Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
டவுசர் கிழிந்து விட்டது! மகா ஜனங்களே, கோவணம் பத்திரம்!
Posted By:jasmin On 10/15/2008

 

நாட்டாமையின் டவுசர் கிழிந்து விட்டது!  மகா ஜனங்களே, கோவணம் பத்திரம்!   சர்வதேச சூதாட்டக் கிளப்புக்குப் பெயர்தான் நிதிச்சந்தை!

அமெரிக்கா திவால்: டவுசர் கிழிந்த்து!

Written by புதிய கலாச்சாரம் Monday, 13 October 2008 09:02 புதிய கலாச்சாரம் 2008
அமெரிக்கா திவாலாகி விட்டது. பிரெஞ்சுப் புரட்சிக்கு முந்தைய பிரான்சை அமெரிக்காவின் நிலைமை நினைவூட்டுகின்றது என்கிறார் ஒரு பத்திரிகையாளர். கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி ஃபான்னி மே, ஃபிரட்டி மாக் என்ற இரு வீட்டு அடமான வங்கிகள் திவாலாவதைத் தடுக்க அவற்றை அரசுடைமையாக்கியது புஷ் அரசு. அரசுடைமையாக்கப் படும்போது அவற்றின் சொத்து மதிப்பு 5500 கோடி டாலர்கள்.
 அவற்றின் கடனோ 5,00,000 கோடி டாலர்கள். அடுத்து உலகின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் என்று கூறப்படும் அமெரிக்கன் இன்டர்நேசனல் குரூப் நிறுவனம் திவாலின் விளிம்பில்; இந்தியாவில் காப்பீட்டத் துறையைத் தனியார்மயமாக்க தீவிரமாக முயன்று வரும் இந்த நிறுவனத்தைக் காப்பாற்ற 8500 கோடி டாலர்களை வழங்கி அதன் 80% பங்குகளை வாங்கியிருக்கின்றது அமெரிக்க அரசின் ஃபெடரல் ரிசர்வ்.
 
லேமன் பிரதர்ஸ், மெரில் லின்ச், கோல்டுமேன் சாக்ஸ், மார்கன் ஸ்டான்லி, வாக்கோவியா, வாஷிங்டன் மியூச்சுவல்… என உலக நிதிச் சந்தையின் சர்வவல்லமை பொருந்திய தேவதைகளாகக் கருதப்பட்ட நிறுவனங்கள் எல்லாம் நாளுக்கொன்றாகக் கவிழ்ந்து கொண்டிருக்கின்றன.
அமெரிக்காவின் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மட்டுமின்றி, ஆலைகள், ஐ.டி துறைகளிலும் திடீரென்று ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்படுகின்றார்கள்.
 
கடனை அடைக்க முடியாததால் வெளியேற்றப்பட்ட இலட்சக் கணக்கான மக்களின் வீடுகள் அமெரிக்காவில் வாங்குவாரின்றிப் பூட்டிக் கிடக்கின்றன. ஐ.டி. தொழிலின் மையமான கலிபோர்னியா மாநிலமே திவால் மாநிலமாகி விட்டது. பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ் என்ற பிரபல நிறுவனத்தின் நிதி ஆலோசகரான கார்த்திக் ராஜாராம் என்ற என்.ஆர்.ஐ இந்தியர், தனது மனைவி, மூன்று குழந்தைகள், மாமியார் அனைவரையும் சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ரியல் எஸ்டேட் சூதாட்டத்தில் அவர் குவித்த கோடிகள் ஒரே நாளில் காணாமல் போயின.
தவணை கட்டாததால் பறிமுதல் செய்யப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 50 இலட்சம் என்று அறிவித்திருக்கின்றார் அமெரிக்க நிதியமைச்சர் பால்சன். அதாவது, அரசின் கணக்குப்படியே சுமார் 3 கோடி மக்கள், அமெரிக்க மக்கள் தொகையில் 10% பேர் புதிதாக வீடற்றவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். வாங்குவாரின்றிப் பூட்டிக் கிடக்கும் வீடுகள் சூறையாடப்படுகின்றன.
ஆட்டோமொபைல் தொழிலில் உலகின் தலைநகரம் என்றழைக்கப்பட்ட டெட்ராய்ட், அமெரிக்காவின் திவால் நகரமாகி விட்டது. அங்கே வீட்டின் விலை உசிலம்பட்டியைக் காட்டிலும் மலிந்து விட்டது. இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டின் விலை ரூ. 75,000.
அமெரிக்காவில் வெடித்த பொருளாதார நிலநடுக்கம், உலகெங்கும் பரவுகின்றது. ஒரு ஊழியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறோம் என்று அலறுகிறார் பிரெஞ்சுப் பிரதமர்.
எந்த நாட்டில் எந்த வங்கி எப்போது திவாலாகும் என்று யாருக்கும் தெரியவில்லை. வங்கிகளின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். "ஐரோப்பிய வங்கிகள் திவாலானால் 50,000 யூரோக்கள் வரையிலான டெபாசிட் தொகையைக் கொடுக்க ஐரோப்பிய அரசுகள் பொறுப்பேற்பதாக" ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருக்கின்றது. இந்தியா உள்ளிட்டு உலகெங்கும் பங்குச்சந்தைகள் கவிழ்ந்து பாதாளத்தை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கின்றன.
உலகப் பொருளாதாரத்தின் அச்சாணி என்றும், உலக முதலாளித்துவத்தின் காவலன் என்றும் பீற்றிக் கொள்ளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திய முதலாளி வர்க்கத்தின் முகத்தில் உலகமே காறி உமிழ்கின்றது.
