பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் ==============================
தொடர் 4: வேற்றுக்கிரக வேஷம்
Episode 41: நரை நிறத்தவர்கள் (Grey Aliens):
Episode 42 – நரை நிறத்தவர்கள் (தொடர்ச்சி 01)
முறைப்பாடு:
~~~~~~~~~~~~ வீட்டில் நிலைமை குழப்பத்துக்கு மேல் குழப்பமாகச் சென்று கொண்டிருக்கவே, இது குறித்து அறிந்தவர்களிடம் பிரச்சினையைக் கொண்டு செல்வதே உசிதமென்று தம்பதியினர் தீர்மாணித்தனர். இதனடிப்படையில் செப்டம்பர் மாதம் 21ம் திகதி, அண்மையில் இருக்கும் Pease Air Force Base எனும் அமெரிக்க விமானப் படைப் பிரிவுக்குத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, சம்பவத்தை பெட்டி முறையிட்டார். இருந்த போதிலும், மொத்தச் சம்பவத்தையும் அப்படியே கூறினால், ஒருவேளை தன்னைப் பைத்தியம் என்று அவர்கள் நினைத்து விடுவார்களோ என்று அஞ்சியதன் விளைவாக, குறிப்பிடத்தக்க சில அடிப்படைத் தகவல்களை மட்டும் முறைப்பாடு செய்து விட்டு, ஏனையவற்றைச் சொல்லாமல் மறைத்து விட்டார்.
மறுநாள் 22ம் திகதி, விமானத் தளத்திலிருந்து மேஜர் போல் ஹெண்டர்ஸன் எனும் உயர் அதிகாரி தொலைபேசி மூலம் ஹில் தம்பதியினரைத் தொடர்பு கொண்டு, சம்பவத்தை விரிவாக விளக்கும் படி விசாரித்தார். நேரில் சந்தித்து, எந்தவிதமான தடயங்களைக் கூட பார்வையிடாமல், தொலைபேசி மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட அரைகுறைத் தகவல்களை மட்டும் வைத்துக் கொண்டு, மேஜர் ஹெண்டர்ஸன் அவசரமாக ஓர் அறிக்கையைத் தயாரித்தார். இந்த அறிக்கை, முறையான விசாரணைகளின் / ஆதாரங்களின் அடிப்படையில் தயாரிக்கப் படவில்லை; மாறாக, மேஜர் ஹெண்டர்ஸனின் மனோ இச்சை சார்ந்த அபிப்பிராயங்களின் அடிப்படையிலேயே இது தயாரிக்கப் பட்டதென்பது இங்கு குறிப்பிடத் தக்கது.
தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையை மேஜர் ஹெண்டர்ஸன் 26ம் திகதி உரிய அதிகாரிகளுக்குச் சமர்ப்பித்தார். “வியாழன் கிரகத்தை இவர்கள் இரவில் கண்டு, அதைப் பறக்கும் தட்டென்று தவறாகப் புரிந்து விட்டார்கள்” என்றே தான் அபிப்பிராயப் படுவதாக அந்த அறிக்கையில் மேஜர் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், இந்த அறிக்கையின் தீர்மாணம் பிறகு பல மாற்றங்களுக்கும் உள்ளாக்கப் பட்டது என்பது தான் வேடிக்கை. அறிக்கையில் காரணம் காட்டப் பட்டிருந்த “வியாழன் கிரகம்” என்பது பிறகு, “பார்வைக் கோளாறு” என்றும், அது பிறகு “தலைகீழ்ப் புரட்டல்” என்றும், அதுவும் பிறகு “போதிய தரவுகள் இல்லை” என்றும் காலம் செல்லச் செல்ல அறிக்கை மாறிக் கொண்டே சென்றது. ஏதோ ஒரு காரணத்தையொட்டி இந்தச் சம்பவத்தை மூடி மறைப்பதற்காக, ஹில் தம்பதியினரின் கடத்தல் அனுபவத்தைப் பொய்ப்பிக்கும் நோக்குடனே இந்த அறிக்கை அரசு சார்பாகத் தயாரிக்கப் பட்டிருக்கிறது என்பதையும், சம்பவத்தைப் பொய்ப்பிப்பதற்கான காரணங்கள் கால சூழலுக்கு ஏற்ப மாறிக் கொண்டே சென்றிருக்கிறது என்பதையும் இதிலிருந்து நாம் ஓரளவு புரிந்து கொள்ளலாம்.
இந்த அறிக்கை, “Report 100-1-61, Air Intelligence Information Record” எனும் இலக்கப் பதிவுகளின் கீழ் சேகரிக்கப் பட்டிருக்கிறது.
பிறகு இந்த அறிக்கை, அமெரிக்க விமானப் படையின் “Project Blue Book” என்று அழைக்கப்படும் பறக்கும் தட்டு ஆய்வுச் செயலகத்தின் நேரடிக் கவனத்துக்குக் கொண்டுசெல்லப் பட்டது.
சில நாட்கள் கழிந்து பெட்டி ஹில் ஒரு நாள் உள்ளூர் நூலகத்திலிருந்து பறக்கும் தட்டுக்கள் குறித்த ஒரு புத்தகத்தை இரவல் வாங்கி வாசித்தார். இந்தப் புத்தகம், அமெரிக்க ராணுவத்தின் ஈரூடகப் படைப்பிரிவின் (Marine Corps) முன்னாள் மேஜர் “டொனல்ட் கீஹோ” என்பவராலேயே எழுதப் பட்டிருந்ததை பெட்டி அவதானித்தார்.
