தெரியாது
ஆயிர ரூவாக்கி
எத்தினி திர்காம்?
என்ற வாய்ப்பாடுதான்
இவன் வழிபாடு
அதனால்...
விட்டுவிடுங்கள்
அவனை...
|
|