abortion clinics near jefferson city mo abortion clinics near jefferson city mo go பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் =============================
தொடர் 3: திரைமறைவில் ஜின்கள்
Episode 29: கனவுகளில் ஊடுறுவும் ஷைத்தானிய ஜின்கள்
Episode 30: கரீன் (கூட்டாளி): ~~~~~~~~~~~~~~~
இவர்கள் இன்னொரு பிரத்தியேகமான வகையைச் சார்ந்த ஜின் இனத்தவர்கள். மனித இனத்தவருக்கு எதிரான இப்லீஸின் பாரிய சதித் திட்டங்களில் பல பிரதான திட்டங்களை வெற்றிகரமாக அரங்கேற்றுவதில் இந்த இனத்தவர்களது பங்களிப்புக்கள் மிக முக்கியமானவை. அதாவது, நமது எதிரிகளுள் பிரதானமானமான ஒரு பிரிவைச் சார்ந்தவர்கள் இவர்கள். எதிரிகளை ஒருபோதும் குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது; அதே நேரம் அதிக மதிப்பீடு வழங்கி, அஞ்சி நடுங்கவும் கூடாது. இரண்டுமே நம்மைத் தோற்கடித்து விடும். எதிரியால் என்ன செய்ய முடியும்; என்ன செய்ய முடியாது; எதிரியின் பலம், பலவீனம் என்ன? என்பன போன்றவற்றை முடிந்த வரை தெரிந்து வைத்துக் கொள்வது, அவர்களது தீங்குகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள உதவும். இந்த அடிப்படையில் “கரீன்” என்று அழைக்கப்படும் இந்த ஜின் இனத்தவர் குறித்தும் நம்மில் ஒவ்வொருவரும் ஓரளவுக்கேனும் தெளிவாகத் தெரிந்து வைத்திருப்பது அவசியம். “கரீன்” என்ற சொல்லின் நேரடி அர்த்தம் கூட்டாளி / தோழன் / சகா என்பது தான். இந்த ஜின் இனத்தவர்களுக்கு “கரீன்” என்று பெயர் சூட்டியது நாமோ, அல்லது வேறு யாருமோ அல்ல; இவர்களைப் படைத்த ரப்புல் ஆலமீன் அல்லாஹ்வே தனது திருமறையில் இந்தப் பெயரை இவர்களுக்குச் சூட்டியிருக்கிறான். சற்று நேர்த்தில் நாம் குறிப்பிட இருக்கும் குர்ஆன் வசனத்திலிருந்து இதைப் புரிந்து கொள்ளலாம். கரீன்கள் செயற்படும் விதம்: ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ஒவ்வொரு மனிதனும் பிறக்கும் போதே அந்த மனிதனுக்கென்று ஒரு “கரீன்” நியமிக்கப் படுகிறான். ஈஸா (அலை), மற்றும் மர்யம் (அலை) ஆகிய இருவரையும் தவிர வேறு எந்த மனிதனுக்கும் இதில் விதிவிலக்கு இல்லை. அதாவது, ஒவ்வொரு மனித குழந்தையும் தாயின் வயிற்றிலிருந்து இந்த உலகத்துக்குள் பிரவேசிக்கும் அந்தக் கணமே, அதற்கென்று நியமனம் செய்யப்பட்ட கரீன் வந்து அந்தக் குழந்தையைக் கவ்விப் பிடிப்பான். இவ்வாறு கரீன் வந்து இறுக்கிப் பிடிக்கும் அந்தப் பிடியை ஒவ்வொரு குழந்தையும் பௌதீக ரீதியாகவே உணர்கின்றன. உண்மையில் கரீன் பிடிக்கும் அந்தப் பிடியின் வேதனை தாங்க முடியாமல் தான் ஒவ்வொரு குழந்தையும் பிறந்த உடனேயே வீறிட்டு அழுகின்றன. பின்வரும் ஆதாரங்கள் மூலம் இந்த உண்மைகளைப் புரிந்து கொள்ளலாம்: ஆதாரம் 1: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அறிவித்ததாவது: ஷைத்தானால் தீண்டப்படாமல் / பிடிக்கப்படாமல் எந்தக் குழந்தையும் பிறப்பதில்லை. ஷைத்தானின் பிடியின் காரணமாகவே அந்தக் குழந்தை அழுகிறது; மர்யமின் மகன் ஈஸாவையும், அவரது தாயாரையும் தவிர. (ஸஹீஹ் முஸ்லிம்: பாடம் 43, ஹதீஸ் 191) ஆதாரம் 