பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் =============================
தொடர் 3: திரைமறைவில் ஜின்கள்
Episode 34: மாரித் (அடங்காப்பிடாரி):
Episode 35: ஃகுபுத் (ஆண்), ஃகபா’இத் (பெண்):
~~~~~~~~~~~~~~~~~~~~~~
இதுவரை நாம் பார்த்தது இப்லீஸ் எனும் ஜின்னின் தலைமைத்துவத்தின் கீழ் மனித இனத்தை வேரறுக்கும் திட்டத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கக் கூடிய ஒருசில ஜின் இனத்தவர்கள் பற்றி மட்டும் தான். இவர்கள் மட்டும் தான் ஷைத்தான்கள் என்றோ, இவர்களைத் தாண்டிய வேறு இனத்தவர்கள் ஷைத்தான்களுள் இல்லையென்றோ யாரும் இதை வைத்து மட்டும் முடிவெடுத்து விடக் கூடாது. நமக்குத் தெரியாத இன்னும் பல விதமான இனத்தவர்கள் கூட ஷைத்தான்களில் இருக்கிறார்கள். அவர்களுள் ஒருசில இனத்தவர்கள் பற்றி மட்டுமே நாம் இதுவரை பார்த்தோம். இன்னும் ஓரிரு இனத்தவர்கள் பற்றி இந்தத் தொடரின் இறுதிப் பகுதியை ஒட்டி பிரத்தியேகமாகப் பார்க்க இருக்கிறோம். இப்போதைக்கு இவ்வளவும் போதும் என்று நினைக்கிறேன்.
இனி, இப்லீஸின் படையணியைச் சாராத, சுயாதீனமான சில ஜின் இனத்தவர்கள் பற்றியும் பார்ப்போம். கீழே நாம் பட்டியலிட இருக்கும் ஜின் இனத்தவர்கள், இயல்பில் சுயாதீனமான ஜின் இனத்தவர்களாக இருப்பவர்கள். இவர்களில் ஒரு சாரார் இப்லீஸின் படையணிகளில் அங்கத்தவர்களாக இருக்கும் அதே வேளை, இன்னும் சில சாரார் அவற்றுள் பங்கேற்காதவர்களாகவும், தம்மைக் குறித்த தீர்மாணங்களை சுயாதீனமாகத் தாமே எடுத்துக் கொள்வோராகவும் இருப்பதை மார்க்க ஆதாரங்களின் அடிப்படையில் அவதானிக்க முடிகிறது. இவ்வாறான சில சுயாதீனமான ஜின் இனத்தவர்கள் பற்றி இனி நாம் சற்று விரிவாக நோக்கலாம்:
ஃகுபுத் (ஆண்), ஃகபா’இத் (பெண்): ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ பிரத்தியேகமாக கழிவறைகள், சாக்கடைகள், வெட்ட வெளிகள், மற்றும் காடுகள் போன்ற மறைவான ஒதுங்குமிடங்கள், அசுத்தங்கள் / நஜீஸ் நிறைந்த இடங்கள் போன்ற இடங்களிலெல்லாம் அதிகம் நடமாடக் கூடிய ஒரு வகையான ஜின் இனம் இருப்பதாக மார்க்கம் கூறுகிறது. இந்த இனத்தவர்களின் ஆண்களை “ஃகுபுத்” என்றும், பெண்களை “ஃகபாஇத்” என்றும் ஹதீஸ்கள் தரம்பித்துக் கூறுகின்றன.
இவர்களைப் பொருத்தவரை அசுத்தங்கள், அசிங்கங்கள் நிறைந்த பகுதிகளில் விரும்பி நடமாடக் கூடிய, பிரத்தியேகமான ஒரு ஜின் இனம் என்று தான் இவர்களைப் பற்றி மார்க்கம் கூறுகிறது. சுத்தமான இடங்கள் இவர்களுக்கு ஒத்து வருவதில்லையென்பது இதன் மூலம் மறைமுகமாக உணர்த்தப்படும் இன்னோர் உண்மை. பின்வரும் ஆதாரங்கள் மூலம் இவர்கள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்:
ஆதாரம் 1: அனஸ் இப்னு மாலிக் (ரழி) அறிவித்ததாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழிவறையில் நுழையும் போது, “யா அல்லாஹ், நிச்சயமாக “அல் குபித்” மற்றும் “அல் கபாஇத்” ஆகியோரிடமிருந்து நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்” என்று கூறுவார்கள். ஜாமிஉத் திர்மிதி: பாடம் 1, ஹதீஸ் 6 தரம்: ஸஹீஹ் (தாருஸ்ஸலாம்)
ஆதாரம் 2: அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்த செய்தி: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழிவறையில் நுழையும் போதெல்லாம், “அஊது பில்லாஹி மினல் ஃகுப்தி வல் ஃகபாஇதி (ஃகுபுத் (ஆண்), மற்றும் ஃகபாஇத் (பெண்) ஆகியோரிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்)” என்று கூறுவார்கள். ஸுனன் இப்னு மாஜா: பாடம் 1, ஹதீஸ் 315 தரம்: ஸஹீஹ் (தாருஸ்ஸலாம்)
ஆதாரம் 3: ஸைத் இப்னு அர்கம் (ரழி) அறிவித்ததாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இந்த “ஹுஷூஷ்”கள் (ஒதுங்குமிடங்கள்), அடிக்கடி (தீய சக்திகள்) வருகை தரக்கூடிய இடங்களாக இருக்கின்றன. ஆகவே, உங்களில் யாரும் இங்கு செல்லும் போது அவர், “அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக மினல் ஃகுப்தி வல் ஃகபாஇத் (யா அல்லாஹ், ஃகுபுத் (ஆண்), மற்றும் ஃகபாஇத் (பெண்) ஆகியோரின் தீங்கிலிருந்து நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்)” என்று கூறிக் கொள்ளட்டும். ஸுனன் இப்னு மாஜா: பாடம் 1, ஹதீஸ் 312 ஸுனன் அபூ தாவூத்: பாடம் 1, ஹதீஸ் 6 தரம்: ஸஹீஹ் (அல்பானி)
இந்த ஜின் இனத்தவர்கள் பற்றி நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒருசில செய்திகள் இருக்கின்றன. இவர்களை இப்லீஸின் பட்டாளத்தைச் சேர்ந்த ஷைத்தானிய ஜின்கள் என்று ஆணித்தரமாகக் கூறுவதற்கான எந்த ஆதாரமும் மார்க்கத்தில் இல்லை. இவர்கள் பற்றிக் கூறப்பட்டிருக்கும் ஆதாரங்களையெல்லாம் சற்று உன்னிப்பாக நோக்கும் போது இதைப் புரிந்து கொள்ளலாம்.