மேஜர் டொனல்ட் கீஹோ ஒரு சாதாரண மேஜராக மட்டும் இருந்தவர் அல்ல. அமெரிக்க இராணுவத்தின் முக்கிய புள்ளிகளுள் ஒருவராகக் கருதப் பட்டவர் இவர். மேலும், தனது சேவைக் காலத்திலும், மற்றும் ஓய்வு பெற்ற பிறகும் கூட அமெரிக்க இராணுவத் தலைமையகமான “பெண்ட்டகன்” (Pentagon) அலுவலக உயர் அதிகாரிகளோடு கூட நெருங்கிய தொடர்பில் இருந்து வந்த ஒருவர். பறக்கும் தட்டுக்கள் குறித்த பல ஆய்வுகளைத் தகுந்த இராணுவ ஆவண ஆதாரங்கள் மூலம் மேற்கொண்டு, பிற்காலத்தில் பகிரங்கமாக அவற்றை எழுதவும் ஆரம்பித்தவர். “பறக்கும் தட்டுக்கள் பற்றிய செய்திகளெல்லாம் வதந்திகள்” என்று அமெரிக்க அரசாங்கம் வெளியுலகுக்குக் கூறுவதெல்லாம் பொய். உண்மையை மறைக்க அமெரிக்க அரசாங்கமே பல மூடிமறைத்தல் நாடகங்களை மீடியாக்களில் அரங்கேற்ற முயற்சிக்கிறது எனும் உண்மையை ஆணித்தரமாகப் பிற்காலத்தில் பகிரங்கப் படுத்தியவர்களுள் இவரும் ஒருவர்.
மேலும், “தேசிய வான்பரப்பு அமானுஷ்யங்கள் புலனாய்வாளர் கமிட்டி” (National Investigations Committee On Aerial Phenomena - NICAP) எனும் அமைப்புக்கும் அப்போது மேஜர் கீஹோ தான் தலைவராக இருந்தார். எனவே இவரைத் தொடர்பு கொள்வதே தனது பிரச்சினைக்குத் தகுந்த தீர்வு என்று தீர்மாணித்த பெட்டி ஹில், செப்டம்பர் மாதம் 26ம் திகதி மேஜர் கீஹோருக்கு ஒரு கடிதம் எழுதினார். இந்தக் கடிதத்தில் நடந்த சம்பவம் மொத்தத்தையும் ஒன்று விடாமல் பெட்டி விவரித்து எழுதியிருந்தார். மேலும், தேர்ந்த உளவியலாளர்களின் உதவியோடு அறிதுயில் (Hypnosis) மூலம் தானும், தன் கணவரும் இழந்த ஞாபகங்களை மீளப் பெற்றுக் கொள்ளத் தான் முயற்சிக்கப் போவதாகவும், இழந்த ஞாபகங்களைத் திருப்பிப் பெறுவதன் மூலம் மட்டுமே உண்மையைக் கண்டறிய முடியும் என்பதாகவும் கடிதத்தில் பெட்டி குறிப்பிட்டிருந்தார். இறுதியில் இந்தக் கடிதம் NICAP அங்கத்தவர்களுள் ஒருவரான பாஸ்டன் நகரைச் சேர்ந்த வானியலாளர் “வால்ட்டர் வெப்” என்பவர் கையில் வந்து சேர்ந்தது.
கடிதத்தை வாசித்ததும் பிரச்சினையின் யதார்த்தத் தன்மையை உணர்ந்த வால்ட்டர் வெப், ஒக்டோபர் மாதம் 21ம் திகதி ஹில் தம்பதியினரை நேரில் சென்று சந்தித்து, அவர்களைப் பேட்டி கண்டார். கிட்டத்தட்ட ஆறு மணித்தியாலங்கள் தொடர்ந்த இந்த சம்பாஷனையின் போது ஹில் தம்பதியினர் தமக்கு ஞாபகத்தில் இருக்கும் அனைத்தையும் ஒன்று விடாமல் விளக்கிக் கூறினார்கள்.
பார்னியிடம் விசாரித்த போது, தனது ஞாபகத்தில் குறிப்பிட்ட ஒரு காலவரையறைக்குட்பட்ட பகுதி ஏதோ ஒன்றின் மூலம் தடுத்து மறைக்கப் பட்டிருப்பது போல் தன்னால் உணர முடிவதாகக் குறிப்பிட்டார். தனது ஞாபகத்தில் இருப்பவற்றை வைத்துக் குறித்த பறக்கும் தட்டின் வடிவம், பரிமாணம், மற்றும் தான் பைனாகுலரில் பார்த்த போது அதனுள் இருந்த வேற்றுக்கிரகவாசிகளின் வடிவம், அண்ணளவான எண்ணிக்கை போன்ற விபரங்களையெல்லாம் பார்னி பட்டியலிட்டுக் குறிப்பிட்டார்.
