பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் =============================
தொடர் 3: திரைமறைவில் ஜின்கள்
Episode 25: ஜின்கள் மனித / மிருக வடிவங்களுக்கு உருமாறி வருவதை உறுதிப்படுத்தும் தகவல்
Episode 26: ஜின்கள் உருமாறுதல் பற்றிய மேலதிக விளக்கம்: ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஜின்கள் உருமாறுவதன் தாத்பரியத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், முதலில் அவை படைக்கப்பட்டிருக்கும் மூலப்பதார்த்தம் பற்றிய சரியான ஓர் அறிமுகத்தைப் பெற்றுக் கொள்வது அவசியம். பின்வரும் குர்ஆன் வசனங்களைக் கொஞ்சம் நிதானமாக நோக்கலாம்:
நிச்சயமாக ஓசை தரக்கூடிய கருப்புக் களிமண்ணால் நாமே மனிதனைப் படைத்தோம். (அதற்கு) முன்னர் ஜின்னை கடும் வெப்பம் கொண்ட நெருப்பிலிருந்து நாம் படைத்தோம். (அல்குர்ஆன் 15 : 26-27)
சுட்ட மண் பாண்டங்களைப் போல் (தட்டினால்) சப்தமுண்டாகும் களிமண்ணிலிருந்து, அவன் மனிதனைப் படைத்தான். புகையற்ற நெருப்புச் சுவாலையிலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான். (அல்குர்ஆன் 55 : 14-15)
மேற்கூறப்பட்ட குர்ஆன் வசனங்களில் மனிதனின் மூலப்பதார்த்தம் பற்றிக் குறிப்பிடும் போது, தட்டினால் சத்தம் உண்டாகக் கூடிய களிமண்ணிலிருந்து மனிதனைப் படைத்ததாக அல்லாஹ் கூறுகிறான். இதன் மூலம் நாம் புரிந்து கொள்வது என்ன? களிமண்ணால் மனிதன் படைக்கப்பட்டான் என்பதற்காக நம்மில் எவரும் இன்று களிமண் உருண்டையைப் போல் இருப்பதில்லை. முற்றிலும் மாறுபட்ட ஓர் உருவத்தோடு தான் நாம் இருக்கிறோம். ஆனால், களிமண்ணுக்குரிய சில அடிப்படைத் தன்மைகள் நமது உடலில் காணப்படுகின்றன.
அதாவது, நிறம், வளைந்து கொடுக்கும் தன்மை, பிசுபிசுப்பு போன்ற பல அம்சங்களில் களிமண்ணுக்கு நிகரான பல தன்மைகள் மனித உடலில் காணப்படுகின்றன. மேலும், எவ்வளவுக்கு எவ்வளவு ஈரப்பதன் அதிகமாகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு களிமண்ணைப் போலவே நமது உடலும் எடையில் அதிகரிக்கக் கூடியதாகவே இருப்பதைப் பார்க்க முடிகிறது. அதே போல், நாம் மரணித்த பின், மண்ணுக்குள் புதைக்கப் பட்டதும், மீண்டும் அதே களிமண்ணாக ஒருசில நாட்களிலேயே நமது உடல் மாற ஆரம்பித்து விடுகிறது. இவ்வாறு பல அம்சங்களில் களிமண்ணின் தன்மையோடு தான் நமது உடல் காணப்படுகிறது.
இதே அடிப்படையில் தான் ஜின்களின் உடலைப் பற்றியும் புரிந்து கொள்ள வேண்டும். மேற்கூறப்பட்ட குர்ஆன் வசனங்களில் ஜின்களின் மூலப்பதார்த்தம் பற்றி இரண்டு தகவல்களைப் பார்க்க முடிகிறது. ஓரிடத்தில், அதிகூடிய வெப்பம் (சக்தி) கொண்ட நெருப்பிலிருந்து ஜின்களைப் படைத்ததாகவும், இன்னோர் இடத்தில், புகையற்ற நெருப்புச் சுவாலையிலிருந்து ஜின்களைப் படைத்ததாகவும் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். இந்த இரண்டு தகவல்களையும் ஒருங்கிணைப்பதன் மூலம் என்ன புரிந்து கொள்கிறோம்?
தீச் சுவாலைகளைப் பொருத்தவரை, குறைந்த (வெப்ப) சக்தியோடும், கலப்படமுள்ள நிலையிலும் எரியும் போது அவை புகையை வெளிப்படுத்தக் கூடியதாகவும், கண்ணுக்குத் தெரியக் கூடிய சுவாலைகளாகவும் நெருப்பு இருக்கும். உச்சகட்ட (வெப்ப) சக்தியை வெளிப்படுத்தும் போதும், கலப்படமற்ற தூய தீச்சுவாலைகளாக எரியும் போதும், நெருப்புச் சுவாலைகளிலிருந்து புகை வெளிப்படுவதுமில்லை; அவ்வாறான தூய தீச்சுவாலைகள் மனித கண்களுக்குத் தெரிவதுமில்லை.
