பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் =============================
தொடர் 3: திரைமறைவில் ஜின்கள்
Episode 20: ஜின்கள்
Episode 21: ஜின் இனங்கள்
இதுவரை நாம் நோக்கிய எல்லா ஆதாரங்களையும் ஒருங்கிணைத்து, ஜின்கள் பற்றி விளங்க முயற்சிக்கும் போது நமக்குப் பல உண்மைகள் தெளிவாகின்றன.
ஜின் இனம் என்பது, மனித இனத்தைப் போன்ற ஒரு தனி இனம் அல்ல என்பது இதுவரை நாம் பார்த்த ஆதாரங்கள் மூலம் நிரூபணமாகிறது. வானில் பறக்கக் கூடியவை, மிருகங்களைப் போல் இருப்பவை, நகருயிர்களைப் போல் இருப்பவை, மீன்களைப் போல் நீருக்கு அடியில் சஞ்சரிக்கக் கூடியவை, மனிதர்களைப் போல் நடந்தும், வாகனங்களிலும் பயணிக்கக் கூடியவை, வீடு வாசல்களில் குடும்பம் குட்டிகளோடு நம்மைப் போல் தங்கி வாழக் கூடியவை, குறிப்பிட்ட சில துறைகளில் மட்டும் நிபுணத்துவம் வாய்ந்தவை, ஆற்றலில் கூடியவை, ஆற்றலில் குறைவானவை, இலகுவில் கட்டுப்படுத்தக் கூடியவை, எதற்கும் அடங்காதவை... என்று சொல்லிக் கொண்டே போகும் அளவுக்கு எண்ணிலடங்காத பல தனித்தனி இனங்களை உள்ளடக்கிய ஒரு தனி உலகத்தையே குறிக்கக் கூடிய ஒரு பதம் தான் ஜின்கள் எனும் பதம்.
இதை இன்னொரு விதத்தில் கூறுவதென்றால், நமது முப்பரிமான உலகில் மனித இனத்தோடு சேர்த்து, மிருகங்கள், பறவைகள், நகருயிர்கள், மீன்கள், புழு பூச்சிகள் என்று எண்ணிலடங்காத பல்வேறு தனித்துவமான இனங்கள் வாழ்கின்றன. மனித இனத்தோடு, இந்த அனைத்து இனங்களையும் சேர்த்துக் குறிப்பிடும் போது நாம் எவ்வாறு குறிப்பிடுவோம்? “இந்தப் பூமியில் வாழும் ஜீவராசிகள்” என்று தான் குறிப்பிடுவோம். இதே போல தான் ஜின்கள் எனும் பதத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, நமது முப்பரிமான உலகத்தைப் போன்ற வேறொரு பரிமாணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய எல்லா ஜீவராசிகளையும் குறிக்கும் சொல் தான் “ஜின்” என்ற பதம்.
இந்த மறைவான உலகத்திலும், நமது முப்பரிமான உலகில் இருப்பதைப் போலவே, பகுத்தறிவு வழங்கப்பட்ட மனிதர்களைப் போன்ற ஜீவராசிகளும், பகுத்தறிவு வழங்கப் படாத மிருகங்களைப் போன்ற ஜீவராசிகளும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
நமது முப்பரிமான உலகுக்கும், ஜின்களது பரிமாண உலகுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் ஒன்று தான். நமது முப்பரிமாண உலகில் பகுத்தறிவு வழங்கப் பட்ட ஜீவராசிகளாக இருப்பது மனிதன் எனும் ஒரேயோர் இனம் மட்டும் தான். ஆனால், ஜின்களது மறைவான பரிமாண உலகில், பகுத்தறிவு வழங்கப் பட்ட ஜீவராசிகளாக ஒன்றுக்கு மேற்பட்ட பல இனங்கள் இருக்கின்றன என்பது தான் மார்க்க ஆதாரங்கள் மூலம் நமக்குத் தெரிய வருகிறது. துல்லியமாக எத்தனை இனங்கள் நம்மைப் போல் பகுத்தறிவு வழங்கப் பட்டவர்கள் ஜின்களில் இருக்கிறார்கள் என்பது தான் நமக்குத் தெரியவில்லை. அதை அல்லாஹ்வே அறிவான்.
ஆகவே, இந்த நியாயத்தின் அடிப்படையில் நோக்கும் போதும் கூட, பறக்கும் தட்டுக்களில் வரக் கூடிய மர்ம இனத்தவர்கள், ஜின் எனும் பரந்த இனத்துக்குள் இருக்கும், பகுத்தறிவு வழங்கப் பட்ட சில இனங்களைச் சார்ந்தவர்களே என்பது புரிகிறது.
இந்த இடத்தில் சிலருக்கு ஒரு கேள்வி எழலாம்:
நினைத்த நேரத்தில் நினைத்த இடத்துக்குத் தாமாகவே அதி வேகத்தில் பயணிக்கக் கூடிய ஆற்றல் ஜின்களுக்கு இயல்பிலேயே இருக்கும் போது, எதற்காக மெனக்கெட்டு ஒரு பறக்கும் தட்டை அவை தயாரித்துக் கொள்ள வேண்டும்? எதற்காக அதில் ஏறி வர வேண்டும்? நேரடியாகவே ஒரே கணத்தில் வந்து விட்டுப் போக வேண்டியது தானே?