ஹில் தம்பதியினரை முறையாக விசாரித்த வால்ட்டர் வெப், பிறகு அது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டார்:
“இவர்கள் இருவரும் பொய் சொல்லவில்லை; உண்மையையே கூறுகிறார்கள் என்பது தெரிகிறது. மேலும், குறிப்பிட்ட சம்பவம், அனேகமாக அவர்கள் விபரிக்கும் ஒழுங்கில் தான் உண்மையிலேயே நடந்திருக்கிறது என்பதையும் அவர்களது வாக்குமூலங்கள் தெளிவுபடுத்துகின்றன. சிலவேளை, சம்பவம் நடந்த துல்லியமான நேரம், சம்பவத்தில் குறிப்பிடப்படும் கால வரையறைகள், தூரம், உயரம் போன்றவை பற்றி அவர்கள் குறிப்பிடும் தகவல்களில் மனிதர்கள் என்ற அடிப்படையில் சில தவறுகள் இருக்கலாம். ஆனால், சம்பவம் குறித்த நிகழ்வுகள் பற்றி அவர்கள் கூறும் செய்திகளில் எதையும் நிராகரிப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. எனது விசாரணையின் பிரகாரம் இது நம்பகமான செய்தி” என்று கூறித் தனது அறிக்கையை நிறைவு செய்திருந்தார்.
பெட்டி ஹில் கண்ட கனவுகள்: ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ சம்பவம் நடந்த பத்தாவது நாள் முதல் பெட்டியின் உறக்கத்தில் சில விசித்திரமான கனவுகள் தோன்ற ஆரம்பித்தன. ஒரு நீண்ட தொலைக்காட்சித் தொடரைத் தொடர்ச்சியாகப் பார்ப்பதைப் போல், தொடர்ச்சியாக ஐந்து இரவுகள் இடைவிடாமல் ஒரே கனவை பெட்டி காண ஆரம்பித்தார். இவ்வளவு நேர்த்தியான, தொடர்ச்சியான, தெளிவான, கட்டுக்கோப்பான ஒரு கனவைத் தனது வாழ்வில் இதற்கு முன் எப்போதுமே கண்டதில்லையென்று பெட்டி குறிப்பிட்டார். ஐந்து நாட்கள் ஒரே தொடராகத் தொடர்ந்த இந்த விசித்திரக் கனவுகள் ஆறாவது நாளோடு திடீரென்று மொத்தமாகவே நின்று விட்டன. அதன் பிறகு அந்தக் கனவின் சாயலில் கூட எந்தவொரு கனவும் அவருக்கு என்றுமே தோன்றவில்லை.
இந்த விசித்திரக் கனவுத் தொடர் குறித்த மர்மம், பகல் நேரங்களில் கூட பெட்டியின் எண்ணங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. கொஞ்ச நாள் மனதுக்குள்ளேயே இது குறித்துப் புழுங்கிக் கொண்டிருந்த பெட்டி, ஒரு நாள் தன் கணவர் பார்னியிடம் வெளிப்படையாகவே இதைச் சொல்லி விட்டார். அதைக் கேட்டவுடன் பார்னிக்குத் தன் மனைவி மேல் சற்று பரிதாப உணர்வு மட்டுமே ஏற்பட்டது. பெட்டியின் கனவுகளின் தனித்துவம் குறித்து பார்னி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஏதோ அச்ச மேலீட்டால் கனவு கண்டிருக்கலாம் என்று சாதாரணமாகவே அதை எடுத்துக் கொள்ளுமாறு பெட்டியிடம் கூறினார்.
ஆனால், பார்னியின் சமாதானங்கள் எதையும் பெட்டியின் உள்ளம் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தக் கனவுகளுக்குப் பின்னால் ஏதோ ஓர் உண்மை மறைந்திருக்கிறது என்பது மட்டும் பெட்டிக்கு நூறு வீதம் உறுதியாகத் தெரிந்திருந்தது. இருந்தாலும், அதை மீண்டும் தன் கணவனிடம் தெரிவிக்க பெட்டி தயங்கினார். தனக்குள்ளேயே இது குறித்து யோசித்துக் கொண்டிருந்தார்.
நாள் செல்லச் செல்ல இந்தக் கனவுகள் பற்றிய குழப்பம் பெட்டியின் உள்ளத்துக்குள் ஒரு பாரமாக உருவெடுக்கத் தொடங்கின. உள்ளுக்குள் கணத்துக் கொண்டிருந்த எண்ணச் சுமைகளை எங்காவது இறக்கி வைக்க வேண்டும் போலிருந்தது. எனவே, நவம்பர் மாதம் பெட்டி, தனது கனவுகள் அனைத்தையும் எழுத ஆரம்பித்தார். இவ்வாறு எழுதப்பட்ட கனவுகளின் விபரத் தொகுப்பு பின்வருமாறு அமைந்திருந்தது:
கனவின் ஆரம்பத்தில் தானும், தன் கணவர் பார்னியும் பயணித்துக் கொண்டிருந்த பாதை திடீரென்று குறுக்கால் மூடப்பட்டிருந்தது. பாதை மூடப் பட்டிருந்ததனால் காரை நிறுத்தியிருந்த போது, சில மனிதர்கள் வந்து தமது காரைச் சூழ்ந்து கொள்கிறார்கள். அத்தோடு பெட்டியின் சுய நினைவு தவறுகிறது. ஆனால் தன் சுய நினைவைத் தக்க வைத்துக் கொள்ள பெட்டி கடுமையாகப் போராடுகிறார். பிறகு இரண்டு சிறிய மனிதர்கள் தன்னை அந்த இரவில் நடுக் காட்டின் வழியாக நடப்பித்துக் கூட்டிச் செல்வதை பெட்டி உணர்கிறார். மேலும் தனக்குப் பின்னால் தனது கணவர் பார்னியும் நடந்து வருவதைக் காண்கிறார். கணவனைக் கத்திக் கூப்பிடுகிறார் பெட்டி. ஆனால், அவருக்கு அது கேட்கவில்லை; தூக்கத்தில் நடப்பதைப் போல் கணவன் நடந்து வருகிறார்.
