பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் ==============================
தொடர் 4: வேற்றுக்கிரக வேஷம்
Episode 42 – நரை நிறத்தவர்கள் (தொடர்ச்சி 01)
Episode 43 – நரை நிறத்தவர்கள் (தொடர்ச்சி 02):
அறிதுயில் அமர்வுகள்: ~~~~~~~~~~~~~~~~~~~~ 1964, ஜனவரி மாதம் 4ம் திகதி, உளவியலாளர் ஸைமன், முதல் தடவையாக ஹில் தம்பதியரை அறிதுயிலுக்கு உட்படுத்தினார். ஒரு தடவையிலேயே பூரண பல கிடைக்காததையிட்டு பார்னி, மற்றும் பெட்டி ஆகிய இருவரையும் தனித்தனியாக ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் அறிதுயிலில் ஆழ்த்த வேண்டிய அவசியம் ஸைமனுக்கு ஏற்பட்டதால், இந்த அறிதுயில் சிகிச்சை, ஜூன் மாதம் 6ம் திகதி வரை பல அமர்வுகளாக நீடித்தது.
தம்பதியர் இருவரையும் தனித்தனி அறைகளில் தனித்தனியாகவே ஸைமன் அறிதுயிலுக்கு உட்படுத்தினார். இதற்கான காரணம், தம்பதியரில் ஒருவர் அறிதுயில் நிலையில் இருக்கும் போது அவரோடு மேற்கொள்ளும் சம்பாஷனை மற்றவர் காதில் விழுந்து, அது அவரது அறிதுயில் மூலம் வெளிப்படும் சம்பவம் குறித்த வாக்குமூலத்தின் தூய்மைத் தன்மையைக் கெடுத்து விடும் என்பது தான்.
மேலும், ஒவ்வோர் அமர்வின் இறுதியிலும் அறிதுயில் சம்பாஷனைகளின் போது தம்பதியர் வெளிப்படுத்திய கருத்துக்களை, அவர்கள் விழிக்கும் போது, அவர்களே மறந்து போயிருக்க வேண்டும். அப்படி மறந்தால் தான் அடுத்த அமர்வின் போது அறிதுயிலில் வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் சென்ற அமர்வின் கருத்துக்களிலிருந்து பிரதியெடுத்துக் கூறியதாக இருக்காமல், புதிதாக ஆழ்மனத்திலிருந்து தூய எண்ணக்கிடங்காக அது வெளிவரும். உண்மைகளை வெளியில் எடுக்க இதுவே சிறந்த வழியென்பதை உணர்ந்த ஸைமன், ஒவ்வோர் அறிதுயில் அமர்வின் இறுதியிலும், தம்பதியர் அந்த அமர்வில் பேசியவை மொத்தத்தையும் மறந்து போகும் வண்ணம், ஏற்கனவே அவர்களுக்குள் வேற்றுக்கிரகவாசிகளால் ஏற்படுத்தப் பட்டிருக்கும் “அம்னீசியா” (Amnesia) எனும் மறதி சார்ந்த நிலையிலேயே அவர்களைத் திரும்பவும் கண்விழிக்க வைத்து வந்தார்.
பார்னியின் அமர்வுகள்: ~~~~~~~~~~~~~~~~~~~~ முதலில் ஸைமன் அறிதுயிலுக்கு உட்படுத்தியது பார்னியைத் தான். அவரது ஆரம்ப அமர்வுகளின் போது வேற்றுக்கிரகவாசிகளின் உருவ அமைப்புக்களைப் பற்றியும், சம்பவங்களையும் வர்ணிக்கும் போது அறிதுயில் நிலையில் பார்னி மிகவும் உணர்ச்சிவசப் பட்டவராகவும், பயந்து போன நிலையிலுமே விபரிப்பதை ஸைமன் அவதானித்தார். மேலும், தான் கடத்தப் பட்டிருந்த நேரமும், வேற்றுக்கிரகவாசிகள் தன் மீது மேற்கொண்ட பல பரிசோதனைகளின் போதும் அனேகமான பொழுதுகளில் அச்ச மேலீட்டால் தனது கண்களை இருக்க மூடிக்கொண்டே இருந்ததாகவும் பார்னி அறிதுயிலின் போது குறிப்பிட்டார்.
ஆரம்ப அமர்வுகளிலேயே பார்னியிடமிருந்து வெளிப்பட்ட இந்த அச்ச உணர்வின் காரணமாக, அவரது உள்ளம் மீண்டும் திடமான நிலைக்குத் திரும்பும் வரை அவரது ஞாகபங்களைத் தற்காலிகமாக மீட்டாமலேயே அவரது அமர்வுகளைத் தொடரப் போவதாகவும், அமர்வுகளின் இறுதியில் உள்ளத்திலிருந்து அச்சத்தைப் போக்கிய பிறகே ஞாபகங்களை மீட்டுவது உசிதம் என்றும் ஸைமன் அறிவுறுத்தினார். அதற்கு பார்னியும் சம்மதித்தார்.
