“ஜன்ன” (ஜீம், நூன், நூன்) எனும் அரபுச் சொல்லடியிலிருந்து முளைத்த சொல் தான் ஜின் எனும் பதம். இந்தச் சொல்லடியின் நேரடி அர்த்தம் “மறைத்தல்” / “மறைதல்” என்பது தான். இந்த அடிப்படையில், ஜின் எனும் அரபுச் சொல்லுக்கு வழங்கப் பட்டிருக்கும் அர்த்தம் “மறைவாக இருப்பது” / “மறைவானது” என்பது தான். அதாவது, மனித புலன்களுக்கு எட்டாத மறைவான வேறொரு பரிமாணத்தில் வாழக்கூடிய ஜீவராசிகள் என்பது தான் ஜின் எனும் பதத்தின் மூலம் உணர்த்தப் படும் பொருள்.
கேள்வி:
ஜின் என்பதற்கும் ஷைத்தான் என்பதற்கும் என்ன வேறுபாடு?
பதில்:
இதற்கான விரிவான பதில் இப்போதே வழங்கப் பட மாட்டாது. இந்தத் தொடரின் பிற்பகுதியில் இது குறித்து ஆதாரங்களோடு விரிவான விளக்கம் வழங்கப்பட இருக்கிறது இன் ஷா அல்லாஹ். இப்போதைக்கு, கட்டுரையின் வாசகங்களை வாசகர்கள் புரிந்து கொள்ளும் வசதி கருதி சுருக்கமான ஒரு பதிலையே வழங்குகிறேன்.
எல்லா ஷைத்தான்களும் ஜின் இனத்தைச் சேர்ந்தவை. அதே நேரம், எல்லா ஜின்களும் ஷைத்தான் கிடையாது. மனிதர்களைப் போலவே ஜின்களிலும் நல்ல ஜின்கள், கெட்ட ஜின்கள், முஃமினானவை, காஃபிரானவை, இரண்டுங்கெட்டான் நிலையில் உள்ளவை என்று பல்வேறு விதமான ஜின்கள் இருக்கின்றன.
இவ்வாறான பல வகையான ஜின்களில், இப்லீஸ் எனும் ஜின்னின் தலைமையின் கீழ் ஒன்று திரண்டு, மனித இனத்தைக் கருவறுக்கும் நோக்கத்தோடு திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் காஃபிரான ஜின்களின் ஒரு கூட்டத்தையே ஷைத்தான்கள் என்று மார்க்கம் கூறுகிறது.
இப்லீஸ் என்பவன் எல்லா ஜின்களின் தலைவனும் அல்ல. ஜின்களுக்குள் இருக்கக் கூடிய பல்வேறுபட்ட இனத்தவர்களுள் ஓர் இனத்தைச் சேர்ந்த ஒரு ஜின் தான் இப்லீஸ் எனப்படுபவன். இப்லீஸ் தான் ஜின்களிலேயே அதிகம் பலம் பொருந்தியவன் என்று கூட கிடையாது. இப்லீஸை விடப் பலம் / ஆற்றல் கூடிய ஜின் இனத்தவர்களும் இருக்கிறார்கள்; ஆற்றல் குறைந்த ஜின் இனத்தவர்களும் இருக்கிறார்கள். தனித்தனியாக அவர்கள் பற்றிய நுணுக்கமான விபரங்கள் மார்க்கத்தில் நமக்குச் சொல்லப்படவில்லை; ஓரளவுக்குத் தான் இது குறித்த தகவல்கள் பொதுப்படையாக மார்க்கத்தில் சொல்லப் பட்டிருக்கின்றன. இன் ஷா அல்லாஹ் அவற்றைப் பிந்திய பகுதிகளில் நோக்கவிருக்கிறோம்.
இப்லீஸுக்கும், ஏனைய ஜின்களுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் ஒன்று தான். ஏனைய எல்லா ஜின்களும் மனிதர்களைப் போலவே குறிப்பிட்ட காலம் வரை வாழ்ந்து விட்டு மரணிக்கின்றன; எந்த ஜின்னும் சிரஞ்சீவியாக உயிரோடிருப்பதில்லை. ஆனால், இப்லீஸ் மட்டும் யுகமுடிவு நாள் வரை மரணிக்காதவாறு, அவனுக்கு மட்டும் அல்லாஹ் ஆயுளை நீடித்து வைத்திருக்கிறான். பின்வரும் குர்ஆன் வசனத்தின் மூலம் இதைப் புரிந்து கொள்ளலாம்.