"பொருளாதாரத்தில் அரசு எந்த விதத்திலும் தலையிடக் கூடாது; சந்தைப் பொருளாதாரம் ஒன்றுதான் மனித சமூகம் கண்டறிந்த மிகச்சிறந்த பொருளாதார ஏற்பாடு" என்று கூறி, பின்தங்கிய நாடுகள் அனைத்தின் மீதும் தனியார்மயத்தைக் கதறக் கதறத் திணித்து வரும் அமெரிக்க முதலாளி வர்க்கம், கூச்சமே இல்லாமல் 'மக்களின் வரிப்பணத்தை வைத்து எங்களைக் கைதூக்கி விடுங்கள்' என்று அமெரிக்க அரசிடம் கெஞ்சுகின்றது.
திவால்கள் இத்துடன் முடியப்போவதில்லை என்பது தெளிவாகிவிட்டது. முதலாளிவர்க்கத்தைக் கைதூக்கி விடுவதற்காக 70,000 கோடி டாலர் (35 இலட்சம் கோடி ரூபாய்) பணத்தை அரசு வழங்க வேண்டும் என்ற புஷ் நிர்வாகத்தின் தீர்மானத்தை அமெரிக்காவின் 'மக்கள் பிரதிநிதிகள்' ஒருமனதாக நிறைவேற்றி விட்டார்கள்.
அமெரிக்க மக்களோ ஆத்திரத்தில் வெடிக்கிறார்கள். உலக முதலாளித்துவத்தின் புனிதக் கருவறையான வால் ஸ்ட்ரீட் எங்கும் மக்கள் கூட்டம். "தே.. பசங்களா, குதிச்சுச் சாவுங்கடா.." என்று வங்கிகளை அண்ணாந்து பார்த்துத் தொண்டை கிழியக் கத்துகின்றார்கள் மக்கள். "குப்பைக் காகித்தை வாங்கிக் கொண்டு முதலாளிகளுக்குப் பணம் கொடுக்கும் அரசே, இந்தா என் வீட்டுக் குப்பை. எனக்கும் பணம் கொடு!" என்று ஆர்ப்பாட்டம் நடத்துகின் றார்கள். வால் ஸ்ட்ரீட் வங்கிகளின் நெடிதுயர்ந்த கட்டிடங்களில் அமெரிக்க மக்களின் முழக்கம் மோதி எதிரொலிக்கின்றது 'முதலாளித்துவம் ஒழிக!'
•••
இத்துனை அமெரிக்க வங்கிகளை ஒரே நேரத்தில் திவாலாக்கி, உலகப் பொருளாதாரத்தையும் நிலைகுலைய வைத்திருக்கும் இந்த நிதி நெருக்கடியைத் தோற்றுவித்தது யார்? அமெரிக்காவின் ஏழைகள்! அவர்கள்தான் உலகத்தைக் கவிழ்த்து விட்டார்களாம். பல இலட்சம் கோடி டாலர் மதிப்புள்ள இந்த பிரம்மாண்டமான கேள்விக்கு, இரண்டே சொற்களில் பதிலளித்துவிட்டன முதலாளித்துவப் பத்திரிகைகள். "கடன் பெறவே தகுதியில்லாதவர்கள், திருப்பிச் செலுத்த முடியாதவர்கள் என்று வந்தவர் போனவருக்கெல்லாம் வங்கிகள் கடன் கொடுத்தன. வீடுகட்டக் கடன் கொடுத்ததில் தவறில்லை. ஆனால், அது சரியான ஆட்களுக்குக் கொடுக்காததுதான் இந்த நிலைக்குக் காரணம்…" (நாணயம் விகடன், அக்15)
எப்பேர்ப்பட்ட கண்டுபிடிப்பு! இதே உண்மையைத்தான் எல்லா பொருளாதாரக் கொலம்பஸ்களும் வேறு வேறு வார்த்தைகளில் கூறுயிருக்கின்றனர். முதலாளி வர்க்கத்தை இவ்வளவு எளிதாக ஏழைகளால் ஏமாற்ற முடியுமா? நண்பர்களுக்கு 50, 100 கடன் கொடுப்பதென்றால் கூட நாமே யோசிக்கின்றோமே, வந்தவன் போனவனுக்கெல்லாம் இலட்சக்கணக்கில் வாரிக்கொடுத்திருக்கும் அமெரிக்க முதலாளிகளை வள்ளல்கள் என்பதா, முட்டாள்கள் என்பதா? இரண்டுமே இல்லை. அவர்கள் கிரிமினல்கள்.
அமெரிக்காவின் உழைக்கும் மக்களையும், நடுத்தர வர்க்கத்தினரையும் மட்டுமல்ல, பல்வேறு நாட்டு மக்கள், சிறு முதலீட்டாளர்கள், வங்கிகள் .. அனைத்துக்கும் மேலாக சக நிதிமூலதனச் சூதாடிகள் எல்லோரையும் ஏமாற்றிச் சூறையாடியிருக்கும் இந்த மோசடியை என்ன பெயரிட்டு அழைப்பது? ஆயிரம், இரண்டாயிரம் போயிருந்தால் அது திருட்டு. இலட்சக் கணக்கில் போயிருந்தால் கொள்ளை என்று கூறலாம். பறிபோயிருப்பது பல இலட்சம் கோடி. அதனால்தான் மிகவும் கவுரவமாக இதனை 'நெருக்கடி' என்று கூறுகின்றது முதலாளித்துவம்.