தன்னைக் கூட்டிச் செல்லும் மனிதர்கள் கிட்டத்தட்ட ஐந்தடி அளவு உயரத்தில் இருப்பதையும், நீல நிறத்திலான இராணுவ சீருடை போன்ற ஒரே மாதிரியான உடை அணிந்திருப்பதையும் பெட்டியால் அவதானிக்க முடிகிறது. பார்க்கும் போது அவர்கள் கிட்டத்தட்ட மனிதர்களைப் போலவே இருக்கிறார்கள். கரிய நிற முடி, கரிய கண்கள், மூக்கு, மற்றும் நீல நிற உதடுகள் ஆகிய அங்க அடையாளங்களுடன் அவர்கள் இருக்கிறார்கள். மேலும், அவர்களது தோல் நரை நிறத்தில் (வெளிறிய சாம்பல் நிறத்தில்) இருப்பதையும் பெட்டியால் உணர முடிகிறது.
பிறகு பெட்டியும், கணவர் பார்னியும், அவர்களைக் கூட்டிச் செல்லும் விசித்திர மனிதர்களும் படிக்கட்டு போன்ற ஓரு சரிவின் வழியாக ஏறி, வட்டத் தட்டு வடிவிலான ஓர் ஊர்தினுள் நுழைகிறார்கள். அந்த ஊர்தி உலோகத்தினாலான சுவர்களைக் கொண்டிருந்தது. உள்ளே சென்றதும், பார்னியும், பெட்டியும் தனித்தனியாகப் பிரித்து அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அப்போது பெட்டி, தம்மைப் பிரிக்க வேண்டாம் என்று போராடுகிறார். அப்போது அங்கிருந்த “தலைவர்” என்று அழைக்கப்பட்ட ஒருவர், இருவரையும் ஒரே இடத்தில் வைத்திருந்தால், தமது பரிசோதனைகளைச் செய்து முடிக்க அதிக நேரம் செல்லும் என்பதனாலேயே இருவரையும் தனித்தனியாகப் பிரித்து அழைத்துச் செல்வதாகக் காரணம் கூறுகிறார். பிறகு இருவரும் தனித்தனி அறைகளுக்கு அழைத்துச் செல்லப் படுகிறார்கள்.
தனி அறைக்குள் பெட்டி அழைத்துவரப் பட்ட பின், ஏற்கனவே பறக்கும் தட்டினுள் நுழையும் போது வாசலில் அறிமுகமான “தலைவர்” எனும் வேற்றுக்கிரகவாசியோடு இன்னொரு புதிய வேற்றுக்கிரகவாசியும் அறையினுள் நுழைகிறார்கள். இந்தப் புதிய வேற்றுக்கிரகவாசியைப் பற்றி பெட்டி தனது குறிப்பில் “பரிசோதகர்” என்றே எழுதியிருக்கிறார்.
உள்ளே நுழைந்த புதிய வேற்றுக்கிரகவாசி அமைதியான சுபாவம் கொண்ட ஒருவராகவே தோற்றமளித்தார். அவர்கள் இருவரும் பெட்டியோடு உரையாடுகையில் தெளிவான ஆங்கிலத்தில் உரையாடினாலும், தமக்குள் பேசிக் கொள்ளும் போது முழுமை பெறாத ஏதோ அரைகுறை மொழியில் பேசுவது போல் பேசிக் கொள்கிறார்கள். அவர்கள் பேசிக்கொள்ளும் பாஷையை பெட்டியால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
“பரிசோதகர்” பெட்டியிடம் முதலில் நளினமான முறையில் உரையாடுகிறார். மரபியல் ரீதியில் மனித இனத்துக்கும் தமது இனத்துக்கும் இடையில் இருக்கும் வித்தியாசங்களை ஆய்வு செய்யும் நோக்கில் பெட்டியின் உடலில் தாம் சில பரிசோதனைகளைச் செய்யப் போவதாக பரிசோதகர் கூறி விட்டு, அவரை ஒரு நாற்காலியில் அமர்த்துகிறார். அதன் பிறகு பெட்டி மீது மிகவும் பிரகாசமான ஒரு வெளிச்சம் பாய்ச்சப் படுகிறது. பிறகு பரிசோதகர் பெட்டியின் கூந்தலில் ஒரு பகுதியைக் கத்தரித்து எடுத்துக் கொள்கிறார். பிறகு கண்கள், காது, வாய், பல், தொண்டை, மற்றும் கை ஆகியவை பரிசோதிக்கப் படுகின்றன. பெட்டியின் கை நகத்திலிருந்தும் சில துண்டுகளை வெட்டியெடுத்து சேகரித்துக் கொள்கிறார்கள்.