பார்னியின் அமர்வுகளின் போது வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள், பெட்டியின் அமர்வுகளில் கூறப்பட்ட தகவல்களின் அளவுக்கு விரிவானவையாக இருக்கவில்லை. சில சம்பவங்களை பார்னி சுருக்கமாகவே விபரித்தார். சம்பவத்தின் போது அனேகமான பொழுதுகளில் அச்ச மிகுதியால் பார்னி கண்களை மூடிக் கொண்டிருந்ததால், அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவரைச் சுற்றியிருந்த காட்சிகள் எவ்வாறு இருந்தன என்பதை பார்னியால் வர்ணிக்க முடியவில்லை. கேட்கும் சப்தங்களையும், உணரும் உணர்வுகளையும் வைத்து மட்டுமே பார்னியால் அவ்வாறான நிகழ்வுகளைச் சுருக்கமாக விபரிக்க முடிந்தது.
பார்னியின் அமர்வுகளின் போது பெறப்பட்ட தகவல்களின் சாராம்சம்:
பறக்கும் தட்டிலிருந்த வேற்றுக்கிரகவாசிகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானித்த பார்னி, அவர்கள் தம்மைக் கடத்தப் போவதைத் தெரிந்து கொண்டவுடன் வேகமாக பைனாகுலரைக் கண்களிலிருந்து அகற்றிக் கொண்டு காரை நோக்கி ஓடி வந்தார். அச்ச மிகுதியால் பார்னி இழுத்த வேகத்தில் பைனாகுலரின் லெதர் வார் அறுந்து போய் விட்டது.
அவசர அவசரமாகக் காரில் ஏறிய பார்னி, தன்னால் முடிந்த அளவு வேகமாக வாகனத்தை அங்கிருந்து கிளப்ப முயற்சிக்கிறார். வேகமாக சற்று தூரம் காரை ஓட்டிக் கொண்டிருந்த பார்னி, ஏதோ தவிர்க்க முடியாத காரணத்தால், நெடுஞ்சாலையிலிருந்து வாகனத்தைத் திருப்பிக் காட்டு வழியாகத் தான்தோன்றித் தனமாக ஓட்டத் தொடங்கினார். எதிரில் ஒரு மண்பாதையோரத்தில் ஆறு பேர் குறுக்காக நின்று கொண்டிருந்தார்கள். திடீரென்று கார் நின்று விட்டது.
நின்றுகொண்டிருந்த ஆறு பேரில் மூன்று பேர் காரை நோக்க நெருங்கி வந்தார்கள். நெருங்கி வந்தவர்கள் பார்னியிடம் பயப்பட வேண்டாம் என்று கூறினாலும், பார்னியின் நெஞ்சு இன்னும் படபடத்துக் கொண்டே இருந்தது. நெருங்கி வந்தவர்களுள் “தலைவர்” என்று அடையாளப் படுத்தப் பட்டவர் பார்னியிடம் கண்களை மூடிக் கொள்ளுமாறு கூறினார். அறிதுயில் நிலையில் இவ்வாறு விபரித்துக் கொண்டு வந்த பார்னி, இந்தக் கட்டத்தை அடைந்ததும் “எனது கண்களுக்குள் அந்தக் கண்கள் அழுத்துவதைப் போல் உணர்ந்தேன்” என்று கூறினார்.