2: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரழி) அறிவித்ததாவது: (பிறக்கும்) குழந்தையின் முதலாவது அழுகை (ஆரம்பிப்பது), ஷைத்தான் அதைத் தீண்டத் தொடங்கும் போது தான். (ஸஹீஹ் முஸ்லிம்: பாடம் 43, ஹதீஸ் 194) ஆதாரம் 3: ஸஈத் இப்னு அல் முஸையப் அறிவிக்கும் செய்தி: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அபூஹுரைரா கூறினார்: ஷைத்தானால் தீண்டப்படாமல் எந்தக் குழந்தையும் பிறப்பதில்லை. ஷைத்தான் பிடிப்பதால் (ஏற்படும் வலியால்) தான் அந்தக் குழந்தை வீறிட்டு அழுகிறது; மர்யமையும், அவரது மகனையும் தவிர. அபூஹுரைரா (தனது கருத்தாக) மேலும் கூறினார்: நீங்கள் விரும்பினால், “மேலும் நான் துரத்தப்பட்ட ஷைத்தானிடமிருந்து அவளுக்காகவும், அவளது சந்ததிக்காகவும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்” (3:36) எனு வசனத்தை ஓதிக் கொள்ளலாம். (ஸஹாஹுல் புகாரி: பாடம் 65, ஹதீஸ் 4548) மேலுள்ள ஹதீஸ்கள் மூலம் ஒவ்வொரு மனிதனும் பிறக்கும் போதே, அவனுக்கென்று நியமிக்கப்பட்ட ஷைத்தான் (“கரீன்”) அங்கு ஆஜராகி, பிறந்த நிமிடம் முதலே அந்த மனிதனது உடலோடு சங்கமிக்க ஆரம்பித்து விடுகிறான் என்பதைத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. மனிதர்களுக்கும் கரீனுக்கும் இடையில் ஆரம்பிக்கும் பிரிக்க முடியாத பந்தத்தின் முதல் கட்டம் இது தான். இவ்வாறு ஒவ்வொரு மனிதனும் பிறக்கும் போதே வந்து, அவனைக் கவ்விப் பிடிக்கும் “கரீன்”, அடுத்த கட்டமாக அந்த மனிதனது உடலுக்குள் நுழைந்து, அந்த உடலையே தனது குடியிருப்பாக ஆக்கிக் கொள்ள ஆரம்பிக்கிறான். அந்த மனிதனது இரத்த நாளங்களில் தனது நிரந்தர வதிவிடத்தை அமைத்துக் கொள்கிறான். அதன் பிறகு அந்த மனிதன் மரணிக்கும் வரை, அவனுக்காக நியமிக்கப்பட்ட இந்த ஷைத்தானிய ஜின், அவனை விட்டு ஒரு நொடி கூட பிரியவே மாட்டான். எங்கு போனாலும் கூடவே ஒட்டிக் கொண்டிருப்பான். இதனால் தான் அல்லாஹ் இந்த ஜின் இனத்தவர்களை “கரீன்” (கூட்டாளி) என்று குர்ஆனில் கூறுகிறான். இனி இவர்கள் குறித்த சில ஆதாரங்களைப் பார்த்து விட்டு, மேலதிக விளக்கங்களைத் தொடரலாம்: ஆதாரம் 1: "நன்மையைத் தடுத்தவன், வரம்பு மீறியவன், (இந்நாளை) சந்தேகித்தவன், அல்லாஹ்வோடு (இணையாக) வேறு கடவுளைக் கற்பித்தவன்; ஆகவே நீங்களிருவரும் இவனைக் கடுமையான வேதனையில் போட்டு விடுங்கள்" (என்று கூறப்படும்). (அப்போது) “கரீன்” (அவனுடைய கூட்டாளி) கூறுவான்; "எங்கள் இறைவா! நான் இவனை வழி கெடுக்கவில்லை ஆனால், அவனே தூரமான வழி கேட்டில் தான் இருந்தான்" "என் முன்னிலையில் நீங்கள் வாக்குவாதம் செய்யாதீர்கள்; ஏற்கனவே (இதைப் பற்றி) என் அச்சுறுத்தலை விடுத்திருக்கிறேன்" என்று (அல்லாஹ்) கூறுவான். (அல்குர்ஆன் 50 : 25-28) இந்த வசனத்துக்கு விரிவுரை எழுதும் இமாம் இப்னு கதிர் தனது தஃப்ஸீரில் பின்வருமாறு கூறுகிறார்: இந்த வசனத்திலிருக்கும் “கரீன்” (அவனது கூட்டாளி) எனும் வாசகம், அந்த மனிதனோடு கடைசி வரை கூடவே இருப்பதற்காக நியமிக்கபட்ட ஷைத்தானை(ஜின்னை)த் தான் குறிக்கிறது என்பதாக இப்னு அப்பாஸ் (ரழி), முஜாஹித், கத்தாதாஹ் ஆகியோர் குறிப்பிடுகிறார்கள். மேலும், “என் முன்னிலையில் நீங்கள் வாக்குவாதம் செய்யாதீர்கள்” என்று