வந்தவன் போனவனுக்கெல்லாம் வாரிக் கொடுத்ததனால் ஏற்பட்டதாகக் கூறப்படும் 'அமெரிக்காவின் சப் பிரைம் நெருக்கடி' தோன்றிய கதையைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
தயக்கமில்லாமல் கடன் வாங்குவதற்கும், நுகர்பொருட்களை வாங்குவதற்கு அந்தப் பணத்தைச் செலவிடுவதற்கும் மக்களை நெடுங்காலமாகவே பயிற்றுவித்து பொம்மைகளைப் போல அவர்களை ஆட்டிப்படைத்து வருகின்றது அமெரிக்க முதலாளி வர்க்கம். சராசரியாக ஒரு அமெரிக்கனிடம் 100 கடன் அட்டைகள் இருக்கும் என்பது மிகக் குறைந்த மதிப்பீடு. அங்கே வட்டி விகிதத்துக்கு உச்சவரம்பு இல்லை என்பதால் கடன் அட்டைக்கு 800% வட்டி கூட உண்டு. சராசரியாக ஒரு அமெரிக்கன் தனது மாதச்சம்பளத்தில் 40% தொகையைக் கடன் அடைக்க ஒதுக்குகின்றான். ஒரு கல்லூரி மாணவனின் சராசரி கல்விக்கடன் 10 இலட்சம் ரூபாய். 2003 ஆம் ஆண்டிலேயே அமெரிக்காவின் வங்கிக் கடன்களின் சரிபாதி அடமானக்
இதற்கு மேலும் கடன் வாங்கிச் செலவு செய்யும் சக்தி அவர்களுக்கு இல்லாமல் போனதால், நுகர்பொருள் முதல் ரியல் எஸ்டேட் வரை எல்லாத் தொழில்களிலும் சந்தை தேங்கியது. கடன் வாங்க ஆளில்லாததால் வட்டி வருவாய் இல்லாமல், வங்கித் தொழிலும் தேங்கியது. கடனுக்கான வட்டி விகிதங்கள் பெருமளவு குறைந்தன. இந்தத் தருணத்தில்தான் தங்கள் லாபப் பசிக்கு புதிதாக ஒரு இரையைக் கண்டுபிடித்தார்கள் வங்கி முதலாளிகள்.
"வேலை இல்லாத, வருமானமும் இல்லாத ஏழைகளிடம் அடகு வைக்க எதுவும் இல்லையென்றாலும், அவர்கள் நேர்மையாகக் கடனை அடைப்பார்கள். அடைத்துத்தான் ஆக வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு வேறு யாரும் கடன் கொடுக்க மாட்டார்கள். எனவே வட்டியை உயர்த்தினாலும் அவர்களுக்கு வேறு வழி இல்லை. இவர்களைக் குறி வைப்போம்" என்று முடிவு செய்தார்கள்.
ஒருவேளை பணம் வரவில்லையென்றால்? அந்த அபாயத்திலிருந்து (risk) தப்பிப்பதற்கு வால் ஸ்ட்ரீட்டின் நிதி மூலதனச் சூதாட்டக் கும்பல் வழி சொல்லிக் கொடுத்தது. 10 இலட்சம் ரூபாய் வீட்டுக் கடன், அந்தக் கடன் ஈட்டக் கூடிய வட்டித் தொகை ஆண்டுக்கு ஒரு இலட்சம் என்று வைத்துக் கொள்வோம். கடன் கொடுக்கும் வங்கி, கடன் வாங்குபவருடைய அடமானப் பத்திரத்தை உடனே நிதிச் சந்தையில் 10.5 இலட்சத்துக்கு விற்றுவிடும். இப்படியாக கொடுத்த கடன்தொகை உடனே கைக்கு வந்து விடுவதால், பத்திரத்தை விற்க விற்க கடன் கொடுத்துக் கொண்டே இருக்கலாம். கொடுத்தார்கள்.
நிதிக் கம்பெனிகளும், இன்சூரன்சு நிறுவனங்களும், ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் (FIRE) கூட்டணி அமைத்து ரியல் எஸ்டேட் சந்தையைச் சுறுசுறுப்பாக்கி விலைகளை இருமடங்கு, மும்மடங்காக ஏற்றினார்கள். 'ஒரு டாலர் கூடக் கொடுக்க வேண்டாம். வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள்' என்றார்கள். தயங்கியவர்களிடம், '10 ஆண்டுகளில் நீங்கள் கட்டப்போகும் தொகை இவ்வளவுதான். ஆனால் 10 ஆண்டுகளுக்குப் பின் உங்களது வீட்டின் விலை 10 மடங்கு கூட உயர்ந்திருக்கும்' என்று ஆசை காட்டினார்கள். 'வட்டியை மட்டும் கட்டுங்கள். அசலை அப்புறம் பார்த்துக் கொள்வோம்' என்று வலையில் வீழ்த்தினார்கள். 'அதுவும் கஷ்டம்' என்று மறுத்தால், 'பாதி வட்டி மட்டும் கட்டுங்கள். மற்றதைப் பின்னால் பார்த்துக் கொள்வோம்' என்றார்கள். வீழ்த்தப்பட்டவர்களில் ஆகப் பெரும்பான்மையினர் கறுப்பின மக்கள் மற்றும் லத்தீன் அமெரிக்க வம்சாவளியினர். மற்றவர்கள் வெள்ளையர்கள்.