பரிசோதனை தொடர்கிறது. பெட்டியின் கால்கள், பாதங்கள் ஆகியவற்றைப் பரிசோதித்த பிறகு பரிசோதகர், கூர்மையில்லாத சிறிய கத்தி போன்ற ஓர் ஆயுதத்தை எடுத்து, அதன் மூலம் பெட்டியின் உடலின் மேற்தோலைக் கொஞ்சம் சுரண்டி அதை பொலித்தீன் போன்ற ஏதோ ஒரு பைக்குள் சேகரித்துக் கொள்கிறார். பிறகு பெட்டியின் நரம்பு மண்டலத்தில் சில பரிசோதனைகள் மேற்கொள்ளப் படுகின்றன. நீண்ட ஊசி போன்ற ஓர் ஆயுதத்தைப் பரிசோதகர் பெட்டியின் தொப்புள் வழியாக வயிற்றுக்குள் புகுத்துகிறார். அதன் வேதனை தாங்க முடியாமல் பெட்டி துடிக்கிறார். அப்போது பக்கத்திலிருந்த “தலைவர்” பெட்டியின் கண்களுக்கு முன்னால் தனது கையை ஏதோ சைகை செய்வது போல் அசைக்கிறார். அவ்வாறு செய்ததும் பெட்டியின் வலி உடனே இல்லாமல் போய் விடுகிறது.
பரிசோதனை முடிந்து பரிசோதகர் அறையை விட்டு வெளியே சென்று விட, பெட்டியுடன் தனிமையில் அறையில் இருக்கும் தலைவர் பெட்டியோடு சகஜமாகப் பேசத் தொடங்குகிறார். அங்கிருந்த வினோதமான குறியீடுகள் எழுதப் பட்டிருக்கும் ஒரு புத்தகத்தை பெட்டி கையில் எடுக்கிறார். அதைப் பார்த்த தலைவர், அந்தப் புத்தகத்தை விரும்பினால் பெட்டி எடுத்துச் செல்லலாம் என்று கூறுகிறார். மேலும் அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்று தலைவரிடம் பெட்டி கேட்டதும், நட்சத்திரங்களைக் கொண்ட ஒரு வரைபடத்தை எடுத்துக் காட்டுகிறார்.
இறுதியில் பெட்டியைத் திரும்ப அழைத்துக் கொண்டு போவதற்கு இன்னும் சிலர் வருகிறார்கள். அப்போது அவர்களுக்குள் பேசிக்கொண்ட போது, ஏதோ கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. அதன் பிறகு தலைவர் பெட்டியிடமிருந்து அந்தப் புத்தகத்தைத் திருப்பி வாங்கிக் கொள்கிறார். பெட்டி அந்தப் புத்தகத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாதென்றும், இந்தச் சம்பவமே பெட்டிக்கு நினைவில் இருக்கக் கூடாதென்றும் மற்ற அங்கத்தவர்கள் அபிப்பிராயப் படுவதாக தலைவர் கூறுகிறார். என்ன தான் ஞாபகத்தை அழித்தாலும், ஒரு நாள் மீண்டும் இந்த ஞாபகங்கள் தனக்கு வந்தே தீரும் என்று பெட்டி நம்பிக்கையோடு அதற்குப் பதில் கூறுகிறார்.
எல்லாம் முடிந்த பிறகு பெட்டியும், கணவர் பார்னியும் மீண்டும் தமது கார் இருக்கும் இடத்துக்குக் கூட்டி வரப் படுகிறார்கள். கடைசியாக தலைவர் பெட்டியிடம் தமது பறக்கும் தட்டு கிளம்பிப் பறந்து சென்று மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்து விட்டு, அதன் பிறகு காரில் ஏறுமாறு கூறுகிறார். அவர் கூறியவாறே இருவரும் பார்த்திருந்து, அதன் பிறகு காரில் ஏறி வீடு நோக்கிப் பயணிக்கின்றார்கள்.
இது தான் பெட்டி ஹில் ஐந்து நாட்கள் தொடர்ச்சியாகக் கண்ட கனவுகளின் தொகுப்பின் சாராம்சம். இவ்வளவு நேர்த்தியான, தொடர் அறுந்து போகாத ஒரு கனவு, மிக நிச்சயமாக மனிதருக்குத் தோன்றும் சாதாரன கனவாக இருக்க வாய்ப்பே இல்லையென்பதை பெட்டி தெளிவாக உணர்ந்திருந்தார். எனவே தான் இது குறித்த உண்மையைக் கண்டறிய வேண்டும் என்பதில் அவரது முயற்சிகள் தொடரலாயின.
ஒருபுறம் கனவுகள் மூலம் இப்படியொரு குழப்பம் ஏற்பட்டிருக்க, இன்னொரு புறம் வேறொரு குழப்பமும் ஏற்கனவே முளைத்திருந்தது. அதையும் கொஞ்சம் பார்த்து விடலாம்.
தொலைந்த நேரம்: ~~~~~~~~~~~~~~~~~ 1961, நவம்பர் மாதம் 25ம் திகதி, NICAP அமைப்பினர் ஹில் தம்பதியினரை மீண்டும் ஒருமுறை சந்தித்து இன்னொரு விரிவான பேட்டி கண்டார்கள். இம்முறை NICAP அமைப்பின் சார்பாக “சீ.டீ.ஜாக்ஸன்”, மற்றும் “ரொபர்ட் ஹோமன்” ஆகியோரே விசாரணைகளை மேற்கொண்டார்கள்.