அல்லாஹ் கூறுவது மனிதனையும், மற்றும் அவனது வாழ்நாள் முழுதும் கூடவே இருக்குமாறு நியமிக்கப் பட்ட கரீன் எனும் ஜின்னையும் பார்த்துத் தான். ஏனெனில், அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அங்கு அல்லாஹ்வின் சன்னிதியில் “எனது நாசத்துக்கு நீ தான் காரணம்” / “இல்லை நீ தான் காரணம்” எனும் அடிப்படையில் வாக்குவாதம் செய்து கொண்டிருப்பார்கள். இதை நிறுத்தச் சொல்லித் தான் அல்லாஹ் மேற்கண்டவாறு கூறி விட்டு, “உங்களை நான் ஏற்கனவே எனது வேதங்கள் மூலம் எச்சரித்தேன்; அப்போதெல்லாம் பராமுகமாக இருந்து விட்டு, இங்கு வந்து என் முன்னிலையிலேயே வாக்குவாதமா?” என்ற கருத்தில் அவர்களை அடக்குவான். (தஃப்ஸீர் இப்னு கதீர் 4 / 227) ஆதாரம் 2: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அனஸ் இப்னு மாலிக் (ரழி) அறிவித்ததாவது: ஒரு மனிதனுக்குள் அவனது இரத்தம் ஓடுவதைப் போல் ஷைத்தான் ஓடிக் கொண்டிருக்கிறான். ஸுனன் அபூதாவூத்: பாடம் 42, ஹதீஸ் 124 தரம்: ஸஹீஹ் (அல்பானி) ஆதாரம் 3: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது துணைவி, ஸஃபிய்யா பிந்த் ஹுயைய் (ரழி) அறிவித்த செய்தி: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமழானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்து கொண்டிருந்த போது, அவர்களைச் சந்திக்க ஸஃபிய்யா (ரழி) வந்தார்கள். மாலை நேரம் இருட்டும் வரை நபி (ஸல்) அவர்களுடன் பேசிக்கொண்டு இருந்து விட்டு அவர்கள் திரும்பிச் செல்வதற்காக எழுந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஸஃபிய்யாவை வழியனுப்புவதற்கு எழுந்தார்கள். நபி (ஸல்) அவர்களது இன்னொரு துணைவியான உம்மு ஸலமாவின் வீட்டுப் பக்கமாக இருந்த பள்ளியின் வாசலை அவர்கள் அடைந்த போது, அவ்வழியாக வந்த இரண்டு அன்ஸாரித் தோழர்கள், நபி (ஸல்) அவர்களைக் கண்டதும் ஸலாம் கூறி விட்டுச் சென்றார்கள். அவர்களைப் பார்த்து நபியவர்கள், “யோசிக்க வேண்டாம்; இது ஸஃபிய்யா பிந்த் ஹுயைய் (எனது மனைவி) தான்” என்று கூறினார்கள். அதற்கு அந்த அன்ஸாரிகள், “அல்லாஹ்வின் தூதர் அவர்களே, அல்லாஹ் மிகத் தூய்மையானவன்..” என்று பதிலளித்தார்கள். மேலும் அவர்கள் மனதில் (நபியவர்களது நல்லொழுக்கம் குறித்து நாம் சந்தேகித்து விட்டதாக அவர்கள் நினைத்து விட்டார்களோ என்று) சஞ்சலப்படலானார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆதமின் மகனுக்குள் இரத்தம் ஓடுவதைப் போல் ஷைத்தான் ஓடிக் கொண்டிருக்கிறான். உங்கள் உள்ளங்களில் அவன் வீணான சந்தேகங்களைப் போட்டுவிடுவானோ என்று அஞ்சியே அவ்வாறு கூறினேன்” என்று பதிலளித்தார்கள். ஸுனன் இப்னு மாஜா: பாடம் 7, ஹதீஸ் 1851 தரம்: ஸஹீஹ் (தாருஸ்ஸலாம்) இதே ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் சங்கிலி வாயிலாகவும் ஸஹீஹ் முஸ்லிம் (பாடம் 39, ஹதீஸ் 34) கிரந்தத்திலும் பதிவாகியிருக்கிறது. இந்த அறிவிப்பில் நபி (ஸல்) கூறிய ஷைத்தான் குறித்த வார்த்தைகள் சற்று வித்தியாசமான வடிவத்தில், “மனிதனுக்குள் இரத்தம் எவ்வாறெல்லாம் நுழைந்து