இந்த மக்கள் யாரும் வீடு வாங்கக் கடன் கேட்டு வங்கிக்கு செல்லவில்லை என்பது மிகவும் முக்கியமானது. நம் ஊரில் 'கடன் வேண்டுமா?' என்று தொலைபேசியில் கேட்டு நச்சரிப்பதைப் போல 'வீடு வேண்டுமா?' என்று நச்சரித்தார்கள். 2006 ஆம் ஆண்டு வீட்டுக்கடன் வாங்கிய 64% பேரைத் தரகர்கள்தான் வலைவீசிப் பிடித்து வந்தனர். 20% பேர் சில்லறை வணிகக் கடைகளின் மூலம் மடக்கப்பட்டனர். இவர்கள் வாங்கும் வீடுகளின் சந்தை விலையை மதிப்பிடும் நிறுவனங்கள் (appraisers) வேண்டுமென்றே வீட்டின் மதிப்பை ஒன்றுக்கு இரண்டாகக் கூட்டி மதிப்பிட்டுக் கடன் தொகையை அதிகமாக்கினர். வீடு வாங்கச் செலவு செய்யும் பணத்துக்கு வரிவிலக்கு அறிவித்து ரியல் எஸ்டேட் சந்தையை ஊக்கப்படுத்தியது அரசு.
ரியல் எஸ்டேட் விலைகள் மேலும் ஏறத் தொடங்கின. 2004 இல் பத்து இலட்சம் ரூபாய்க்கு வாங்கிய வீட்டின் சந்தை மதிப்பு, 2005 இல் 20 இலட்சம் ரூபாய் என்று உயர்ந்தவுடன், இன்றைய சந்தை மதிப்பை அடிப்படயாகக் கொண்டு மேலும் 7,8 இலட்சம் கடன் அவர்கள் சட்டைப் பைக்குள் திணிக்கப்பட்டது. 'விலைகள் ஏறியபடியேதான் இருக்கும்' என்று மக்கள் நம்பவைக்கப்பட்டார்கள்.
ஆனால் வாங்கிய கடனைக் கட்டவேண்டியவர்கள் மக்களல்லவா? வட்டியோ மீட்டர் வட்டி! அமெரிக்காவிலோ வேலையின்மை அதிகரித்துக் கொண்டிருந்தது. உணவு, பெட்ரோல் விலை உயர்வு வேறு. மாதம் 1000 டாலர் கொடுத்து வாடகை வீட்டில் இருந்தவர்கள் இப்போது சொந்த வீட்டுக்கு 3000 டாலர் தவணை கட்ட வேண்டியிருந்தது. மூச்சைப் பிடித்துக் கொண்டு 10, 20 மாதங்கள் கட்டிப் பார்த்தார்கள். முடியவில்லை. தூக்கமில்லாத இரவுகள், குடும்பச் சண்டைகள், மணவிலக்குகள்.. என குடும்பங்கள் சித்திரவதைப் பட்டன. 'ஜப்திக்கு எப்போது ஆள் வருமோ' என்று நடுங்கினார்கள். போலீசு வரும்வரை காத்திருக்காமல் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறி விட்டார்கள். சென்ற ஆண்டில் மட்டும் 22 இலட்சம் வீடுகள் இப்படிக் காலியாகின.
விளைவு ரியல் எஸ்டேட் சூதாடிகள் ஊதி உருவாக்கிய பலூன் வெடித்து விட்டது. 5 இலட்சம் டாலருக்கு வாங்கிய வீடு ஒரு இலட்சத்துக்கு விழுந்து விட்டது. எனினும் 5 இலட்சத்துக்கு உரிய தவணையைத்தான் கட்டவேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டதால், தவணை கட்டிக் கொண்டிருந்தவர்களும் 'வீடு வேண்டாம்' என்று முடிவு செய்து வெளியேறத் தொடங்கினார்கள். சந்தை தலைகுப்புறக் கவிழ்ந்தது.
•••
இந்தக் கொடுக்கல் வாங்கலில், மக்கள் யாரை ஏமாற்றினார்கள்? அவர்கள் மாதத்தவணை கட்டியிருக்கின்றார்கள். முடியாத போது வீட்டைத் திருடிக் கொண்டு ஓடவில்லை. திருப்பி ஒப்படைத்து விட்டார்கள். வீடு இருக்கின்றது. ஆனால் மதிப்பு இல்லாமல் போய்விட்டது. அதற்கு மக்கள் என்ன செய்ய முடியும்? ரியல் எஸ்டேட்டின் சந்தை விலையை அவர்களா நிர்ணயித்தார்கள்? சந்தை எழுந்ததற்கும் வீழ்ந்ததற்கும் அவர்களா பொறுப்பு?
ஒரு வீட்டின் உண்மையான மதிப்பை எப்படி நிர்ணயிப்பது? அந்த வீடு எந்தப் பொருட்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றதோ, அந்தப் பொருட்களை உருவாக்குவதற்கும், அப்பொருட்களை இணைத்து அந்த வீட்டை உருவாக்குவதற்கும் செலவிடப்பட்ட உழைப்புச் சக்தியின் மதிப்புதான் அந்த வீட்டின் மதிப்பு என்கிறார் மார்க்ஸ். ஒரு மாபெரும் முதலாளித்துவ மோசடியில் வாங்கிய அடி, மார்க்சியத்தின் வாயிற்கதவுக்கு அமெரிக்க மக்களை இழுத்து வந்திருக்கின்றது.
