பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் ==============================
தொடர் 3: திரைமறைவில் ஜின்கள்
Episode 33: கரீன் (கூட்டாளி) – தொடர்ச்சி - 3:
Episode 34: மாரித் (அடங்காப்பிடாரி):
~~~~~~~~~~~~~~~~~~~~~~
“மாரித்” என்பதன் அர்த்தம் அடங்க மறுப்பவர் / கீழ்ப்படிய மறுப்பவர் என்பதாகும். ஜின்களில் இப்படியொரு சாரார் இருக்கிறார்கள் என்று மார்க்கம் கூறுகிறது. இவர்களையும் இஸ்லாம் ஷைத்தான்கள் எனும் அணியிலேயே சேர்த்துக் குறிப்பிடுகிறது. ஷைத்தான்களுள் இருக்கக் கூடிய மிகப் பலம் பொருந்திய, அதே நேரம் மிக மோசமான குணாதிசயங்களைக் கொண்ட கெட்ட ஜின் இனங்களுள் இவர்கள் முக்கியமானவர்கள்.
இவ்வினத்தைச் சேர்ந்த அனைவருமே இப்லீஸுக்கு நூற்றுக்கு நூறு வீதம் கட்டுப் பட்டவர்கள் என்றும் ஒரேயடியாகக் கூறி விட முடியாது. அனேகமான மாரித்கள் இப்லீஸின் படையணியில் அங்கம் வகிக்கும் அதே வேளை இவர்களுள் இன்னும் ஒரு பகுதியினர் சுயாதீனமாக இயங்கக் கூடியவர்களாகவும் இருப்பதற்கான முகாந்திரங்களும் இருக்கின்றன. மேலும், ஏனைய ஷைத்தானிய ஜின் இனத்தவர்களையும் விட மாரித்களுக்கென்று சில தனித்துவமான குணாதிசயங்கள் இருக்கின்றன.
ஏனைய ஷைத்தனிய ஜின்கள் இப்லீஸின் கட்டளைகளுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு, இயங்குவது போல், ஒரு கட்டுக்கோப்புக்குள் அடங்கியிருக்கக் கூடிய தன்மைகள் “மாரித்”களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. யாருக்கும், எதற்கும் அடங்காத முரட்டு சுபாவம் கொண்டவர்களாகவே இவர்கள் காணப்படுகிறார்கள். மேலும், “மாரித்”களில் அனேகமானோர், அதிகம் திமிர் / தலைக்கணம் பிடித்தவர்களாகவும், அதிக துணிச்சல் கொண்டவர்களாகவும் இருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
இவர்களது அடங்காப்பிடாரித் தனத்தையும், துணிச்சலையும், ஆணவத்தையும் பின்வரும் குர்ஆன் வசனங்கள் மூலம் புரிந்து கொள்ளலாம்:
ஆதாரம் 1: நிச்சயமாக நாமே (பூமிக்கு) சமீபமாக இருக்கும் (கீழ்)வானத்தை நட்சத்திரங்களைக் கொண்டு அழகுபடுத்தியிருக்கிறோம். மேலும், “மாரித்” (எனும் அடங்காத) ஷைத்தான்கள் அனைவரினின்றும் பாதுகாப்பாகவும் (அதை) ஆக்கினோம். (அல்குர்ஆன் 37 : 6-7)
ஆதாரம் 2: இன்னும், ஞானம் இல்லாமல் அல்லாஹ்வைக் குறித்துத் தர்க்கம் செய்வோரும், கீழ்ப்படிய மறுக்கும் ஒவ்வொரு ஷைத்தானையும் (“மரீத்”) பின்பற்றுவோரும் மனிதர்களில் இருக்கிறார்கள். (அல்குர்ஆன் 22:3)
இந்த இரண்டு வசனங்கள் மூலமும், அல்லாஹ்வின் கட்டளைகளைக் கூடத் துச்சமாக மதிக்கும் அளவுக்குத் திமிர் பிடித்தவர்களாகவும், துணிச்சல் மிக்கவர்களாகவும் இந்த ஜின் இனத்தவர்கள் இருக்கிறார்கள் என்பது புலனாகிறது. அதாவது, அடிவானத்துக்கு இனிமேல் எந்த ஜின்களும் வரக் கூடாது என்று தடுக்கும் விதமாக அல்லாஹ் கட்டளை பிறப்பித்த பிறகும் கூட, அதையும் பொருட்படுத்தாமல் அடிவானம் வரை செல்லும் அளவுக்கு இவர்களின் துணிச்சலும், திமிரும் இருக்கிறது என்பதை இங்கு புரிந்து கொள்ள முடிகிறது.
