பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் =============================
தொடர் 3: திரைமறைவில் ஜின்கள்
Episode 35: ஃகுபுத் (ஆண்), ஃகபா’இத் (பெண்):
Episode 36: இஃப்ரீத் (ஆற்றல் மிக்கது):
இஃப்ரீத் (ஆற்றல் மிக்கது): ~~~~~~~~~~~~~~~~~~~~~~~ அதிக ஆற்றலும், வேகமும் கொண்ட ஜின் இனத்தவர்களுள் இஃப்ரீத் எனும் இந்த இனத்தவர்களும் பிரதானமானவர்கள். இவர்களைப் பற்றியும் அல்லாஹ் தன் திருமறையில் பின்வருமாறு பெயர் குறிப்பிட்டுக் கூறியிருக்கிறான்:
ஆதாரம்: "பிரமுகர்களே! அவர்கள் என்னிடம் வழிபட்டவர்களாக வருமுன், உங்களில் யார் அவளுடைய அரியாசனத்தை என்னிடம் கொண்டுவருபவர்?" என்று (ஸுலைமான்) கேட்டார்.
ஜின்களில் (ஆற்றல் மிக்க) ஓர் “இஃப்ரீத்”, “உங்கள் இடத்திலிருந்து நீங்கள் எழுவதற்குள் அதை நான் உம்மிடம் கொண்டு வந்து விடுவேன்; நிச்சயமாக நான் அதற்கு சக்தியுள்ளவனாகவும், நம்பிக்கைக்கு உரியவனாகவும் இருக்கிறேன்" என்று கூறியது.
(வேதம்) ஏடு பற்றிய ஞானம் பெற்ற ஒரு(ஜின்), "கண்மூடித் திறப்பதற்குள், அதை உம்மிடம் கொண்டு வந்து விடுகிறேன்" என்று கூறியது. (கூறியவாறே) அது தம்மெதிரில் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும் (ஸுலைமான்) கூறினார்: "நான் நன்றி செலுத்துகிறேனா, அல்லது மாறு செய்கிறேனா என்று என்னைச் சோதிப்பதற்காக இது என்னுடைய இறைவனின் அருட் கொடையாகும். எவனொருவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகின்றானோ, அவனது நன்றி அவனுக்கே (நன்மை)யாகும்; மேலும், எவன் (நன்றி மறந்து) மாறு செய்கிறானோ (அது அவனுக்கே இழப்பாகும். ஏனெனில்) என் இறைவன், (எவரிடத்தும்) தேவையற்றவனாகவும், கண்ணியம் மிக்கவனாகவும் இருக்கின்றான்" (அல்குர்ஆன் 27: 38-40)
இஃப்ரீத் குறித்து மார்க்கத்தில் நேரடியாகக் கூறப் பட்டிருப்பது இவ்வசனத்தில் மட்டும் தான். இவ்வசனத்தின் மூலம் இஃப்ரீத் குறித்தும், மேலும், ஜின்களின் ஆற்றல் பற்றிய இன்னும் சில உண்மைகளையும் நாம் விளங்கிக் கொள்ளலாம். அவை என்னவென்பதைக் கொஞ்சம் விலாவாரியாக நோக்கலாம்:
இவ்வசனத்தில் கூறப்பட்டிருக்கும் சம்பவம் இது தான்:
யெமன் நாட்டு அரசியின் அரியாசணத்தை, ஜரூசலம் நகரில் இருக்கும் தமது மாளிகைக்கு வியக்கத்தகு வேகத்தில் கொண்டு வர வேண்டிய ஒரு தேவை ஸுலைமான் (அலை) அவர்களுக்கு ஏற்பட்டது. இந்தப் பணிக்குப் பொருத்தமான திறமைசாலியைத் தெரிவு செய்து, அவரிடம் பணியை ஒப்படைக்கும் நோக்கில் ஸுலைமான் (அலை) அவர்கள் சபையைக் கூட்டி, மஷூரா செய்கிறார்கள்.