வேற்றுக்கிரகவாசிகளின் உடலமைப்பைப் பற்றி வர்ணிக்கையில், பெட்டியிடம் மேற்கொள்ளப்பட்ட அறிதுயில் விசாரணைகளின் போது பெட்டி விபரித்த அதே அடிப்படையிலேயே பார்னியும் தனது அறிதுயிலின் போது முரண்பாடுகள் இல்லாமல் பின்வருமாறு விபரிக்கலானார்:
சந்திப்பின் போதும், பரிசோதனைகளின் போதும் விசித்திரமான இரண்டு கண்கள், பார்னியின் கண்களையே அடிக்கடி நெருங்கி வந்து கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தன. அறிதுயில் நிலையில் இதைக் குறிப்பிடும் போது பார்னியின் குரல் அசாதாரணமாக நடுங்கிக் கொண்டிருந்ததை ஸைமன் அவதானித்தார். அந்தக் கண்கள் தனது கண்களை நெருங்கி வந்து, உற்று நோக்கும் போதெல்லாம், பயமுறுத்தக் கூடிய ஒரு மயக்கம் கலந்த உணர்வை அவை தனக்குள் ஏற்படுத்த முயற்சிப்பது போல் தனக்குத் தோன்றியதாகவும் பார்னி குறிப்பிட்டார். இது பற்றி விபரிக்கையில் பார்னி கூறிய பின்வரும் வாசகங்களை ஸைமன் பிரத்தியேகமாக அடிக்கோடிட்டுக் கொண்டார்:
“ஐயோ.. அந்தக் கண்கள்... எனது மூளைக்குள் இருந்து கொண்டு என்னைப் பார்க்கின்றன” (இது முதலாவது அறிதுயில் அமர்வின் போது பார்னி கூறியது)
“எனது கண்களை மூடிக் கொள்ளுமாறு கூறினார்கள். இரண்டு கண்கள் எனது கண்களுக்கு மிக அருகில் நெருங்கி வந்தபோது, அவை எனது கண்களை அழுத்துவது போல் உணர்ந்து கொண்டே இருந்தேன்” (இது இரண்டாவது அறிதுயில் அமர்வின் போது பார்னி கூறியது)
“எங்கு பார்த்தாலும் அந்த இரண்டு கண்கள் மட்டுமே எனக்குத் தெரிகின்றன... அந்தக் கண்களைத் தவிர வேறெதையும் என்னால் பார்க்க முடியவில்லை... அவை ஓர் உடலோடு இணைந்திருக்காமல் இருப்பதையிட்டு நான் பயப்படவில்லை. எனக்கு மிக அருகில் அவை இருக்கின்றன; என்னை மிகவும் நெருங்குகின்றன; எனது கண்களை அந்த இரண்டு கண்களும் அழுத்துகின்றன” (இது, இன்னோர் அமர்வின் போது பார்னி கூறியது)
தொடர்ந்தும் பார்னி அறிதுயிலில் பேசும் போது தானும் பெட்டியும் ஒரு வட்டத்தட்டு போன்ற ஊர்தியினுள் அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறினார். பிறகு, அங்கிருந்து இருவரும் தனித்தனியாகப் பிரித்து அழைத்துச் செல்லப் பட்டார்கள். மூன்று பேர் பார்னியை ஓர் அறைக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்த செவ்வக வடிவிலான ஒரு மேசை மேல் காலை நீட்டிப் படுக்கச் சொன்னார்கள். பெட்டியின் பரிசோதனைகளைப் போல் அதிக விளக்கங்களை இங்கு பார்னி கூறவில்லை. ஒருசில தகவல்களை மட்டும் சுருக்கமாகக் கூறினார். மேலும், பார்னி அதிக நேரம் கண்களை மூடிக் கொண்டிருந்ததால், அனேகமான காட்சிகளை அவரால் விரிவாக வர்ணிக்க முடியவில்லை.
சிறிய கோப்பை போன்ற ஒரு கருவியைக் கொண்டு வந்து, அதை பார்னியின் ஆணுறுப்பை மூடும் விதமாகக் கவிழ்த்து வைத்துப் பொருத்தினார்கள். பார்னிக்கு எந்தவிதமான பாலுணர்வு சார்ந்த உச்சகட்ட உணர்வும் ஏற்படவில்லை. ஆனால், பார்னியின் பிறப்புறுப்பிலிருந்து விந்து வெளியானதை மட்டும் அவரால் உணர முடிந்தது. வெளியான விந்தை அவர்கள் சேகரித்துக் கொண்டு சென்று விட்டார்கள். பிறகு சிலர் பார்னியின் மேல் தோலைச் சுரண்டியெடுத்தார்கள். பிறகு காதுகளையும் வாயையும் ஒப்பிட்டுப் பார்ப்பது போல் ஏதோ செய்தார்கள். பிறகு ஒரு மெல்லிய குழாய் போன்ற ஒரு கருவியை பார்னியின் பின்துவாரத்தினூடாகச் செலுத்தி விட்டு, அடுத்த கணமே அதை அகற்றி விட்டார்கள். பிறகு இன்னொருவர் பார்னியின் முள்ளந்தண்டையும், இடுப்பு எலும்புகளையும் ஒவ்வொன்றாக எண்ணுவது போல் தொட்டுக் கொண்டே சென்றதை பார்னியால் உணர முடிந்தது.
வேற்றுக்கிரகவாசிகள் தமக்குள் பேசிக் கொண்டபோது, ஏதோ முணுமுணுப்பது போன்ற ஒரு பாஷையில் பேசிக் கொண்டார்கள். பார்னியால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், பார்னி அவர்களிடம் ஆங்கிலத்தில் பேசிய போது, அதை அவர்கள் தெளிவாகப் புரிந்து கொண்டார்கள். பெட்டியைப் போல் நீண்ட சம்பாஷனைகள் என்றில்லாமல், பார்னியோடு பேசிய போது அவர்கள் சுருக்கமாக ஒருசில சந்தர்ப்பங்களே பேசினார்கள்.