இவர்களது முரட்டுத் தனத்துக்கும், அடங்காப்பிடாரித் தனத்துக்கும் இன்னோர் எடுத்துக் காட்டாகப் பின்வரும் குர்ஆன் வசனத்தையும் குறிப்பிடலாம்:
ஆதாரம் 3: மேலும், ஷைத்தான்களிலுள்ள கட்டடம் கட்டுவோரையும், முத்துக்குளிப்போரையும்; மற்றும் சங்கிலியால் விலங்கிடப்பட்டிருந்த வேறு பலரையும் (நாம் ஸுலைமானுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம்). (அல்குர்ஆன் 38 : 37-38)
இந்த வசனத்தில் அல்லாஹ் நேரடியாகப் பெயர் குறிப்பிடாமல் “சங்கிலியால் விலங்கிடப் பட்ட வேறு பலரையும்” என்று சூசகமாகக் குறிப்பிடுவது கூட “மாரித்”களைத் தான் என்பது ஏனைய ஆதாரங்களோடு இந்த வசனத்தையும் இணைத்து விளங்க முற்படும் போது புரிந்து கொள்ள முடிகிறது. அதாவது வேறெந்த ஜின் இனமாக இருந்தாலும், அது எவ்வளவு பலம் பொருந்தியதாக இருந்தாலும், அல்லாஹ் ஒரு கட்டளையைப் பிறப்பித்து விட்டால், அதை முகத்திலடித்தாற்போல் மறுத்து, சண்டித்தனம் பன்னும் அளவுக்கு அவர்கள் துணிவதில்லை. “மாரித்”கள் மட்டுமே அந்த அளவுக்குத் துணிந்து சண்டித்தனம் பன்னக் கூடியவர்கள்.
இதனால் தான் இவர்களை “மாரித்” (அடங்காப்பிடாரிகள்) என்று அல்லாஹ்வே பெயரிட்டு அழைக்கிறான். மேலும், இதனாலேயே ஸுலைமான் (அலை) அவர்களுக்கு ஜின்களை வசப்படுத்திக் கொடுத்த போது கூட இவர்களை மட்டும் சங்கிலியால் விலங்கிட்டு ஒப்படைத்தான். ஏனெனில், அல்லாஹ்வின் உறுதி மிக்க வானவர்களைத் தவிர வேறு யாராலுமே “மாரித்”களை அடக்கவோ, அடித்து வீழ்த்தவோ முடியாது. அந்த அளவுக்கு இவர்கள் முரட்டு சுபாவம் கொண்டவர்கள்.
ஸுலைமான் (அலை) அவர்களுக்குக் கூட இவர்களை முழுமையாக அடக்கும் சக்தியை அல்லாஹ் வழங்கவில்லை. அதனால் தான் இவர்களை மட்டும் அல்லாஹ் சங்கிலியால் விலங்கிட்டு ஸுலைமான் (அலை) அவர்களுக்கு ஒப்படைத்தான். சங்கிலிகளால் கட்டப்பட்ட யானைகளை வைத்துக் கடினமான வேலைகளை மனிதர்கள் வாங்குவது போன்ற ஓர் அடிப்படையிலேயே இங்கு சங்கிலியால் விலங்கிடப்பட்ட நிலையில் இவர்களிடமிருந்து ஸுலைமான் (அலை) அவர்கள் கூட வேலை வாங்கியிருக்கிறார்கள் என்பது புரிகிறது.