அதாவது, இப்லீஸின் திட்டங்களுக்கு அமைய அவனது படையணிகளாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு ஜின் இனம் என்ற அடிப்படையில் இவர்களை வகைப்படுத்த முடியவில்லை. இவர்கள் இப்லீஸைச் சார்ந்தவர்களாகவும் இருக்கலாம்; இப்லீஸைச் சாராத சுயாதீனமான ஒரு ஜின் இனமாகவும் இருக்கலாம். இது குறித்து நமக்குத் திட்டவட்டமாகத் தெரியாது எனும் நிலைபாட்டையே எடுக்க வேண்டும். இதற்கான நியாயங்களை இனி நோக்கலாம்.
இவர்கள் குறித்துக் கூறும் போது, நபி (ஸல்) அவர்கள் எந்தவோர் இடத்திலும் ஷைத்தான்கள் என்று கூறவில்லை. அதாவது, ஹதீஸ்களின் நேரடி வாசகங்களில் நபி (ஸல்) அவர்களது வாய்ச் சொற்களாகப் பதிவு செய்யப் பட்டிருக்கும் எந்த வாசகத்திலும் இவர்களை ஷைத்தான்கள் என்று நபியவர்கள் அழைத்ததாகக் காணவே முடியவில்லை. மாறாக, ஆண், பெண் என்ற அடிப்படையில் “ஃகுபுத்”, மற்றும் “ஃகபாஇத்” என்று பெயர் குறிப்பிடப்பட்ட ஒரு தனித்துவமான ஒரு ஜின் இனமாகவும், அசுத்தத்தை விரும்பக் கூடிய தீய சக்திகள் எனும் அடிப்படையிலுமே இவர்கள் குறித்து நபியவர்கள் கூறியிருக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் இவர்களை ஷைத்தான் என்று கூறவில்லையென்றால், பிறகு இவர்கள் குறித்த ஹதீஸ்களை மொழிபெயர்க்கும் போது ஏன் எல்லோரும் ஷைத்தான்கள் என்று மொழிபெயர்க்கிறார்கள்? இதற்குக் காரணம், இந்த ஜின் இனத்தவர்கள் குறித்த நபி (ஸல்) அவர்களது செய்திகளை அறிவித்த ஸஹாபாக்கள், மற்றும் அவற்றைப் பதிவு செய்த இமாம்கள் போன்றோர் தான் இவர்களை அனேகமான சந்தர்ப்பங்களில் “ஷைத்தான்கள்” என்று அழைத்திருக்கிறார்கள். இந்த அடிப்படையிலேயே “ஃகுபுத்”, மற்றும் “ஃகபாஇத்” என்பவற்றை மொழிபெயர்க்கும் போது ஆண், பெண் ஷைத்தான்கள் என்று மொழிபெயர்ப்பது வழக்கமாகி விட்டது.
உண்மையில் ஸஹாபாக்கள், மற்றும் இமாம்கள் கூட இவர்களை ஷைத்தான்கள் என்று அழைத்தது இப்லீஸின் படையணியைச் சேர்ந்த ஷைத்தானிய ஜின்கள் எனும் அடிப்படையில் அல்ல. மாறாக, தீய சக்திகளைப் பொதுவாக அரபுகள் ஷைத்தான் என்று அழைப்பது வழக்கம். இந்த அடிப்படையில், “ஃகுபுத்”, மற்றும் “ஃகபாஇத்” ஆகியோர் ஜின் இனத்தைச் சார்ந்த சில தீய சக்திகள் எனும் அர்த்தத்திலேயே இவர்களை அரபுகள் ஷைத்தான்கள் என்று பொதுப்படையாக அழைத்தார்கள்; இப்லீஸின் படையணியைச் சார்ந்த ஷைத்தான்கள் என்ற அடிப்படையில் அல்ல. இப்லீஸின் அடியாட்களான ஷைத்தானிய ஜின்கள் என்று இவர்களை அழைப்பதற்கு வலுவான எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில், இவர்களை அவ்வாறு புரிந்து கொள்ளக் கூடாது என்பதே எனது நிலைபாடு.
இவர்கள் குறித்து இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும் பெரிதாக இல்லை. இனி அடுத்த ஜின் இனத்தவர்கள் பற்றி நோக்கலாம்.
இன் ஷா அல்லாஹ் வளரும்...
- அபூ மலிக்
Episode 36: இஃப்ரீத் (ஆற்றல் மிக்கது):
|