தம்மிடம் பணி புரியும் பல்வேறு இனங்களையும் சேர்ந்த ஜின்களின் தலைவர்களைப் பார்த்து, “பிரமுகர்களே, உங்களில் யாரால் இந்தக் காரியத்தை மிகக் குறுகிய நேரத்துக்குள் சாதிக்க முடியும்?” என்று ஸுலைமான் (அலை) அவர்கள் கேட்கிறார்கள். பலரும் தமக்கிருக்கும் ஆற்றலை இங்கு கூறிக் காட்டி, இந்தப் பணிக்காக ஒருவரோடு ஒருவர் போட்டி போடுகிறார்கள்.
இந்தச் சந்தர்ப்பத்தில் தான் இஃப்ரீத் எனும் இனத்தைச் சேர்ந்த ஒரு ஜின், “உங்கள் ஆசனத்திலிருந்து நீங்கள் எழுவதற்கு முன்னால் அதைக் கொண்டு வர என்னால் முடியும். என்னை நீங்கள் நம்பலாம். எனக்கு அந்த ஆற்றல் இருக்கிறது” என்று தனது விண்ணப்பத்தை முன்வைக்கிறது.
இந்த விண்ணப்பத்தை அல்லாஹ் கூறிக் காட்டுவதை வைத்து இஃப்ரீத் எனும் ஜின் இனத்தவர்களுக்கு இருக்கும் வல்லமை எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. மேலும், இவர்களுக்கு இருக்கும் ஆற்றல் என்பது, ஏற்கனவே நாம் குறிப்பிட்ட “மாரித்” எனும் ஜின் இனத்தவருக்கு இருக்கும் ஆற்றல் போன்றது அல்ல என்பதும் இங்கு புரிகிறது. “மாரித்”களைப் பொருத்தமட்டில் அவர்களுக்கு இருக்கும் ஆற்றல் என்பது உடல் வலிமையின் அடிப்படையிலும், மிகுந்த மனவலிமையின் அடிப்படையிலுமே இருப்பதைப் பார்க்க முடிகிறது. மேலும், பின்விளைவுகள் பற்றியெல்லாம் யோசிக்கும் அளவுக்கு “மாரித்”கள் நுணுக்கமான சிந்தனைத் திறன் பெற்றவர்கள் அல்ல; மடமையும், முரட்டுத் தனமுமே அவர்களது இயல்பு என்பதையும் நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது.
ஆனால், இஃப்ரீத் என்போரின் ஆற்றல் இத்தகையது அல்ல. புத்திசாதுரியமும், வேகமும், வலிமையும் ஒருங்கே அமையப் பெற்ற வேறு வகையான ஆற்றல்கள் உடையோராகவே இஃப்ரீத் எனும் இனத்தவர்கள் இருக்கிறார்கள் என்பதை இவ்வசனத்தில் இஃப்ரீத் முன்வைக்கும் விண்ணப்பத்தில் இருக்கும் நாகரீகமான மொழி நடையை வைத்தே புரிந்து கொள்ள முடிகிறது.
மேலும், ஸுலைமான் (அலை) அவர்களது சபையில் உட்காரும் அளவுக்கு இப்ரீத் எனும் ஜின் இனத்தவர்களுக்கு அனுமதியளிக்கப் பட்டிருந்தது என்பதையும் இங்கு புரிந்து கொள்ள முடிகிறது. “மாரித்”களைப் போல் இவர்கள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு வேலை வாங்கப் பட்டவர்கள் அல்ல. மாறாக, நாகரீகமான முறையில் முக்கியமான பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட ஒரு ஜின் இனமே இஃப்ரீத் என்பதையும் இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த இடத்தில் இன்னொரு விடயத்தையும் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதாவது, இவ்வசனத்தில் கூறப்பட்ட அரசியின் அரியாசணத்தைக் கொண்டு வந்தது யார் என்பது குறித்து உலமாக்கள் மத்தியில் ஒருசில கருத்து வேறுபாடுகள் நிலவி வந்திருப்பதையும் மறுப்பதற்கில்லை. எனவே இது குறித்தும் ஒரு தெளிவு இங்கு அவசியப்படுகிறது.
அரசியின் ஆசணத்தை இஃப்ரீத் தான் கொண்டு வந்தது என்று ஒரு சாரார் கூறுவதுண்டு. ஆனால், இது தவறான புரிதல். இது தவறான புரிதல் என்பதை இந்தக் குர்ஆன் வசனமே தெளிவாக சுட்டிக் காட்டுகிறது. ஏனெனில், இஃப்ரீத் முன்வைத்த விண்ணப்பமானது, எழுந்து நிற்பதற்குள் (ஓரிரு வினாடிகள்) ஆசணத்தைக் கொண்டு வர முடியும் என்பதாகத் தான் இருந்தது.