ஷைத்தான்களுள் மிகவும் மோசமான ஒரு ஜின் இனமாக இவர்களைக் குறிப்பிடலாம். ஆதிகாலம் தொட்டுப் பல்வேறு மதங்களிலும், கலாச்சாரங்களிலும், புராணங்களிலும் பரவலாக அறியப்பட்ட ஒரு ஜின் இனமாகவே “மாரித்” எனும் இவ்வினத்தவர்கள் இருந்து வந்திருப்பதை ஓரளவுக்கு அவதானிக்க முடிகிறது. பூதங்கள், ராட்சசர்கள், அசுரர்கள், இஷ்ட தெய்வங்கள், காவல் தெய்வங்கள், அலாவுதீனின் அற்புத விளக்கிலிருந்து வெளிப்படும் பூதம்... என்று சொல்லிக் கொண்டே போகலாம். இவ்வாறான பெயர்களிலெல்லாம் காலத்துக்குக் காலம் பல்வேறு கலாச்சாரப் பின்னணிகளைக் கொண்ட மக்கள் வழிபட்டும், உதவி தேடியும், வரம் கேட்டும் வந்த ஜின்களில் அனேகமானோர் “மாரித்”களாகவே இருந்திருக்கிறார்கள்.
இந்த அடிப்படையில், குர்ஆன் அருளப்படுவதற்கு முற்பட்ட காலத்திலிருந்தே “மாரித்” எனும் இந்த ஜின் இனத்தவர்கள் பற்றிய பரவலான ஓர் அறிமுகம் அரபு சமூகத்தவர்கள் மத்தியில் கூட இருந்து வந்தது. இதற்குக் காரணம், பண்டைய பாபிலோன் காலம் தொட்டு, நபி (ஸல்) அவர்கள் பிறந்த ஜாஹிலியக் காலம் வரை, அரேபிய தீபகற்பத்தையும், பண்டைய ஷாம் நிலப்பரப்பையும் உள்ளடக்கிய பிராந்தியங்களில் பாபிலோன் சூனியம் பரவலாகப் புழக்கத்தில் இருந்து வந்தது தான். பாபிலோன் சூனியத்துக்கும், “மாரித்”களுக்கும் என்ன சம்பந்தம்? என்று சிலர் இங்கு யோசிக்கலாம். எனவே, இதையும் கொஞ்சம் தெளிவு படுத்திக் கொள்வதே நல்லதென்று நினைக்கிறேன்.
ஆதி காலம் தொட்டு, “மாரித்”களுக்கும் சூனியக்காரர்களுக்கும் இடையில் நெருங்கிய சம்பந்தங்கள் திரைமறைவில் இருந்து வந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. பொதுவாக சூனியக்காரர்கள் பெரும் சூனியங்களைச் செய்ய ஆயத்தமாகும் போது, அதைப் பலிக்கச் செய்யும் அளவுக்கு ஆற்றலில் கூடிய ஜின்கள் தேவை என்பதால், அதிகம் சக்தி வாய்ந்த ஜின்களைப் பிரத்தியேகமாக அழைத்துத் தான் பூஜைகள் செய்வார்கள். அதாவது, வக்கிர புத்தியும், அதற்கேற்ற சக்தியும் ஒருங்கே அமையப் பெற்ற ஓர் இனமாக “மாரித்”கள் இருப்பதால், பிரத்தியேகமாக இவர்களையே சூனியக்காரர்கள் அனேகமான சந்தர்ப்பங்களில் பெயர் குறிப்பிட்டு அழைத்துப் பிரார்த்திப்பதுண்டு.
அவர்களது அழைப்புக்குப் பதிலளிக்கும் விதமாகப் பூஜையின் இறுதியில் எதிரில் தோன்றும் மாரித், “என் அடியானே, உனக்கு என்ன வரம் வேண்டும்? சொல்” என்பது போல் ஆணவத்தோடு கேட்கும். அப்போது தான் சூனியக்காரன் தனது தேவையை அந்த ஜின்னிடம் தாழ்மையோடு முன்வைப்பான்.
