buscopan bambini buscopan bambini open
பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் =============================
தொடர் 3: திரைமறைவில் ஜின்கள்
Episode 28: முப்பரிமாண உலகுக்குள் பிரவேசம்
Episode 29: கனவுகளில் ஊடுறுவும் ஷைத்தானிய ஜின்கள்
ஷைத்தான்களின் படையணியில் இருக்கும் சில பிரத்தியேகமான ஜின் இனத்தவர்களைப் பற்றி இனி நாம் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்:
1. ஃகின்ஸப்: ~~~~~~~~~~~ ஷைத்தானிய ஜின்களில் பிரத்தியேகமான ஓர் இனத்தைச் சார்ந்தவர்களே ஃகின்ஸப் என்று அழைக்கப் படுபவர்கள். மனிதர்கள் விசயத்தில் இவர்களது பிரதான பணி, தொழக் கூடிய மனிதர்களது தொழுகையையும், குர்ஆன் ஓதுவதையும் பாழ்படுத்துவது தான். பின்வரும் ஹதீஸ் மூலம் இதைப் புரிந்து கொள்ளலாம்:
உஸ்மான் இப்னு அபுல் ஆஸ் (ரழி) அறிவித்ததாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நான், “அல்லாஹ்வின் தூதரே, எனக்கும் எனது தொழுகைக்கும் இடையில் ஷைத்தான் குறுக்கிடுகிறான். மேலும், குர்ஆனை ஓத விடாமலும் குழப்புகிறான்.” என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அது ‘ஃகின்ஸப்’ என்று அழைக்கப்படும் (ஒரு வகையான) ஷைத்தானாகும். அதன் தாக்கத்தை நீர் உணரும் போது, ஷைத்தானிடம் இருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரி (அஊதுபில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்று கூறி), மூன்று முறை இடது புறம் துப்புவீராக.” என்று கூறினார்கள். நான் அவ்வாறே செய்தேன். அல்லாஹ் அந்த ஷைத்தானை என்னிடமிருந்து துரத்தி விட்டான். (ஸஹீஹ் முஸ்லிம்: பாடம் 39, ஹதீஸ் 92 / முஸ்னத் அஹ்மத்: 17548)
இந்த ஹதீஸில் “ஃகின்ஸப்” என்று அழைக்கப்படும் பிரத்தியேகமான ஒரு வகையான ஷைத்தானிய ஜின் இனம் இருப்பதாகவும், அவர்களது பிரதான பணியே மனிதர்களை ஒழுங்காகத் தொழ விடாமலும், குர்ஆன் ஓத விடாமலும் குழப்பியடிப்பது தான் என்பதாகவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே நேரடி வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள்.
2. கனவுகளை ஆக்கிரமிப்போர்: ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ மனிதர்களாகிய நமது கனவுகள் வழியாக உள்ளத்துக்குள் ஊடுறுவி, ஆழ்மனதில் சில எண்ணக்கருக்களை விதைப்பதற்காகவென்றே திட்டமிட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கக் கூடிய இன்னொரு வகையான ஜின் இனத்தவர்கள் இருக்கிறார்கள். இவர்களைப் பற்றி ஹதீஸ்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றன:
ஆதாரம் 1: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரழி) அறிவித்ததாவது: கனவுகள் மூன்று வகைப்படும்: ஒருவர் விழித்திருக்கும் போது ஏற்படும் எண்ணங்கள் மற்றும் அனுபவங்களது வெளிப்பாடுகள்; உள்ளத்தில் அச்ச உணர்வைத் தூண்டும் ஷைத்தானின் கனவு; அல்லது அல்லாஹ்விடமிருந்து வரும் நற்செய்திகள். யாராவது விரும்பத்தகாத ஒரு கனவு கண்டால், அதை அவர் மற்றவர்களிடம் கூறக் கூடாது; மாறாக எழுந்து தொழுது கொள்ளட்டும். ஸஹீஹ் புகாரி: பாடம் 91, ஹதீஸ் 34
