Episode 24: மனித வடிவில் திருட வந்த ஷைத்தான்
சென்ற எபிசோடில், அபூஹுரைரா (ரழி) அவர்கள் மனித வடிவில் திருட வந்த ஷைத்தானைப் பிடித்த சம்பவத்தையொட்டி, மனித கண்களுக்குத் தெரியக் கூடிய வடிவங்களில் ஜின்களால் உருமாறி வர முடியும் என்பதை நிரூபித்தோம். மேலும், நவீன முஃதஸிலாக்கள் வாதிடுவது போல், அபூ ஹுரைராவிடம் திருட வந்தது யாரோ ஒரு மனிதன் அல்லவென்பதையும், ஜின் இனத்தைச் சேர்ந்த உண்மையான ஷைத்தானே மனித வடிவில் வந்தான் என்பதையும் கூட பல நியாயங்களின் அடிப்படையில் நிறுவினோம்.
இந்த உண்மையை இன்னும் உறுதிப்படுத்தும் விதமாக மேலும் பல செய்திகள் கூட அமைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. அதாவது, அபூஹுரைராவுக்கு நடந்தது போன்ற இதே மாதிரியான சம்பவங்கள் மேலும் சில ஸஹாபாக்களுக்கும் நடந்திருக்கின்றன. பின்வரும் செய்திகளைப் பாருங்கள்:
சம்பவம் 1:
அபூஹுரைரா (ரழி) அவர்களுக்கு நடந்து போலவே இன்னொரு சம்பவம் முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்களுக்கும் நடந்ததாக இமாம் தபரானி, மற்றும் அபூபக்கர் அல் ரூயானி ஆகியோர் மூலம் இன்னொரு செய்தியும் பதிவாகியிருக்கிறது. இந்தச் செய்தியில் ஷைத்தான், ஆயத்துல் குர்ஸி பற்றிக் கூறியதோடு, ஸூரத்துல் பகராவின் இறுதி இரண்டு வசனங்கள் பற்றியும் கூட மேலதிகமாகக் கூறியதாகக் குறிப்பிடப் பட்டிருக்கிறது. மேலும், முஆத் (ரழி) அவர்களது அறிவிப்பில், ஷைத்தான் மனித வடிவில் அல்லாமல், ஒரு யானையின் வடிவில் வந்ததாகக் குறிப்பிடப் பட்டிருக்கிறது. இந்தச் செய்தி குறித்து இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள், பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
“இதே போன்றதொரு சம்பவம், உபை இப்னு கஅப் (ரழி) அவர்களுக்கும் நடந்ததாக ஆதாரபூர்வமான ஒரு செய்தியை இமாம் நஸாயி அவர்கள் ஆமோதிக்கிறார். மேலும், அபூ அய்யூப் அல் அன்ஸாரி அவர்களுக்கும் இவ்வாறான ஒரு சம்பவம் நடந்ததாக திர்மிதியில் ஒரு பதிவு இருக்கிறது. மேலும், அபூ அஸ்யாத் அல் அன்ஸாரிக்கும் இதே போன்ற ஒரு சம்பவம் நடந்ததாக தபராணியின் பதிவில் காணக் கிடைக்கும் அதே வேளை, ஸைத் இப்னு தாபித்துக்கும் இது போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக இப்னு அபூ அத்துன்யாவின் இன்னொரு பதிவிலும் காணக் கிடைக்கின்றது. இருந்தாலும், இந்தச் சம்பவங்களுள், முஆத் இப்னு ஜபலுடைய சம்பவம் தான் அபூஹுரைராவின் சம்பவத்துக்கு மிகவும் நெருக்கமான சம்பவமாக இருக்கிறது. ஏனையவை, சற்று மாறுபட்ட சம்பவங்கள்.”
(பத்ஹுல் பாரி: பாகம் 4, பக்கம் 489)
சம்பவம் 2:
அப்துர் ரஹ்மான் பின் அபூ லைலா அறிவிப்பதாவது:
அபூ ஐயூப் அல் அன்ஸாரி (ரழி) அவர்கள், தனக்குச் சொந்தமான ஒரு களஞ்சியத்தில் பேரீச்சம்பழங்களை சேகரித்து வைத்திருந்தார். தினமும் ஒரு “ஃஊல்”(Ghoul) (அடிக்கடி உருமாறக் கூடிய ஒரு வகையான ஜின் இனம்), தனது களஞ்சியத்திலிருந்து பேசீச்சம்பழங்களைத் திருடுவதாக நபி (ஸல்) அவர்களிடம் அபூ ஐயூப் முறையிட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “திரும்பிச் செல்லுங்கள். மறுபடியும் அவள் வந்தால், ‘அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு, அல்லாஹ்வின் தூதருக்கு நீ பதிலளிக்க வேண்டும்’ என்று கூறுங்கள்” என்று கூறினார்கள்.
அபூ ஐயூப் கூறினார்: “அவள் மீண்டும் வந்தபோது நான் அவளைப் பிடித்துக் கொண்டேன். இனிமேல் திருட வர மாட்டேனென்று அவள் கூறியதால், நான் அவளை விட்டு விட்டேன்”. மீண்டும் நபி (ஸல்) அவர்களிடம் சென்ற போது, “உம்மால் பிடிக்கப்பட்ட திருடி என்ன செய்தாள்?” என்று கேட்டார்கள். அதற்கு அபூ ஐயூப் “திரும்பவும் வர மாட்டேனென்று அவள் சத்தியம் செய்தாள்” என்று பதிலளித்தார். அதற்கு நபியவர்கள், “அவள் பொய் சொன்னாள். மீண்டும் வந்து அதே பொய்யைச் சொல்வாள்” என்று கூறினார்கள்.
அபூ ஐயூப் கூறினார்: “மற்றொரு சந்தர்ப்பத்தில் அவளை மறுபடியும் பிடித்துக் கொண்டேன். இனிமேல் வரமாட்டேன் என்று அவள் சத்தியம் செய்தாள். எனவே அவளை விட்டு விட்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். நபியவர்கள், “உம்மால் பிடிக்கப்பட்ட திருடி என்ன செய்தாள்?” என்று கேட்டார்கள். “இனிமேல் வரமாட்டேனென்று அவள் சத்தியம் செய்தாள்” என்று கூறினேன். அதற்கு நபியவர்கள், “அவள் பொய் சொன்னாள். மீண்டும் வந்து அதே பொய்யைச் சொல்வாள்” என்று கூறினார்கள்.”
மீண்டும் ஒருமுறை அபூ ஐயூப் அவளைப் பிடித்துக் கொண்டார். “அல்லாஹ்வின் தூதரிடம் செல்வதற்கு நீ என்னுடன் வரும் வரை உன்னை விடவே மாட்டேன்” என்று கூறினார். அதற்கு அவள் “உமக்கு நான் ஒரு விடயத்தைக் கற்றுத் தருகிறேன். உமது வீட்டில் ஆயத்துல் குர்ஸீயை ஓதி வந்தால், எந்த விதமான ஷைத்தான்களாலும் உம்மை நெருங்க முடியாது” என்று கூறினாள்.
பிறகு அபூ ஐயூப், நபி (ஸல்) அவர்களிடம் சென்றார். “உம்மால் பிடிக்கப்பட்ட திருடி என்ன செய்தாள்?” என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்கு அபூ ஐயூப், அவள் கற்றுத் தந்ததைப் பற்றிக் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவள் உண்மையையே கூறினாள். ஆனாலும் அவள் தொடர்ந்தும் பொய் பேசக் கூடியவளே” என்று கூறினார்கள்.
நூல்: திர்மிதி – பாடம் 45, ஹதீஸ் 3121
தரம்: ஹஸன் (திர்மிதி / தாருஸ்ஸலாம்)
இந்த ஹதீஸ் பற்றிய இமாம் திர்மிதியின் அடிக்குறிப்பு:
“தினமும் வீட்டில் ஆயத்துல் குர்ஸீயை ஓதி வருவதால் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புக் கிடைக்கும் என்பது குறித்த செய்தியை இந்த ஹதீஸ் உறுதிப்படுத்துகிறது. மேலும், அபூ ஹுரைராவின் செய்தியும் இதை மேலும் உறுதிப்படுத்துகின்றது.”
இதே செய்தியை இன்னோர் அறிவிப்பாளர் சங்கிலியூடாக அபூ நுஐம் பதிவு செய்திருக்கிறார். அந்த அறிவிப்பில், திருட வந்த “ஃஊல்(Ghoul)” (ஜின்), ஆரம்பத்தில் ஒரு பூனையின் வடிவத்தில் வந்ததாகவும், பிறகு ஒரு கிழவியின் வடிவத்துக்கு உருமாறியதாகவும் குறிப்பிடப் படுகிறது.
குறிப்பு:
மேற்கூறப்பட்ட ஹதீஸில், திருட வந்த ஜின்னைக் குறிக்க “ஃஊல்(Ghoul)” எனும் பதம் கையாளப் பட்டுள்ளது. இங்கு “ஃஊல்” என்ற பதத்தின் மூலம் குறிப்பிடப் படுவது, அடிக்கடி உருமாறக் கூடிய ஒரு வகையான ஜின் இனத்தைத் தான். “ஃஊல்” எனும் பதம் அரபுகள் வழக்கத்தில் இரண்டு அடிப்படைகளில் கையாளப் பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. ஒன்று, ஜாஹிலிய்யக் காலத்து நம்பிக்கையின் அடிப்படை. மற்றது ஜின்களில் ஓர் இனத்தவரைக் குறிக்கும் மார்க்கத்தின் அடிப்படை. இதில், ஜின்களில் ஓர் இனத்தைக் குறிக்கக் கூடிய மார்க்கத்தின் அடிப்படையிலேயே ஃஊல்(Ghoul) எனும் பதம் இங்கு கையாளப் பட்டிருக்கிறது.
ஜாஹிலிய்ய காலத்து நம்பிக்கையின் அடிப்படையில், “ஃஊல்(Ghoul)” எனும் பதம், மயானங்களில் வாழக் கூடிய, பிரயாணம் செய்யும் மனிதர்களைக் கொன்று, இரத்தத்தைக் குடித்து, அந்த மனிதரது உருவத்தையே எடுக்கக் கூடிய ஒரு வகையான பேய் எனும் அடிப்படையில் அரபுகளிடையே வழங்கப் பட்டதுண்டு. இந்த அடிப்படையில் “ஃஊல்(Ghoul)” எனும் பதம் கையாளப் பட்டிருப்பதை “ஆயிரத்தோர் இரவுகள்” எனும் அரேபிய புராணக் கதைகளில் கூட காணலாம். ஆனால், இந்த அடிப்படையை இஸ்லாம் முற்றாக மறுத்துள்ளது. பின்வரும் ஹதீஸ்களைக் கவனியுங்கள்:
ஹதீஸ் 1:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக ஜாபிர் (ரழி) அறிவித்ததாவது:
தொற்றுநோய் என்பது கிடையாது; கெட்ட சகுனம் என்பது கிடையாது; ஃஊல்(Ghoul) என்பது கிடையாது.
(ஸஹீஹ் முஸ்லிம்: பாடம் 39, ஹதீஸ் 147)
ஹதீஸ் 2:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அறிவித்ததாவது:
தொற்றுநோய் என்பது கிடையாது; ஸஃபர் என்பது கிடையாது; ஃஊல்(Ghoul) என்பது கிடையாது.
(இதன் அறிவிப்பாளர்) கூறுகிறார்: ஸஃபர் என்றால் என்னவென்று ஜாபிர் (ரழி) விளக்கியதாக அபூ ஸுபைர் கூறியதை நான் கேட்டேன்.
அபூ ஸுபைர் கூறினார்: “ஸஃபர் என்பது வயிற்றைக் குறிக்கிறது”. “ஏன்?” என்று ஜாபிர் (ரழி) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, அவர் கூறினார், “வயிற்றில் இருக்கும் புழுக்களையே ஸஃபர் என்பது குறிக்கிறது”. ஆனால், ஃஊல்(Ghoul) என்றால் என்னவென்று ஜாபிர் கூறவில்லை. மாறாக அபூ ஸுபைர் கூறினார்: “ஃஊல்(Ghoul) என்பது பிரயாணிகளைக் கொல்லக் கூடியதையே குறிக்கிறது”
(ஸஹீஹ் முஸ்லிம்: பாடம் 39, ஹதீஸ் 149)
ஆகவே, மேற்கூறப்பட்ட ஹதீஸ்களின் அடிப்படையில் திர்மிதியின் அறிவிப்பில் கூறப்பட்ட ஃஊல்(Ghoul) எனும் பதத்தை அடிக்கடி உருமாறக் கூடிய ஒரு வகையான ஜின் இனம் என்று மட்டுமே புரிந்து கொள்ள வேண்டும் என்பதும்; ஜாஹிலியக் கால நம்பிக்கையின் அடிப்படையில் இந்தப் பதப்பிரயோகத்தைப் புரியக் கூடாது என்பதும் தெளிவாகிறது.
இனி அடுத்த சம்பவத்தைப் பார்க்கலாம்.
சம்பவம் 3:
அபூ நுஐம், மற்றும் பைஹக்கி தனது தலாயில் இல் பதிவு செய்த செய்தி:
உபை இப்னு கஅப் (ரழி) அவர்களுக்குச் சொந்தமான ஒரு பேரீச்சம்பழத் தோட்டம் இருந்தது. அதை அவர் தினமும் இரவில் காவல் காப்பவராக இருந்து வந்தார். கொஞ்ச காலம் சென்ற பிறகு அவரால் தொடர்ச்சியாக இரவில் காவல் காக்க முடியவில்லை. பிறகு ஒரு நாள் இரவு மீண்டும் காவல் காக்கச் சென்றார்.
அன்றிரவு (காவல் காத்துக் கொண்டிருக்கும் போது) தனது தோட்டத்தில் ஒரு சிறுவனின் தோற்றத்துக்கு ஒப்பான ஒரு (விசித்திரமான) பிராணியை அவர் கண்டார். உபை இப்னு கஅப் அதைப் பார்த்து ஸலாம் கூறினார். அதுவும் பதிலளித்தது. தொடர்ந்து உபை அந்தப் பிராணியைப் பார்த்து “நீ ஒரு மனிதனா? அல்லது ஜின்னா?” என்று கேட்டார். தான் ஒரு ஜின் என்று அந்தப் பிராணி பதிலளித்தது. உடனே உபை அந்தப் பிராணியிடம், அதன் முன்னங்கையைக் காட்டும் படி கூறினார். அதன் கை ஒரு நாயின் கையைப் போலிருந்ததோடு, நாயின் முன்னங்கையில் இருப்பதைப் போலவே அதில் முடிகளும் இருந்ததைக் கண்டார். அதைப் பார்த்து விட்டு உபை, “எல்லா ஜின்களும் இவ்வாறான தோற்றத்தில் தான் படைக்கப் பட்டிருக்கின்றனவா?” என்று கேட்டார். அதற்கு அந்த ஜின், “(இல்லை); சில ஜின்கள் என்னை விடவும் மாறுபட்ட விசித்திரமான தோற்றத்தில் இருப்பார்கள்” என்று பதிலளித்தது.
தொடர்ந்து உபை, “(எனது தோட்டத்தில் திருடும்) இந்தக் காரியத்தைச் செய்வதற்கு உன்னைத் தூண்டியது யார்?” என்று கேட்டார். அதற்கு அந்த ஜின், “நீங்கள் ஸதகா கொடுப்பதில் மிகவும் பிரியம் உடையவர் என்று நான் கேள்விப்பட்டேன். எனவே, உங்களிடமிருந்து எனக்கும் கொஞ்சம் எடுத்துக் கொள்ளலாம் (திருடிக் கொள்ளலாம்) என்று தான் வந்தேன்” என்று பதிலளித்தது. அதன் பிறகு உபை, “உங்களிடமிருந்து எவ்வாறு எம்மைப் பாதுகாத்துக் கொள்வது?” என்று கேட்டார். அதற்கு அந்த ஜின், “ஸூரத்துல் பகராவில் இருக்கும் “ஆயத்துல் குர்ஸீ” எனும் வசனம். யார் இந்த வசனத்தை மாலை நேரத்தில் ஓதுகிறாரோ, மறுநாள் காலை வரை நமது தீங்குகளிலிருந்து அவர் பாதுகாக்கப் படுகிறார். மேலும், யார் இதைக் காலையில் ஓதுகிறாரோ, அவர் மாலை வரை நமது தீங்கிலிருந்து பாதுகாக்கப் படுகிறார்” என்று பதிலளித்தது.
மறுநாள் காலையில் உபை இப்னு கஅப், நபி (ஸல்) அவர்களிடம் சென்று, நடந்த சம்பவத்தைக் கூறினார். அதற்கு நபியவர்கள், “கபீத் (கெட்டவன், அசுத்தமானவன்) உண்மையைத் தான் கூறினான்” என்று கூறினார்கள்.
இமாம் அபூ யாலா, இமாம் நஸாயீ, இப்னு ஹிப்பான், தபரானி, ஹாக்கிம் ஆகியோர் இந்தச் செய்தியை “ஸஹீஹ்” என்று உறுதிப்படுத்தியிருப்பதாக இமாம் ஜலாலுத்தீன் ஸுயூத்தியின் தப்ஸீர் துர் அல் மன்தூர், பாகம் 2, பக்கம் 5 பதிவாகியிருக்கிறது.
இதே செய்தியை ஒருசில சிறிய மாறுதல்களுடன் இன்னொரு பதிவிலும் பார்க்கலாம்:
தியா அல் தீன் அல் மக்திஸியின் “அஹாதீஸ் அல் முக்தார்” எனும் நூலில் பதிவான செய்தி:
உபை இப்னு கஅப் (ரழி) அவர்களிடம் உலர்ந்த பேரீச்சம்பழங்களால் நிரப்பப்பட்ட ஒரு களஞ்சியம் இருந்தது. அதிலிருந்த பேரீச்சம் பழங்கள் குறைந்து வருவதை அவர் அவதானித்தார். எனவே, ஒரு நாள் இரவு அதைக் காவல் காக்கும் பொருட்டு அவர் விழித்திருந்தார். திடீரென்று ஒரு சிறுவனின் தோற்றத்துக்கு ஒப்பான ஒரு மிருகம் அங்கு தோன்றியது. வந்த மிருகம் ஸலாம் கூறியது. உபை இப்னு கஅப் ஸலாத்துக்குப் பதிலளித்தார். பிறகு உபை அந்த மிருகத்திடம் “நீ ஒரு மனிதனா? அல்லது ஜின்னா?” என்று கேட்டார். அதற்கு அந்த மிருகம், “இல்லை, நான் ஒரு ஜின் ஆவேன்” என்று பதில் கூறியது. “உனது கையைக் காட்டு” என்று உபை கூறினார். அதற்கு அந்த ஜின் தனது கையை நீட்டியது. வினோதமான விதத்தில் அதன் கை ஒரு நாயின் முன்னங்கையைப் போலும், நாயைப் போன்ற முடிகளைக் கொண்டதாகவும் இருந்தது. “இப்படித் தான் ஜின்கள் படைக்கப் பட்டிருக்கின்றனவா?” என்று உபை கேட்டார்.
உபை தொடர்ந்து கூறினார்:
அன்றிரவு ஜின்களைப் பற்றிய சில உண்மைகளை நான் தெரிந்து கொண்டேன். அத்தோடு, அது என்னை விடவும் துணிச்சல் மிக்க ஒரு படைப்பு என்பதையும் அறிந்து கொண்டேன். அதைப் பார்த்து நான் “ஏன் இங்கு வந்தாய்?” என்று கேட்டேன். அதற்கு அந்த ஜின், “நீங்கள் தர்மம் செய்வதில் அதிக பிரியம் உடையவர் என்ற செய்தி எனக்குக் கிடைத்தது. எனவே, உமது உணவில் ஒரு பகுதியை எடுத்துக் கொள்ள வந்தேன்” என்று பதிலளித்தது. “உன்னிடம் இருந்து மனிதர்களைப் பாதுகாப்பது எது” என்று கேட்டேன். “ஸூரத்துல் பகராவில் இருக்கும் ஆயத்துல் குர்ஸீ. யார் அதை மாலைப் பொழுதில் ஓதுகிறாரோ, அவர் விடியும் வரை நம்மிடமிருந்து பாதுகாக்கப் படுகிறார். மேலும், யார் அதைக் காலைப் பொழுதில் ஓதுகிறாரோ, அவர் மாலை வரை நம்மிடமிருந்து பாதுகாக்கப் படுகிறார்” என்று ஜின் பதிலளித்தது.
மறு நாள் காலையில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, நடந்த சம்பவத்தைக் கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தீயவன் உண்மையையே கூறியிருக்கிறான்” என்று கூறினார்கள்.
நூல்: தியா அல் தீன் அல் மக்திஸியின் “அஹாதீஸ் அல் முக்தார்”:
ஹதீஸ் இலக்கம் 1260.
தரம்: ஸஹீஹ்
இந்தச் செய்திகள் மூலமும், மற்றும் ஏற்கனவே குறிப்பிடப்பட்ட ஹதீஸ்கள் மூலமும், பல்வேறுபட்ட வடிவங்களில் ஜின்கள் வந்து போகக் கூடியவை என்பதும், ஜின்கள் உருமாறி வரும் போது மனிதர்களால் அவர்களை இலகுவாகப் பார்க்கலாம், பேசலாம், பழகலாம், தொட்டு உணரலாம் எனும் நமது கருத்தும் இங்கு மறுக்க முடியாதவாறு நிரூபணமாகிறது. இது குறித்த மேலும் சில செய்திகளை அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.
இன் ஷா அல்லாஹ் வளரும்...
- அபூ மலிக்
Episode 25: ஜின்கள் மனித / மிருக வடிவங்களுக்கு உருமாறி வருவதை உறுதிப்படுத்தும் தகவல்