ஏற்கனவே முதல் தடவை பேட்டி கண்ட “வால்ட்டர் வெப்” என்பவர் சமர்ப்பித்திருந்த அறிக்கையையும் வாசித்து, அவற்றின் தகவல்களையும் அடிப்படையாக வைத்துத் தான் இந்த இரண்டாவது பேட்டி அமைந்திருந்தது. இந்தப் பேட்டியின் போது ஜாக்ஸன், மற்றும் ஹோமன் ஆகியோர் தம்பதியரிடம் மேலதிகமான சில புதிய குறுக்கு விசாரணைக் கேள்விகளைத் தொடுத்தனர். அவற்றுள் முக்கியமான ஒரு கேள்வியாகக் குறிப்பிட்ட சம்பவத்தையொட்டிய பிரயாணத்தின் போது, தம்பதிகளது மொத்தப் பயணத்துக்கும் எடுத்துக் கொள்ளப் பட்ட நேரம் எவ்வளவு என்பதும் உள்ளடக்கப் பட்டிருந்தது. இந்தக் கேள்வியி போது மேலும் சில புதிர்கள் வெளிப்படத் தொடங்கின.
குறித்த பயணத்தின் போது, வழமைக்கு மாற்றமாக சற்று தாமதமாகியே வீடு வந்து சேர்ந்ததாக ஹில் தம்பதியினர் குறிப்பிட்டனர். ஆனால், அதை அவர்கள் அவ்வளவாகப் பெரிது படுத்திக் கொண்டதாகத் தெரியவில்லை. எதிர்பார்த்ததை விட சற்றுத் தாமதமாக வந்து விட்டோம் எனும் அடிப்படையில் மட்டுமே குறிப்பிட்டார்கள்.
ஆனால், இந்தத் தாமதம் எவ்வளவு நேரம் என்பதை அறிந்து கொள்வதில் மிகவும் குறியாகவும், உன்னிப்பாகவும் இருந்த ஜாக்ஸன் மற்றும் ஹோமன் ஆகியோர், புறப்பட்ட நேரம், வந்து சேர்ந்த நேரம், பயணத் தூரம், பிரயாணத்தின் போது நடந்த சம்பவங்களின் பட்டியல் ஆகியவற்றைத் துருவித் துருவிக் கேட்கலாயினர். இறுதியில் ஜாக்ஸன் மற்றும் ஹோமன் ஆகியோர், இந்தத் தாமதம் ஆய்வுக்கு உட்படுத்தப் பட வேண்டியது என்பதைச் சுட்டிக் காட்டினர். ஏனெனில், இதில் ஒரு குழப்பம் இருக்கிறது.
அதாவது, தம்பதியர் பிரயாணித்த மொத்தத் தூரம், நேரம், மற்றும் பிரயாணம் முழுவது நடந்த சம்பவங்களுக்குச் செலவான நேரம் ஆகியவற்றை ஒன்றோடொன்று ஒப்பிட்டுக் கணித்துப் பார்க்கும் போது, ஏறக்குறைய நான்கு மணித்தியாலங்களுக்குள் மொத்தப் பிரயாணமும் முடிந்து, தம்பதியர் வீடு வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், புறப்பட்ட நேரம், மற்றும் வந்து சேர்ந்த நேரம் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது, மொத்தம் ஏழு மணித்தியாலங்கள் பிரயாணத்துக்குச் செலவாகியிருப்பது தெரிய வந்தது.
நான்கு மணித்தியாலப் பிரயாணம் எப்படி ஏழு மணித்தியாலப் பிரயாணமாக மாறியது? இடையில் மூன்று மணித்தியாலங்களுக்கு என்ன நடந்தது? கணக்கில் வராமல் விடுபட்ட இந்த மூன்று மணித்தியாலங்களுக்குள் தம்பதியர் எங்கிருந்தார்கள்? என்ன செய்தார்கள்? என்று பல கேள்விகள் இதையொட்டி முன்வைக்கப் பட்ட போது, உண்மையிலேயே இதற்குப் பதில் சொல்லத் தெரியாமல், தம்பதியர் குழப்பத்தோடு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். உண்மையிலேயே ஜாக்ஸன், மற்றும் ஹோமன் ஆகியோர், எந்தச் சம்பவங்களும் சொல்லப்படாமல் மூன்று மணித்தியாலங்கள் செலவாகியிருப்பதைச் சுட்டிக் காட்டிய பிறகு தான் ஹில் தம்பதியினருக்கே அது தெரிய வந்தது.