ஆதாரம் 2: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அறிவித்ததாவது: (யுகமுடிவு நாளை) நெருங்கும் காலத்தில் ஒரு முஃமின் காணும் கனவுகள் மிக அரிதாகவே அர்த்தமற்றதாக இருக்கும் (முஃமின்களின் கனவுகள் அதிகம் பலிக்கும்). ஒரு முஸ்லிமின் கனவு என்பது வஹியின் நாற்பத்தைந்தில் ஒரு பகுதியாக இருப்பதால், யாருடைய பேச்சில் அதிகம் உண்மை இருக்குமோ, அவரது கனவுகளிலும் அதிகம் உண்மை இருக்கும். மேலும், கனவுகள் மூன்று வகைப்படும்: நல்ல கனவு என்பது, அல்லாஹ்விடமிருந்து வரும் ஒருவகையான நற்செய்தியாகும்; நோவினை செய்யும் கெட்ட கனவு என்பது ஷைத்தானிடமிருந்து வருவதாகும்; மூன்றாவது வகை என்பது ஒருவரது எண்ணங்களின் வெளிப்பாடாகும். ஆகவே, உங்களில் யாராவது விரும்பத்தகாத ஒரு கனவு கண்டால், அவர் எழுந்து தொழுது கொள்ளட்டும். மேலும், அவர் அதை யாரிடமும் சொல்லாமல் இருக்கட்டும். ஸஹீஹ் முஸ்லிம்: பாடம் 42, ஹதீஸ் 9
ஆதாரம் 3: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அபூ கத்தாதாஹ் (ரழி) அறிவித்ததாவது: நல்ல கனவுகள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வருகின்றன. (கெட்ட) கனவுகள் ஷைத்தான் புறத்திலிருந்து வருகின்றன. யார் விரும்பத்தகாத ஒன்றைக் கனவில் கண்டாரோ, அவர் மூன்று முறை தனது இடது புறம் துப்பி விட்டு ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரிக் கொண்டால், அது அவருக்குக் கெடுதல் செய்யாது. (நூற்கள்: புகாரி 6594 / முஸ்லிம் 5862)
மேற்குறிப்பிடப்பட்ட ஹதீஸ்களிலிருந்து, நமது கனவுகளுக்குள் ஊடுறுவி, அதன் மூலம் நம்மால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத ஏதோ சில சதித் திட்டங்களை இப்லீஸின் பட்டாளத்தைச் சேர்ந்த சில கெட்ட ஜின்கள் (ஷைத்தான்கள்) தினமும் அரங்கேற்ற முயன்று கொண்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
ஷைத்தான்கள் இவ்வாறு கனவுகளுக்குள் ஊடுறுவும் செயல் அனேகமாக இரண்டு அடிப்படைகளில் நிகழ்வதுண்டு. சில சமயங்களில் தமது உருவத்தைக் கனவில் வெளிக்காட்டாமல், அச்சம், கவலை, அருவருக்கத்தக்க உணர்வுகள், வெறுப்பு, கோபம் போன்ற உணர்வுகள் வாயிலாக இவர்கள் கனவுகளில் ஊடுறுவுகிறார்கள். இன்னும் சில சமயங்களில் தமது உருவத்தை ஏதாவதோரு வடிவத்தில் வெளிக்காட்டிக் கொண்டு கனவில் தோன்றி, அதன் மூலமும் சில உளவியல் சதிகளையும் செய்வதுண்டு. உதாரணத்துக்கு நமக்கு நன்கு பரிச்யமான சில மனிதர்களது உருவங்களிலோ, அல்லது சற்றும் எதிர்பாராத சில விசித்திர வடிவங்களிலோ கூட இவ்வாறான ஜின்கள் கனவில் தோன்றுவதுண்டு. பின்வரும் ஹதீஸைக் கொஞ்சம் உன்னிப்பாக அவதானியுங்கள்:
ஆதாரம்: அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்த செய்தி: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் “யார் என்னைக் கனவில் கண்டாரோ, சந்தேகமே வேண்டாம்; அவர் என்னையே கண்டார். ஏனெனில், (கனவில்) ஷைத்தானுக்கு எனது உருவத்தில் (உருமாறி) வர முடியாது” (ஸஹீஹுல் புகாரி: பாடம் 91, ஹதீஸ் 13)
இந்த ஹதீஸ் மறைமுகமாக ஒரு செய்தியை நமக்குச் சொல்கிறது. நபி (ஸல்) அவர்களது உருவத்தைப் போல் கனவில் உருமாறித் தோன்றும் சக்தி ஷைத்தானுக்குக் கிடையாது என்று நபியவர்கள் கூறுவதிலிருந்தே, நபி (ஸல்) அவர்களைத் தவிர்ந்த ஏனையோரின் உருவங்களில் ஷைத்தானால் உருமாறி வரலாம் எனும் உண்மை தன்னால் நிரூபணமாகிறது. ஆகவே, இதன் மூலம் ஷைத்தானிய ஜின்கள் மனித வடிவங்களில் கூட நம் கனவுகளுக்குள் ஊடுறுவ முடியும் என்பது இங்கு தெளிவாகிறது.