ஆனால், அவர்கள் பார்னியோடு பேசியது ஆங்கிலம் போன்ற வாய்ச்சொல் மொழியின் வாயிலாக அல்ல. மாறாக, அது வாய்மொழி அல்லாத, ஒருவகையான “எண்ணப் பரிமாற்றம்” (Telepathy) போலவே இருந்தது என்று தான் பார்னி குறிப்பிட்டார். (அன்றைய காலத்தில் பார்னியைப் பொருத்தவரை “டெலிபதி” (Telepathy) என்று நாம் இன்று அழைக்கும் பதப் பிரயோகம் பார்னி அறியாத ஒன்று. எனவே, தனக்குத் தெரிந்த பதப்பிரயோகத்தின் மூலம் இதை பார்னி “எண்ணப் பரிமாற்றம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்).
பார்னி, மற்றும் பெட்டி ஆகிய தம்பதியர் இருவருமே குறிப்பிட்ட தகவல் என்னவென்றால், வேற்றுக்கிரகவாசிகள் தம்மோடு பேசிய போது அவர்களின் உதடுகள் அசையவில்லை என்பது தான். அவர்கள் கூற வரும் வார்த்தைகள் எப்படியோ தமது கிரகிப்புக்குள் வாய்ப்பேச்சு அல்லாத ஒரு வடிவில் வந்து சேர்ந்தது என்று தான் இருவருமே அறிதுயிலின் போது குறிப்பிட்டனர். வாய்ப்பேச்சு அல்லாமல் செய்திகள் தமது புலன்களுக்குள் வந்து சேர்ந்த போதும், அது தமக்குப் புரியும் விதமான ஆங்கில மொழியிலேயே வந்து சேர்ந்ததென்றும் குறிப்பிட்டனர்.
பார்னியின் பரிசோதனைகள் முடிந்த பிறகு, அவர் பறக்கும் தட்டிலிருந்து திரும்பவும் தனது காரின் அருகில் அழைத்து வரப்பட்டார். நடந்த சம்பவங்களை நினைத்துக் குழப்பத்தில் இருந்து கொண்டிருக்கும் பொழுதே பறக்கும் தட்டு மேலெழும்பிப் பறந்து செல்வதை பார்னி பார்த்துக் கொண்டிருந்தார்.
சற்று நேரத்தில் மீண்டும் ஒரு பெரிய வெளிச்சம் பாதையில் தோன்றுகிறது. அதைப் பார்த்ததும் பார்னி “ஐயையோ மறுபடியுமா?” என்று கூறுகிறார். அப்போது பக்கத்தில் நின்று கொண்டிருந்த மனைவி பெட்டி “அது சந்திரனாக இருக்கலாம்” என்று கூறுவது பார்னிக்குக் கேட்கிறது. (சந்திரன் அன்றைய தினம் நேரத்தோடு அஸ்தமித்து விட்டதை இருவரும் அப்போது அறிந்திருக்கவில்லை). அதைத் தொடர்ந்து பார்னி தனது காரை ஓட்டிக் கொண்டிருக்கும் போது ஏற்கனவே பறக்கும் தட்டின் மூலம் தனது காரின் ட்ரங்க் பகுதியில் ஏற்படுத்தப்பட்ட தாள கதியில் அமைந்த அதிர்வு போன்ற சத்தத்தைத் தன்னாலும் ஏற்படுத்த முடியுமா என்று முயற்சித்துப் பார்க்கிரார். காரை வேண்டுமென்றே பாதையில் இடப்புறம், வலப்புறம் என்று திருப்பித் திருப்பி ஓட்டிப் பார்க்கிறார்; காரை ஓட்டுவதும், நிறுத்துவதுமாக மாற்றி மாற்றி செய்து பார்க்கிறார். எதுவுமே பலனளிக்கவில்லை. அவர்கள் ஏற்படுத்தியது போன்ற அந்த அதிர்வுச் சத்தத்தை பார்னியால் ஏற்படுத்த முடியவில்லை.