ஆனால், அதே சமயத்தில் இஃப்ரீத்துக்குப் போட்டியாகப் பெயர் குறிப்பிடப் படாத இன்னொருவர், கண்முடித் திறப்பதற்குள் (இஃப்ரீத்தை விடவும் அதிகூடிய வேகத்தில்) தன்னால் அதைக் கொண்டுவர முடியுமென்று விண்ணப்பிக்கிறார்.
இறுதியில் ஸுலைமான் (அலை) அவர்கள் ஏற்றுக் கொண்டது, பெயர் குறிப்பிடப் படாத அந்த இரண்டாவது நபருடைய விண்ணப்பத்தைத் தான்; இஃப்ரீத்தின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இதை இலகுவாகப் புரிந்து கொள்ளலாம். யாருடைய வேகம் மிக அதிகமோ, அவரைத் தெரிவு செய்வது தான் ஸுலைமான் (அலை) அவர்களது நோக்கமாக இருந்தது. இங்கு இஃப்ரீத்தை விடவும் வேகம் கூடியவராக இரண்டாவது நபரே இருந்தார். எனவே அவரிடம் தான் அந்தப் பணி ஒப்படைக்கப் பட்டது என்பது தெளிவாகிறது.
மேலும், இந்த இரண்டாவது நபர், தனது கோரிக்கையை முன்வைத்த அதே கணத்திலேயே ஆசணம் தனது கண்ணெதிரில் இருந்ததை ஸுலைமான் (அலை) அவர்கள் கண்டதாக வசனம் கூறுகிறது. இதை வைத்தும், ஆசணத்தைக் கொண்டு வந்தது இஃப்ரீத் அல்ல; இரண்டாவது நபர் தான் என்பது மேலும் ஊர்ஜிதமாகிறது.
மேலும், பெயர் குறிப்பிடப் படாத இந்த இரண்டாவது நபர் ஆசணத்தை கொண்டு வந்தது, இஃப்ரீத்துக்கு இருப்பது போன்ற உடல் வலிமை, வேகம் போன்றவற்றின் அடிப்படையில் அல்ல. மாறாக ஏதோ ஒருவிதமான மறைவான தொழினுட்பத்தின் அடிப்படையிலேயே இந்த இரண்டாம் நபர் கண் மூடித் திறப்பதற்குள் யெமனில் இருந்த ஆசணத்தை அங்கு மாயமாக மறையச் செய்து, அதே கணத்தில் அதே ஆசணத்தை பலஸ்தீனில் இருக்கும் ஸுலைமான் (அலை) அவர்களது மாளிகைக்குள் திடீரென்று மந்திர சக்தியால் முளைக்கச் செய்வது போல் முளைக்கச் செய்கிறார்.
அதாவது, யெமனில் இருந்த ஆசணம் காணாமல் போனதும், பலஸ்தீனில் அதே ஆசணம் திரும்பவும் முளைத்ததும் எல்லாம் ஒரு செக்கனை விடவும் குறைவான நேரத்துக்குள் நடந்து முடிந்து விடுகிறது. இது பலத்தைக் கொண்டும், இஃப்ரீத்தைப் போல் பறந்து செல்லும் வேகத்தின் அடிப்படையிலும் சாதிக்கப் பட்ட ஒரு காரியம் அல்ல. ஏதோ மனித அறிவுக்குப் புலப்படாத ஒரு தொழினுட்பத்தின் அடிப்படையில் சாதிக்கப் பட்ட காரியம்.