இந்த இடத்தில் நாம் கேட்க வேண்டிய ஒரு முக்கியமான கேள்வி இருக்கிறது.
“தினமும் நமது கனவுகளில் வந்து, நமது உள்ளத்தில் அச்சம் போன்ற உணர்வுகளை ஏற்படுத்துவதன் மூலம் ஷைத்தான் எதிர்பார்ப்பது என்ன?”
இப்லீஸ் என்பவன் மனிதர்களாகிய நமது பகிரங்க எதிரி என்று தான் அல்லாஹ் கூறுகிறான். எனவே, அவனது காய் நகர்த்தல்கள் எதுவாக இருந்தாலும், அது நிச்சயமாக நமக்குக் குழி பறிக்கும் சதித் திட்டங்களை உள்ளடக்கியதாகவே இருக்கும். எனவே, “ஷைத்தான் ஏன் நமது கனவுகளில் ஊடுறுவி, உள்ளத்தில் விரும்பத்தகாத / அச்சமூட்டக் கூடிய உணர்வுகளைத் தோற்றுவிக்க வேண்டும்?” எனும் இந்தக் கேள்விக்கான பதிலை நம்மில் ஒவ்வொருவரும் நமது சக்திக்கு உட்பட்ட அளவிலாவது தெரிந்திருப்பது அத்தியாவசியம்.
இந்தக் கேள்விக்குத் தர்க்க ரீதியான ஒரு பதிலைப் பெற்றுக் கொள்வதாக இருந்தால், முதலில் மனித உளவியல் பற்றிய ஒரு சில உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
இந்த நெடுந்தொடரின் முதலாவது தொடரில் ஏற்கனவே நாம் பார்த்த பிரகாரம், ஷைத்தானிய இலுமினாட்டிகள், ஒரு மனிதனது எண்ணவோட்டத்தைத் தமது விருப்பத்துக்கு அமைய வழிநடத்த எண்ணினாலோ, அல்லது அவனை மூளைச்சலவை செய்வதாக இருந்தாலோ, அதற்கென்று சில உளவியல் உத்திகளைக் கையாள்வதுண்டு. இவ்வாறான உளவியல் உத்திகள், சிந்தைக் கட்டுப்பாட்டு உத்திகள் (Mind control tactics) என்று அழைக்கப்படும்.
சிந்தைக் கட்டுப்பாட்டு உத்திகளில் அதிக ஈடுபாடு காட்டும் இலுமினாட்டிகள், மிகவும் ஆர்வம் செலுத்தக் கூடிய உளவியல் சார்ந்த ஒரு பிரிவு தான் கனவுகள் எனும் துயில் நிலை சார்ந்த பிரிவு. அரிதுயில் (Hypnosis) நிலைகளில் மனித உள்ளங்களில் சில கருத்துக்களை விதைக்கும் விதமாக இராணுவ மட்டத்தில் பல இரகசிய ஆய்வுகளை ஐம்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட காலப் பகுதியிலேயே இலுமினாட்டிகள் மேற்கொண்டார்கள் என்பதை ஏற்கனவே நமது முதலாவது தொடரில் பார்த்தோம்.
