Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
இலங்கைக்கு ஈழம்! இந்தியாவுக்கு காசுமீர்!
Posted By:jasmin On 12/24/2008

viagra prodej brno

viagra na prodej

 இலங்கைக்கு ஈழம்! இந்தியாவுக்கு காசுமீர்!

Written by புதிய ஜனநாயகம் Sunday, 14 December 2008 17:27 புதிய ஜனநாயகம் 2008

 

''காஷ்மீர் எங்கள் நாடு. பாதியை இந்தியாவும், பாதியை பாகிஸ்தானும் பிடுங்கிக் கொண்டன. எங்களுக்குச் சுதந்திரம்தான் தேவை.''


இரண்டு மாதங்களுக்கு முன்பு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்திய அரசுக்கு எதிரான போராட்டம் மீண்டும் தீவிரமாக நடைபெறத் தொடங்கியபொழுது, ஒரு காஷ்மீர் முசுலீம் முதியவர் தன்னிடம் இப்படிக் கூறியதாக எழுத்தாளர் அருந்ததிராய், ''காஷ்மீருக்கும் மக்களுக்கும் விடுதலை'' என்ற தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.


ஈழ விடுதலையை ஆதரித்துக் கருத்துச் சொல்லியிருக்கும் தமிழக மக்களில் கூட பெரும்பாலானவர்கள் அந்த காஷ்மீர் முசுலீம் முதியவரின் கருத்தை ஆதரிப்பாளர்களா என உறுதியாகச் சொல்ல முடியாது. காஷ்மீருக்குச் சுதந்திரம் வழங்க வேண்டும் என்ற கருத்தை ஆதரிப்பது ஒருபுறமிருக்கட்டும்; ஈழத்தில் உடனடியாக சிங்கள அரசு போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என ஒருமித்த குரலில் கூறும் தமிழகம்; அதற்காகச் சட்டத்திற்கு உட்பட்ட வழிகளில் போராட்டங்களை நடத்தி வரும் தமிழக மக்கள், இந்திய அரசு காஷ்மீரில் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் எனக் கோரச் சொன்னால், அதிர்ந்துதான் போவார்கள்.


ஈழ மண்ணில் சிங்கள இராணுவம் குவிக்கப்பட்டிருப்பது போல, காஷ்மீரில் இந்திய இராணுவம் ஏறத்தாழ அதை இந்து இராணுவம் என்று கூடச் சொல்லலாம் குவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் மொத்த மக்கட் தொகை ஒரு கோடி; அம்மாநிலத்தின் பள்ளத்தாக்கு பகுதியில் மட்டும் இந்திய இராணுவம் மற்றும் துணை இராணுவப் படைகளைச் சேர்ந்த ஐந்து இலட்சம் துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. தீவரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்க இராணுவம் ஈராக்கை ஆக்கிரமித்திருப்பது போல, எல்லை தாண்டி வரும் தீவிரவாதத்தை ஒடுக்குவது என்ற பெயரில் இந்திய இராணுவம் காஷ்மீரை ஆக்கிரமித்திருக்கிறது.


சிங்கள இனவெறி பாசிஸ்டான மகிந்த ராஜபக்சே, ஈழத்தில் நடைபெறும் போரை விடுதலைப் புலிகளுக்கு எதிரான போராக மட்டும் சித்தரிப்பதை, அப்போர் ஈழத் தமிழ் மக்களைக் குறிவைக்கவில்லை எனக் கூறுவதைத் தமிழகம் நம்ப மறுக்கிறது. அதுபோலத்தான், காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ள இந்திய இராணுவத்தின், துணை இராணுவப் படைகளின் கைகளில் உள்ள துப்பாக்கிகள் "முசுலீம் பயங்கரவாதிகளை' மட்டும் சுட்டுப் பொசுக்கவில்லை; நிராயுதபாணிகளான காஷ்மீர் மக்களைஆண், பெண், முதியவர், குழந்தைகள் என்ற வேறுபாடின்றிச் சுட்டுப் பொசுக்கி வருகிறது; கையெறி குண்டுகளை வீசி அவர்களின் உடைமைகளை அழித்து வருகிறது.


