Posted by S Peer Mohamed
(peer) on 4/28/2019 7:47:30 PM
|
|||
கோப்பு எண்: EMAN/2019-06 அல்ஹம்துலில்லாஹ் . அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் , கடந்த வருடங்களைத் தொடர்ந்து , மூன்றாவது ஆண்டாக , ஈமான் அறக்கட்டளை சார்பாக , அமீரக வாழ் ஏர்வாடி உறவுகளின் பாரம்பரிய கலாச்சார சங்கமம் கடந்த 19/4/2019 வெள்ளி அன்று துபாய் ஜபீல் பூங்காவில் இனிதே நடைபெற்றது . பாரம்பரியத்தில் சங்கமித்து பரஸ்பரம் உறவாடி , விளையாடி மகிழ, ருவைஸ் போன்ற தூரமான பகுதிகள் உட்பட அமீரகத்தின் பல பாகங்களிலிருந்தும் ஏர்வாடி மக்கள் தனியாகவும் குடும்பத்தோடும் சுமார் 300 பேர் திரளாக வந்து சிறப்பித்தார்கள் தொடக்கமாக காலை 10:30 மணிக்கே குழுமியிருந்த இளைஞர்கள் , மண் வாசனையுடன் கூடிய விளையாட்டுக்களான குச்சி கம்பு , பம்பரம் மற்றும் பொவளை ( கோலிக்காய்) ஆகியவற்றை விளையாடி மகிழ்ந்தனர். அதனைத் தொடர்ந்து இளஞ்சூட்டைத் தணிக்க , ஈமானிய சகோதரிகள் வீட்டில் பிரத்தியேகமாக தயார் செய்து கொண்டு வந்திருந்த இதமான சுவையான மோர் பானம் பரிமாறப்பட்டது. சின்ன சின்ன விஷயங்களிலும் நமது கடந்த கால நினைவுகளை நனவாக்கும் முயற்சியாக நமதூர் குழல், தேன் மிட்டாய் ஆரஞ்சி மிட்டாய் போன்ற தின்சாமான்களும் பரிமாறப்பட்டன முன்பு நமதூரில் பெருநாள் காலை ஆண்கள் பெருநாள் தொழுகைக்கு போயிருக்கும் போது , குமரிகள் விளையாடுவதைப் போல , ஜும்மா தொழுகை இடைவேளையில் நமது பெண்கள் அவர்கள் பங்குக்கு விளையாடி மகிழந்தனர். ஜும்மா தொழுகைக்குப் பின் சகோதரிகளுக்கான " களரியில் கலக்குவோம் " என்ற பாரம்பரிய உணவு போட்டி நடைபெற்றது . தக்கடி , கொலுக்கட்டை , உளுந்தங்கஞ்சி , சிறுபயிர் பாயாசம், மால்சா , பாச்சோறு, மருந்து சோறு மீன் மற்றும் உப்பு கருவாடு ஊற வச்ச சோறு .. என சுமார் 15 உணவு வகைகள். மாஷா அல்லாஹ் . இந்த பரபரப்பான நகர வாழ்வின் நடுவிலும் , நேரம் எடுத்து உழைத்து , விதவிதமான கைவண்ணத்தில் நாக்கை ஊறவைக்கும் பலவிதமான பாரம்பரிய உணவு பதார்த்தங்களை படைத்து வைத்திருந்தார்கள் நம் சகோதரிகள். மதிய உணவாக , தலை வாழை இலையில் நமதூர் கல்யாண வீட்டு சாப்பாடு நெய்சோறு , கறி , பருப்பு கத்தரிக்காய் பரிமாறப்பட்டது. ஜபீல் பூங்கா ஏர்வாடி கல்யாணப் பந்தியாக காட்சியளித்தது. உண்ட மயக்கம் தொண்டனுக்கு தான் எங்களுக்கல்ல என்பது போல , அடுத்த விளையாட்டுகளுக்கு நமதூர் முஹல்லாக்களின் பெயரில் 4 குழுக்களாக அனைவரும் தயாராகி விட்டனர் . ஏர்வாடி பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஏழு கல் , ஓட்டப் பந்தயம் , சாக்கு ஓட்டம் என அனைவற்றிலும் வயது வித்தியாசம் பாராது அனைவரும் தங்களின் பள்ளிப் பருவத்திற்கு திரும்பியவர்களாகவே கலந்து கொண்டனர் . கயிறு இழுக்கும் போட்டியில் 35 வயதுக்கு குறைந்த இளைஞர்கள் ஒரு புறமும் , அதற்கு மேற்பட்டவர்கள் ஒரு புறமும் என கிட்டத்தட்ட வந்திருந்த அனைவருமே பங்கு கொண்டு மிகுந்த போட்டிக்கிடையில் வயது கூடியவர்களின் அணி வெற்றி பெற்றது சுவாரஸ்யமாக இருந்தது . வயதானவர்களும் நாம் இன்னும் பலசாலியாகத் தான் இருக்கிறோம் என்ற மன நிறைவுடன் சென்றிருப்பார்கள். இன்னொரு பக்கம் புஜபராக்கிரமசாலிகளான இளைஞர்கள் கபடியில் கலக்கிக் கொண்டிருந்தார்கள். நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக , மகளிரணியின் ஒரு செம ஐடியாவாக , இதற்கிடையில் சகோதரிகள் தரப்பிலும் பல்லாங்குழி போன்ற பல்வேறு பாரம்பரிய விளையாட்டுக்கள் விளையாடி