"என்னுடைய இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக!" என்று இப்லீஸ் கூறினான்.
"நிச்சயமாக, நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் ஒருவானாவாய்; குறிப்பிட்ட நேரத்தின் நாள் வரும் வரையில்" என்று அல்லாஹ் கூறினான்.
(அல்குர்ஆன் 15 : 36-38)
இப்போதைக்கு ஷைத்தான் பற்றி இவ்வளவும் போதும். மீண்டும் விட்ட இடத்துக்குத் திரும்பலாம்.
மனிதர்களால் ஜின்களைப் பார்க்க முடியுமா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பொதுவாக ஜின்கள், தமது தூய வடிவத்தில் இருக்கும் போது, நபி மார்களைத் தவிர வேறு யாராலும் அவர்களைப் பார்க்க முடியாது. இந்த உண்மையைப் புரிந்து கொள்ளும் விதமாக இனி சில ஆதாரங்களைப் பார்க்கலாம்:
ஆதாரம் 1:
நீங்கள் அவர்களைக் காணாத வகையில் அவனும் (இப்லீஸும்), அவனது கூட்டத்தாரும் (ஷைத்தானிய ஜின்களும்) உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
(அல்குர்ஆன் 7:27)
இந்த வசத்தின் மூலம் ஜின்கள் விரும்பும் போதெல்லாம், அவர்களால் இலகுவாக மனிதர்களைப் பார்க்க முடியும் என்பதும், மனிதர்கள் விரும்பினாலும், அவர்களால் ஜின்களைப் பார்க்க முடியாது என்பதும் நிரூபணமாகிறது.
ஆனால், இந்த வசனத்தை மட்டும் வைத்துக் கொண்டு சிலர், ஜின்களை ஒருபோதும் மனிதர்களால் பார்க்கவே முடியாது என்று வாதிடுவதுண்டு. இந்த வாதம் தவறானது. ஒரு விடயம் குறித்து சரியான தெளிவுகளைப் பெற வேண்டுமென்றால், அது குறித்து மார்க்கம் கூறும் பல ஆதாரங்களை முடிந்த வரை திரட்டி ஒருங்கிணைத்து நோக்க வேண்டும். இவ்வாறு நோக்குவதன் மூலமே அந்த விடயம் குறித்த சரியான தெளிவைப் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு மாற்றமாக, தமக்குச் சார்பாகத் தோன்றும் ஏதாவது ஓர் ஆதாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு வாதிட முனைவது, அனேகமான சந்தர்ப்பங்களில் தவறான நிலைபாடுகளுக்கே வழிவகுக்கும்.
ஜின்கள் குறித்த மேலும் சில மார்க்க ஆதாரங்களையும் இந்த வசனத்தோடு இணைத்து விளங்கும் போது தான் இது குறித்த சரியான தெளிவு கிடைக்கும். இந்த அடிப்படையில், இது சார்ந்த இன்னும் சில ஆதாரங்களையும் இந்த வசனத்தோடு இணைத்து விளங்க முயற்சிப்பதன் மூலம் இங்கு சரியான தெளிவை அடைய முயற்சிக்கலாம். பின்வரும் ஹதீஸ்களைக் கவனியுங்கள்:
ஆதாரம் 2:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பலம் பொருந்திய ஜின் ஒன்று நேற்றிரவு என் தொழுகையை (இடையில்) துண்டிப்பதற்காக திடீரென்று வந்து நின்றது. அல்லாஹ் எனக்கு அதை வசப்படுத்தித் தந்தான். நான் அதைப் பிடித்துக் கொண்டேன். நீங்கள் ஒவ்வொருவரும் அதைப் பார்ப்பதற்காக அதைப் பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் கட்டி வைக்க விரும்பினேன். அப்போது, என் சகோதரர் சுலைமான் (அலை) அவர்கள் செய்த, "என் இறைவா! எனக்குப் பின் வேறெவருக்கும் கிடைக்காத ஓர் அதிகாரத்தை எனக்கு வழங்குவாயாக!'' (38:35) என்னும் பிரார்த்தைனைய நினைவு கூர்ந்தேன். உடேன, அதைச் சபித்து எறியப்பட்டதாகத் திருப்பியனுப்பி விட்டேன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)