எனினும் முதலாளித்துவச் சந்தையின் விதி இதை ஒப்புக்கொள்வதில்லையே! 10 இலட்சம் ரூபாய்க்கு வீடு வாங்கி, ஒரு இலட்சம் தவணை கட்டி விட்டு, மீதியைக் கட்ட முடியாமல் வீட்டை வங்கியிடம் ஒப்படைத்தால் (foreclosure), வங்கி அந்த வீட்டை ஏலம் விடும். தற்போது வீடு 2 இலட்சத்துக்கு ஏலம் போகின்றது என்று வைத்துக் கொண்டால், மீதி 7 இலட்சம் பாக்கியை கடன் வாங்கியவன் கட்டியாகவேண்டும். அதாவது இல்லாத வீட்டுக்கு தவணை கட்டவேண்டும். இதுதான் முதலாளித்துவ சந்தை வழங்கும் நீதி. அது மட்டுமல்ல, இவ்வாறு தவணை கட்டத் தவறுபவர்கள் அடுத்த 7 ஆண்டுகளுக்கு அமெரிக்காவில் எந்த இடத்திலும் கடன் வாங்கவோ கடன் அட்டையைப் பயன்படுத்தவோ முடியாது. சுருங்கக் கூறின் வாழவே முடியாது. இதுதான் அமெரிக்கச் சட்டம். "இந்தச் சட்டத்தைத் தளர்த்தி நிவாரணம் வழங்கு" என்று கோருகின்றார்கள் மக்கள்.
திவாலான மக்களுக்கு நிவாரணம் தர மறுக்கும் அமெரிக்க அரசு மதிப்பிழந்து போன குப்பைப் பத்திரங்களை வங்கிகளிடமிருந்து விலை கொடுத்து வாங்க 35 இலட்சம் கோடி ரூபாய் வழங்குகின்றது.
ஏன், மக்களுடைய அந்த வரிப்பணத்தை மக்களுக்கே நிவாரணமாகக் கொடுத்தால்? அப்படிக் கொடுத்தால், உலக முதலாளித்துவமே வெடித்துச் சிதறிவிடும். ஏனென்றால் அந்த வீட்டு அடமானக் கடன் பத்திரங்களில் பெரும்பகுதி இப்போது உலகத்தின் தலை மீது இறங்கிவிட்டது.
பொதுவாக, கடன் என்பது 'கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் இடையிலான ஒப்பந்தம்' மட்டுமே. ஆனால் நிதி மூலதனத்தின் உலகமயமாக்கல் இந்தக் கடன் பத்திரங்களையும் உலகமயமாக்கியிருக்கின்றது.
இத்தகைய கடன் பத்திரங்களின் நம்பகத்தன்மைக்கு சான்றிதழ் கொடுக்கும் பிரபல நிறுவனங்கள், லஞ்சம் வாங்கிக் கொண்டு, இந்த வாராக் கடன்களுக்கு 'மிக நம்பகமான கடன்கள்' என்று பொய் சர்டிபிகேட் கொடுத்தன. இந்த பொய் சர்டிபிகேட்டைக் காட்டி 11.8 டிரில்லியன் டாலர் (ஒரு டிரில்லியன் என்பது இலட்சம் கோடி) மதிப்புள்ள ஒரு கோடி கடன் பத்திரங்களை அமெரிக்கச் சூதாடிகள் உலக நிதிச்சந்தையில் விற்று விட்டார்கள்.
பிறகு அந்தப் பத்திரங்களின் மீதும் சூதாட்டம் தொடங்கியது! 'இந்தக் கடன் வசூலாகாவிட்டால் இழப்பீடு தருவதாக'ச் சொன்ன இன்சூரன்சு கம்பெனிகளின் காப்பீட்டுப் பத்திரங்கள், 'ஒவ்வொரு கடனும் வருமா, வராதா என்று அவற்றின் மீது பந்தயம் கட்டிச் சூதாடிய' டெரிவேட்டிவ்கள்.. என தலையைச் சுற்றும் அளவுக்கு விதம் விதமான சூதாட்ட உத்திகளை உருவாக்கி, ஒரு கோடி கடன்பத்திரங்களின் மீது 1000 கோடி பரிவர்த்தனைகளை (transactions) நடத்திவிட்டார்கள் வால்ஸ்ட்ரீட் சூதாடிகள்!
பறவைக் காய்ச்சலை விடவும் பரவலாக, பருவக்காற்றை விடவும் வேகமாக உலகெங்கும் பரவி யார் யார் தலையிலோ இறங்கி விட்டது இந்தக் கடன். இவற்றை முதலீடுகளாகக் கருதி வாங்கிய பிறநாட்டு வங்கிகள், தொழில் நிறுவனங்கள், பென்சன் ஃபண்டுகள் அனைத்தும் மரணத்தின் விளிம்பில் நிற்கின்றன. முதலாளித்துவ உலகப் பொருளாதாரத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது அமெரிக்காவின் திவால்!
•••
நாட்டாமையின் டவுசர் கிழிந்து விட்டது! உலக முதலாளித்துவத்தின் காவலன், சந்தைப் பொருளாதாரத்தின் மேன்மையை உலகுக்கே கற்றுக்கொடுத்த பேராசிரியன், ஐ.எம்.எஃப்., உலக வங்கி முதலான நிறுவனங்களின் மூலம் ஏழை நாடுகளின் மீது ஒழுங்கை நிலைநாட்டிய வாத்தியார், ஒரு மூணுசீட்டுக்காரனை விடவும் இழிந்த போர்ஜரிப் பேர்வழி என்ற உண்மை 'டர்ர்ர்' என்று கிழிந்து விட்டது. ஆயினும் இது உலக முதலாளித்துவம் சேர்ந்து நடத்திய ஒரு கூட்டுக் களவாணித்தனம் என்பதால் கிழிசலை கோட்டுக்குள் மறைக்க முயல்கின்றது உலக முதலாளி வர்க்கம்.