இதை நான் எனது ஊகத்தின் அடிப்படையில் சொல்லவில்லை. ஏதோ ஒரு விதமான அறிவு / தொழினுட்பம் சார்ந்த செயற்பாட்டின் அடிப்படையில் தான் ஆசனம் இடம் மாறியது என்பதையும் இதே குர்ஆன் வசனமே சூசகமாக சொல்லிக் காட்டுகிறது. அதாவது, பெயர் குறிப்பிடாத இந்த ஜின்னைப் பற்றி வர்ணிக்கும் போது அல்லாஹ், பலசாலி என்றோ, அல்லது வேகம் மிக்கது என்றோ வர்ணிக்கவில்லை. மாறாக, “ஏடு (நூல் / வேதம்) பற்றிய ஞானம் பெற்ற ஒருவர்” என்றே அல்லாஹ் இந்த ஜின்னைப் பற்றி வர்ணிக்கிறான். அதாவது இந்த ஜின், ஞானத்தை நன்கு கற்றறிந்து, தேர்ச்சி பெற்ற ஒரு ஜின் என்பதையே அல்லாஹ் இதன் மூலம் சொல்லிக் காட்டுகிறான். இதிலிருந்து நமக்குப் பல செய்திகள் தெரிய வருகின்றன.
பெயர் குறிப்பிடாத இந்த ஜின், மிகவும் கற்றறிந்த, பல மறைவான சக்திகள் பற்றிய தொழினுட்பங்களில் கைதேர்ந்த வேறொரு ஜின் இனத்தைச் சேர்ந்தது என்பது வசனத்தைப் பார்க்கும் போதே புரிகிறது. மேலும் இந்த ஜின் இனத்தவர்கள், இஃப்ரீத், மாரித் போன்றோர் அல்லாது, பண்பாட்டிலும், நாகரீகத்திலும், தொழினுட்பத்திலும் முன்னேறிய ஓர் இனமாக இருக்கவும் வாப்புள்ளதை யாரும் மறுக்க முடியாது.
இந்த இடத்தில் இன்னொரு விடயத்தையும் தெளிவு படுத்திக் கொள்வதே சிறந்ததென்று நினைக்கிறேன். அதாவது, அரசியின் ஆசணத்தைக் கொண்டு வந்த, பெயர் குறிப்பிடப் படாத இந்த நபர் ஒரு மனிதர் தான் என்ற கருத்தில் கூட சிலர் கூறுவதுண்டு. இதுவும் ஏற்கத்தக்க வாதம் அல்லவென்பதே எனது நிலைபாடு. இதற்கான நியாயங்களையும் முன்வைக்கிறேன்:
நியாயம் 1: மனிதர்களால் சாதிக்க முடியாத பல அமானுஷ்யமான காரியங்களைச் சாதித்துக் கொள்வதற்காகத் தான் ஸுலைமான் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் ஜின்களை வசப்படுத்தியே கொடுத்தான். ஏனெனில், மனிதர்களை விட வேகமும், ஆற்றலும், மறைவான பல தொழினுட்பங்களும் இயல்பில் அமையப் பெற்றவர்கள் தான் ஜின் இனத்தவர்கள். அரசியின் ஆசணம் இடம்மாற்றப் பட்ட செயற்பாடு கூட அமானுஷ்யமான ஒரு சாதனை தான். இஃப்ரீத் எனும் ஜின்னை விடவும் அதிக செயல்திறனோடு இவ்வாறான சாதனைகளை மனிதர்களால் சாதிக்க முடியும் என்றிருந்திருந்தால், வீணாக ஸுலைமான் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் ஜின்களை வசப்படுத்திக் கொடுத்திருக்கவே வேண்டியதில்லை. இவ்வாறான மனிதர்களை வைத்தே அமானுஷ்யமான காரியங்களைச் சாதித்திருக்கலாம்.
மேலும், இந்த அளவுக்கு அமானுஷ்யமான சாதனைகளை நிகழ்த்தும் அளவுக்கு மனித இனத்தவருக்கு ஆற்றல் இருந்தது என்று யாராவது கூறுவதாக இருந்தால், இந்தக் கூற்றை முன்வைப்பவர்கள், ஏதாவதோர் ஆதாரத்தின் அடிப்படையில் தான் இந்தக் கருத்தை நிலை நாட்ட வேண்டும். அவ்வாறு ஆதாரம் சமர்ப்பிக்க முடியாவிடின், இது ஊகம் மட்டுமே என்றாகி விடும்.