சூனியக்காரர்களுக்கும் “மாரித்”களுக்கும் இடையில் இரகசியத் தொடர்புகள் இருக்கிறது எனும் கருத்தை எனது ஊகத்தின் அடிப்படையில் இங்கு முன்வைக்கவில்லை. சூனியக்காரர்கள் எவ்வாறு சூனியம் செய்கிறார்கள் என்பது குறித்து ஒழுங்காக ஆய்வு செய்தால் இந்த உண்மையை இலகுவாகப் புரிந்து கொள்ளலாம். மேலும், இந்தக் கருத்தை ஆமோதிக்கும் விதமாகவே பின்வரும் மார்க்க ஆதாரங்கள் கூட அமைந்திருக்கின்றன:
ஆதாரம் 4: "நிச்சயமாக நாம் வானத்தைத் தீண்டிப் பார்த்தோம். அது கடுமையான காவலாளிகளாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதை, நாங்கள் கண்டோம். "செவிமடுப்பதற்காக (வானவர்கள் பேசிக் கொள்வதை ஒட்டுக் கேட்பதற்காக) (அங்கு பல) இடங்களில் நாங்கள் அமர்ந்திருப்போராக இருந்தோம். ஆனால் இப்பொழுதோ எவன் அவ்வாறு செவிமடுக்க முயல்கிறானோ, அவன் தனக்காகக் காத்திருக்கும் தீப்பந்தத்தையே கண்பான். (அல்குர்ஆன் 72 : 8,9)
இவ்வசனங்களில் மறைமுகமான சில உண்மைகள் சொல்லப் பட்டிருக்கின்றன. சில ஜின்கள் தமக்குள் பேசிக் கொண்ட சம்பாஷனையை இங்கு அல்லாஹ் மேற்கோள் காட்டுகிறான். இவர்கள் மாரித்கள் அல்ல; யாரென்று அறியப்படாத வேறொரு ஜின் இனத்தவர்கள்.
ஏனெனில், அடிவானத்துக்கு ஜின்கள் வருவதை அல்லாஹ் தடை செய்வதற்கு முற்பட்ட காலப்பகுதிகளில் ஏனைய ஜின் இனத்தவர்களைப் போல் அங்கு சென்று ஒட்டுக் கேட்போராக இந்த ஜின்களும் இருந்திருக்கிறார்கள். ஆனால், அடிவானம் பாதுகாக்கப் பட்ட பிறகு இவர்கள் அங்கு செல்லத் துணியவில்லை; அல்லாஹ்வுக்கும், அடிவானைக் காவல் காக்கும் வானவர்களுக்கும் பயந்து அங்கு செல்வதை இவர்கள் நிறுத்திக் கொண்டார்கள். இந்த ஜின்கள் பேசிக் கொள்ளும் தோரணையில் இருந்தே இதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
அதாவது “முன்னொரு காலத்தில் நாமும் ஒட்டுக்கேட்க அடிவானுக்குச் சென்றோம். ஆனால், இப்போது அதெல்லாம் முடியாது. வானவர்களை அல்லாஹ் காவலுக்கு நியமித்திருக்கிறான். அதையும் மீறி, எவனாவது அங்கு சென்றால், அவ்வளவு தான்; அவன் கதை கந்தலாகி விடும்.” என்பது போன்ற தோரணையிலேயே இங்கு இந்த ஜின்கள் தமக்குள் பேசிக் கொள்கிறார்கள். அதாவது, தடை செய்யப்பட்ட பின், அடிவானுக்குச் செல்லத் துணியாத ஒரு ஜின் இனமாகவே இவர்கள் இருப்பதை இதன் மூலம் இலகுவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
மேலும், இந்த வசனத்தையும், சற்று முன் நாம் பார்த்த குர்ஆன் (37 : 6-7) வசனத்தையும் இணைத்து ஒன்றாக வாசிக்கும் போது, இன்னோர் உண்மையையும் நாம் புரிந்து கொள்ள முடிகிறது. அதாவது, அடிவானுக்கு ஜின்கள் வருவது தடை செய்யப்பட முன்னர், பல்வேறு ஜின் இனத்தவர்கள் அங்கு சென்று ஒட்டுக் கேட்போராக இருந்திருக்கிறார்கள். ஒட்டுக் கேட்பதை அல்லாஹ் தடை செய்த பின், இவ்வாறு அங்கு சென்று கொண்டிருந்த எல்லா ஜின் இனத்தவர்களும் வானவர்களுக்குப் பயந்து அங்கு செல்வதை நிறுத்திக் கொண்டார்கள். ஆனால், “மாரித்” மட்டும் அங்கு செல்வதை நிறுத்திக் கொள்ளவில்லை. இவ்வளவு தடைகள் போடப்பட்ட பின்னரும், அவற்றையும் தாண்டி அங்கு சென்று ஒட்டுக் கேட்பதற்கு “மாரித்”கள் மட்டும் தொடர்ந்தும் முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பது தான் அந்த உண்மை.