ஈழத்தைப் போல, இந்தியாவின் காஷ்மீர் போரில் பீரங்கிகளும், போர் விமானங்களும் பயன்படுத்தப்படாமல் இருக்கலாம். ஆனால், ஒரு ஆக்கிரமிப்பு இராணுவம் அடிமைப்படுத்தப்பட்ட மக்களை எப்படி அடக்கி ஒடுக்குமோ, அவமானப்படுத்துமோ, அதுபோலத்தான் இந்திய இராணுவம் கடந்த பதினேழு ஆண்டுகளாக காஷ்மீரில், "தன் சொந்த நாட்டு மக்களிடம்' நடந்து வருகிறது. ஊரடங்கு உத்தரவு, குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றி வளைத்துத் தாக்குவது; சோதனைச் சாவடிகள், தேடுதல் வேட்டை, பாலியல் வன்புணர்ச்சி, ஆட்களைக் கடத்துவது, சட்டவிரோதப் படுகொலை, மிரட்டிப் பணம் பறிப்பது, போராளிக் குழுக்களை உடைத்து கைக்கூலி அமைப்புகளை உருவாக்குவது என ஈழத்தில் காணப்படும் அவலங்கள் அனைத்தையும் காஷ்மீரிலும் காண முடியும்.


ஈழத்தமிழர்கள் மீது ஏவிவிடப்படும் மனிதத் தன்மையற்ற தாக்குதல்களுக்காக எந்தவொரு சிங்களச் சிப்பாயும் தண்டிக்கப்படுவதில்லை. அது போலவே, காஷ்மீர், மணிப்பூர், நாகலாந்து, திரிபுரா மாநிலங்களில் நடந்து வரும் சுயநிர்ணய உரிமைப் போராட்டங்களை ஒடுக்க இறக்கிவிடப்பட்டுள்ள இந்திய இராணுவம் நடத்தும் அத்துமீறல்களுக்காக, அவர்களைச் சட்டப்படி தண்டிப்பதில் இருந்து பாதுகாக்க, ''ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்'' என்ற பெயரில் ஒரு தனிச் சட்டமே பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. தடாவும், பொடாவும் எப்படி ஒரு போலீசுக்காரனுக்குச் சர்வாதிகார உரிமைகளை வழங்கியதோ, அதுபோல இந்தச் சட்டம் மறைமுகமான இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு வழி கோலுகிறது.


ஈழத்தமிழ் மக்கள் இலங்கையின் ஒற்றையாட்சியின் கீழ், அரசியல், பொருளாதார, கலாச்சார தளங்களில் உரிமையற்றவர்களாக, இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதால்தான், இந்த இன ஒதுக்கலைச் சட்டப்படியான வழியில் தீர்க்க முடியாமல் போனதால் தான், ஈழத் தமிழர்கள் தங்களின் சுயநிர்ணய உரிமைக்காக ஆயுதமேந்திப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். காஷ்மீர், அசாம், மணிப்பூர், திரிபுரா மாநிலங்களில் ஆயுதப் போராட்டம் நடைபெறுவதற்கு அரசின் மொழியில் சொன்னால் தீவிரவாதம் அம்மக்கள் இனரீதியாக ஒடுக்கப்படுவதும், ஒதுக்கப்படுவதும்தான் காரணம்.