35 இலட்சம் கோடி 'மொய்'ப் பணத்தை முதலாளிகளுக்கு வாரிக்கொடுக்கும் இந்த 'சூதாடிகள் நல்வாழ்வுத் திட்டத்'துக்குப் பெயர், பிரச்சினைக்குரிய சொத்துக்கள் மீட்புத் திட்டடுமாம்! (Troubled Assets Recovery Programme). ஓ 'அமெரிக்க ஏழை மக்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கக் காசில்லை' என்று கூறிய புஷ், சூதாட்டத்துக்கு காப்பீடு வழங்கியிருக்கின்றார். மக்களின் ஆரோக்கியத்தை விட முதலாளித்துவத்தின் ஆரோக்கியம் மேன்மையானதல்லவா?
அமெரிக்க நிதிநிறுவனங்கள் அரசுடைமையாக்கப்பட்ட செய்தியை வெளியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு, 'சோசலிச ரசியாவாக மாறுகின்றது அமெரிக்கா!' என்று அச்செய்திக்கு விசமத்தனமாகத் தலைப்பிட்டிருந்தது. அமெரிக்காவில் நடந்திருப்பது என்ன? முதலாளிகளின் கடன்கள் அரசுடைமையாக்கப்பட்டிருக்கின்றன. பொதுச்சொத்தான மக்களுடைய வரிப்பணமோ தனியார்மயமாக்கப் பட்டிருக்கின்றது. இல்லாத வீட்டுக்கு அமெரிக்க மக்கள் கடன் கட்டவேண்டும். அது நேரடிக் கொள்ளை. அப்படிக் கொள்ளையடித்தவனுக்கு அரசு கொடுக்கும் 70,000 கோடி டாலரையும் மக்கள் இனி வரியாகக் கட்டவேண்டும். இது மறைமுகக் கொள்ளை! இதைவிடப் பட்டவர்த்தனமான ஒரு பகற்கொள்ளையை யாரேனும் நடத்த முடியுமா?
முதலாளித்துவ அரசு என்பது முதலாளி வர்க்கத்துக்குத் தேவையான காரியங்களை முடித்துக் கொடுக்கும் காரியக் கமிட்டியே அன்றி வேறென்ன என்று கேட்டார் மார்க்ஸ். 'கல்வி, மருத்துவம், போன்ற எதையும் அரசாங்கம் ஏழைகளுக்கு இலவசமாக வழங்கக்கூடாது' என்ற கொள்கையை அமெரிக்காவில் அமல்படுத்தி வரும் அமெரிக்க அரசு, எழுபதாயிரம் கோடி டாலரை அமெரிக்க முதலாளிகளின் பாதாரவிந்தங்களில் சமர்ப்பிக்கின்றதே, இது மார்க்ஸின் கூற்றுக்கு நிரூபணமே அன்றி வேறென்ன?
"தொழில், வணிகம், நிதித்துறைகளில் அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் இருந்தால், நாங்கள் அப்படியே அறுத்துக் கத்தை கட்டிவிடுவோம்" என்று பேசிவந்த முதலாளி வர்க்கம், இதோ வெட்கம் மானமின்றி மக்கள் சொத்தைக் கேட்டுப் பகிரங்கமாகப் பிச்சையெடுக்கின்றது. முதலாளித்துவப் பத்திரிகைகள் எனும் நாலுகால் பிராணிகள், "அரசாங்கம் தலையிட்டு மக்களது வரிப்பணத்தைக் கொடுத்து இந்த நெருக்கடியைத் தீர்க்க வேண்டும்" என்று சூடு சொரணையில்லாமல் எழுதுகின்றன.
யாருடைய தயவில் யார் வாழ்கின்றார்கள்? முதலாளி வர்க்கத்தின் தயவில் உழைக்கும் வர்க்கம் வாழ்ந்து வருவதாகத் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் பிரமை உங்களது கண் முன்னே நொறுங்குவது தெரியவில்லையா? தெருக்கூட்டுபவர்கள், குப்பை அள்ளுபவர்கள், மேசை துடைப்பவர்கள் என்று கடையரிலும் கடையராய்த் தள்ளப்பட்ட அமெரிக்கத் தொழிலாளிகள், தமது வியர்வைக் காசில் வீசியெறிந்த வரிப்பணத்தைப் பொறுக்குவதற்கு முண்டியடிப்பவர்கள் யார் என்று அடையாளம் தெரிகின்றதா? அட! இவர்கள் வால் ஸ்ட்ரீட்டின் உலகப் பணக்காரர்கள் அல்லவா?
•••
தாங்கள்அதிமேதாவிகள் என்றும், நிதிச் சந்தையின் அபாயகரமான வளைவுகளில் நிறுவனத்தைச் செலுத்தும் வல்லமை பெற்ற திறமைசாலிகள் என்றும் அதனால்தான் தாங்கள் ஆண்டுக்கு 400 கோடி, 500 கோடி சம்பளம் வாங்குவதாகவும் பீற்றிக் கொண்டிருந்தார்கள் பன்னாட்டு நிறுவனங்களின் நிர்வாகிகள். இந்த வெள்ளைக்காலர் கண்ணியவான்கள், 'போர்ஜரி வேலை கள்ளக் கணக்கு பொய் சர்டிபிகேட் தயாரிக்கும் தொழிலில்' ஈடுபட்டிருந்த நாலாந்தரக் கிரிமினல்கள் என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரியவில்லையா?