(பார்னியின் அறிதுயில் அமர்வுகளின் சாராம்சம் இத்தோடு முடிகிறது)
பெட்டியின் அமர்வுகள்: ~~~~~~~~~~~~~~~~~~~~~ உளவியலாளர் ஸைமன் பெட்டியை அறிதுயிலுக்கு உட்படுத்தியபோது, அவரது அமர்வுகளில் சொல்லப்பட்ட தகவல்களில் அனேகமானவை ஏற்கனவே பெட்டி தொடராகக் கண்ட ஐந்து கனவுகளையும் ஒத்ததாகவே இருந்தன. ஆனால், ஒருசில கட்டங்களில் மட்டும் சில வேறுபாடுகள் காணப்பட்டன. பெட்டி கடத்தப்பட்ட விதம், மற்றும் விடுவிக்கப்பட்ட விதம் ஆகியன, கனவில் தோன்றியது போலில்லாமல் சற்று மாற்றமான வடிவத்திலேயே அமைந்திருந்தன என்பது அறிதுயிலின் போது தெரிய வந்தது.
மேலும், குறிப்பிட்ட பறக்கும்தட்டின் தொழினுட்பங்கள் குறித்த சில வர்ணனைகள் கனவில் கண்டது போலில்லாமல், அறிதுயிலின் போது சற்று வித்தியாசமாகவே வர்ணிக்கப் பட்டன. மேலும், தன்னை அழைத்துச் சென்ற குள்ளமான வேற்றுக்கிரகவாசிகளின் உடலமைப்புகள் கூட கனவுகளில் தோன்றியதற்கு மாற்றமாகவே அறிதுயிலின் போது வர்ணிக்கப் பட்டன. மேலும், கடத்தல் சம்பவ நிகழ்வுகளின் ஒழுங்கு கூட கனவில் கண்ட காட்சிகளின் ஒழுங்கிலிருந்து சற்று மாறுபட்டிருந்தன.
ஆனால், கனவில் கண்ட காட்சிகளில் விடுபட்டிருந்த சில காட்சிகளையும், மற்றும் கனவில் காணப்பட்ட பல தகவல் பற்றாக்குறைகளையும் நிவர்த்தி செய்யும் விதமாக, சம்பவத்தை அதன் முழுமையான வடிவில் அறிதுயிலின் போது வழங்கப்பட்ட பெட்டியின் வாக்குமூலங்கள் எந்தக் குழப்பமும் இல்லாமல் விவரித்தன.
மேலும் ஸைமன் அவதானித்த இன்னொரு சுவாரசியமான விடயம் என்னவென்றால், பார்னி, மற்றும் பெட்டி ஆகியோர் தனித்தனியாக வெவ்வேறு அறைகளில் அறிதுயிலுக்கு உட்படுத்தப்பட்ட போதும், அவர்கள் இருவரும் தனித்தனியாக வழங்கிய அறிதுயில் வாக்குமூலங்கள் ஆச்சரியப்படத்தக்க அளவுக்கு ஒன்றோடொன்று பொருந்திப் போகக் கூடியவையாக இருந்தன.
அதாவது, பொய்யாகத் திட்டமிட்டு இட்டுக்கட்டப்பட்ட சம்பவமாகவோ, அல்லது கற்பனையாகப் புனைந்து கூறப்பட்ட கதையாகவோ இந்தப் பறக்கும்தட்டுச் சம்பவம் இருந்திருந்தால், இந்த இடத்தில் நிச்சயமாக அறிதுயிலின் போது இருவரும் சிக்கியிருப்பார்கள்; இரண்டு பேரின் வாக்குமூலங்களூக்கும் இடையில் பல முரண்பாடுகள் தோன்றியிருந்திருக்கும். ஆனால், ஆச்சரியப்படத்தக்க விதத்தில் எந்தவிதமான குறிப்பிடத்தக்க முரண்பாடுகளும் இருவர் வாக்குமூலத்துக்கும் இடையில் இருக்கவில்லை. பார்னியின் அறிதுயில் தகவல்கள் சற்று சுருக்கமாக இருந்த அதே வேளை, பெட்டியின் வாக்குமூலங்கள் அதே தகவல்களை விரிவான வடிவத்தில் விபரிப்பது போலிருந்தன.
பெட்டியின் அமர்வுகளின் போது, தான் கடத்தப் பட்டிருந்த நேரம் முழுவதும், பிரத்தியேகமாக அவர்கள் தன் உடல் மீது பல பரிசோதனைகளை மேற்கொண்ட போதெல்லாம் தனது உள்ளத்தில் தாங்க முடியாத ஓர் அழுத்தமும் கவலையும் இருந்து கொண்டே இருந்ததாக பெட்டி குறிப்பிட்டார். சம்பவக் காட்சிகளையும், தன் உடல் மீது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் பற்றியும் ஒவ்வொன்றாக பெட்டி வர்ணித்துக் கொண்டு வந்த போது, அறிதுயில் நிலையிலேயே மூடியிருக்கும் பெட்டியின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து வழிய ஆரம்பித்து விட்டது. ஆறாத ரணமாக இந்தச் சம்பவம் பெட்டியின் ஆழ்மனதைப் பிழிந்து கொண்டிருப்பதையும், இந்தச் சம்பவத்தால் பெட்டி உள்ளுக்குள் மிக நொந்து போயிருப்பதையும் ஸைமன் அவதானித்தார். எனவே, அதற்கு மேல் பெட்டியை அறிதுயிலில் நீடித்திருக்கச் செய்ய ஸைமன் விரும்பவில்லை. அத்தோடு பெட்டியின் அறிதுயில் அமர்வை நிறுத்திக் கொண்டார்.