இன்னும் சொல்லப்போனால், இந்தியா ஒரு தேசம் அல்ல; பல்வேறு தேசிய இனங்களின் சிறைக்கூடம். தமிழர், மலையாளிகள், கன்னடர், தெலுங்கர், மராட்டியர்கள் போன்ற தேசிய இனங்கள் தங்களுக்குக் கிடைத்திருக்கின்ற ''உரிமைகளை'' அனுபவித்துக்கொண்டு, ''தேசிய ஒருமைப்பாட்டின்'' கீழ் ''அமைதியாக'' வாழும் பொழுது, காஷ்மீர் மற்றும் நாகலாந்து, அசாம், மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு இந்திய மாநிலங்களில் மட்டும் சுய நிர்ணய உரிமைப் போராட்டம் அரசின் மொழியின் சொன்னால் பிரிவினைவாதம் ஏன் நடக்கிறது என்ற கேள்வி எழலாம். அம்மக்கள், தங்களின் இன உரிமைகளை விட்டுக் கொடுத்துவிட்டு, சொரணையற்று வாழ விரும்பவில்லை என்பதுதான் இதற்குப் பதில்.


···


பிரிட்டிஷ் ஆட்சியின் கீழிலிருந்த பகுதிகளையும், குறுநில மன்னர்களின் கீழிலிருந்த பகுதிகளையும் இணைத்து 1947 ஆகஸ்டு 15இல் "சுதந்திர' இந்தியா உருவாக்கப்பட்ட பொழுது, அன்று ஒன்றாக இருந்த காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாகவோ, பாகிஸ்தானின் ஒரு பகுதியாகவோ இருக்கவில்லை. அன்று, காஷ்மீர் தனி நாடாக, அரிசிங் என்ற இந்து மன்னனின் ஆட்சியின் கீழிலிருந்தது; மன்னராட்சியைத் தூக்கியெறிவதற்கான போராட்டங்கள் அப்பொழுது காஷ்மீரில் நடந்து வந்தன.


காஷ்மீரில் முசுலீம்கள் பெரும்பான்மையாக வாழ்வதையே காரணமாக வைத்து, பாகிஸ்தான் அந்நாட்டைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளுவதற்காக, வடக்குப் பாகிஸ்தானில் வாழும் பழங்குடியினருக்கு இராணுவப் பயிற்சி அளித்து, அவர்களை காஷ்மீருக்குள் அனுப்பியது. இந்த ஆக்கிரமிப்பில் இருந்து காப்பாற்றுவதாக வாக்குறுதி அளித்து, மன்னர் அரிசிங்குடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு ஒன்றுபட்டிருந்த காஷ்மீரை தன்னுடன் இணைத்துக் கொண்டது இந்தியா. இதனையடுத்து நடந்த இந்தியாபாக். போரின் முடிவில் காஷ்மீர் துண்டாடப்பட்டு, இந்தியாபாகிஸ்தான் இடையே பங்கு போட்டுக்கொள்ளப்பட்டது.


இப்போரின் முடிவில், ''காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்திருப்பதா, பாகிஸ்தானுடன் இணைந்திருப்பதா, இல்லை, தனி நாடாகப் போவதா?'' என்பது குறித்து காஷ்மீர் மக்களிடம் ஒரு பொதுஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் என ஐ.நா. மன்றத்தில் இந்தியா வாக்குறுதி அளித்தது. ஐம்மு காஷ்மீர் மக்களைத் திருப்திபடுத்துவதற்காக, அம்மாநிலத்திற்குத் தனிப்பட்ட உரிமைகள் அரசியல் சாசனச் சட்டம் 370 ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டன.


இந்தியா பொது ஜன வாக்கெடுப்பு குறித்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு விட்டது என்பதோடு, அம்மாநில மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த தனி உரிமைகளையும் சிறுகச் சிறுகக் கழிப்பறை காகிதமாக்கிவிட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் ''தீவிரவாதம்'' வளர்ந்ததற்கு இந்தியாவின் இத்துரோகம்தான் அடிப்படையான காரணம். ''தீவிரவாதத்தை'' பாகிஸ்தான் தூண்டிவிடுவதற்கும் இதுதான் அடிப்படையாக இருக்கிறது. காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்க முத்தரப்பு பேச்சுவார்த்தை இந்தியா,பாகிஸ்தான், காஷ்மீர் மக்களின் பிரதிநிதிகள் நடத்த வேண்டும் என்ற காஷ்மீர் மக்களின் நியாயமான கோரிக்கையைக் கூட இந்தியா ஏற்றுக் கொள்ள மறுத்து வருகிறது.