பணம், பணத்தைக் குட்டி போடுவது போலவும், அப்படித்தான் இவர்கள் உலகக் கோடீசுவரர்கள் ஆகி, உட்கார்ந்து கொண்டே சாப்பிடுவதாகவும் இவர்கள் உலகத்துக்குச் சொல்லி வந்தார்கள். அமெரிக்க மக்களையும் அவ்வாறே நம்ப வைத்தார்கள். "ரியல் எஸ்டேட்டில் பணம் போடு, ஒன்று போட்டால் நூறு ஆகும். பங்குச் சந்தையில் பணம் போடு, நூறு போட்டால் ஆயிரம்" என்று போதையூட்டினார்கள். "எல்லோரும் உட்கார்ந்து தின்றால் உழைப்பது யார், எல்லாரும் வட்டியில் வாழ வேண்டுமென்றால், வட்டி கட்டுவது யார்?" என்ற எளிய கேள்வி கூட அந்தப் போதை மயக்கத்தில் அமெரிக்க மக்களுக்கு உறைக்கவில்லை. இன்று? இல்லாத வீட்டுக்குத் தவணை கட்டும் ஏமாளிகளாக, தனது ஆயுட்கால உழைப்பு முழுவதையும் அடகு வைத்துச் சூதாடிய தருமனாகத் தெருவில் நிற்கின்றார்கள் அமெரிக்க மக்கள்.
உற்பத்தி மென்மேலும் சமூகமயமாகி வருகின்றது, உலகமயமாகி வருகின்றது. ஒரு காரின் பல்வேறு பாகங்கள் பத்து நாடுகளில் தயாரிக்கப்பட்டு, ஒரு இடத்தில் பூட்டப்படுகின்றன. ஒரு ஆயத்த ஆடையை ஒரு தையல்காரர் தைப்பதில்லை. அதுகூட 50 கைகள் மாறுகின்றது. இந்த உற்பத்தியினால் கிடைக்கும் ஆதாயமோ, ஒரு சிலர் கையில் மட்டும் குவிகின்றது. உழைப்பாளிகளின் கையில் காசில்லை. அவர்களுடைய நிகழ்கால உழைப்பை ஒட்டச் சுரண்டிவிட்டதால், கட்டப்பட்ட வீடுகளை, உற்பத்தியான பொருட்களைத் விற்பதற்காக மக்களின் எதிர்கால உழைப்பையும் இன்றைக்கே சுரண்டிவிடத் திட்டம் தீட்டி கடன் தவணை என்ற வலையில் அவர்களை வீழ்த்துகின்றது முதலாளித்துவம். ரோமானிய அடிமைகள் ஒரு ஆண்டைக்கு மட்டுமே வாழ்நாள் அடிமையாக இருந்தார்கள். அமெரிக்க மக்களோ முதலாளி வர்க்கத்துக்கே வாழ்நாள் கொத்தடிமைகளாக ஆக்கப்பட்டிருக்கின்றார்கள்.
புதிய வீடுகளைக் கட்டினால் வாங்க ஆள் கிடையாதென்பதால் பழைய வீடுகளின் 'மதிப்பை' ஒன்றுக்குப் பத்தாக உயர்த்துவதன் மூலம், இரும்புப் பெட்டியில் தூங்கும் பணத்தை (மூலதனத்தை) வட்டிக்கு விட்டு சம்பாதிக்க முனைந்தார்கள் அமெரிக்க முதலாளிகள். இதுதான் உலக முதலாளித்துவம் கண்டிருக்கும் 'பொருளாதார வளர்ச்சி'. இது வளர்ச்சி என்றால் லாட்டரிக் குலுக்கலும், மூணு சீட்டும், நாடா குத்துவதும் கூடப் பொருளாதார வளர்ச்சிதான். இதுதான் பங்குச்சந்தை! இந்த சர்வதேச சூதாட்டக் கிளப்புக்குப் பெயர்தான் நிதிச்சந்தை!
"இந்த நிதிச்சந்தைக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடைகளையெல்லாம் அகற்றி இந்திய வங்கிகளையும், காப்பீட்டுக் கழகத்தையும், நிதி நிறுவனங்களையும் சுதந்திரமாகச் சூதாட அனுமதிக்க வேண்டும். தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி உட்பட இந்திய மக்கள் அனைவரின் தாலியையும் அறுத்து, அடகு வைத்து சூதாடும் சுதந்திரம் முதலாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும்" என்ற கொள்கையைத்தான் நமது ஹார்வர்டு நிதி அமைச்சர் சிதம்பரம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார் என்பதை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்!
எந்தச் சூதாட்டத்திலும் எல்லோரும் வெற்றிபெற முடியாது. சூதாட்டத்தின் ஒழுக்கவிதிகளை மீறுவதிலிருந்து சூதாடிகளைத் தடுக்கவும் முடியாது. போலிப் பத்திரங்களைத் தயாரித்து சக சூதாடிகளுக்கே அல்வா கொடுத்து விட்டார்கள் அமெரிக்கச் சூதாடிகள். 'உலக சூதாடிகள் மனமகிழ் மன்றத்தையே' மூடும் நிலை வந்துவிடுமோ என்று அஞ்சித்தான் உலகநாடுகளின் அதிபர்கள் தவிக்கின்றார்கள். "வங்கிகள் திவாலானால் அரசாங்கம் பணம் தரும்" என்று அவசரம் அவசரமாக ஆஜராகின்றார்கள்.
•••
புதிதாக எதையும் உற்பத்தி செய்யாமல், உற்பத்தி செய்தவனின் பொருள் மீது சூதாடி, சூதாடி உலக முதலாளித்துவம் கண்டிருக்கும் இந்த 'அபரிமிதமான பொருளாதார வளர்ச்சி'யின் உண்மையான பொருள் என்ன? இது உழைப்பே இல்லாமல் உட்கார்ந்து தின்பவனின் உடலில் வளரும் கொழுப்பு! அந்த வகையில் அமெரிக்க முதலாளித்துவத்துக்கு இப்போது வந்திருப்பது மாரடைப்பு!