அதே நேரம், நமது வாதப்படி, இந்த இரண்டாவது நபர் ஒரு ஜின் தான் எனும் கருத்தை வலுப்படுத்துவதற்குப் பல ஆதாரங்கள் ஏற்கனவே இருக்கின்றன. அதாவது, இவ்வாறான ஆற்றல்கள் ஜின்களுக்கு இருப்பது ஏற்கனவே பல மார்க்க ஆதாரங்கள் மூலம் நிரூபணமான உண்மை. எனவே இந்த இடத்தில் பெயர் குறிப்பிடப்படாத இந்த மர்ம நபரை ஒரு ஜின் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், இது தான் சரியான புரிதல்.
நியாயம் 2: பெயர் குறிப்பிடப் படாத இந்த மர்ம நபர், ஒரே நொடிக்குள் ஆசணத்தை இடம் மாற்றிய செயல் என்பது ஏதோ ஒருவிதமான அறிவு / தொழினுட்பம் சார்ந்த ஒரு சாதனை என்பதை நாம் ஏற்கனவே பார்த்தோம். உண்மையில் இவ்வாறான ஒரு தொழினுட்பம் உலகில் இருப்பது சாத்தியமா? என்ற ஒரு கேள்வியை விஞ்ஞானபூர்வமாக முன்வைத்தால், “நிச்சயமாக இது சாத்தியம்” என்ற பதிலையே இன்றைய விஞ்ஞானத்தின் குவாண்ட்டம் கோட்பாடுகள் கூறுகின்றன. எளிய நடையில் இந்தத் தொழினுட்பத்தை Teleportation என்று கூறலாம்.
அதாவது, குவாண்ட்டம் இயற்பியலின் “சக்திச்சொட்டுப் பின்னல்” (Quantum entanglement) எனும் கோட்பாட்டுக்கு அமைய, ஓரிடத்தில் இருக்கும் ஒரு துகளை, ஒரே கணத்தில் அந்த இடத்திலிருந்து மாயமாக மறையச் செய்து, அதே துகளை அதே கணத்தில் தொலைதூரத்தில் இருக்கும் வேறோர் இடத்தில் முளைக்கச் செய்வது போன்ற நிகழ்வுகள் சக்திச்சொட்டுப் பின்னலின் மூலம் சாத்தியம் என்பதை குவாண்ட்டம் இயற்பியல் ஒத்துக் கொள்கிறது. இதுகுறித்து ஒருசில பரிசோதனைகள் கூட மேற்கொள்ளப்பட்டு, இது சாத்தியம் என்பது நிரூபிக்கப் பட்டது.
ஆனால், இதுவரை கண்டறியப்பட்ட விஞ்ஞானத்தின் அடிப்படையில், இது சாத்தியம் என்று நிரூபிக்கப் பட்டிருப்பது அணுக்களின் உள்ளிருக்கும் “துகள்”களின் (Particles) மட்டத்தில் மட்டுமே. அதாவது, சக்திச்சொட்டுப் பின்னலின் அடிப்படையில் ஓர் அணுவிலிருக்கும் ஒரு துகளை மட்டுமே இன்னோர் இடத்துக்கு நொடிப்பொழுதில் இடம் மாற்றலாம் என்பது தான் இதுவரை மனிதனால் நிரூபிக்க முடிந்த உண்மை. ஆனால், அரசியின் ஆசணத்தைப் போன்ற, கண்ணுக்குத் தெரியக் கூடிய பாரிய பொருட்களை இந்த அடிப்படையில் மனிதர்கள் இடம் மாற்றுவது என்பது இன்றைய விஞ்ஞானத்தால் கூட நினைத்தும் பார்க்க முடியாத சாதனை.
மேலும், சக்திச்சொட்டுப் பின்னலின் அடிப்படையில் ஒரு நுண் துகளை இடம் மாற்றுவதாக இருந்தால் கூட, இடம் மாற்றப்படும் இரண்டு இடங்களிலும் அதற்கென்று விசேடமாக வடிவமைக்கப் பட்ட கருவிகள் ஏற்கனவே ஏற்பாடு செய்யப் பட்டிருக்க வேண்டும். இரண்டு பக்கமும் தகுந்த ஏற்பாடுகளும், கருவிகளும் இல்லாமல் மனித தொழினுட்பத்தின் மூலம் ஒரு துகளைக் கூட இடம் மாற்ற முடியாது.
இந்தத் தகவல்களின் மூலம் நாம் புரிந்து கொள்ளும் உண்மை என்ன?