மகிழ்ந்தனர் . திரைக்குப் பின்னால் .. என்ற தலைப்பில் மூன்று குழந்தைகள் , நாம் அன்றாடம் ப்யன்படுத்தும் உணவு பொருட்களை உருவாக்குவதில் திரைக்குப் பின்னால் கஷ்டப்படும் தொழிலாளர்களின் உழைப்பை நினைவு கூர்ந்தனர் . மேலும் பாரம்பரிய மருத்துவ குறிப்புக்களை சகோதரிகள் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது கடைசியாக பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது . பல்வேறு போட்டிகளுக்கு நடுவர்கள் மூலம் தரவரிசை அறிவிக்கப்பட்டாலும், கலந்து கொண்ட அனைவரையும் ஆர்வப்படுத்தும் முகமாக அனைவருக்கும் ஒரே மாதிரியான மதிப்பிலான பரிசுகளே வழங்கப்பட்டது. பரிசுகளின் ஒரு பகுதியாக துபாய் தேராவிலுள்ள இந்தியா சில்க் ஹவுஸ் வழங்கிய பரிசுக் கூப்பன்களை அந்நிறுவனம் சார்பாக கலந்து கொண்ட ஜனாப் .தாவூத்ஷா காக்கா வழங்கினார்கள். மேலும் ஈமானிய பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி மூன்றாவது தலைமுறைக்கும் முன்னுதாரணமாக திகழும் 40 ஆண்டுகால ஈமானிய பயணத்தில் , 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயலாளராக இன்று வரை தொடரும் ஜனாப். இப்ராஹிம் கனி காக்கா அவர்களுக்கு ஈமானின் மூன்றாவது தலைமுறை இளம் ஈமானிய மொட்டுக்கள் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார்கள். மேலும் ஈமான் மாதாந்திர பொது உறுப்பினர் கூட்டத்துக்கு தொடர்ந்து வருகை தரும் சகோதரர் முகம்மது முகைதீன் அவர்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப் பட்டது . இறுதியாக நன்றியுரை மற்றும் துஆவுடன் மாலை 7 மணிக்கு நிகழச்சிகள் இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் . மிகப் பாரிய முயற்சிகளுடன் கூடிய இந்த அருமையான சங்கமம் நிகழ்ச்சியை ஈமான் பரம்பரிய சங்கமம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் / ஈமான் துணைச் செயலாளர் சகோதரர் அல்தாஃப், ஈமான் விளையாட்டுத் துறை பொறுப்பாளர் சகோதரர் ஜெய்னுல் , ஈமான் மக்கள் தொடர்பாளர் சகோதரர். சிட்டி கோல்டு முகைதீன் , ஈமான் Event Manager சகோதரர் அமீர் புஹாரி , ஈமான் வேலைவாய்ப்பு துறை பொறுப்பாளர் சகோதரர். அஹமது முகைதீன் , ஈமான் தொழில் மேம்பாட்டுத் துறை பொறுப்பாளர் சகோரர் தவ்பீக் ,துனைபொருளாளர் சகோதரர் முஹம்மத் மற்றும் சகோதரர்கள் ரியாஸ், தமீம், ஹசன், நிஸ்தார், ஆதில், அப்துல் பாஸித் போன்ற தன்னார்வ சகோதரர்கள் குழு மற்றும் பெண்கள் தரப்பில் ஈமான் மகளிரணி பொறுப்பாளர் & மகளிரணி வாலண்டியர் சகோதரிகள் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் .அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள்பாலிப்பானாக. கலந்து கொண்ட அனைவருக்கும் கால இயந்திரத்தில் பல வருடங்கள் முன்னே சென்று திரும்பியது போன்று இந்த ஒரு நாள் களிப்புவகையுடன் இருந்தது என்றால் அது மிகையல்ல. இந்த பாசமும் பிணைப்பும் மகிழ்ச்சியும் என்றும் தொடரவும் , இது போல நமதூர் சார்ந்த அனைத்து நல்ல காரியங்களிலும் நாம் கூட்டாக செயல்படவும் , இங்கு கூடியது போல நாளை ஜன்னத்துல் பிர்தவ்ஸில் அல்லாஹ் நம்மை ஒன்று சேர்க்கவும் , அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக . உங்களின் மேலான ஆலோசனைகளையும் , துஆக்களையும் எதிர்நோக்கியவர்களாக .. அன்புடன், Part-I: http://www.nellaieruvadi.com/eman/photos.asp?dNam=64_2019_Eman_Cultural_Day-I |
|||
|
|||
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |