பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் =============================
தொடர் 3: திரைமறைவில் ஜின்கள்
Episode 22: ஜின்களின் பூர்வீகம்:
Episode 23: ஜின்களின் பூர்வீகம்: ஆதாரம் 5:
இதுவரை, ஜின்களைப் பார்ப்பது தொடர்பில், மனிதர்களின் கண்களுக்குத் தெரியக் கூடிய முப்பரிமாண உலகம் சார்ந்த ஒரு வடிவத்துக்கு ஜின்கள் உருமாறும் போது மனிதர்களால் ஜின்களை சர்வசாதாரணமாகப் பார்க்கலாம் என்பதைப் பார்த்து வருகிறோம். இனி இந்த வாதம் குறித்த சில ஆதாரங்களைப் பார்க்கலாம்.
ஆதாரம் 5: அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ரமளானுடைய (ஃபித்ரா) ஸகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் கொடுத்தார்கள். இதன் போது ஒருவன் இரவில் வந்து உணவுப் பொருட்களை அள்ளலானான். அவனை நான் பிடித்து, “உன்னை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்!” என்று கூறுகிறேன். அதற்கவன், “நான் ஒரு ஏழை! எனக்குக் குடும்பம் இருக்கிறது; கடும் தேவையும் இருக்கிறது!” என்று கூறினான். அவனை நான் விட்டுவிட்டேன்.
விடிந்ததும் நபி (ஸல்) அவர்கள், “அபூஹுரைராவே! நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! தான் கடுமையான வறுமையில் இருப்பதாகவும் தனக்குக் குடும்பம் இருப்பதாகவும் அவன் முறையிட்டான்; ஆகவே, இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன்!” என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நிச்சயமாக அவன் பொய் சொல்லியிருக்கிறான்! மீண்டும் அவன் வருவான்!” என்றார்கள்.
மீண்டும் வருவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதால், அவன் மீண்டும் வருவான் என்று நம்பி அவனுக்காக காத்திருந்தேன். அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கிய போது அவனைப் பிடித்தேன். “உன்னை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்போகிறேன்!” என்று கூறினேன். அதற்கவன், “என்னை விட்டுவிடு! நான் ஒரு ஏழை! எனக்கு குடும்பமிருக்கிறது; இனி நான் வர மாட்டேன்!” என்றான். அவன்மேல் இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன்.
விடிந்ததும், நபி (ஸல்) அவர்கள் “அபூஹுரைராவே! உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்?” என்று கேட்டார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! அவன் கடும் தேவையும் குடும்பமும் இருப்பதாக முறையிட்டான்; ஆகவே, அவன் மேல் இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன்!” என்றேன். “நிச்சயமாக அவன் உம்மிடம் பொய் சொல்லியிருக்கிறான்; திரும்பவும் உம்மிடம் வருவான்!” என்று நபியவர்கள் கூறினார்கள்.
மூன்றாம் இரவு அவனுக்காகக் காத்திருந்த போது, அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கினான். அவனைப் பிடித்து, “உன்னை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன். (ஒவ்வொரு முறையும்) இனிமேல் வர மாட்டேன்! என்று சொல்லிவிட்டு, மூன்றாம் முறையாக நீ மீண்டும் வந்திருக்கிறாய்!” என்று கூறினேன். அதற்கவன், “என்னை விட்டுவிடும்! அல்லாஹ் உமக்குப் பயளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன்!” என்றான். அதற்கு நான், “அந்த வார்த்தைகள் என்ன?” என்று கேட்டேன். “நீர் படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்சியை ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஓதும்! அவ்வாறு செய்தால், விடியும்வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கின்ற (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார்; ஷைத்தானும் உம்மை நெருங்க மாட்டான்!” என்றான். அவனை நான் விட்டுவிட்டேன்.
விடிந்ததும் நபி (ஸல்) அவர்கள் “நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்?” என்று கேட்டார்கள். “அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ் எனக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருவதாக அவன் கூறினான்; அதனால் அவனை விட்டுவிட்டேன்!” என்றேன். “அந்த வார்த்தைகள் என்ன?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். “நீர் படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்சியை ஆரம்பம் முதல் கடைசிவரை ஓதும்! அவ்வாறு ஓதினால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கின்ற(வானவர்) ஒருவர் இருந்த கொண்டேயிருப்பார்; ஷைத்தானும் உம்மை நெருங்க மாட்டான்! என்று என்னிடம் அவன் கூறினான்” எனத் தெரிவித்தேன்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவன் பெரும் பொய்யனாக இருந்தாலும் உம்மிடம் உண்மையைத் தான் அவன் சொல்லியிருக்கின்றான்!” என்று கூறி விட்டு, “இந்த மூன்று இரவுகளாகவும் நீர் யாரிடம் பேசி வருகிறீர் என்று உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். “தெரியாது!” என்றேன். “அவன்தான் ஷைத்தான்!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 2311)
இந்த ஹதீஸில், ஒரு மனிதனின் (திருடனின்) வடிவத்தில் ஷைத்தான் (ஜின்), மூன்று இரவுகள் தொடர்ச்சியாக வந்திருக்கிறான் என்று பச்சையாகவே சொல்லப்படுகிறது. வந்தது மட்டுமில்லாமல், அபூஹுரைரா (ரழி) அவர்களிடம் மூன்று இரவுகளிலுமே ஒரு திருடன் அகப்படுவது போல் கையும் களவுமாகப் பிடிபட்டும் இருக்கிறான். தனது தூய வடிவத்தில் இங்கு ஷைத்தான் வந்திருந்தால், அபூஹுரைரா (ரழி) அவனைப் பார்த்திருக்கவும் முடியாது; பிடித்திருக்கவும் முடியாது. தனது சுய வடிவத்தைத் துறந்து, நமது முப்பரிமாண உலக வடிவத்துக்குத் தற்காலிகமாக உருமாறி வந்ததாலேயே அபூஹுரைராவால் அவனைக் கையோடு பிடிக்க முடிந்தது.
ஜின்களைப் பார்ப்பது சம்பந்தமாக ஏற்கனவே நாம் முன்வைத்திருக்கும் நிலைபாட்டை இந்த ஹதீஸ் கூட சந்தேகமற நிரூபிக்கிறது.
இந்த இடத்தில் இன்னொரு விடயத்தையும் தெளிவு படுத்தி விட விரும்புகிறேன். அதாவது, எதற்கெடுத்தாலும், அறிவியல் பேசிப் பேசியே மார்க்க ஆதாரங்களைத் திரிபு படுத்தி, அதன் மூலம் மக்களை வழிகெடுத்துக் கொண்டிருக்கும் இன்றைய தமிழ் உலகின் நவீன முஃதஸிலா இயக்கத்தவர்கள் இந்த ஹதீஸ் பற்றிக் கூறும் போது, “இந்த ஹதீஸில் சொல்லப்பட்டிருக்கும் ஷைத்தான் என்பது உண்மையில் ஜின் இனத்தைச் சேர்ந்த ஷைத்தான் அல்ல; இது ஒரு கெட்ட மனிதனையே இது குறிக்கிறது. கெட்ட மனிதர்களையும் சில சமயங்களில் மார்க்கம் ஷைத்தான் என்று அழைப்பதுண்டு. அந்த அடிப்படையில் தான் இந்த ஹதீஸில் இருக்கும் ஷைத்தான் எனும் பதத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், ஜின்களை ஒருக்காலும் எந்த மனிதனாலும் பார்க்கவே முடியாது” என்ற ஒரு பொய்யான வாதத்தை மக்கள் மத்தியில் முன்வைப்பதுண்டு.
“ஜின்களை மனிதர்களால் ஒருபோதும் பார்க்கவே முடியாது” எனும் தமது வாதத்தை நிலைநாட்டும் நோக்கில் தான் இவ்வாறான ஒரு பொய்யான வாதத்தை இவர்கள் மக்கள் மத்தியில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
நவீன முஃதஸிலாக்களின் இந்த வாதத்துக்குரிய சரியான பதிலையும் இங்கு சொல்லி விட்டுத் தொடர்வதே சிறந்தது என்று எண்ணுகிறேன். மார்க்க ஆதாரங்களை ஒழுங்காக ஆய்வு செய்யத் தெரியாமல், மனோ இச்சைப்படியே அனைத்தையும் அனுகிப் பழகிவிட்டதால் இவர்களுக்குள் இப்போது குடிகொண்டிருக்கும் அறிவீனத்தையே இந்த வாதம் கூட வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. எப்படியென்பதை விளக்குகிறேன்:
சில சமயங்களில் கெட்ட மனிதர்களைப் பார்த்து ஷைத்தான் என்று மார்க்கம் கூறுவதுண்டு. இதை மறுப்பதற்கில்லை. ஆனால், இந்த ஹதீஸில் ஷைத்தான் என்ற பதம் அந்த அடிப்படையில் வழங்கப் படவில்லை. ஜின் இனத்தைச் சேர்ந்த உண்மையான ஷைத்தானைத் தான் இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்பது ஹதீஸை நிதானமாக வாசிக்கும் போதே புரிந்து கொள்ள முடியும். பின்வரும் நியாயங்கள் மூலம் இதைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்:
நியாயம் 1: திருட வந்தது ஒரு சாதாரண மனிதனாக இருந்திருந்தால், முதலாவது நாள் அபூஹுரைராவிடம் அகப்பட்ட பிறகு, மீண்டும் அதே இடத்துக்கு அவன் திருட வந்திருக்கவே மாட்டான்; அந்தப் பக்கம் தலைவைத்துக் கூட படுத்திருக்க மாட்டான். இது தான் மனித இயல்பு. இந்த இயல்புக்கு முற்றிலும் மாற்றமாகவே இங்கு மூன்று இரவுகள் தொடர்ந்தும் அதே மனிதன் திருட வந்திருக்கிறான். இது மனித இயல்புக்கே மாற்றமான செயல்.
நியாயம் 2: திருட வந்தது சாதாரண மனிதனாக இருந்திருந்தால், நபி (ஸல்) அவர்கள் கூட அபூஹுரைராவிடம் மூன்று நாட்களும் தொடர்ச்சியாக பொடி வைத்துப் பேசுவது போல் “அவன் பொய் சொன்னான்; மீண்டும் வருவான் பாருங்கள்” என்று பேசிப்பேசி, ஒரு திருடனுக்காக மூன்று நாட்களை வீணாக்கியிருக்க மாட்டார்கள். ஒரு திருடனை எப்படிக் கவனிக்க வேண்டுமோ, அவ்வாறு கவனிக்கும் படி தான் முதலாவது நாளிலேயே அபூஹுரைராவுக்குக் கட்டளை பிறப்பித்திருப்பார்கள். ஆனால், இதற்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்கள் கூட மர்மமான முறையிலேயே மூன்று நாட்களும் நடந்து கொண்டிருப்பதை ஹதீஸில் அவதானிக்க முடிகிறது.
அதாவது, தமக்கு ஏற்கனவே தெரிந்த ஏதோ ஓர் இரகசியத்தை எடுத்த எடுப்பிலேயே அபூஹுரைராவிடம் சொல்லாமல், மூன்று நாட்களாக இந்த நாடகம் அரங்கேறி முடியும் வரை நபி (ஸல்) அவர்கள் கூட காத்திருந்து, எல்லாம் முடிந்த பிறகே, வந்து விட்டுப் போனது ஷைத்தான் என்பதை கதைகளில் “க்ளைமாக்ஸ்” சொல்வது போல் நபியவர்கள் இறுதியில் கூறுகிறார்கள்.
சாதாரண திருடன் ஒருவனை ஷைத்தான் என்று கூறியிருந்தால், நபியவர்கள் இப்படிக் கூறியிருக்க மாட்டார்கள். முதலாவது நாளிலேயே, “அவன் ஒரு ஷைத்தான்; அவனை நம்பாமல், உங்கள் கடமையைச் செய்யுங்கள்” என்று தான் நபியவர்கள் கூறியிருப்பார்கள். மாறாக, “அவன் தான் ஷைத்தான்” என்று கடைசி வரை காத்திருந்து, கடைசியில் கூறியிருக்க மாட்டார்கள்.
நியாயம் 3: அபூஹுரைராவை நபி (ஸல்) அவர்கள் நியமித்ததே திருடர்களிடம் இருந்து குறிப்பிட்ட ஸகாத் பொருட்களைப் பாதுகாக்கத் தான். அவ்வாறிருக்கும் போது, நவீன முஃதஸிலாக்கள் சொல்வது போல், தினமும் ஒரு திருடன் வந்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதை சொல்லித் திருடிக் கொண்டே இருந்தான் என்ற பொருளில் இதைப் புரிந்து கொள்ளப் போனால், எந்தக் கடமையைச் செய்வதற்காக நபியவர்களால் அபூஹுரைரா நியமிக்கப் பட்டாரோ, அந்தக் கடமையையே அவர் செய்யவில்லை என்று தான் பொருள் கொள்ள வேண்டி வரும்.
அவ்வாறு பொருள் கொண்டால், மூன்று நாட்கள் தொடர்ந்தும் அபூஹுரைரா (ரழி) அவர்கள், தன் கடமையைச் செய்யாமல் வெட்டியாக திருடர்களுடன் பேசிக் கொண்டிருந்ததை நபியவர்கள் பார்த்துக் கொண்டிருந்திருக்கவே மாட்டார்கள். முதலாவது நாளிலேயே “திருடனோடு உமக்கென்ன பேச்சு வேண்டியிருக்கிறது? உமது கடமையை ஒழுங்காகச் செய்யவும்” என்ற தொணியில் நபியவர்கள் அபூஹுரைராவைக் கண்டித்துத் தான் இருப்பார்கள்; “மீண்டும் நாளை வருவான்; மறுபடியும் நாளை வருவான்” என்று பொடி வைத்துப் பேசிப்பேசி, மக்களது அமானிதமாக இருக்கக் கூடிய ஸகாத் பொருட்களைப் பாதுகாக்கும் கடமையில் பொடுபோக்காக நடந்து கொள்ள அனுமதித்திருக்க மாட்டார்கள்.
நியாயம் 4: அபூஹுரைரா (ரழி) என்பவர், நபி (ஸல்) அவர்கள் கூடவே எப்போதும் சுற்றிக் கொண்டிருக்கக் கூடிய ஒரு ஸஹாபி. மார்க்கத்தின் ஒவ்வொரு அம்சங்களையும் நபியவர்களிடம் இருந்து நேரடியாகவே தினமும் தவறாமல் கற்றுக் கொள்ளக் கூடிய ஒரு ஸஹாபி இவர். ஸஹாபாக்களிலேயே மிக அதிகமான ஹதீஸ்களை ஆயிரக்கணக்கில் அறிவித்தது அபூஹுரைரா (ரழி) அவர்கள் தான்.
இவ்வாறான ஒரு ஸஹாபிக்கே இரவில் தூங்கச் செல்லும் முன் ஆயத்துல் குர்ஸியை ஓதினால், ஷைத்தானிடம் இருந்து பாதுகாக்கும் பொருட்டு அல்லாஹ் ஒரு வானவரைக் நியமிக்கிறான் என்ற தகவல் அதுவரை தெரிந்திருக்கவில்லை என்பது ஹதீஸைப் பார்க்கும் போதே தெரிகிறது. மேலும், ஆயத்துல் குர்ஸி பற்றிய இந்த தகவலை, இந்தச் சம்பவத்துக்கு முன் வேறெப்பொழுதுமே நபியவர்கள் எந்த ஸஹாபிக்கும் கற்றுக் கொடுத்திருக்கவில்லை.
அதாவது, இதற்கு முன் நபியிடமிருந்து எந்த மனிதனுமே தெரிந்திராத ஒரு தகவல் தான், ஆயத்துல் குர்ஸியை இரவில் ஓதினால், காவலுக்கு ஒரு வானவர் நியமிக்கப் படுகிறார் என்ற தகவல். நபி கூட இதுவரை சொல்லாத, இவ்வாறான ஒரு புதிய தகவலை எங்கிருந்தோ திருட வந்த ஓர் அற்பமான மனிதன் அபூஹுரைராவுக்குக் கற்றுக் கொடுக்கிறான் என்றால், ஒன்று... திருட வந்த அந்த மனிதன் ஒரு நபியாக இருந்திருக்க வேண்டும்; அல்லது அல்லாஹ்வின் புறத்தில் இருந்து வந்த வானவராக இருந்திருக்க வேண்டும்; அல்லது, அவன் உண்மையான ஷைத்தானாகத் தான் இருந்திருக்க வேண்டும்.
ஏனெனில், சாதாரண மனிதன் ஒருவனுக்கு இவ்வாறான தகவல்கள் தெரிய வருவதாக இருந்தால், அது நபி சொன்ன பிறகு தான் தெரிய வருவது சாத்தியம். ஆனால், இங்கு நிலைமை தலைகீழாக இருந்திருக்கிறது. திருட வந்தவன் சொன்ன பிறகு தான் நபியவர்களே அந்தத் தகவலை உண்மையென்று ஆமோதிக்கிறார்கள். அதன் பிறகு தான் ஆயத்துல் குர்ஸி பற்றிய இந்தத் தகவல் எல்லோருக்கும் தெரிய வருகிறது.
எனவே, இந்த நியாயங்களையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, வந்து விட்டுப் போனது மனிதன் அல்ல; மனித வடிவில் வந்த ஜின் இனத்தைச் சேர்ந்த ஒரு ஷைத்தான் தான் என்பது மறுக்க முடியாதவாறு இங்கு நிரூபணமாகிறது. நவீன முஃதஸிலாக்களின் விளக்கங்கள் எல்லாம், வெறும் மனோ இச்சையை அடிப்படையாகக் கொண்ட புஸ்வானங்களே என்பதும் இங்கு நிரூபணமாகிறது.
மேலும் நமது கருத்தை இன்னும் உறுதியாக நிரூபிக்கும் விதமாக மேலும் சில ஆதாரங்களை இன் ஷா அல்லாஹ் அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.
இன் ஷா அல்லாஹ் வளரும்...
- அபூ மலிக்
Episode 24: மனித வடிவில் திருட வந்த ஷைத்தான்
|