ஒரு பொருளை ஓரிடத்திலிருந்து மாயமாக மறையச் செய்து, அதே பொருளை அதே கணத்தில் வேறோர் இடத்தில் முளைக்கச் செய்வதென்பது தொழினுட்பங்கள் மூலம் சாத்தியம் என்பது இங்கு விஞ்ஞான ரீதியாகவும் ஒத்துக் கொள்ளப் படுகிறது. ஆனால், மனிதனிடம் இருக்கும் தொழினுட்பங்களைக் கொண்டு, நினைத்த பொருட்களை நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடத்திலிருந்து இடம்மாற்றும் சாதனை என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாத காரியம் என்பதும் இங்கு ஊர்ஜிதப் படுத்தப் படுகிறது.
அரசியின் அரியாசணத்தை ஒரே நொடிப்பொழுதில் யெமனில் இருந்து ஜரூசலம் நகருக்கு இடம் மாற்றிய மர்ம நபர் இவ்வாறான ஏதோ ஒரு தொழினுட்பத்தின் மூலம் தான் இடம் மாற்றினார். ஆனால், அவரது அந்தத் தொழினுட்பம், இன்றைய விஞ்ஞான உலகின் தொழினுட்பத்தை விடவும் பல மடங்கு முன்னேறிய ஒரு தொழினுட்பமாக இருந்திருக்கிறது. மேலும், இரண்டு இடங்களிலும் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட எந்த விதமான கருவிகளின் துணை கூட இல்லாமல், சொன்ன கணத்திலேயே அவ்வளவு பெரிய ஆசணத்தை அந்த மர்ம நபர் அனாயாசமாக இடம் மாற்றிக் காட்டினார். மிக நிச்சயமாக இது மனித தொழினுட்பங்களால் சாத்தியமே இல்லை.
எனவே, இந்த அடிப்படையிலும், பெயர் குறிப்பிடப்படாத இந்த மர்ம நபர் ஒரு மனிதர் அல்ல என்பதும், அறிவிலும், தொழினுட்பத்திலும் மிகவும் முன்னேற்றம் கண்ட, பெயர் குறிப்பிடப்படாத ஒரு ஜின் இனத்தைச் சார்ந்தவர் என்பதும் இங்கு தெளிவாகிறது.
குறிப்பு: அரியாசணத்தைக் கொண்டுவந்தது ஒரு மனிதர் தான் எனும் வாதத்து்க்கு ஆதாரமாக ஒரேயொரு செய்தி முன்வைக்கப் படுவதுண்டு. இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களது கூற்றாக இப்னு கதீரின் தஃப்ஸீரில் பதிவாகியிருக்கும் ஒரு செய்தி இருக்கிறது. அதாவது, “ஸுலைமான் (அலை) அவர்களின் எழுத்தர் ‘ஆஸிஃப்’ தான் ஆசணத்தைக் கொண்டு வந்தார்” என்பது தான் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களது கூற்று.
ஒரு வாதத்துக்கு இந்தக் கூற்றின் அடிப்படையில் நோக்கினாலும் கூட, அது ஒரு மனிதர் என்பதை நிரூபிக்க இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது. ஒருவேளை ஸுலைமான் (அலை) அவர்களது எழுத்தர் கூட ஒரு ஜின்னாக இருந்திருக்கலாம். அந்த ஜின் தான் ‘ஆஸிஃப்’ என்ற பெயரில் அழைக்கப் பட்டிருக்கலாம். அல்லாஹ்வே அறிந்தவன். இது குறித்து நபியைத் தொட்டு நமக்குத் திட்டவட்டமாகச் சொல்லப்படவில்லை. எனவே, ஆசனத்தைக் கொண்டுவந்தது ஒரு மனிதன் தான் என்பதை நிரூபிக்க இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களது இந்தக் கூற்றை ஆதாரமாகக் காட்ட முடியாது என்பதே எனது நிலைபாடு.
இஃப்ரீத் குறித்து இவ்வளவு தான் கூற முடியும். இனி அடுத்த ஜின் இனத்தவர் பற்றி நோக்கலாம்.
இன் ஷா அல்லாஹ் வளரும்...
- அபூ மலிக்
Episode 37: அவாமிர் (குடியிருப்போர்): |