இவ்வாறான ஆய்வுகளின் விருத்தியடைந்த வடிவங்களாகப் பிற்காலத்தில் பல புது விதமான சிந்தைக் கட்டுப்பாட்டு உத்திகள் வடிவமைக்கப் பட்டன. இவ்வாறான உத்திகளில் அரிதுயில் நிலைகளில் ஆழ்மனதை மாற்றியமைப்பது மட்டும் என்றில்லாமல், தொழினுட்ப ரீதியிலான பல புது விதமான கண்டுபிடிப்புகளும் மேலதிகமாக சேர்க்கப் பட்டன. உதாரணத்துக்கு இருதய நோயாளிகளின் இதயத் துடிப்பை சீர்செய்யும் விதமாக Pacemaker எனும் சிறிய கருவி உடலுக்குள் பொருத்தப் படுவது போல், சில வகையான நுண்சில்லுகளை (Microchips) மூளையிலிருந்து கட்டளைகள் கடத்தப் படும் நரம்பு மண்டலங்களின் சில பகுதிகளில் பொருத்தும் செயன்முறையைக் குறிப்பிடலாம். இந்தத் தொழினுட்பம் Microchip implant என்று அழைக்கப் படுவதுண்டு.
இவ்வாறான நுண்சில்லுகள் வாயிலாக சில இலெக்ட்ரோனிக் சிக்னல்களை நரம்பு மண்டலங்களின் ஊடாகக் கடத்துவதன் மூலம் மனித எண்ணவோட்டத்தில் குறுக்கிடுவதே இந்த உத்திகளின் அடிப்படை நோக்கம். இதன் மூலம் மனித உள்ளங்களில் சில எண்ணக்கருக்களை விதைப்பதே ஷைத்தானியர்களது திட்டம்.
பொதுவாக மனித உள்ளங்களில் இவ்வாறான உத்திகள் மூலம் விதைக்கப்படும் எண்ணக்கருக்களில் கனவுகள் எனும் வடிவத்தின் வாயிலாகவே விதைக்கப் படும் எண்ணக்கருக்களும் உண்டு. இவ்வாறு கனவுகள் வாயிலாக எண்ணக்கருக்கள் விதைக்கப் படும் செயன்முறை Inception என்று அழைக்கப்படும். மையநீரோட்ட உளவியல் கல்வித்திட்டத்தில் இது குறித்து விரிவாக கற்பிக்கப் படாமல் ஓரளவு இருட்டடிப்பு செய்யப்பட்டாலும், இப்படியோர் இரகசிய உளவியல் பிரிவு இன்று நடைமுறையில் இருக்கிறது என்பதைத் தகுந்த தேடல்கள் மூலம் யார் வேண்டுமானாலும் கண்டறிந்து கொள்ளலாம்.
கிட்டத்தட்ட இதே அடிப்படையிலான ஒரு செயல்திட்டத்தையே நாம் தூங்கும் போது நமது கனவுகள் மூலம் ஊடுறுவும் ஷைத்தானிய ஜின்களும் நமக்கெதிராக அரங்கேற்ற முயற்சிக்கிறார்கள். அது எப்படியென்பதைக் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்:
தூங்கும் போது அனேகமாக நம்மில் பலர் காணும் கனவுகளில் பொதுப்படையான சில அம்சங்களை அவதானிக்கலாம். உதாரணமாக உயரமான ஓர் இடத்திலிருந்து அதள பாதாளத்தை நோக்கி வீழ்வது போன்ற கனவுகள், ஏதாவதோர் உயிராபத்துக்கு அஞ்சி நாம் தப்பியோட முயற்சிக்கும் போது எவ்வளவு தான் முயற்சித்தாலும் நம்மால் வேகமாக ஓட முடியாதவாறு நம் கால்கள் செயலிழந்து மந்தகதியை (Slow motion) அடைந்து விடுவது போல் தோன்றும் கனவுகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
இவ்வாறான திகிலூட்டும் கனவுகளெல்லாம் ஷைத்தானிய ஜின்கள் தோற்றுவிக்கும் கனவுகள் தாம். இந்தக் கனவுகளில் சில உத்திகள் பொதிந்திருக்கின்றன. இப்படி நம்மை உறக்கத்தில் பயமுறுத்துவதன் மூலம் ஷைத்தான்கள் எதிர்பார்ப்பது தான் என்ன? இதைப் புரிந்து கொண்டால், இப்லீஸின் சதித்திட்டம் பளிச்சென்று புரிந்து விடும்.