குறிப்பு: பொதுவாக வேற்றுக்கிரகவாசிகளின் கடத்தல் சம்பவங்களில் “தொலைந்த நேரம்” எனும் இந்தப் பிரச்சினை முளைப்பது சகஜம். இதற்குக் காரணம், கடத்தப் பட்டோர், வாக்குமூலம் கொடுக்கும் போது, தமது ஞாபகத்தில் இருக்கும் நிகழ்வுகளை மட்டுமே பட்டியலிடுவது வழக்கம். எனவே, வேற்றுக்கிரகவாசிகளால் அழிக்கப்பட்ட ஞாபகங்களுக்குரிய நிகழ்வுகள், கடத்தப்பட்டவரின் ஆரம்ப வாக்குமூலங்களில் இருக்காது. சம்பவத்தின் மொத்த நேரத்தையும், கடத்தப்பட்டவர் பட்டியலிடும் மொத்த நிகழ்வுகளையும் விசாரணை செய்பவர்கள் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, மேலதிகமாக ஒருசில மணித்தியாலங்கள், எந்த நிகழ்வுகளும் இல்லாமல் வெறுமனே செலவாகியிருப்பது தெரிய வரும். குறிப்பிட்ட அந்த மணித்தியாலங்களுக்குள் என்ன நடந்தது என்று கடத்தப்பட்டவர்களிடம் கேட்டாலும், அவர்களிடம் அதற்குப் பதில் இருக்காது. ஏனெனில், அவர்களது ஞாபகத்தில் அந்த நேரப்பகுதிக்குரிய சம்பவங்கள் ஏற்கனவே அழிக்கப் பட்டிருக்கும். ஞாபகம் அழிக்கப்பட்ட இந்த நேரப்பகுதியைப் பறக்கும்தட்டு ஆய்வாளர்கள் பொதுவாக “தொலைந்த நேரம்” என்று அழைப்பதுண்டு. அனேகமான வேற்றுக்கிரவாசிக் கடத்தல் சம்பவங்களில் இது சகஜமாக அவதானிக்கப்படும் ஒரு பிரச்சினை. இதே பிரச்சினை தான் ஹில் தம்பதியரின் கடத்தல் சம்பவத்திலும் ஜாக்ஸன், மற்றும் ஹோமன் ஆகியோர் மூலம் அவதானிக்கப் பட்டது.
சம்பவத்தில் விடுபட்டிருக்கும் மூன்று மணித்தியால நேரம், மற்றும் சுயநினைவில்லாமல் பிரயாணித்த ஐம்பது கிலோமீட்டர் தூரம் ஆகிய இரண்டுக்கும் நடுவில் என்ன நடந்தது என்று ஜாக்ஸன், மற்றும் ஹோமன் ஆகியோர் திரும்பத்திரும்பக் கேட்ட போதும், ஹில் தம்பதியரால் முழுமையான பதிலைச் சொல்ல முடியவில்லை. எவ்வளவோ யோசித்த போதும், நெருப்பினால் ஆன ஒரு வட்டமான வடிவம் தரையை ஒட்டினாற்போல் தூரத்தில் இருக்கும் ஒரு காட்சியை மட்டுமே அவர்களால் விபரிக்க முடிந்தது. அதற்கு மேல் அவர்களுக்கு ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. இந்த வட்ட வடிவத்தைப் பற்றிக் கூறும் போது கூட ஹில் தம்பதிகள், அது சந்திரனாகத் தான் இருக்க வேண்டும் என்று கூறினார்கள். ஆனால், அதற்குப் பதில் சொன்ன ஜாக்ஸன், மற்றும் ஹோமன் ஆகியோர், அன்றைய தினம் சந்திரன் முன்னிரவிலேயே அஸ்தமித்து விட்டதென்றும், குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் வானில் இருக்க சாத்தியமே இல்லையென்றும் குறிப்பிட்டனர்.
இவ்வாறு பல குழப்பங்கள் இந்தச் சம்பவத்தையொட்டி இருப்பதால், நடந்த சம்பவங்களைச் சரியான ஒழுங்கில் மீட்டிப் பார்க்க ஒரே வழி அறிதுயில் (Hypnosis) உத்தியைக் கையாள்வது தான் என்று தம்பதிகளுக்கு அறிவுறுத்தப் பட்டது. பார்னியைப் பொருத்தவரை அறிதுயிலில் அவருக்கு அவ்வளவு ஈடுபாடு இருக்கவில்லை. ஆனால், பெட்டியின் கனவு குறித்த குழப்பத்துக்காவது இதில் ஒருவேளை தீர்வு கிடைக்கலாம் என்ற ஒரு நப்பாசையும் அவருக்கு இருக்கத் தான் செய்தது.
1962 நவம்பர் மாதம் 23ம் திகதி, ஹில் தம்பதியர் தமது ஊர் தேவாலயத்தில் வைத்து அமெரிக்க விமானப் படையைச் சேர்ந்த கேப்டன் பென் ஸ்வெட் என்பவரோடு ஓர் அந்தரங்கமான சந்திப்பை மேற்கொண்டார்கள். கேப்டன் பென் ஸ்வெட் உளவியல் / அறிதுயில் போன்றவற்றிலும் சற்று ஈடுபாடுடையவர். எனவே தமது குழப்பங்கள் குறித்த பிரச்சினையை அவரிடம் கூறி, மறக்கடிக்கப்பட்ட தமது ஞாபகங்களை மீட்பதற்குத் தமக்கு உதவ முடியுமா என்று ஹில் தம்பதியினர் ஸ்வெட் இடம் கோரினர். கேப்டன் ஸ்வெட் கூட பிரத்தியேகமாக “தொலைந்த நேரம்” குறித்த மர்மத்தில் தான் அதிக அவதானம் செலுத்தினார். ஆனால், ஹில் தம்பதியினரின் குழப்பம், ஒரு தேர்ந்த உளவியல் நிபுணர் கையாள வேண்டிய அளவுக்கு ஆழமான உளவியல் பிரச்சினை என்றும், அந்த அளவுக்கு உளவியல் தேர்ச்சி தனக்கு இல்லையென்றும் கூறி, கேப்டன் ஸ்வெட் மறுத்து விட்டார்.