இந்தக் கேள்வி எழுவதற்குக் காரணம், ஜின்களைப் பற்றி நம்மில் பலரிடம் இருக்கும் தப்பான புரிதல் தான். அதாவது, எவ்வளவு தூரம் வேண்டுமானாலும், அதையெல்லாம் கணப்பொழுதில் கடந்து, நினைத்த இடத்துக்கு நொடிப்பொழுதில் சென்று விடக் கூடிய ஆற்றல் எல்லா ஜின்களுக்கும் இருக்கிறது என்று நம்மில் பலர் (பல உலமாக்கள் உட்பட), இந்த விசயத்தில் ஜின்களைப் பற்றித் தப்பாகவே புரிந்திருக்கிறார்கள். இந்தத் தப்பான புரிதலின் விளைவு தான் இந்தக் கேள்வி.
ஆனால், உண்மை இதுவல்ல. ஜின்களின் வகைகளைப் பற்றி ஏற்கனவே நாம் நோக்கிய ஹதீஸின் வெளிச்சத்தில் இதை அணுகும் போது தான் பறக்கும் தட்டுக்கான அவசியம் ஏற்படுவதன் நியாயம் புலப்படும். அதாவது, மார்க்க ஆதாரங்களின் பிரகாரம், எல்லா ஜின்களாலும் பறக்க முடியாது. ஜின்களில் சில இனத்தவரால் மட்டுமே சுயமாக, எந்தவிதமான வாகனங்களின் துணையும் இன்றி காற்றிலும், விண்வெளியிலும் பறந்து செல்ல முடியும். இவ்வாறான வகையறாக்களைச் சேர்ந்த ஜின்களுக்குத் தான் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்துக்கு நொடிப் பொழுதில் பயணம் செய்யும் ஆற்றல் உள்ளது. உதாரணத்துக்குப் பின்வரும் குர்ஆன் வசனத்தைப் பாருங்கள்:
"பிரமுகர்களே! அவர்கள் என்னிடம் வழிபட்டவர்களாக வருமுன், உங்களில் யார் அவளுடைய அரியாசனத்தை என்னிடம் கொண்டுவருபவர்?" என்று (ஸுலைமான் ஜின்களிடம்) கேட்டார். ஜின்களில் (பலம் பொருந்திய ஓர்) இஃப்ரீத் கூறிற்று: நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன்; நிச்சயமாக நான் அதற்கு சக்தியுள்ளவனாகவும், நம்பிக்கைக்கு உரியவனாகவும் இருக்கிறேன்." (அல்குர்ஆன் 27 : 38,39)
இந்த வசனத்தில் சொல்லப்படும் சம்பவத்தில், ஸுலைமான் (அலை) அவர்கள், தமது வசம் பணியாற்றிக் கொண்டிருந்த எல்லா ஜின் இனத்தவர்களதும் தலைவர்களைத் தமது சபையில் ஒன்று கூட்டி, யெமனில் இருக்கும் அரசியின் அரியாசனத்தை பலஸ்தீனில் இருக்கும் தனது மாளிகைக்குக் குறைந்த நேரப் பொழுதுக்குள் யாரால் கொண்டுவர முடியும்? என்ற கேள்வியைக் கேட்கிறார்கள்.
இங்கு “பிரமுகர்களே!” என்று ஸுலைமான் (அலை) அவர்கள் விளித்திருப்பதிலிருந்தே, இது சாதாரண வேலையாள் ஜின்களிடம் கேட்கப்பட்ட கேள்வியல்ல; பல்வேறுபட்ட ஜின் இனத்தவர்களது தலைவர்களை ஒன்று கூட்டி, மஷூரா செய்யும் போது கேட்கப்பட்ட ஒரு கேள்வி இது என்பது தெளிவாகப் புலப்படுகிறது.
மேலும், இந்தக் கேள்வியிலிருந்தே, எல்லா ஜின்களுக்கும் இருக்கும் ஆற்றல் ஒரே அளவானதல்ல; சில ஜின்களுக்கு இருக்கும் ஆற்றல் சில ஜின்களுக்கு இருப்பதில்லை என்ற உண்மை கூட புலப்படுகிறது. அதாவது, ஜின்களில் சில இனத்தவர்களால் மட்டும் தான் இவ்வாறான அபாரமான காரியங்களை நொடிப் பொழுதுகளில் செய்து முடிக்கலாம் என்பது ஸுலைமான் (அலை) அவர்களது மஷூராவிலிருந்தும், கேள்வியிலிருந்துமே தெளிவாகப் புரிகிறது.
ஸுலைமான் (அலை) அவர்களின் இந்தக் கேள்விக்கு, “இஃப்ரீத்” எனும் இனத்தைச் சார்ந்த ஒரு ஜின், “நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன்” என்று பதிலளிப்பதைப் பார்க்க முடிகிறது. இதை வைத்து, “இஃப்ரீத்” எனும் வகையைச் சார்ந்த ஜின்களுக்கு நினைத்த நேரத்தில் நினைத்த இடத்துக்கு எந்தவிதமான வாகன வசதியோ, தொழினுட்ப வசதியோ இல்லாமல் நொடிப்பொழுதில் பயணம் செய்யும் அபார ஆற்றல் இருக்கிறது என்பது தெளிவாகிறது.
ஆனால், இதை மட்டும் வைத்துக் கொண்டு, எல்லா ஜின்களாலும் இப்படிக் கணப்பொழுதில் பயணிக்கலாம் என்று வாதிடுவது தவறு. இது மார்க்கத்துக்கு முரணான சிந்தனையும் கூட. இதே குர்ஆன் வசனத்தை உற்று நோக்கும் போதே இது எவ்வளவு தவறான புரிதல் என்பது புலப்படும்.
அதாவது, எந்தவிதமான சாதனங்களும் இல்லாமல் எல்லா ஜின்களாலும் ஒரே மாதிரி சுயமாக நொடிப்பொழுதில் பயணிக்க முடியுமென்றால், ஜின்களின் பிரமுகர்களை அழைத்து, ஸுலைமான் (அலை) அவர்கள் ஒரு மஷூராவைக் கூட்டி இருக்கவே வேண்டியதில்லை. பேசாமல், கையில் அகப்படும் ஏதாவதொரு ஜின்னைக் கூப்பிட்டு “போய் அந்த அரியாசனத்தை எடுத்து வா” என்று அனுப்பியிருப்பார்கள். இவ்வாறு நடக்காததை வைத்தே, ஜின்களிலும் சுயமாகப் பறக்கக் கூடியவர்களும் இருக்கிறார்கள்; வாகனங்களில் பறக்கக் கூடியவர்களும் இருக்கிறார்கள்; அறவே பறக்க முடியாதவர்களும் இருக்கிறார்கள் என்ற கருத்துக்கான பல முகாந்திரங்கள் இங்கு முளைக்கின்றன.
இந்த முகாந்திரங்களை முழுமைப்படுத்தும் விதமாகவே, ஜின்களின் மூன்று வகைகள் பற்றி ஏற்கனவே நாம் குறிப்பிட்ட ஹதீஸ் அமைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. அதாவது, சுயமாகப் பறக்கும் ஆற்றல் பெற்ற ஜின்கள், மிருகங்களையும், நகருயிர்களையும் போன்ற ஜின்கள், குடியிருப்புக்களில் தங்கிக் கொண்டும், பிரயாணம் செய்து கொண்டும் இருக்கக் கூடிய ஜின்கள் என்று ஹதீஸ் இதைத் தெள்ளத்தெளிவாக விபரித்துக் காட்டுகிறது.
இந்த மூன்று வகையறாக்களிலும், முதலாவது வகையறாவால் மட்டுமே சுயமாகப் பறக்க முடியும் என்பதும், ஏனைய இரண்டு வகையறாக்களாலும் சுயமாகப் பறக்க முடியாது என்பதும் ஹதீஸைப் பார்க்கும் போதே தெரிகிறது.
இந்த மூன்று வகையறாக்களில், மனிதர்களாகிய நம்மைப் போல், குடியிருப்புக்களாகத் தங்கி வாழ்ந்து கொண்டும், அவ்வப்போது பிரயாணங்களில் ஈடுபட்டுக் கொண்டும் இருக்கக் கூடிய ஜின்களில் சில இனத்தவர்களே பறக்கும் தட்டுக்களில் அடிக்கடி தோன்றக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பதே மார்க்க ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு நான் கொண்டிருக்கும் நிலைபாடு. ஏனெனில், இவர்களால் சுயமாகப் பறக்க முடியாது என்பது மார்க்க ஆதாரங்களிலிருந்தே தெரிகிறது.
இவ்வாறான ஜின் இனத்தவர்கள் பறப்பதாக இருந்தால், நாம் விமானங்களில் பறப்பதைப் போல் ஏதாவது தொழினுட்பங்களின் உதவியோடு தான் பறக்க வேண்டும். இவ்வாறான தொழினுட்ப சாதனங்களாகவே இந்த பறக்கும் தட்டுக்கள் தொழிற்படுகின்றன என்பதே எனது வாதம். இது குறித்து இன்னும் விரிவாக இன் ஷா அல்லாஹ் இந்தத் தொடரின் பிற்பகுதியில் நோக்கலாம்.
ஜின்கள் எனும் இனத்தவர்கள் வாழக்கூடிய மறைவான பரிமாண உலகம் பற்றிய ஒரு சிறு அடிப்படையை இதுவரை பார்த்தோம். இனி, ஜின்களது பூர்வீகம் சார்ந்த சில அறிமுகங்களையும் பார்க்கலாம்.
இன் ஷா அல்லாஹ் வளரும்...
- அபூ மலிக்
Episode 22: ஜின்களின் பூர்வீகம்: |