காஷ்மீர் முசுலீம்கள் அனைவரும் பாகிஸ்தானோடு இணைவதையே விரும்புகிறார்கள் என இந்தியாவின் பிற பகுதிகளில் செய்யப்பட்டு வரும் பிரச்சாரம்கூட அவதூறானதுதான். பிரிந்து கிடக்கும் காஷ்மீரை ஒன்றிணைத்து அதனை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் எனக் கோரும் ஐம்முகாஷ்மீர் விடுதலை முன்னணி போன்ற போராளி அமைப்புகள், இந்தியாவின் ஆக்கிரமிப்பின் கீழுள்ள ஐம்முகாஷ்மீரில் மட்டுமல்ல,பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின் கீழுள்ள ஆசாத் காஷ்மீரிலும் இயங்கி வருகின்றன.


ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்துக்கு எதிராக புத்த மதவெறி தூண்டிவிடப்படுவதைப் போன்று, காஷ்மீர் மக்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்துக்கு எதிராக இந்து மதவெறி தூண்டிவிடப்படுகிறது. ஜம்முகாஷ்மீரில் சமீபத்தில் அமர்நாத் யாத்திரைக்கு நிலம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக நடந்த போராட்டங்களே இதற்கு சாட்சி. பாகிஸ்தானோ, இச்சுயநிர்ணய உரிமைப் போரை முசுலீம் மத அடிப்படைவாதத்துக்குள் மூழ்கடித்துவிட முயலுகிறது.


இந்தியாவில் இருப்பதைப் போன்று இலங்கையிலும் மாநில அரசை உருவாக்கினால், இதற்காக 1987இல் உருவாக்கப்பட்ட ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை அமல்படுத்தினால், ஈழத்தமிழர் பிரச்சினையைத் தீர்த்துவிடலாம் என்ற நரித்தனமான யோசனையை இந்திய ஆளும் கும்பல் முன்வைத்து வருகிறது. பஞ்சாயத்து போர்டு போன்ற மாநில அரசை உருவாக்குவது சுயநிர்ணய உரிமைக்கு ஈடாகாது என்பதும்; இம்மாநில உரிமை என்ற மோசடி இந்தியாவிலேயே தோல்வியடைந்துவிட்டது என்பதையும்தான் காஷ்மீரிலும், வடகிழக்கு இந்தியாவிலும் நடைபெற்று வரும் போராட்டங்கள் நிரூபிக்கின்றன.


தமிழகத்தைச் சேர்ந்த பிழைப்புவாதத் திராவிடக் கட்சிகள் ஈழத்தமிழர் போராட்டத்தை, ''சென்டிமெண்ட்'' அடிப்படையிலேயே ஆதரிக்கும்படி தமிழக மக்களைப் பழக்கப்படுத்தியுள்ளன. இக்குறுகிய இனவாதக் கண்ணோட்டத்திற்கு மாறாக, ''அனைத்துத் தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும்'' என்ற பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டத்தின் கீழ் ஈழத்தமிழர் போராட்டத்தை ஆதரிக்க தமிழகம் முன்வர வேண்டும். அப்பொழுதுதான் தமிழக மக்களால், ஈழத்தமிழர் போராட்டத்தை மட்டுமின்றி, இந்தியாவில் நடைபெற்றுவரும் பல்வேறு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டங்களை ஆதரிக்க முடியும்; அது மட்டுமின்றி, தமிழகத்தின் சுயநிர்ணய உரிமைக்காகவும் போராட முடியும்!


·
திப்பு

 




Politics
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..