பெட்டியின் அறிதுயில் அமர்வுகள் முடிந்த பிறகு ஸைமன், அவர் அறிதுயிலின் போது விபரித்துக் கூறிய நட்சத்திர வரைபடத்தை முடிந்தால் வரைய முயற்சிக்குமாறு கூறினார். அதாவது, தான் கடத்தப் பட்டு வேற்றுக்கிரகவாசிகளின் பறக்கும் தட்டினுள் இருந்த பொழுது, அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கையில், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று தான் வினவியதாக அறிதுயிலின் போது பெட்டி குறிப்பிட்டார். பெட்டி அவ்வாறு கேட்டதும், வேற்றுக்கிரகவாசிகள் முப்பரிமான வடிவிலான திரைப்படம் போன்ற ஒரு காட்சியினூடாக (Hologram) நட்சத்திரத் தொகுதியொன்றின் வரைபடத்தைக் காட்டினார்கள் என்று பெட்டி அறிதுயிலின் போது மேலதிகமாகக் குறிப்பிட்டிருந்தார். அந்த வரைபடத்தை இப்போது சுய நினைவோடு வரைய முயற்சிப்பதன் மூலம் இழந்த ஞாபகங்களை மீட்டுப் பெறுவதற்கு அதுவும் ஒரு பயிற்சியாக அமையும் என்று ஸைமன் குறிப்பிட்டார்.
ஆரம்பத்தில் பெட்டியால் அறிதுயில் அல்லாத சுயநினைவில் அதை மீட்டிப் பார்க்க முடியவில்லை. பல முயற்சிகளின் பின்னர் ஒருவாறு அந்த நட்சத்திர வரைபடத்தை ஒரு காகிதத்தில் வரைந்து காட்டினார். இருந்தாலும், காகிதத்தில் வரைந்த நட்சத்திர வரைபடத்தை விட, பறக்கும் தட்டில் அவர்கள் காட்டிய முப்பரிமான வரைபடத்தில் அதிக எண்ணிக்கையிலான நட்சத்திரங்கள் இருந்ததாகவும். என்ன தான் முயன்றாலும் அது எல்லாம் தனது ஞாபகத்துக்கு வரவில்லையென்றும், பார்த்த உடன் ஞாபகத்தில் பதிந்த முக்கியமான ஒருசில நட்சத்திரங்களை மட்டுமே தன்னால் வரைய முடிந்ததென்றும் பெட்டி குறிப்பிட்டார்.
பெட்டி வரைந்த நட்சத்திர வரைபடத்தில் குறிப்பாகப் பன்னிரண்டு நட்சத்திரங்கள் வரையப் பட்டிருந்தன. அவற்றுள் சிலவற்றைக் கணமான நேர்கோடுகளாகும், இன்னும் சிலவற்றைப் புள்ளிக் கோடுகளாலும் பெட்டி இணைத்துக் காட்டி வரைந்திருந்தார். காரணம் கேட்கப்பட்ட போது, கணமான கோடுகள் மூலம் குறிப்பிடப் படுவது இணைக்கப்பட்டிருக்கும் நட்சத்திரத் தொகுதிகளுக்கு இடையில் இருக்கும் வியாபாரப் பாதைகள் என்றும், புள்ளிக் கோடுகள் மூலம் குறிப்பிடப் பட்டிருப்பது, அதிகம் பயணிக்காத பாதைகள் என்றுமே பெட்டி விளக்கம் கூறினார்.
ஸைமனின் முடிவுகள்: ~~~~~~~~~~~~~~~~~~~~~ ஹில் தம்பதிகள் இருவரது அறிதுயில் அமர்வுகளையும் ஆய்வு செய்து முடித்த பின் உளவியலாளர் ஸைமனால் கூட சரியான ஒரு தீர்மாணத்தை எடுக்க முடியவில்லை. அவரது நிலைமை இன்னும் குழப்பமாக ஆகி விட்டது. இதற்குக் காரணங்களும் இல்லாமலில்லை.