தமக்கிருக்கும் குழப்பங்களைத் தீர்த்து வைக்கும் அளவுக்கு கைதேர்ந்த நிபுணர்களைத் தேடி விசாரிப்பதாக இருந்தால், இந்தப் பிரச்சினையைப் பகிரங்கப் படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை ஹில் தம்பதியினர் இறுதியில் உணர்ந்தனர். இதற்மைய, 1963 மார்ச் மாதம் 3ம் திகதி தமது ஊர் தேவாலயத்தில் குறிப்பிட்ட ஒரு குழுவினர் முன்னிலையில் ஹில் தம்பதியர் தமது பிரச்சினையைப் பகிரங்கமாக அறிவித்தனர். ஆனால், இந்த அறிவிப்பின் வாயிலாக ஆரம்பத்தில் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.
அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம், திகதி ஒரு விரிவுரைக்காக வந்திருந்த கேப்டன் ஸ்வெட்டை பெட்டி ஹில் மீண்டும் சந்தித்த போது, தன் கணவர் பார்னி, ஒரு நம்பகமான உளவியலாளரைத் தேர்ந்தெடுத்திருப்பதாகவும், அவரது பெயர் “ஸ்டீஃபன்ஸ்” என்றும் குறிப்பிட்டார். அப்போது கேப்டன் ஸ்வெட், பார்னி அந்த உளவியலாளரிடம் செல்லும் போது, அறிதுயில் உத்தியைக் கையாள்வது குறித்தும் கேட்டுப் பார்க்குமாறு அறிவுரை கூறினார். இந்த அறிவுரைக்கமைய ஸ்டீஃபன்ஸைச் சந்தித்த போது பார்னி, அறிதுயில் உத்தி பற்றிக் கேட்க, அதற்கு ஸ்டீஃபன்ஸ், தன்னை விடச் சிறந்த வேறோர் உளவியலாளரே அதற்குப் பொருத்தம் என்று கூறி, பாஸ்டன் நகரில் வசிக்கும் “பெஞ்ஜமின் ஸைமன்” எனும் தேர்ச்சி பெற்ற உளவியலாளரைப் பரிந்துரை செய்தார்.
1963, டிசம்பர் மாதம் 14ம் திகதி ஹில் தம்பதியினர் முதன்முதலாக உளவியலாளர் பெஞ்ஜமின் ஸைமான் என்பவரை நேரில் சந்தித்தனர். ஆரம்ப சந்திப்பின் போது, குறித்த பறக்கும்தட்டுச் சம்பவம் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ளாதவர் போல் பார்னி நடந்து கொண்டாலும், அவரது ஆழ்மனதை இந்தச் சம்பவம் வெகுவாகப் பாதித்திருக்கிறது என்பதை ஸைமன் கண்டுகொண்டார்.
உளவியலாளர் ஸைமனைப் பொருத்தவரை, அவர் மூட நம்பிக்கைகள் எனும் அடிப்படையில் அமைந்த அனைத்தையும் கடுமையாக எதிர்க்கும் போக்குடையவர். பகுத்தறிவுக்கு ஒத்துவராத எதையும் விமர்சனப் பார்வையோடும், மறுக்கும் நோக்கத்தோடுமே பார்த்துப் பழகியவர். பறக்கும் தட்டுக்கள் குறித்த சம்பவங்கள் எதிலுமே ஸைமனுக்குத் துளியளவு கூட நம்பிக்கை கிடையாது. பறக்கும் தட்டுக்கள் குறித்த அவரது தனிப்பட்ட நிலைபாடு, அதுவெல்லாம் வெறும் கட்டுக்கதை, கற்பனைக் கதை, பிரபலமடைவதற்காக ஒவ்வொருவரும் புனைந்து கூறும் கதைகள் என்பதாகத் தான் இருந்தது. வேற்றுக்கிரகவாசிகள் என்று எதுவும் இந்த உலகத்தில் இல்லை என்பது தான் அவரது அடிமனதில் வேறூன்றியிருக்கும் அசையாத நம்பிக்கை.
இதுவரை பறக்கும் தட்டுக்கள் என்பதே வெறும் கட்டுக்கதைகள் என்று நம்பிக் கொண்டிருந்த ஸைமன், ஹில் தம்பதியினரின் கதையைக் கேட்கக் கேட்க, அதைச் சொல்லும் போது அவர்களிடமிருந்து வெளிப்பட்ட உணர்ச்சிகளில் இருந்த யதார்த்தத் தன்மைகளையும், கதையில் சொல்லப்பட்ட சம்பவங்கள் அனைத்தையும் முரண்பாடுகள் இல்லாமல் புனைந்து கற்பிப்பது சாத்தியமில்லையென்பதையும் உணரத் தொடங்கினார். இதில் ஏதோ உண்மை ஒளிந்திருக்கிறது என்பது மட்டும் அவருக்குப் புரிந்தது. அந்த உண்மை என்னவென்பதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற தீர்மாணத்துக்கு ஸைமன் வந்தார். அறிதுயில் மூலம் மட்டுமே, சம்பவத்தை முழுமையாக மீட்க முடியும் என்பதை அவர் தம்பதியருக்குக் கூறவே, தம்பதியரும் உடனே அதற்குச் சம்மதித்தனர்.
அறிதுயிலின் போது என்ன நடந்தது என்பதை இன் ஷா அல்லாஹ் அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.
இன் ஷா அல்லாஹ் வளரும்...
- அபூ மலிக்
Episode 43 – நரை நிறத்தவர்கள் (தொடர்ச்சி 02): |