நிம்மதியான ஆழ்ந்த துயில் நிலையில் நாம் இருக்கும் போது, திடீரென்று இவ்வாறான திகிலூட்டும், கனவுகள் தோன்றுவதால் நமது ஆழ்மனதில் ஒரு மாற்றம் நிகழ்வதைத் தவிர்க்க முடியாது. அதாவது, இவ்வாறான கனவுகள் மூலம் முக்கியமான ஓர் உள்ளுணர்வு நமது அடிமனதில் தூண்டப்படுகிறது. அது என்ன உள்ளுணர்வு? உதவிக்கோ, கைகொடுக்கவோ, காப்பாற்றவோ யாரும் இல்லாத ஓர் அநாதரவான நிலையை இது போன்ற சந்தர்ப்பங்களில் நமது ஆழ்மனது உணரும். இந்த விளக்கத்தை மனதில் வைத்துக் கொண்டு மீண்டும் நாம் மேலே உதாரணம் காட்டிய கனவுகளை நோக்கலாம்.
மிக உயரமான ஓர் இடத்திலிருந்து விழுந்து கொண்டிருக்கும் போது, அல்லது ஏதாவது ஓர் அச்சுறுத்தலிலிருந்து தப்பித்து ஓட எத்தனைக்கையில், ஓட முடியாமல் அவதிப் படும் போதும் “ஐயையோ... எனது வாழ்க்கை அஸ்தமிக்கப் போகிறதே..!! என்னைக் காப்பாற்ற யாருமே இல்லையா? எனக்கு உதவி செய்ய யாருமே இல்லையா?” என்ற ஓர் ஏக்க உணர்வு சார்ந்த எண்ணவோட்டம் உள்ளத்தில் வேகமாகப் பரவத் தொடங்கும். இந்த உணர்வு, தாங்க முடியாத அளவை அடையும் போது தான் “அம்மா..!!!” என்று கத்திக் கொண்டு நாம் கனவில் இருந்து திடுக்கிட்டு விழித்தெழுகிறோம்.
எழுந்த பிறகும் இந்த உணர்வு நம்மை விட்டுப் போகாது. அதன் ஆதிக்கம் விழித்தெழுந்த பிறகும் தொடர்ந்து கொண்டே இருக்கும். தொண்டை வரண்டு போயிருக்கும்; நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டிருக்கும். அன்று முழுவதும் அதன் தாக்கத்தைச் சிலரால் உணரக் கூடியதாக இருக்கும்.
சுருக்கமாகக் கூறுவதென்றால், நமது நிஜ வாழ்வில் இப்படியொரு பயங்கரமான சம்பவம் நடந்தால், அதனால் நாம் எந்த அளவுக்கு உள்ளத்தால் பாதிக்கப் படுவோமோ, அதே அளவு பதற்றமும், படபடப்பும், மன உளைச்சலும் இவ்வாறான கனவுகள் மூலம் உள்ளத்தில் ஏற்படுகின்றன. இந்த உளவியல் தாக்கம் ஒரு வலியாகவும், ஆறாத ரணமாகவும் ஆழ்மனதில் பதிந்து விடும். இது போன்ற அடிப்படைகளில் ஏற்படும் மனத் தாக்கங்களை உளவியலாளர்கள் Psychological trauma என்று அழைப்பார்கள். இது ஒருவகையான உளவியல் சித்திரவதை.