இதை இலகுவாகப் புரிந்து கொள்வதற்கு ஒரு நடைமுறை உதாரணத்தைக் குறிப்பிடுகிறேன்.
நீரியம் (Hydrogen), மற்றும் ஆக்ஸிஜன் (Oxygen) ஆகிய மூலகங்களின் தூய தகனத்தின் போது, அவற்றிலிருந்து வெளிப்படும் தூய தீச்சுவாலைகள் மனித கண்களுக்கு தெரிவதில்லை. அதே நேரம் அவற்றின் சக்தியோ மிகவும் உச்சமாக இருக்கும். (Pure hydrogen-oxygen flames emit ultraviolet light and with high oxygen mix are nearly invisible to the naked eye – Wikipedia)
இவ்வாறான கண்களுக்குத் தெரியாத தூய தீச்சுவாலைகளிலிருந்து வெளிப்படும் வெப்ப சக்தி மட்டுமல்ல; பௌதீக ரீதியான உந்து சக்தியும் மிக அதிகம். இதனால் தான், விண்வெளிக்குச் செல்லக் கூடிய ராக்கெட் எஞ்சின்கள் இவ்வாறான எரிசக்தித் தொழினுட்பங்களின் அடிப்படையில் வடிவமைக்கப் படுகின்றன. இவற்றில் எரிபொருட்களாக ஐதரசன் – ஆக்ஸிஜன் ஆகியவையே பயன்படுத்தப் படுகின்றன. ராக்கெட் எஞ்ஜின்கள் அவற்றின் உச்ச சக்தியில் தொழிட்படும் போது, அவற்றிலிருந்து வெளிப்படும் தீச்சுவாலைகள் கண்களுக்குத் தெரிவதில்லை. பின்வரும் காணொளிகளில் இதைப் பார்க்கலாம் (எஞ்ஜினிலிருந்து வெளிப்படும் தீச்சுவாலையின் நடுப்பகுதியை அவதானியுங்கள்):
https://en.wikipedia.org/wiki/Hydrogen#/media/File:Shuttle_Main_Engine_Test_Firing_cropped_edited_and_reduced.jpg https://www.youtube.com/watch?v=UEhHRXDFkeU https://www.youtube.com/watch?v=2zVLsPSyo30
இது போன்ற ஓர் அடிப்படையில் தான் ஜின்களது உடலமைப்புப் பற்றியும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, தமது இயல்பான தூய வடிவத்தில் இருக்கும் போது, சக்தி கூடிய தீச்சுவாலைகளைப் போல் ஜின்களும் மனித கண்களுக்குத் தெரிவதில்லை. அதே நேரம் இவ்வாறான தூய வடிவத்தில் இருக்கும் போது, ஜின்களின் ஆற்றல் (சக்தி) மிகவும் அதிகம்.
ஆனால், இதை மட்டும் வைத்துக் கொண்டு, ஜின்கள் எப்போதும் இதே போன்ற கண்ணுக்குத் தெரியாத அதிகூடிய சக்தி வடிவத்தில் தான் இருக்கும் என்று நினைப்பது தான் முற்றிலும் தவறு. இதை நாம் ஏற்கனவே பல ஆதாரங்கள் மூலம் நிரூபித்து விட்டோம்.
ஜின்களைப் பொருத்தவரை, தமது இயல்பான தூய சக்தியின் வடிவத்தில் இருக்கும் போது மட்டும் தான் அவை மனித கண்ணுக்குத் தெரியாத வடிவத்தில் இருக்கும். அதே நேரம், ஜின்கள் விரும்பும் போது, தமது சக்தியைத் தேவைக்கேற்ற அளவு குறைத்துக் கொள்ள அவற்றால் முடியும்.
அதாவது, தீச்சுவாலைகள், தமது சக்தியில் குறையும் போதும், தூய தன்மையை இழந்து, கலப்படங்களோடு அவை சேரும் போதும் எப்படி மனித கண்களுக்குத் தெரியக் கூடிய பல்வேறு வடிவங்களிலும், நிறங்களிலும் எரியக் கூடிய சுவாலைகளாக இருக்கின்றனவோ, இதே போல் ஜின்களும் தமது சக்தி அதிர்வெண்களைத் தேவைக்கேற்பக் குறைத்துக் கொள்ளும் போதும், மனித உலகம் சார்ந்த (மண் சார்ந்த) பதார்த்தங்கள் சகிதம் தமது சக்தி சார்ந்த உடல்களைக் கலப்படம் செய்யும் போதும், பல்வேறு பட்ட வடிவங்களிலும், நிறங்களிலும் மனித கண்களுக்குத் தெரியக் கூடிய வடிவங்களுக்கு ஜின்கள் உருமாறுகின்றன.
நினைத்த நேரத்தில் இவ்வாறு உருமாறக் கூடிய சக்தி ஜின்களுக்கு இருக்கின்றது என்பதற்காக எல்லா ஜின்களும் எப்போதும் உருமாறிக் கொண்டே இருப்பதில்லை. உண்மையில் மனித கண்களுக்குத் தெரியக் கூடியவாறு உருமாறிய வடிவங்களில் நீண்ட நேரம் இருப்பதை எந்த ஜின்னும் விரும்புவதும் இல்லை. ஏனெனில், இவ்வாறு உருமாறும் போது, தமது இயல்பான சக்தியில் பெரும் பகுதியையும், தமக்கிருக்கும் பல அபார ஆற்றல்களையும் தற்காலிகமாக இழக்க வேண்டிய ஒரு சூழ்நிலைக்கு ஜின்கள் தள்ளப் படுகின்றன. அதாவது, தமது சக்தியில் பெரும்பகுதியைக் குறைத்துக் கொள்வதன் மூலம் மட்டுமே மனிதர்களது முப்பரிமான உலகம் சார்ந்த வடிவங்களுக்கு ஜின்கள் உருமாறுவது சாத்தியப்படுகிறது.
இதன் விளைவாக, உருமாறிய வடிவங்களில் இருக்கும் போது, ஜின்களுக்கே உரித்தான அபாரமான சக்திகளில் / ஆற்றல்களில் பெரும்பகுதி கணிசமான அளவுக்குக் குறைந்து விடும். உதாரணத்துக்கு ஒரு ஜின், மனித வடிவத்துக்கு உருமாறுகிறது என்று வைத்துக் கொண்டால், உருமாறிய அந்த நிமிடம் முதல், மீண்டும் தனது இயல்பான கண்ணுக்குத் தெரியாத வடிவத்துக்கு உருமாறும் வரை, அந்த ஜின்னுக்கு இருகும் பௌதீக ரீதியான சக்தி என்பது, ஒரு சாதாரண மனிதனுக்கு இருக்கும் சக்தியின் அளவைப் போன்று தான் இருக்கும்; அதை மீறிய சக்தி அப்போது அந்த ஜின்னுக்கு இருக்காது.
எனவே, இவ்வாறு உருமாறியிருக்கும் சந்தர்ப்பங்களில் ஒரு ஜின், இன்னொரு மனிதனது கைகளில் சிக்கினாலோ, அல்லது ஒரு சாதாரண மனிதனோடு சண்டையிட வேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்பட்டாலோ, ஒரு சாதாரண மனிதன் சக மனிதனோடு எப்படிப் போராடுவானோ, அது போல் போராட மட்டுமே அப்போது அந்த ஜின்னால் முடியும். இதனால் தான், ஏற்கனவே நாம் பார்த்த பல ஹதீஸ்களில் சொல்லப்பட்ட சம்பவங்களிலெல்லாம் முப்பரிமான உலக வடிவங்களில் திருட வந்த பல ஜின்களை ஸஹாபாக்களால் கையும் களவுமாக ஒரு திருடனைப் பிடிப்பது போல் இலகுவாகப் பிடிக்க முடிந்தது.
இவ்வாறான பல அச்சுறுத்தல்கள் ஜின்களுக்கு இருப்பதனால், பொதுவாக ஜின்கள் அடிக்கடி உருமாறுவதில்லை. மிகவும் அத்தியாவசியமான தேவை ஏற்படும் போது மட்டுமே, அவை அவை வேறு வழியில்லாமல் தற்காலிகமாக உருமாறுகின்றன. இந்த உண்மையை இன்னொரு கோணத்திலிருந்தும் நோக்குவதன் மூலம் இன்னும் கொஞ்சம் தெளிவாகப் புரிந்து கொள்ள முயற்சிப்போம்:
ஏற்கனவே நாம், இந்தப் பிரபஞ்சத்தில் சடப்பொருள் என்று எதுவுமே கிடையாது என்றும், இந்த மொத்தப் பிரபஞ்சமுமே சக்தி அலைகளின் கதம்பமாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது என்றும் இந்த நெடுந்தொடரின் முதலாவது தொடரில் விரிவாகப் பார்த்தோம்.
இதை இன்னொரு விதத்தில் கூறுவதென்றால், இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் சடப்பொருள், சக்தி என்று நாம் குறிப்பிடும் அனைத்துமே சக்திச் சொட்டுக்களின் மாறுபட்ட அதிர்வுகளின் வெளிப்பாடுகள் மட்டுமே. இந்த அடிப்படையில் நாம் வாழக்கூடிய இந்த மொத்தப் பிரபஞ்சமுமே அதிர்ந்து கொண்டு (Vibration) தான் இருக்கின்றது.