நூல்: புகாரி 3423
ஆதாரம் 3:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) தொழும்போது "நான் உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்'' என்றும், "அல்லாஹ்வின் சாபத்தால் உன்னை நான் சபிக்கிறேன்'' என்றும் மூன்று முறை கூறியைத நாங்கள் செவியுற்றோம். மேலும், அவர்கள் தமது கரத்தை விரித்து எதையோ பிடிப்பதைப் போன்று சைகை செய்தார்கள். தொழுது முடித்ததும் நாங்கள் "அல்லாஹ்வின் தூதேர! தாங்கள் தொழும் போது ஒன்றைக் கூறினீர்கள். இதற்கு முன் தாங்கள் அவ்வாறு கூறியதை நாங்கள் கேட்டதில்லையே? மேலும், நீங்கள் உங்கள் கரத்தை விரித்தைதயும் நாங்கள் கண்டோமே (ஏன்)?'' என்று கேட்டோம். அதற்கு அவர்கள் "அல்லாஹ்வின் எதிரி இப்லீஸ் ஒரு தீப்பந்தத்தை ஏந்திக் கொண்டு அதை என் முகத்தில் வைக்க (என்னிடம்) வந்தான். உடேன நான் "உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று மூன்று முறையும், "அல்லாஹ்வின் முழு சாபத்தால் உன்னை நான் சபிக்கிறேன்' என மூன்று முறையும் கூறினேன். ஆனால், அவன் பின்வாங்கிச் செல்லவில்லை. பிறகு நான் அவைனப் பிடிக்க விரும்பினேன். அல்லாஹ்வின் மீதாணையாக! எம் சேகாதரர் சுலைமான் (அலை) அவர்களின் வேண்டுதல் மட்டும் இல்லையாயின், காலையில் மதீனா நகரச் சிறுவர்கள் அவனுடன் விளையாடும் வகையில் (இந்தப் பள்ளிவாசலில்) அவன் கட்டி வைக்கப்பட்டிருப்பான்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூதர்தா (ரழி)
நூல்: முஸ்லிம் 942
இந்த இரண்டு ஹதீஸ்கள் மூலமும் பல உண்மைகள் புலப்படுகிறன:
நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருந்த போது, அதைக் குழப்ப வந்த ஜின்னின் உருவம், நபி (ஸல்) அவர்களது கண்களுக்குத் தெரிந்திருந்த அதே வேளை, சம்பவத்தைப் பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஸஹாபாக்களின் கண்களுக்குத் தெரியவில்லை என்ற உண்மை புலப்படுகிறது.
மேலும், நபி (ஸல்) அவர்கள் விரும்பியிருந்தால், மனிதர்கள் கண்களுக்குத் தெரியக் கூடிய வடிவத்திற்கு அதே ஜின்னை உருமாறச் செய்து, கட்டி வைத்திருக்கலாம் எனும் இன்னோர் உண்மையும் புலப்படுகிறது.
இந்த இரண்டு உண்மைகளையும் இணைத்து விளங்கும் போது புலப்படும் மூன்றாவது உண்மை என்ன?
தமது உண்மையான தூய வடிவத்திலும், தமக்கே உரிய பரிமாண உலகிலும் ஜின்கள் இருக்கும் போது, நபி மார்களைத் தவிர, சாதாரன மனிதர்களது கண்களால் அவர்களைப் பார்க்க முடியாது; அதே நேரம், மனிதர்களது கண்களால் பார்க்கக் கூடிய விதத்தில் நமது முப்பரிமான உலகைச் சார்ந்த ஒரு வடிவத்துக்கு ஜின்கள் தற்காலிகமாக உறுமாறும் போது, நமது முப்பரிமான உலகிலிருக்கும் ஏனைய ஜீவராசிகளைப் போல் ஜின்களையும் பார்க்கலாம்; தொட்டு உணரலாம்; கட்டி வைக்கலாம்; தேவைப்பட்டால் விளையாடவும் செய்யலாம் என்பது தான் இதில் பொதிந்திருக்கும் மூன்றாவது உண்மை.