இவ்வாறு ஒட்டுக் கேட்டுப் பெற்றுக் கொள்ளும் செய்திகளை அவ்வப்போது கொண்டு வந்து, “மாரித்”கள் தான் இன்று வரை ஜோதிடன் காதுகளில் ஊதி விட்டுச் செல்கிறார்கள் என்பதையும் இங்கு புரிந்து கொள்ள முடிகிறது. இந்த உண்மையை இன்னும் உறுதிப் படுத்தும் விதமாகவே பின்வரும் ஹதீஸ் அமைந்திருக்கிறது:
ஆதாரம் 5: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: வின்னுலகில் அல்லாஹ் ஒரு விடயத்தைக் கட்டளையிடும் போது, அந்தக் கட்டளைக்குக் கட்டுப்பட்ட வானவர்கள், இரும்புச் சங்கிலியால் பாறையின் மீது அடிப்பதைப் போன்ற சத்தத்துடன் தமது சிறகுகளை அடித்துக் கொள்கிறார்கள்.
தமது அச்ச உணர்வு (அல்லாஹ்வின் வார்த்தைகளைக் கேட்டதன் விளைவாக தமக்குள் ஏற்பட்ட நடுக்கம்) விலகிய பிறகு அவர்கள், “உமது இறைவன் உம்மிடம் கூறியது என்ன?” என்று தமக்குள் கேட்டுக் கொள்வார்கள். அதற்கு அவ்வானவர்கள் “உண்மையை மட்டுமே இறைவன் கூறினான். அவனே மிகப் பெரியவன்” என்று பதிலளிப்பார்கள்.
இந்தச் சம்பாஷனையை, ஒட்டுக்கேட்போர் (ஜின்கள்), ஒருவருக்கு மேல் ஒருவராக நின்றவாறு ஒட்டுக் கேட்கிறார்கள். இவ்வாறு ஒட்டுக் கேட்கும் செய்திகளை, மேலே இருக்கும் ஜின்கள், கீழே இருப்பவர்களுக்கு உடனே எத்தி வைத்து விடுவார்கள். இதன் போது, அவர்களை நோக்கி எறியப்படும் எரிநட்சத்திரங்கள், மேலிருப்பவர், கீழிருப்பவருக்கு செய்தியை எத்தி வைக்க முன்னரோ, அல்லது கீழிருப்போர் ஜோதிடனின் காதுகளில் செய்தியை எத்தி வைக்க முன்னரோ தாக்கும்; அல்லது செய்தியை எத்தி வைத்த பின்னர் தாக்கும். பிறகு, இந்தச் செய்தியோடு ஜோதிடன் நூறு பொய்களைத் தனது தரப்பில் கலந்து விடுகிறான். வின்னிலிருந்து எத்திவைக்கப்பட்ட செய்தி மட்டுமே அதில் உண்மையாக இருக்கும். நூல்: ஸுனன் இப்னு மாஜா - பாகம் 1, ஹதீஸ் 199 தரம்: ஸஹீஹ் (தாருஸ்ஸலாம்)
அதாவது, அடிவானுக்கு ஜின்கள் வருவது தடை செய்யப் பட்ட பின்னர் “மாரித்” தவிர வேறெந்த ஜின் இனத்தவர்களும் அங்கு செல்லத் துணியவில்லை. எனவே, இந்த ஹதீஸில் சொல்லப்பட்ட பிரகாரம், தடை செய்யப் பட்ட பிறகும் அங்கு சென்று ஒட்டுக் கேட்டு வந்து ஜோதிடன் காதில் ஒரு ஜின் ஊதுகிறதென்றால், அது கண்டிப்பாக “மாரித்” ஆக மட்டுமே இருக்க முடியும்.