பறக்கும் தட்டுகள் போன்ற அமானுஷ்யங்கள் எதுவும் சுத்தமாக இல்லை எனும் நிலைபாட்டிலேயே ஆயுள் முழுவதும் இருந்து பழக்கப் பட்டவர் ஸைமன். அவரது பார்வையில் யார் என்ன அமானுஷ்யமான சம்பவம் குறித்துக் கூறினாலும், முதல் பார்வையிலேயே அவரை ஒரு மனநோயாளி என்றே பார்த்துப் பழகி விட்டவர்.
இதுவரை இவ்வாறு பழக்கப்பட்ட ஸைமன் தனது வாழ்வில் முதல் தடவையாக அமானுஷ்யங்கள் குறித்த ஓர் உண்மைச் சம்பவத்தை எதிர்கொண்ட போது அவரால் சரியான தீர்மாணம் ஒன்றை எடுக்க முடியவில்லை. எடுத்த எடிப்பிலேயே சம்பவத்தை, ஒரு கற்பனை சார்ந்த மனநோய் என்று கூறி அவரால் மறுக்கவும் முடியவில்லை; ஏனனில், அவரது ஆய்வுகள் பிரகாரம், இந்தச் சம்பவத்தைப் பொய்யென்று கூறி மறுப்பதற்கும் எந்த முகாந்திரமும் இல்லாத அளவுக்கு அதன் யதார்த்தங்கள் இருந்தன.
இன்னொரு புறம், தனது அசையாத மருத்துவ நம்பிக்கையை இதற்காக விட்டுக் கொடுத்து, சம்பவத்தை நூறு வீதம் உண்மையென்று அவரால் ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. சுருக்கமாகக் கூறினால், சம்பவத்தை மறுக்கவும் வேண்டும்; ஆனால் மறுக்கவும் முடியவில்லை. இது தான் ஸைமனின் நிலையாக இருந்தது. என்ன செய்வது என்று ஸைமன் யோசிக்க ஆரம்பித்து விட்டார்.
இறுதியில், இரண்டுக்கும் ஒத்துப் போகக் கூடிய விதத்தில் ஒரு முடிவை அறிவித்தார். அதாவது “ஒரு பாதி உண்மையாக இருக்கும் அதேவேளை, இன்னொரு பாதி உண்மையில்லாமலும் இருக்கலாம்” என்பது போன்ற ஒரு குழப்பமான முடிவை அறிவித்தார். அவரது முடிவின் சாராம்சம் பின்வருமாறு அமைந்திருந்தது:
அறிதுயில் நிலையில் பறக்கும் தட்டைப் பற்றி விபரித்த பார்னியின் விவரணங்கள் அனேகமாக, ஏற்கனவே பெட்டி கண்ட கனவை பார்னியிடம் விபரித்த போது, அந்த விபரணங்களின் அடிப்படையில் பார்னியின் உள்ளத்தில் முளைத்த கற்பனையின் வெளிப்பாடுகளாக இருக்கலாம் என்று ஸைமன் ஒருபுறம் குறிப்பட்டாலும், இன்னொரு புறம் அதற்கு மாற்றமாக, “இருந்தாலும் எனது அறிதுயில் உத்திகளால் இது குறித்த முழு உண்மைகளையும் துல்லியமாகக் கண்டறிந்து கொள்ள முடியவில்லை” என்றும் அத்தோடு சேர்த்தே குறிப்பிட்டார்.
மேலும், ஸைமனின் முடிவுரையில், இவர்கள் இருவரும் வழங்கிய வாக்குமூலங்களில் எந்தவிதமான கோளாறுகளையும் தன்னால் காண முடியவில்லையென்றும், இந்த வாக்குமூலத்தின் நம்பகத்தன்மையில் சந்தேகம் கொள்ள எதுவுமே இல்லையென்றும் கூட ஸைமன் குறிப்பிட்டார்.
பார்னியின் வாக்குமூலம் பற்றி ஸைமன் குறிப்பிடுகையில், பார்னியின் விளக்கங்கள், பெட்டி கண்ட கனவின் அடிப்படையிலான கற்பனையாக இருக்கலாம் என்று கூறியதை பார்னி நிராகரித்தார்; தர்க்கரீதியான எதிர்வாதம் வைத்தார். அதாவது, ஸைமன் கூறியது போல் ஒரு பேச்சுக்கு பார்னியின் அறிதுயில் வாக்குமூலமெல்லாம், பெட்டி கண்ட கனவுகளின் கற்பனை வெளிப்பாடுகளாக இருந்திருந்தால், பெட்டியின் கனவுகளுக்கே சம்பந்தமில்லாத தன்னைக் குறித்த தனிப்பட்ட பல தகவல்களை பார்னி வாக்குமூலம் கொடுத்தது எப்படி சாத்தியம்? என்று கேட்டார்.