அமெரிக்காவுக்கு மாரடைப்பு என்றவுடன் அகில உலகத்துக்கும் வேர்க்கின்றது. உலக முதலாளித்துவத்தின் இதயமல்லவா? இந்த இதயம் இயங்குவதற்குத் தேவையான இரத்தமாகத் தமது நிதி மூலதனத்தை அமெரிக்கச் சந்தையில் முதலீடு செய்திருக்கும் எல்லா நாடுகளும் நடுங்குகின்றன. செப்டம்பர் 7 ஆம் தேதியன்று அமெரிக்க அரசால் அரசுடைமை ஆக்கப்பட்ட ஃபான்னி, ஃபிரெட்டி ஆகிய இரு நிறுவனங்களில் மட்டும் சீனா, ஜப்பான், ரசியா, பெல்ஜியம், பிரிட்டன், மற்றும் வளைகுடா நாட்டு முதலாளிகள் போட்டிருக்கும் தொகை 1,50,000 கோடி டாலர். அமெரிக்க நிறுவனங்களில் பிற நாடுகள் பெருமளவில் முதலீடு செய்திருப்பது மட்டுமல்ல, அமெரிக்காவுக்கான ஏற்றுமதியை நம்பி சீனா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற பல்வேறு நாடுகளின் பொருளாதாரங்கள் இயங்கி வருவதால், 'பெரியண்ணன் சாய்ந்தால் உலகப் பொருளாதாரமே சீட்டுக்கட்டு போலச் சரிந்து விடும்' என்று கலங்குகின்றது முதலாளித்துவ உலகம்.
'புலியாக மாற வேண்டுமானால், புலிவாலைப் பிடிக்க வேண்டும்' என்ற தத்துவத்தின் அடிப்படையில், அமெரிக்காவின் வாலைப் பிடித்து வல்லரசாகி விடக் கனவு கண்டு கொண்டிருக்கும் இந்தியத் தரகு முதலாளி வர்க்கத்துக்கும் கை கால்கள் நடுங்குகின்றன. மும்பை பங்குச் சந்தை பாதாளத்தை நோக்கிப் பாய்கின்றது. திவாலான அமெரிக்க இன்சூரன்சு கம்பெனியுடன் கூட்டணி அமைத்திருக்கின்றது டாடாவின் இன்சூரன்சு நிறுவனம். ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியோ, கவிழ்ந்து விடாமல் இருக்க சர்க்கஸ் வேலை செய்கின்றது. திருப்பூரின் பனியன் ஜட்டி ஏற்றுமதியாளர்கள் முதல், இன்போசிஸ், விப்ரோ, எச்.சி.எல் போன்ற அமெரிக்க அவுட்சோர்சிங் வேலைகளின் இறக்குமதியாளர்கள் வரை அனைவரும் அமெரிக்கா நலம்பெற ஆண்டவனுக்கு நெய்விளக்கு போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
'அமெரிக்க நெருக்கடிகள் இந்தியாவில் பிரதிபலிக்காது என்று எண்ணுவது முட்டாள்தனம்' என்கிறார் பொருளாதார அறிஞர் அலுவாலியா. 'உலகப் பொருளாதாரமே ஒரு இழையில் பின்னப்பட்டிருப்பதால், அமெரிக்காவின் பிரச்சினையைத் தீர்க்க இந்தியாவும் தனது பங்களிப்பைச் செலுத்த வேண்டும்' என்று சர்வதேசிய உணர்வுடன் பேசுகின்றார் மன்மோகன் சிங். 'மகாராட்டிரத்தில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளும் இந்தியர்களே' என்ற தேசிய உணர்வை அவரிடம் வரவழைக்க ஒரு இலட்சம் விவசாயிகள் தமது உயிரைக் கொடுக்க வேண்டியிருந்தது என்பதையும் இங்கே நினைவு படுத்திக் கொள்ளுங்கள்!
அமெரிக்க வீழ்ச்சியின் காரணமாக இந்தியப் பங்குச்சந்தையும் சரியத் தொடங்கியவுடனே, 'அரசாங்கம் முட்டுக் கொடுத்து நிறுத்தும்' என்று அறிவித்தார் ப. சிதம்பரம். அமெரிக்கக் கடன் பத்திரங்களை வாங்கி இந்திய முதலாளிகள் நட்டமடைந்திருந்தாலோ, இந்திய வங்கிகள் கவிழ்ந்தாலோ நம்முடைய வரிப்பணத்திலிருந்து நிதியமைச்சர் அதனை ஈடுகட்டுவாராம்! அமெரிக்க முதலாளிகளின் உண்டியலில் இந்திய மக்களின் வரிப்பணமும் காணிக்கையாகச் செலுத்தப்படுமாம்!
தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கையால் அர்ஜென்டினா, மெக்சிகோ, இந்தோனேசியா, தென் கொரியா போன்ற பல நாடுகள் திவாலாக்கப் பட்டிருக்கின்றன. இப்போது அமெரிக்காவின் டவுசரே கிழிந்து விட்டது. 'எசமானின் மானத்தைக் காப்பாற்ற உங்களுடைய வேட்டியை உருவித் தருவதாக' உங்களால் ஜனநாயகப் பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிதி அமைச்சர் உறுதி அளித்திருக்கின்றார்.
இதோ, கம்யூனிசத்தைத் தோற்கடித்த முதலாளித்துவம் வெற்றி உலா வந்து கொண்டிருக்கின்றது! மகா ஜனங்களே, கோவணம் பத்திரம்!
 
 



Politics
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..