ஒரு சக்திச்சொட்டு அதிரும் வீதம் (Frequency / Vibration) எந்த அளவுக்கு அதிகரிக்கிறதோ, அந்த அளவுக்கு அதன் ஆற்றல் / வீரியம் அதிகரித்துக் காணப்படும். அதாவது ஒவ்வொரு பொருளுக்கும் இருக்கும் அதிர்வெண்ணுக்கு (Frequency) ஏற்ற விதத்திலேயே அதன் ஆற்றல் அமைந்திருக்கும். இந்த அடிப்படையில், இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொரு பொருளுக்கென்றும் தனித்துவமான ஓர் அதிர்வெண் (frequency) இருக்கும். சில பொருட்கள் குறைந்த அதிர்வெண்களில் அதிர்ந்து கொண்டிருக்கும் அதே வேளை மேலும் பல பொருட்கள் கூடிய அதிர்வெண்களில் அதிர்ந்து கொண்டிருக்கும்.
இதை எளிமையாகப் புரிந்து கொள்வதற்காக ஒரு நடைமுறை உதாரணத்தைக் குறிப்பிடுகிறேன். இந்தப் பிரபஞ்சத்தில் 0 இல் இருந்து 100 வரை பல்வேறுபட்ட அதிர்வெண்களைக் கொண்ட மூலப் பதார்த்தங்களாலேயே எல்லாப் படைப்புக்களும் உருவாக்கப் பட்டிருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். ஆற்றல் குறைந்த ஒரு படைப்பின் மூலப்பொருள் அதிர்வெண் 5 என்று வைத்துக் கொண்டால், அதை விடப் பத்து மடங்கு ஆற்றல் கொண்ட இன்னொரு படைப்பின் மூலப்பொருள் அதிர்வெண் 50 ஆக இருக்கும் என்பது போன்ற ஓர் அடிப்படையிலேயே இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த அடிப்படையில் மனித கண்களுக்குத் தெரியக் கூடிய எல்லா வர்ணங்களையும் உள்ளடக்கிய ஒளி சார்ந்த அனைத்தும் 400THz – 800THz (400 டெரா ஹர்ட்ஸ் இற்கும் 800 டெரா ஹர்ட்ஸ் இற்கும் இடைப்பட்ட) அதிர்வெண்களில் தான் அதிர்ந்து கொண்டிருக்கின்றன.
400THz இற்குக் குறைவான அதிர்வெண்களையுடைய சக்தி அலைகளை செந்நிறக்கீழ் (Infra-red) கதிர்கள் தொடக்கம், Microwave, Radio Wave என்று பல்வேறு வகைகளாக இன்றைய விஞ்ஞானம் பட்டியலிட்டு வைத்திருக்கிறது. இதே போல் 800THz இலும் அதிகமான அதிர்வெண்களைக் கொண்ட சக்தி அலைகளை, ஊதா கடந்த (Ultra-violet) கதிர்கள் தொடக்கம், X கதிர்கள் (X-Ray), காமா கதிர்கள் (Gamma Rays) என்று பல்வேறு வகைகளாக மறுபுறம் பட்டியலிடப் பட்டிருக்கின்றது. பின்வரும் படத்தின் மூலம் பல்வேறுபட்ட அதிர்வெண்களுக்கேற்ப சக்தியின் மாறுபட்ட வடிவங்களைப் புரிந்து கொள்ளலாம்:
https://en.wikipedia.org/wiki/Frequency#/media/File:EM_spectrum.svg
இந்தப் பிரபஞ்சத்தில் இதுவரை கண்டறியப்பட்டிருக்கும் சக்தி அலைகளின் பட்டியலில், மனித கண்களுக்குத் தெரியக் கூடிய, எல்லா வர்ணங்களையும் உள்ளடக்கிய ஒளி சார்ந்தவற்றின் அதிர்வெண்களின் வீதம் என்பது, ஏனையவற்றோடு ஒப்பிடும் போது ஒரு சிறிய பகுதி மட்டுமே என்பதை மேலுள்ள படத்தைப் பார்க்கும் போது புரிந்து கொள்ளலாம்.
ஒளியின் இந்த அதிர்வெண் வீதத்துக்குள் (400 – 800 THz) அதிரக்கூடியவற்றை மட்டுமே மனித கண்களால் பார்க்கலாம். அதற்குக் குறைவான வீதத்திலோ, அல்லது கூடிய வீதத்திலோ அதிர்ந்து கொண்டிருக்கும் எதையுமே நம்மால் பார்க்க முடியாது.
இன் ஷா அல்லாஹ் வளரும்...
- அபூ மலிக்
Episode 27: மறைவான உலகங்கள் |