ஆகவே, இந்த அடிப்படையில் “மாரித்” எனும் ஜின் இனத்தவர்களுக்கும், ஜோதிடக் காரர்களுக்கும் இடையில் இன்று வரை இரகசியத் தொடர்புகள் இருந்து கொண்டிருக்கின்றன என்பது நிரூபனமாகிறது. மேலும், ஜோதிடம் என்பது சூனியத்தின் ஒரு கிளை என்று ஏற்கனவே நபி (ஸல்) அவர்கள் வேறு ஹதீஸ்களில் கூறியிருக்கிறார்கள். எனவே, இந்த அடிப்படையில் கூட சூனியக் காரர்களுக்கும் “மாரித்”களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன என்பது இங்கும் தெளிவாகி விட்டது.
“மாரித்”களைப் பொருத்தவரை இயல்பிலேயே இவர்கள் முரட்டு சுபாவம் கொண்டவர்களாகவும், அசுர உடல் பலம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். மேலும், பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் எதற்கும் துணிந்து முன்செல்லும் ஒரு அசட்டு தைரியமும் இவர்களில் அனேகமானோரிடம் இருப்பதை அவதானிக்க முடிகிறது. தமது பலத்தின் மீது இவர்களுக்கு இருக்கும் அதீத தன்னம்பிக்கை தான் இதற்குக் காரணமாக இருக்க வேண்டும்.
அதாவது, தாம் பலசாலிகள் என்ற நினைப்பின் விளைவாக ஏற்பட்ட அதீத தன்னம்பிக்கை, இவர்களை ஆணவம் பிடித்தவர்களாக மாற்றியிருக்கலாம். பொதுவாக ஒருவருக்கு ஆணவம் தலைக்கேறினால், அது அவரது கண்களை மறைத்து விடுவதுண்டு. இதே அடிப்படையில் மாரித்களுக்கும் அவ்வப்போது ஆணவம் தலைக்கேறும் போது ஏற்படும் குருட்டுத் தனமான துணிச்சல் தான், வானவர்களையே எதிர்க்கும் அளவுக்கு இவர்களைத் தூண்டியிருக்கலாம்.
இந்த அசட்டு தைரியத்தின் விளைவாகத் தான் இவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளுக்குக் கூட பணிய மறுத்து, தன் பலம் என்ன? வானவர் பலம் என்ன? என்பதைக் கூட சீர்தூக்கிப் பார்க்க மறந்து, அவ்வப்போது அடிவானத்துக்கு அத்துமீறிச் சென்று, வானவர்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்கிறார்கள் என்பதையும் இங்கு புரிந்து கொள்ள முடிகிறது.
மாரித் என்போர் பற்றி மார்க்கத்தில் என்ன சொல்லப் பட்டிருக்கிறதோ, அதன் அடிப்படையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியவற்றை இதுவரை பார்த்து விட்டோம். இனி ஏனைய ஜின் இனத்தவர் பற்றி நோக்கலாம்.
இன் ஷா அல்லாஹ் வளரும்...
- அபூ மலிக்
பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - Episode 35 |