Posted By:jasmin On 9/5/2007 |
|
symbicort generic date symbicort inhaler coupon நாங்குநேரி திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை டாடா ஆலை விவரங்களை அரசு வெளியிட வேண்டும்
சரத்குமார் அறிக்கை
சென்னை, செப்.5: நாங்குநேரி திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். டாடாவின் டைட்டானியம் தொழிற்சாலையைப் பற்றி முழு விவரத்தையும் வெளியிட வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கேட்டுக் கொண்டுள்ளார். சரத் குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: சாத்தான்குளம் பகுதியில் டாடா நிறுவனம் தொழிற்சாலை நிறுவ தமிழக அரசு நிலங்களை கையகப்படுத்த திட்டமிட்டபோது மக்கள் மத்தியில் பல சந்தேகங்களும் எதிர்ப்புகளும் உருவானது. அப்பகுதி மக்களை சந்தித்து விவரங்களை கண்டறிய ஒரு குழுவை அனுப்பினேன். அதை தொடர்ந்து, பல்வேறு கட்சியினரும் குழுக்களை அனுப்பினார்கள். கடைசியாக, அரசும் ஒரு குழுவை அனுப்பியது. அந்தக் குழு ஆய்வு முடித்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் என்ன இருக்கிறது என்பது வெளியிடப்படவில்லை. டாடா கம்பெனி, நிலத்துக்கு ஏக்கர் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் விலை தரமுடியாது என்று கூறியது. அரசு அனுப்பிய குழுவின் தலைவர் அமைச்சர் பொன்முடி, அந்த பகுதியில் நிலத்தின் வழிகாட்டி விலை ரூ.1 லட்சத்து 16 ஆயிரம் என்று கூறினார். ஏக்கருக்கு ரூ.5 லட்சத்துக்கு குறையாமல் விலை தர வேண்டும் என்ற கருத்து எல்லோராலும் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென இப்போது டாடா கம்பெனி அதிகாரிகள் நேரடியாக சாத்தான்குளம் தாலுகாவில் நிலங்களை வாங்குவதாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுவரை சுமார் 100 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். நில எடுப்பு சட்டத்தை உபயோகித்து அரசு நிலம் கையகப்படுத்துவதை கைவிட்டு விட்டு, டாடா கம்பெனியே நேரடியாக நிலம் வாங்கிக் கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளதா? ஏக்கருக்கு ரூ.90 ஆயிரம் கொடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அமைச்சர் கூறிய ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்தைவிட குறைந்த விலையை டாடா கொடுப்பது ஏன்? குறைந்த விலையில் நிலம் வாங்கப்படுகிறதா? என்ற பல கேள்விகள் எழுகின்றன. 40 ஆயிரம் குடும்பங்களை பாதிக்கும் பிரச்னையில் முழுவிவரங்களை மக்களுக்கு தெரிவிக்காமல், அரசுக் குழுவின் பரிந்துரைகளையும் வெளியிடாமல், தனியார் கம்பெனி நிலம் வாங்குவதை மாவட்ட ஆட்சியர் செய்தியாக வெளியிடுவது ஏன்? என்னும் நெருடலான கேள்விகள் எழுகின்றன. உண்மையிலேயே தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சியில் அரசுக்கு அக்கறை இருந்தால், சுமார் 75 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் நாங்குநேரி தொழிற்பேட்டை திட்டத்தில் கவனம் செலுத்தாமல், ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு தரும் டாடா தொழிற்சாலையில் ஏன் வேகம் காட்டுகிறது என்று நான் பலமுறை கேள்வி எழுப்பியும் சரியான பதில் இல்லை. எனவே, நாங்குநேரி திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், டாடா ஆலை பற்றிய முழுவிவரங்களையும் வெளியிட வேண்டும் என அரசை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.
|