ஊடுறுவுகிறதோ, அதே போல் ஷைத்தானும் (உடலின் எல்லாப் பாகங்களிலும்) ஊடுறுவுகிறான்” என்று பதிவாகியிருக்கிறது. ஆதாரம் 4: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக ஜாபிர் (ரழி) அறிவித்ததாவது: (கணவன் வீட்டில் இல்லாத நிலையில்) தனியாக இருக்கும் பெண்களிடம் நீங்கள் செல்ல வேண்டாம். ஏனெனில், உங்களுக்குள் இரத்தம் ஓடிக் கொண்டிருப்பதைப் போல் ஷைத்தான் ஓடிக் கொண்டிருக்கிறான். அப்போது நாம், “உங்களுக்குள்ளுமா?” என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(ஆம்) எனக்குள்ளும் தான்; ஆனால், அவனுக்கு எதிராக அல்லாஹ் எனக்கு உதவி செய்து விட்டான். எனவே நான் பாதுகாக்கப் பட்டிருக்கிறேன்” என்று பதிலளித்தார்கள். ஜாமிஉத் திர்மிதி: பாடம் 12, ஹதீஸ் 27 தரம்: ஹஸன் (திர்மிதி / தாருஸ்ஸலாம்) ஆதாரம் 5: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அறிவித்ததாவது: உங்களில் யாராவது தொழுது கொண்டிருக்கும் போது, முன்னால் யாரையும் கடந்து செல்ல விட வேண்டாம். அவர் (தடுத்த பிறகும்) பிடிவாதமாகக் கடந்து செல்ல எத்தனித்தால், அவருடன் தொழுது கொண்டிருப்பவர் சண்டையிடட்டும். ஏனெனில், அவருடன் (கடந்து செல்பவருடன்) ஒரு “கரீன்” (கூட்டாளி / ஷைத்தான்) இருக்கிறான். ஸுனன் இப்னு மாஜா: பாடம் 5, ஹதீஸ் 1008 தரம்: ஸஹீஹ் (தாருஸ்ஸலாம்) இதே ஹதீஸ் ஸஹீஹ் முஸ்லிம் கிரந்தத்திலும் 506 வது செய்தியாகப் பதிவு செய்யப் பட்டிருக்கிறது. இந்த ஹதீஸைப் பற்றி இமாம் ஷவ்கானி பின்வருமாறு கூறுகிறார்: இந்த ஹதீஸில் “அவருடன் ஒரு கரீன் இருக்கிறான்” எனும் வாசகமானது, மனிதனை விட்டு விலகாமல் எப்பொழுதும் கூடவே இருக்கும் ஷைத்தானையே குறிக்கிறது. (நய்ல் அல் அவ்தார் 3 / 7) ஆதாரம் 6: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அறிவித்ததாவது: “ஜின்களிலிருந்து ஒரு “கரீன்” (கூட்டாளி) கூடவே நியமிக்கப்படாமல் உங்களில் எவருமே இல்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். அதற்கு (ஸஹாபாக்கள்), “உங்களோடு கூடவா அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம், (என்னோடும் தான்); ஆனால், அவனுக்கு எதிராக எனக்கு அல்லாஹ் உதவுகிறான். எனவே, அவனது கரங்களிலிருந்து நான் பாதுகாக்கப் பட்டிருக்கிறேன். (என் விசயத்தில் மட்டும்) அவன் எனக்கு நல்லதையே ஏவுவான்” ஸஹீஹ் முஸ்லிம்: பாடம் 52, ஹதீஸ் 62 இதுவரை நாம் பார்த்த பல ஆதாரங்களில் இருந்தும் தொகுப்பாக நாம் பின்வரும் செய்திகளை விளங்கிக் கொள்ளலாம்: ஒரு மனிதனது உடலுக்குள் இருக்கும் எல்லா மூலை முடுக்குகளினூடாகவும் இரத்தம் எப்படிப் பயணிக்கிறதோ, அதே போல், இரத்தத்தோடு இரத்தமாக மனித உடலுக்குள் புகுந்து ஊடுறுவி, எல்லா இடங்களையும் ஆக்கிரமித்துக் கொள்ளும் ஆற்றல் “கரீன்” எனப்படும் இந்த ஜின் இனத்தவருக்கு இருக்கிறது என்பது தெளிவாகவே புரிகிறது. மேலும் இந்த இடத்தில் கரீனுக்கு இருக்கும் ஆற்றல்கள் குறித்துத் துல்லியமாகப் பிரித்து அறிந்து கொள்வதும் அவசியமாகிறது. இது குறித்து இன் ஷா அல்லாஹ் அடுத்த எபிசோடில் நோக்கலாம். இன் ஷா அல்லாஹ் வளரும்... - அபூ மலிக்
|