இவ்வாறான உளவியல் தாக்கங்களைத் தொடர்ச்சியாக ஒரு மனிதனது ஆழ்மனதில் பதிய வைப்பதன் மூலம், நாளடைவில் அவனது குணாதிசயங்களை இலகுவாக மாற்றலாம். சிந்தைக் கட்டுப்பாட்டு உத்திகளில் இதுவும் ஒரு வகை. இதை Truma based Mind Control என்று கூறுவார்கள். இதே அடிப்படையிலான ஒரு சிந்தைக் கட்டுப்பாட்டு உத்தியையே திகிலூட்டும் கனவுகள் மூலம் ஷைத்தானிய ஜின்களைக் கொண்டு இப்லீஸ் நமது உள்ளங்களில் அரங்கேற்ற முயற்சிக்கிறான்.
அதாவது, இவ்வாறான கெட்ட கனவுகளை ஒருவர் தொடர்ந்தும் கண்டுகொண்டிருக்கும் போது, உதவிக்கு யாரும் இல்லாதது போன்ற ஓர் அநாதரவான, தனிமைப்படுத்தப்பட்ட உள்ளுணர்வு அவரது ஆழ்மனதில் அழிக்க முடியாதவாறு இடம்பிடித்து விடும்.
உதவிக்கு யாருமே இல்லாத, அநாதரவாக்கப்பட்ட தனிமையுணர்வை நமது உள்ளத்தில் இவ்வளவு ஆழமாகப் பதிய வைக்க இப்லீஸ் ஏன் முயற்சிக்க வேண்டும்? இதற்கான பதிலைச் சொல்லும் போதே எல்லாம் தெளிவாகப் புரிந்து விடும்.
அதாவது, ஒருவரது ஆழ்மனதில், தான் அநாதரவாக்கப்பட்டது போல் ஓர் உணர்வு தோற்றுவிக்கப் படும் போது, அந்த உணர்வு சில செய்திகளை அவரது உள்ளத்தில் பதிய வைக்கும். அந்தச் செய்திகளின் சாராம்சம் பின்வருமாறு தான் இருக்கும்: “நான் தனிமைப்பட்டு விட்டேனே” “எனக்கென்று யாருமே இல்லையே” “எனக்கு உதவி செய்ய யாருமே இல்லையே” “என்னால் இதிலிருந்து தப்பிக்க முடியாதே” “என்னால் இதை ஜெயிக்க முடியாதே”
இந்தச் செய்தியை மனிதர்களாகிய நம் ஒவ்வொருவரது ஆழ்மனதிலும் அழிக்க முடியாதவாறு பதிவு செய்வது மட்டுமே, திகிலூட்டும் கனவுகள் மூலம் ஷைத்தான் அடைய முயற்சிக்கும் இலக்கு. ஏனெனில், இந்த ஒரு செய்தியை ஒரு மனிதனது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து விட்டாலே போதும். நாளடைவில் இதன் மூலம் அவனது மொத்த ஈமானையும் ஆட்டம் காணச் செய்யலாம். அது எப்படியென்று பார்க்கலாம்:
மனிதர்களைப் படைத்துப் பரிபாலித்துப் போஷித்துக் கொண்டிருக்கக் கூடிய அல்லாஹு ரப்புல் ஆலமீன், ஒவ்வொரு முஃமினின் உள்ளத்திலும் ஆழமாகப் பதிவு செய்ய விழையும் செய்திகளின் சாராம்சம் என்ன தெரியுமா?
“அல்லாஹ்வை மட்டுமே சார்ந்திருக்கும் வரை.... நான் கவலைப்பட எதுவுமே இல்லை; என்னோடு எப்போதும் அல்லாஹ் இருக்கிறான்; யார் கைவிட்டாலும், என்னை அவன் கைவிட மாட்டான்; ஒருபோதும் நான் தனிமைப்பட மாட்டேன்; எப்பேர்ப்பட்ட தீங்கிலிருந்தும் அவன் என்னைப் பாதுகாப்பான்”
ஈமானின் சுவையைச் சரியாக இனங்கண்ட ஒவ்வொரு முஃமினின் அடிமனதிலும் அல்லாஹ்வின் கருணை குறித்த இந்தச் செய்தி, கல்வெட்டுக்களைப் போல் ஆழமாகப் பதிந்திருக்கும். இந்தச் செய்தி அடிமனதில் ஆழமாகப் பதிந்திருப்பதால் தான், எப்பேர்ப்பட்ட சவால்களாக இருந்தாலும், அவற்றைக் கண்டு முஃமின்கள் சஞ்சலப்படுவதில்லை; தைரியத்தை இழப்பதில்லை; பயந்து நடுங்குவதில்லை. அல்லாஹ்விடம் அனைத்தையும் பாரம் சாட்டியவர்களாகத் தமது பணியில் முன்னோக்கிச் செல்வார்கள்.
இதை இன்னொரு விதத்தில் கூறுவதென்றால், அல்லாஹ்வை மட்டுமே சார்ந்திருப்பது குறித்த இந்த அடிப்படைச் செய்தி என்பது ஈமானின் ஒரு பிரதான அங்கம். ஈமானின் இந்த அங்கம் உறுதியாக இருக்கும் போது தான் ஒரு முஃமினின் உள்ளத்தில் அமைதியும், நிம்மதியும் குடிகொள்கின்றன. எவரது உள்ளத்தில் ஈமானின் இந்த அங்கம் உறுதியாக இல்லையோ, அவரது ஈமானின் ஆயுள் மிகவும் குறுகியதாகவே இருக்கும்.
திகிலூட்டும் கனவுகள் மூலம் தொடர்ச்சியாக மனிதர்களது உள்ளத்தில் அச்சத்தையும், கவலையையும் தோற்றுவிப்பதன் மூலம் ஷைத்தான் நாடுவதெல்லாம், அல்லாஹ்வை மட்டுமே சார்ந்திருப்பது குறித்த இந்த அடிப்படைச் செய்தியைத் மனிதர்களது உள்ளங்களிலிருந்து துடைத்து அழித்து விட்டு, அதே இடத்தில் இந்த ஈமானிய செய்திக்கு நேர் எதிரான “எனக்கு உதவி செய்ய யாருமே இல்லை” எனும் எதிர்மறையான (Negative) ஷைத்தானிய செய்தியைப் பதிய வைப்பது மட்டும் தான்.
இந்த ஒரு செய்தி மாற்றத்தை மட்டும் மனிதனது ஆழ்மனதில் ஏற்படுத்தி விட்டாலே போதும். மற்றதெல்லாம் இப்லீஸின் எதிர்பார்ப்புகளுக்கு அமையத் தன்னால் அரங்கேற ஆரம்பிக்கும். அதாவது இந்தச் செய்தி மாற்றத்தின் விளைவாக ஆரம்பத்தில் மனித உள்ளங்களில் “எனக்கென்று யாரும் இல்லையே” எனும் வெறுமை / விரக்தி சார்ந்த ஒரு தனிமையுணர்வு தோன்றும். காலப்போக்கில் இந்த உணர்வு அந்த மனிதனை அல்லாஹ்விடமிருந்து படிப்படியாகத் தூரமாக்கும்.
நமக்கு உதவ அல்லாஹ் காத்திருக்கிறான் எனும் உண்மை மீது அந்த மனிதனுக்கு இருக்கும் நம்பிக்கை இந்த உணர்வின் மூலம் குறைவடைய ஆரம்பிக்கும். இதன் விளைவாக, அல்லாஹ்விடம் உதவி தேடிப் பிரார்த்திக்க வேண்டும் என்ற நாட்டம் அவனது உள்ளத்தில் குறையத் தொடங்கும். அல்லாஹ்வின் கருணை மீது இருக்கும் நம்பிக்கை தேய்ந்து கொண்டே செல்லும். நாளடைவில் அல்லாஹ்விடம் உதவி தேடுவதற்குப் பதிலாக, அல்லாஹ் அல்லாதோரிடம் உதவி தேடும் ஒரு மனிதனாக அவன் மாறத் தொடங்குவான்.
வழிகேட்டின் வாசல் இது தான். மனிதனை வழிகெடுத்து, ஈருலகிலும் அவனது வாழ்வை நாசம் செய்து, மனித இனத்தையே வேரறுக்கும் இப்லீஸின் அடிப்படை நோக்கம் இந்த அடிப்படையில் செவ்வனே நிறைவேற ஆரம்பிக்கும்.
கனவுகளுக்குள் ஷைத்தானிய ஜின்கள் ஊடுறுவுவதன் அடிப்படை நோக்கமே Trauma based Mind Control எனும் இந்த வகையான சிந்தைக் கட்டுப்பாட்டு உத்தியை நம் ஒவ்வொருவரது ஆழ்மனத்திலும் அரங்கேற்றுவது தான்.
இவ்வளவு நேர்த்தியாகத் திட்டமிடப்பட்ட ஒரு சதித் திட்டம் கனவுகள் மூலம் அரங்கேற்றப் படுவதால் தான், அவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறும் பொருட்டு மார்க்கம் நமக்குப் பல விடயங்களைக் கற்றுத் தந்திருக்கிறது.
“முஅவ்விதத்தைன்” என்று அழைக்கப்படும் இரண்டு குல் ஸூராக்களையும் தினமும் தூங்கச் செல்லும் முன் ஓதி, ஊதி, உடல் முழுவதும் தேய்த்துக் கொண்டு தூங்கும் வழக்கமுடையவர்களாகவே நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள் என்பதை ஹதீஸ்களில் தெளிவாகப் பார்க்க முடிகிறது. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உடல் முழுவதும் நபியவர்கள் இந்த ஸூராக்களை ஓதி ஊதித் தடவிக் கொண்ட செயலிலிருந்தே, இந்த ஸூராக்கள் ஏதோ ஓர் அச்சுறுத்தலிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் கவசத்தைப் போன்றது என்ற உண்மையை விளங்கிக் கொள்ளலாம்.
மேலும், இரவில் தூங்கச் செல்லு முன் ஆயத்துல் குர்ஸீயை ஓதி விட்டுத் தூங்கினால், விடியும் வரை ஒரு வானவர் நமக்குக் காவலாக நியமிக்கப் படுகிறார் என்று இன்னொரு புறம் ஹதீஸ்கள் கூறுகின்றன. ஆனால், இதையெல்லாம் தெரிந்து வைத்திருக்கும் நம்மில் அனேகமானோர் இதுவரை கேட்க மறந்த கேள்வி இது தான்.
“யாரிடமிருந்து; எவ்வாறான தீங்குகளிலிருந்து நம்மைப் பாதுகாக்க இப்படி ஒரு வானவர் தேவைப்படுகிறார்?”
இந்தக் கேள்விக்கான விரிவான விடையைத் தான் இதுவரை நாம் பார்த்தோம். அதாவது, நாம் உறங்கும் போது நமக்குள் ஊடுறுவி, நமது வாழ்வை நாசம் செய்ய எத்தனிக்கும் இவ்வாறான ஷைத்தானிய ஜின்கள், மற்றும் இது போன்ற மேலும் பல தீய சக்திகள் நம்மை அணுக விடாமல் விடியும் வரை நம்மைப் பாதுகாக்கவே இந்த வானவர் நமக்குக் காவலாக நியமிக்கப் பட வேண்டிய தேவை இருக்கிறது என்பதை நம்மால் இலகுவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
நமது கனவுகளை ஆக்கிரமிக்கும் இவ்வாறான ஜின் இனத்தவர்கள் “சிந்தைக் கட்டுப்பாட்டு உத்தி” சார்ந்த இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே நமது கனவுகளுக்குள் ஊடுறுவுவதில்லை. மேலும் சில நோக்கங்களும் இருக்கத் தான் செய்கின்றன. அவை குறித்து இன் ஷா அல்லாஹ் வேறொரு சந்தர்ப்பத்தில் நோக்கலாம்.
இதுவரை நாம் கனவுகளில் ஊடுறுவும் ஷைத்தானிய ஜின் இனத்தவர்களைப் பற்றி ஓரளவுக்குப் பார்த்தோம். இனி இன்னொரு வகையான ஜின் இனத்தவர்களைப் பற்றிப் பார்க்கலாம்.
இன் ஷா அல்லாஹ் வளரும்...
- அபூ மலிக்
Episode 30: கரீன் (கூட்டாளி): |