வழிகாட்டி: படித்துக் கொண்டே வேலை செய்யலாம்!
ந.ஜீவா
உங்களது பிஎஸ்என்எல் செல்பேசியில் நாளைய பஞ்சாங்க குறிப்புகளை இன்றே பெற தினம் ஒரு ரூபாய் மட்டுமே!
நவீன சமையல் கலையான கேட்டரிங் டெக்னாலஜி படித்தால் எப்படியும் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை பலருக்கு. அதனால் 50 ஆயிரம் ரூபாய் லட்ச ரூபாய் என்று பணம் செலவழித்துப் படிப்பவர்களும் இருக்கிறார்கள். நமக்கெல்லாம் அது முடியுமா? அவ்வளவு பணம் செலுத்திப் படிப்பது நம்மால் முடியுமா? என்று ஏக்கப் பெருமூச்சுவிடும் மாணவர்கள் கேட்டரிங் டெக்னாலஜி மாதிரியான படிப்புகளைப் பற்றிய நினைப்பிற்கே மனதில் இடம் கொடுப்பதில்லை. அவர்கள் நினைப்பதிலும் உண்மையில்லாமல் இல்லை. ஆனால் ஏழை மாணவர்களும் கேட்டரிங் டெக்னாலஜி படிப்பைக் குறைந்த செலவில் - அதுவும் வேலை பார்த்துக் கொண்டே படிக்க முடியும் என்கிறார் சென்னை அண்ணாநகர் ஹாஸ்பிடாலிடி அகாதெமியைச் சார்ந்த பி.நடராஜ். அவர் ஏழை மாணவர்களுக்குப் படிக்கும் காலத்திலேயே வேலை வாங்கித் தந்துவிடுகிறார். இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள அவரைச் சந்தித்துப் பேசினோம்.
வெளிநாட்டில்தான் வேலை பார்த்துக் கொண்டே படிப்பார்கள் என்பார்கள். இங்கேயும் அப்படி வந்துவிட்டதா?
பி. நடராஜ்
வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டே படிப்பதற்கும் இங்கே படிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. இப்போது வேலை செய்யும் பலர் அஞ்சல் வழியில் எம்.ஏ., எம்.காம் என்று படிப்பதில்லையா? அதற்கும் நான் வேலை வாங்கிக் கொடுத்துப் படிக்க வைப்பதற்கும் வித்தியாசம் உள்ளது.
"தமிழ்நாடு திறந்த வெளிப் பல்கலைக் கழகம்' நடத்தும் கேட்டரிங் டெக்னாலஜி படிப்பைச் சொல்லிக் கொடுக்க எங்களுடைய ஹாஸ்பிடாலிடி அகாதெமி அங்கீகாரம் பெற்றுள்ளது. தமிழ்நாடு திறந்த வெளிப் பல்கலைக் கழகத்தின் கேட்டரிங் டிப்ளமோ படிக்கும் மாணவர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறேன். அப்படி வரும் மாணவர்களுக்கு சென்னையில் உள்ள பெரிய ஹோட்டல்களில், மருத்துவமனைகளில், தொழிற்சாலை உணவகங்களில் வேலை வாங்கிக் கொடுக்கிறேன். அதாவது அவர்கள் என்னிடம் கேட்டரிங் டெக்னாலஜியில் எந்தத் துறையில் பயிற்சி பெறுகிறார்களோ அந்தத் துறை வேலையில் அவர்களைச் சேர்த்துவிடுவேன். அதனால் அவர்கள் என்னிடம் படிக்கும் படிப்பிற்கு வேலை செய்யும் போதே பயிற்சியும் பெறுவார்கள். அதனால் இவர்கள் வேலை செய்து கொண்டே படிக்கவில்லை. படித்துக் கொண்டே வேலை செய்கிறார்கள்.
தியரி வகுப்பு
கேட்டரிங் டெக்னாலஜி படிப்பில் நிறையப் பிரிவுகள் இருக்கின்றதா? அதற்கேற்ப வேலையா?
கேட்டரிங் படிப்பில் உணவு தயாரிப்பு, உணவு பரிமாறும் கலை, ஹவுஸ் கீப்பிங் நிர்வாகம், பிரன்ட் ஆபிஸ் மேனேஜ்மென்ட் சப்போர்ட் சிஸ்டம் போன்ற பிரிவுகள் உள்ளன. இப்பிரிவில் ஒருவர் எதில் பயிற்சி பெறுகிறாரோ அந்தத் துறையில் வேலை வாங்கிக் கொடுத்துவிடுவேன். அவர்கள் வேலைக்குச் சேரும் நிறுவனத்தைப் பொறுத்து, செய்யும் வேலையைப் பொறுத்து மாதச் சம்பளம் குறைந்தது ரூ.3000 இலிருந்து ரூ7000 வரை கிடைக்கும். இதுதவிர சில இடங்களில் தங்கும் இடம், உணவு இலவசமாகக் கிடைக்கும். சம்பளம் தவிர இ.எஸ்.ஐ., பி.எப். போன்றவையும் உண்டு. இதில் ஓவர் டைம் செய்தால் அதிகமாகக் கிடைக்கும்.
நீங்கள் வகுப்பு எடுப்பது எப்படி?
சென்னையில் அண்ணாநகர், மயிலாப்பூர், அரும்பாக்கம் போன்ற இடங்களில் உள்ள இன்ஸ்டிடியூட்டில் வாரத்தில் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பயிற்சி நடக்கும். இதுதவிர ஆண்டுக்கு 300 நாட்களுக்கும் அவர்கள் கற்றுக் கொள்ளும்விதமாகப் பாடத்திட்டம் உண்டு. அவர்கள் ஹோம் ஒர்க் போல அதைச் செய்ய வேண்டும். வகுப்பில் நாங்கள் சொல்லித் தருவதை அவர்கள் வேலை செய்யும் இடத்தில் செய்து பார்த்துப் பயிற்சி பெறுவார்கள். எனவே நாங்கள் சொல்லித் தருவது முழுக்க முழுக்க நடைமுறை சார்ந்த படிப்பு. இதனால் மிகச் சிறப்பாக பயில்வார்கள்.
இதற்குக் கட்டணம் எல்லாம் எப்படி?
எங்கள் இன்ஸ்டிடியூட்டில் அவர்கள் நேரடியாக வந்து சேர்ந்தாலும் அவர்கள் படிப்பதென்னவோ தமிழ்நாடு திறந்த வெளிப் பல்கலைக் கழகத்தில்தானே? அதற்கு அவர்கள் ரூ.3500 கட்டணமாக வசூலிக்கிறார்கள். இதே கேட்டரிங் டெக்னலாஜி படிப்பைப் படிக்க 50 ஆயிரத்திலிருந்து லட்சக் கணக்கில் வசூல் செய்யும் நிறுவனங்களும் உண்டு. ஆனால் தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக் கழகம் மிகவும் குறைந்த கட்டணத்தையே வசூலிக்கிறார்கள். அதிலும் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு அவர்களுடைய கல்விக் கட்டணத்தைத் திருப்பித் தந்துவிடுகிறார்கள்.
இதில் சேர என்ன கல்வித் தகுதி?
பத்தாம் வகுப்பு பாஸ் செய்திருக்க வேண்டும். அப்படிப் பாஸ் செய்யாதவர்கள் தமிழ்நாடு திறந்த வெளிப் பல்கலைக் கழகம் நடத்தும் பவுன்டேஷன் கோர்ஸில் பாஸ் செய்ய வேண்டும்.
நீங்கள் தமிழ்நாடு திறந்த வெளிப் பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற நிறுவனம் என்கிறீர்கள். அதில் சேருகிற மாணவர்களுக்கு வெறும் பயிற்சி மட்டும் கொடுத்து விடுவதுதானே? எதற்காக இந்த வேலை வாங்கித் தருவது என்று ரிஸ்க் எடுக்கிறீர்கள்?
ஒரு மாணவர் ஏழையாக இருப்பார். வாழ்வில் முன்னேற வேண்டும் என்று ஆசையிருக்கும். ஆனால் அதற்கு வாய்ப்பு இருக்காது. அப்படிப்பட்டவர்களுக்கு செய்யும் உதவியாகவே இதைச் செய்கிறேன்.
உங்களிடம் பயிற்சி பெறும் மாணவர்கள் எல்லாரும் சென்னையைச் சேர்ந்தவர்கள்தானா?
இல்லை. மதுரை, கோயமுத்தூர், திருநெல்வேலி என்று பல ஊர்களில் இருந்தும் வருகிறார்கள். அவர்கள் எங்களிடம் பயிற்சி பெறுவதால் வேலைக்கு வேலையும் கிடைக்கிறது. சம்பளத்திற்கு சம்பளம் கிடைக்கிறது. தங்குமிடம் கிடைக்கிறது. இதற்கு இன்னொரு பக்கமும் உள்ளது.
நல்ல ஹோட்டல்களில் நம்பிக்கையான நல்ல வேலை செய்யக் கூடிய ஆட்கள் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். அவர்களுடைய தேவையையும் நாங்கள் இதன் மூலம் நிறைவு செய்கிறோம்.
வேலை செய்யும் இடத்தில் நடைமுறைப் பயிற்சி என்கிறீர்கள். அப்படியானால் நீங்கள் எதுவும் பயிற்சி தருவதில்லையா?
வாரத்துக்கு ஒரு நாள் சமையல் கலையில் பிராக்டிகல் வகுப்பு இருக்கும்.
நீங்கள் வேலைக்குச் சேர்த்து விடும் மாணவர்களால் உங்களுக்குப் பிரச்சினை எதுவும் ஏற்பட்டிருக்கிறதா?
ஒருவர் வேலைக்குச் சேர்ந்துவிட்ட பின்னால் அவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் அது அவரை வேலைக்குச் சேர்ந்த நிறுவனத்தின் பொறுப்பு. இதில் எனக்குக் கெட்ட பெயர் வருவதற்கு ஒன்றுமில்லை.
மிக அதிகமான கட்டணங்கள் வசூலிக்கும் நிறுவனங்களில் கற்றுத் தரும் கேட்டரிங் டெக்னாலஜி கல்விக்கும் நீங்கள் கற்றுத் தருவதற்கும் வித்தியாசம் இருக்கத்தானே செய்யும்?
பாடத் திட்டத்தில் எதுவும் வித்தியாசமில்லை. இன்னும் சொல்லப் போனால் எங்களிடம் பயிற்சி பெறும் மாணவன் மிகத் திறமையாக இருப்பான். அதிகக் கட்டணம் வசூலிக்கும் நிறுவனத்தில் படிக்கும் மாணவன் படிப்பு முடிந்ததும் வேறு விஷயங்களில் கவனத்தைச் செலுத்துவான். ஆனால் எங்களிடம் பயிலும் மாணவன் முழுநேரமும் கற்றுக் கொள்கிறான். மேலும் படித்து முடித்த பின்பு எங்கே வேலை செய்யப் போவானோ அது போன்ற நிறுவனங்களில் முதலிலேயே வேலை செய்யும் அனுபவத்தைப் பெற்று விடுகிறான். எனவே எங்களுடைய பயிற்சி எந்தவிதத்திலும் குறைவானது இல்லை.
சென்னையில் மாணவர்களை வேலைக்குச் சேர்த்துவிடும் நிறுவனங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்?
சென்னையில் உள்ள 3 நட்சத்திர ஹோட்டல்களில் 4 நட்சத்திர ஹோட்டல்களில் வேலைக்குச் சேர்த்து விடுகிறோம். இராமச்சந்திரா ஆஸ்பிட்டல், அப்பல்லோ ஆஸ்பிட்டல் போன்ற பெரிய மருத்துவமனைகளின் கேண்டின்கள், ஹோன்டா நிறுவனத்தின் கேன்டீன்கள் போன்றவற்றில் சேர்த்துவிடுகிறோம்.
|