இந்த உண்மைகள் மூலம் ஜின்களின் வடிவம் என்பது நமக்கிருக்கும் வடிவத்தைப் போல் நிலையான ஒரு வடிவமல்ல என்பதும், தேவைக்கேற்ப அவர்களின் வடிவம் மாறுபடும் என்பதும், அவர்களுக்குரிய பரிமாண உலகில் தமது தூய வடிவத்தில் சஞ்சரிக்கும் போது ஜின்களை நம்மால் பார்க்க முடியாது என்பதும், நமது முப்பரிமான உலகுக்குள் ஊடுறுவும் போது நம்மைப் போன்ற ஒரு முப்பரிமான வடிவத்திற்கு அவர்கள் உருமாறுவதுண்டு என்பதும், இவ்வாறு உருமாறிய வடிவத்தில் இருக்கும் போது இவர்களைப் பார்ப்பதும், பேசுவதும், பழகுவதும் பெரிய ஆச்சரியமில்லை என்பதும் உறுதியாகிறது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக இன்னும் சில ஆதாரங்களைப் பார்க்கலாம்:
ஆதாரம் 4:
ஜின்களைப் போலவே, வானவர்களும் மறைவான பரிமாணத்துக்குரியவர்கள் தாம். நமது முப்பரிமாண உலகுக்கு ஏற்ற விதத்தில் அவர்கள் உருமாறினாலே தவிர, அவர்களையும் நம்மால் அவர்களது தூய வடிவத்திலிருக்கும் போது பார்க்க முடியாது. சில சந்தர்ப்பங்களில் மனிதர்களது கண்களுக்குத் தெரியும் விதமாக நபி மார்களை சந்திக்க வேண்டிய தேவைகள் ஏற்படும் போது, வானவர்கள் மனித உருவில் வருகை தந்திருப்பதுண்டு.
உதாரணத்துக்கு இப்றாஹீம் (அலை) அவர்கள் வீட்டுக்கு இரண்டு வானவர்கள் மனித உருவில் வந்த போது, இப்ராஹீம் (அலை) அவர்களாலேயே ஆரம்பத்தில் அவர்களை வானவர்கள் என்று இனம்கண்டுகொள்ள முடிவில்லை. அந்த அளவுக்கு மிகவும் இயல்பான தோற்றத்தில் அவ்வானவர்கள் வந்திருந்தார்கள்.
இதேபோல், ஈமான் பற்றிய ஒரு பாடத்தை ஸஹாபாக்கள் முன்னிலையில் கற்பிக்கும் பொருட்டு, நபி (ஸல்) அவர்களிடம் கூட ஒருமுறை ஜிப்ரீல் (அலை) அவர்கள் மனித வடிவில் வந்ததுண்டு. இவ்வாறு வந்த போது, பக்கத்திலிருந்த எல்லா ஸஹாபாக்களும் ஜிப்ரீல் (அலை) அவர்களை ஒரு சாதாரண மனிதரைப் பார்ப்பது போல் பார்த்தார்கள். பிறகு, நபி (ஸல்) அவர்கள், வந்து விட்டுப் போனது யாரென்று சொல்லும் வரை, அது ஜிப்ரீல் (அலை) தான் என்பதை ஸஹாபாக்களில் யாருமே அறிந்திருக்கவில்லை.
இதே போல், ஒரு முறை மூஸா (அலை) அவர்களிடம் மனித வடிவில் உயிரைப் பறிக்கும் வானவர் அனுப்பப் பட்ட போது, அவசரத்திலும், முன்கோபத்திலும் அவரை ஒரு மனிதர் என்று நினைத்து மூஸா (அலை) அவர்கள் அந்த வானவரின் கன்னத்தில் ஓர் அறை விட்டார். மூஸா (அலை) அவர்கள் விட்ட ஒரே அறையில் மனித வடிவிலிருந்த வானவரின் ஒரு கண் குருடாகிப் போனது. திரும்பவும் அல்லாஹ்விடம் சென்று வானவர் நடந்ததைக் கூறிய பிறகு அல்லாஹ் அவரது கண்ணைச் சரி செய்து இரண்டாம் தடவையும் மூஸா (அலை) அவர்களிடம் அனுப்பினான்.
இவ்வாறான சம்பவங்களின் போதெல்லாம் சர்வ சாதாரணமாகப் பார்க்கவும், பழகவும், தொட்டு உணரவும் கூடிய விதத்தில் தான் வானவர்கள் வந்தார்கள். இதே அடிப்படையில் தான் ஜின்கள் விசயத்திலும் புரிந்து கொள்ள வேண்டும். தமது தூய வடிவத்தில் இருக்கும் போது தான் மனிதர்களால் ஜின்களைப் பார்க்க முடியாதே தவிர, நமது முப்பரிமாண உலகுக்கு ஏற்ற ஒரு வடிவத்தை அவர்கள் எடுக்கும் போது, சர்வசாதாரணமாக அவர்களைப் பார்க்கவும், பேசவும், பழகவும் முடியும்.
இது குறித்த இன்னும் சில உண்மைகளைத் தகுந்த ஆதாரங்களோடு அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.
இன் ஷா அல்லாஹ் வளரும்....
- அபூ மலிக்
Episode 23: ஜின்களின் பூர்வீகம்: ஆதாரம் 5: