cialis 20mg pribalovy letak cialis generikum online பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் =============================
தொடர் 3: திரைமறைவில் ஜின்கள்
Episode 24: மனித வடிவில் திருட வந்த ஷைத்தான்
Episode 25: ஜின்கள் மனித / மிருக வடிவங்களுக்கு உருமாறி வருவதை உறுதிப்படுத்தும் தகவல்
இதுவரை ஜின்கள் மனித / மிருக வடிவங்களுக்கு உருமாறி வருவதை உறுதிப்படுத்தும் விதமாகப் பல ஹதீஸ் ஆதாரங்களைப் பார்த்தோம். இனி இந்தக் கருத்தை இன்னும் உறுதிப்படுத்தும் விதமாக மேலும் சில தகவல்களையும் பார்ப்போம்:
தகவல் 1: இப்னு ஹஜர் (ரஹ்) அவர்களது பின்வரும் கூற்றைக் கவனியுங்கள்:
மனித கண்களுக்குத் தெரியக் கூடிய பல்வேறு வடிவங்களில் ஷைத்தான் (ஜின்) தோன்றுவதுண்டு. (குர்ஆன் வசனம் 7:27 இல்), “நிச்சயமாக அவனும் (ஷைத்தானும்), அவனது கூட்டத்தாரும் நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று அல்லாஹ் கூறும் வசனமானது, ஜின்களை, அவர்கள் படைக்கப்பட்ட இயல்பான தோற்றத்தில் இருக்கும் போது பார்க்க முடியாது என்பதையே குறிக்கிறது. (நூல்: ஃபத்ஹுல் பாரி 4 / 489)
தகவல் 2: பத்ர் யுத்தத்துக்கு மக்கா குரைஷிகள் தயாராகிக் கொண்டிருந்த போது, முஸ்லிம்களைப் பூண்டோடு அழிக்கும் நோக்கில் அவர்களை உற்சாகப் படுத்துவதற்காக இப்லீஸ் மனித வடிவில் அவர்களிடம் வந்து, தைரியமூட்டியதாகவும், யுத்த களத்தை அடைந்த போது, அங்கு அணிவகுத்திருந்த முஸ்லிம்களின் படையணியையும், அவர்களுக்குத் துணையாக விண்ணுலகிலிருந்து அல்லாஹ் பிரத்தியேகமான இறக்கிய வானவர்களின் படைப்பிரிவையும் கண்டவுடன், மக்கா காஃபிர்களை நட்டாற்றில் விட்டு விட்டுத் தலை தப்பினால் போதும் என்று இப்லீஸ் ஓட்டமெடுத்ததாகவும் பத்ர் யுத்தம் குறித்த வரலாறு கூறுகிறது.
இந்தச் சம்பவத்தை அல்லாஹ் குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகிறான்:
ஷைத்தான் அவர்களுடைய (பாவச்)செயல்களை அவர்களுக்கு அழகாகக் காண்பித்து, "இன்று மனிதர்களில் உங்களை வெற்றி கொள்வோர் எவருமில்லை மெய்யாக நான் உங்களுக்கு துணையாக இருக்கின்றேன்!" என்று கூறினான்; இரு படைகளும் நேருக்கு நேர் சந்தித்தபோது அவன் புறங்காட்டிப் பின்சென்று, "மெய்யாக நான் உங்களை விட்டு விலகிக் கொண்டேன்; நீங்கள் பார்க்க முடியாததை (வானவர்களின் படையணியை) நான் பார்க்கின்றேன்; நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறேன்; அல்லாஹ் தண்டனை கொடுப்பதில் கடினமானவன்" என்று கூறினான். (அல்குர்ஆன் 8:48)
இந்த வசனத்துக்கு தஃப்ஸீர் செய்யும் போது இமாம் இப்னு ஜரீர் அல் தபரி (ரஹ்) தனது தஃப்ஸீரில், இப்லீஸ் எவ்வாறு மனித வடிவில் குரைஷிகளிடம் வந்தான் என்பதை விளக்கி உர்வா இப்னு ஸுபைர் (ரழி) அறிவித்ததாகப் பின்வரும் செய்தியைப் பதிவு செய்திருக்கிறார்:
பத்ர் யுத்தத்துக்குக் குரஷிகள் தயாராகிக் கொண்டிருந்த போது, ஏற்கனவே அவர்களுக்கும், பனூ பக்ர் போன்ற சில கோத்திரத்தவர்களுக்கும் இடையில் புகைந்து கொண்டிருந்த உட்பூசல்களின் அச்சுறுத்தல் குறித்து அவதானம் செலுத்தப் பட்டது. இதன் விளைவாக குரைஷிகள் பத்ர் யுத்தத்தைக் காலம் தாழ்த்துவதைப் பற்றி யோசிக்கலானார்கள். அப்போது இப்லீஸ், பனூ கினானா கோத்திரத்தின் மதிப்பிற்குரிய ஒரு பிரமுகராக இருந்த ஸுரகாஹ் இப்னு ஜு’ஷாம் அல் மத்லாஜி எனும் மனிதரின் உருவத்தில் குரைஷிகளிடம் வந்து, “பனூ கினானா கோத்திரத்தவர்களது அச்சுறுத்தல்களிலிருந்து நான் உங்களது பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறேன். நீங்கள் உங்கள் பணியைத் தொடருங்கள்” என்று தைரியமூட்டினான். எனவே, இப்லீஸின் இந்தப் பொய்யான வாக்குறுதியின் தைரியத்தில் அவர்கள் பத்ர் நோக்கிப் புறப்பட்டனர்.
இந்தச் செய்தி இப்னு கதீர் (ரஹ்) அவர்களது அல் பிதாயாஹ் வல் நிஹாயாஹ் எனும் நூலில் 5/62 இலும் பதிவாகியுள்ளதைப் பார்க்கலாம்.
மேலும், இதே செய்தியை சில சிறிய மாறுதல்களுடன் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் வாயிலாகவும் இன்னொரு பதிவில் காண முடிகிறது. அந்தச் செய்தியில், பத்ர் யுத்த களத்தில் இரண்டு அணிகளும் சந்தித்துக் கொண்ட போது, ஸுரகாஹ்வின் உருவத்தில் இருந்த இப்லீஸிடம் வானவர் ஜிப்ரீல் (அலை) நெருங்கி வந்த போது அவரைப் பார்த்த உடனே அச்சத்தில் நடுநடுங்கியவனாக அங்கிருந்து இப்லீஸ் தப்பித்து ஓடியதாகவும் இமாம் தபராணியின் தஃப்ஸீர் (13/7) இல் பதிவாகியிருக்கிறது.
தகவல் 3: ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறுவதைப் பாருங்கள்: ஜின்கள் மனித வடிவத்திலோ, அல்லது மிருகங்களில் வடிவத்திலோ தோன்றலாம். மேலும், பாம்பு, தேள் போன்ற ஊர்ந்து செல்பவற்றின் வடிவங்களிலும் ஜின்கள் தோன்றுவதுண்டு. அல்லது ஒட்டகம், கால்நடைகள், செம்மறியாடு, குதிரை, கழுதை போன்றவற்றின் வடிவங்களிலோ அல்லது பறவைகளின் வடிவத்திலோ கூட ஜின்கள் தோன்றும். ஸுரகாஹ் இப்னு ஜு’ஷாம் இன் வடிவத்தில் ஷைத்தான் பத்ருப் போருக்குப் புறப்பட்ட குரைஷிகளிடம் தோன்றியது போல், அறிமுகமான மனிதர்களின் வடிவங்களில் கூட ஜின்கள் தோன்றுவதுண்டு. (நூல்: மஜ்மூ’ அல் ஃபத்தாவா 19 / 44)
தகவல் 4: இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) மேலும் கூறுகிறார்:
நாய்களில் பிரத்தியேகமாகக் கறுப்பு நாய் என்பது ஷைத்தான் ஆகும். மேலும், ஜின்கள் அனேகமான சந்தர்ப்பங்களில் கறுப்பு நாயின் வடிவத்திலும், கறுப்புப் பூனையின் வடிவத்திலும் தோன்றுவதுண்டு. ஏனெனில், ஏனைய நிறங்களை விட கறுப்பு நிறத்துக்கு வெப்பத்தை அதிகமாகக் குவித்து உள்ளடக்கக் கூடிய தன்மை இருப்பதனால், தமது ஷைத்தானிய சக்திகளை ஒன்று குவிக்க வசதியாக இருக்கும் இவ்வாறான கறுப்பு நிறப் பிராணிகளின் வடிவங்களை அவை தேர்ந்தெடுக்கின்றன. (நூல்: மஜ்மூ’ அல் ஃபத்தாவா 19 / 52)
தகவல் 5: சில ஷைத்தானிய ஜின்கள் “அவ்லியாக்கள்” எனும் இறைநேசர்களின் வடிவங்களில் கூட தோன்றுவதாகவும், அவ்வாறு தோன்றுவதன் மூலம் பெரும்பாலான மக்களை வழிகெடுப்பதாகவும் ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) பின்வருமாறு கூறுகிறார்:
அனேகமான சந்தர்ப்பங்களில் ஷைத்தான்கள் (ஜின்கள்), மக்கள் உதவி தேடிப் பிரார்த்திக்கும் மனிதர்களது (அவ்லியாக்களது) தோற்றத்தில் வருவதுண்டு. அந்த மனிதர் இறந்தவராக இருந்தாலும், அல்லது உயிரோடிருப்பவராக இருந்தாலும் சரியே. அந்த மனிதனே அறியாத விதத்தில் கூட ஷைத்தான் அவனது தோற்றத்தில் மக்களிடம் தோன்றுவதுண்டு. உண்மையில், இறைநேசர்கள் என்று மக்களால் நம்பப் படுவோரின் வடிவத்தில் இவ்வாறு தோன்றும் ஷைத்தான், இணைவைப்போரின் (அவ்லியா) நம்பிக்கையை இன்னும் உறுதிப்படுத்துகிறான். அதாவது, தாம் உதவி தேடிப் பிரார்த்தித்த மகான் உண்மையில் தமது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு தரிசனம் தருவதாக அந்த முஷ்ரிக்குகள் நம்புவார்கள். ஆனால், உண்மையில் தோன்றியது ஷைத்தான் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.
இவ்வாறான நிகழ்வுகள், உயிரோடிருக்கும், அல்லது இறந்து போன சில மனிதர்களிடம் அவர்களை மகான்கள் என்று நம்பிப் பிரார்த்திக்கும் காஃபிர்கள் விசயத்திலும் நடக்கிறது. உதாரணத்துக்கு ஜோர்ஜ் போன்ற மனிதர்களை புனித மகான்கள் என்று நம்பிப் பிரார்த்திக்கும் கிரித்தவர்கள் மற்றும், ஏனைய மதங்களிலும் இது போன்ற மகான்களை வழிபடும் மக்கள் விசயத்திலும் இது நடக்கிறது. மேலும், முஸ்லிம்கள் என்று தம்மை அழைத்துக் கொண்டு, இணைவைப்பில் ஈடுபடுவோரிடமும் அவர்கள் பிரார்த்திக்கும் இறந்து போன மனிதர்களது வடிவத்திலும் இது நடக்கிறது.
அவர்கள் யாரை மகான்கள் என்று நம்பி அழைக்கிறார்களோ, அவர்களது வடிவத்தில் அவர்களிடம் வருவது ஷைத்தான் தான் என்பதை அவர்கள் அறிவதில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட மனிதர்கள் என்னையும் ஒரு மகான் என்று நினைத்து, அழைத்துப் பிரார்த்தித்ததாக என்னிடமே கூறியதுண்டு. அவர்களுள் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான சம்பவங்களையே என்னிடம் கூறினார்கள். அவர்கள் ஒவ்வொருவரிடமும், “உங்கள் அழைப்புக்குப் பதிலளித்தது நான் அல்ல. நீங்கள் என்னை அழைத்துப் பிரார்த்தித்தது கூட நீங்கள் இப்போது சொல்லும் வரை எனக்குத் தெரியாது” என்று கூறினேன். “இவ்வாறு வந்தது ஒரு வானவர்” என்று அப்போது என்னிடம் கூறப்பட்டது. ஆனால், நான் கூறினேன்: “இணைவைப்போருக்கு ஒருபோதும் வானவர்கள் உதவி செய்ய வருவதில்லை. மாறாக, அவர்களை வழிகேட்டிலேயே நிலைத்திருக்கச் செய்யும் தேவை கொண்ட ஷைத்தான்களே அவ்வாறு பிரார்த்தணைக்குப் பதிலளிப்பது போல் வருகின்றன” (நூல்: மஜ்மூ’ அல் ஃபத்தாவா 19 / 47-48)
நபி (ஸல்) அவர்களது காலம் தொட்டு, இமாம்களது கருத்துக்கள் வரை பல செய்திகளை இங்கு பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறேன். இவை மட்டுமல்லாது, இது போன்ற இன்னும் பல செய்திகளை பிரபலமான இமாம்களின் நூல்களில் கூட பரவலாகக் காண முடிகிறது. இப்னு தைமிய்யா என்பவர் சாதாரண இமாம்களின் பட்டியலில் உள்ள ஒருவர் அல்ல என்பது முழு உலகமும் (ஹதீஸ் மறுப்பாளர்கள் உட்பட) ஏகோபித்து ஒத்துக் கொண்ட உண்மை. ஷெய்குல் இஸ்லாம் என்று பட்டம் சூட்டப்பட்ட விரல் விட்டு எண்ணக் கூடிய ஒருசில இமாம்களுள் ஒருவரே இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள். இவ்வாறான இமாம்கள் பொழுதுபோக்குக்காக மனோ இச்சைப்படி கதை சொல்லக் கூடியவர்கள் அல்ல என்பதையும் நாம் அறிவோம். இவ்வாறிருக்கும் போது, இமாம் இப்னு தைமிய்யாவே ஜின்கள் குறித்து இவ்வாறு கூறுகிறார் என்றால், இது சிந்திக்க வேண்டிய விசயம் என்பதை வாசகர்கள் மறுக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
மேலும், இமாம்களின் கருத்துக்களையும் இங்கு பட்டியலிட்டது, எனது வாதங்களுக்கு அவர்களைப் பிரதான ஆதாரமாகக் காட்டும் நோக்கத்தில் அல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். ஜின்கள் கண்ணுக்குத் தெரியும் வடிவங்களில் வருவது குறித்த எனது வாதங்களைப் போதிய குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களோடு ஏற்கனவே நிரூபித்து விட்டேன். அந்த ஆதாரங்களுக்கு மேலதிக விளக்கங்களாகவே இமாம்களின் கருத்துக்கள் இங்கு பதிவு செய்யப் பட்டிருக்கின்றன.
ஆக, மேற்கூறப்பட்ட இமாம்களின் விளக்கங்களின் அடிப்படையிலும் மனித / மிருக வடிவங்களில் ஜின்கள் உருமாறி வருகின்றன எனும் உண்மை இன்னும் ஒரு படி இங்கு உறுதியாகிறது.
இன் ஷா அல்லாஹ் வளரும்...
- அபூ மலிக்
Episode 26: ஜின்கள் உருமாறுதல் பற்றிய மேலதிக விளக்கம்: |