அதாவது, பெட்டியின் கனவுகளில் பெட்டி கண்டதெல்லாம், தன் மீது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் குறித்து மட்டுமே; பார்னியின் பரிசோதனைகள் குறித்த தகவல்கள் எதுவும் பெட்டியின் கனவில் தோன்றவேயில்லை. அவ்வாறிருக்கும் போது, தனது அறிதுயிலில் தனக்கு நடத்தப்பட்ட பரிசோதனைகள், பெட்டியின் பரிசோதனைகளைப் போலில்லாமல் வித்தியாசமான அமைப்பில் இருந்ததை பார்னி சுட்டிக் காட்டி, “பெட்டியின் கனவுகளை வைத்துக் கற்பனை செய்திருந்தால், இவை எப்படி சாத்தியம்?” என்று எதிர்க்கேள்வி எழுப்பினார். இதற்கு ஸைமன் பதில் சொல்லவில்லை.
ஸைமனுடனான சந்திப்பின் இறுதியில் இருதரப்பினருக்கும் இடையில் இவ்வாறு சில கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தாலும், இரு தரப்பினரும் ஒத்துக் கொண்ட விடயம் ஒன்றும் இருந்தது. அது தான், ஹில் தம்பதிகளது இழந்த ஞாபகங்களையும் மீட்டிக் கொள்ளும் முயற்சியில் ஸைமனின் அறிதுயில் உத்திகள் கனிசமான அளவுக்குக் பலனளித்தன என்பதை இருதரப்பினருமே ஒத்துக் கொண்டார்கள். இந்த அறிதுயில் சிகிச்சைக்குப் பிறகு ஹில் தம்பதியருக்கு இருந்த பல மன அழுத்தங்களும், குழப்பங்களும் கணிசமான அளவுக்கு நீங்கின.
கொஞ்ச காலத்துக்குப் பிறகு ஹில் தம்பதியரின் அறிதுயில் சிகிச்சை குறித்து உளவியலாளர் ஸைமன் “Psychiatric Opinion” எனும் உளவியல் பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதி வெளியிட்டிருந்தார். அதில் அவர் இந்த அறிதுயில் அமர்வுகள் குறித்த தனது முடிவுகளை விளக்கி எழுதியதோடு, கட்டுரையின் இறுதியில், இவர்களுக்கு ஏற்பட்ட உளவியல் பிரச்சினைக்கு “அரிய உளநிலைப் பிறழ்ச்சி” (Singular Psychological Aberration) என்று புதிதாகப் பெயரிட்டிருந்தார். மேலும், இந்த முடிவுகளுக்கு சற்று மாற்றமான இன்னொரு புதிய முடிவை ஸைமன் பிற்காலத்தில் வெளியிட்டதாகக் கூறும் ஓர் ஆவணம் அண்மையில் (2015ம் ஆண்டு) இணையத்தில் புதிதாக வெளியானது.
ஸைமனின் நிலைபாடுகள் இப்படி ஒருபுறம் தத்தளித்துக் கொண்டிருக்க, மறுபுறம் ஹில் தம்பதியரைப் பொருத்தவரை, தாம் கடத்தப்பட்டது நூற்றுக்கு நூறு வீதம் உண்மையென்றும், எந்த மனநோய்களின் விளைவாகவும் அவர்களுக்கு இந்தக் குழப்ப நிலை ஏற்படவில்லையென்பதையும் அறிதுயிலின் பிறகு அவர்கள் மேலும் உறுதிப் படுத்திக் கொண்டனர்.
பிரபலம்: ~~~~~~~~ அறிதுயில் அமர்வுகளின் பிறகு தமது குழப்பங்களுக்கான தீர்வுகள் கிடைத்து விட்ட நிம்மதியோடு ஹில் தம்பதியர் தமது வழமையான வாழ்க்கைக்குத் திரும்பலானார்கள். குடும்பத்தாருடனும், நண்பர்களுடனும் ஓய்வு நேரங்களில் அமர்ந்து அளவளாவிக் கொண்டிருக்கும் போது மட்டும் கடந்தகாலக் கதைகளைப் பரிமாறிக் கொள்வது போல் ஹில் தம்பதியர், தமது கடத்தல் அனுபவங்களை நட்போடு பகிர்ந்து கொள்பவர்களாக மட்டுமே இருந்து வந்தார்கள். இது குறித்து எந்தவிதமான மேலதிகத் தேடல்களையும் மேற்கொள்ள அவர்கள் விரும்பவில்லை. மேலும், இது குறித்து மேலதிக ஆரவாரங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி, அதன் மூலம் தமது குடும்பத்தில் இப்போது ஏற்பட்டிருக்கும் நிம்மதியைக் கெடுத்துக் கொள்ளவும் அவர்கள் விரும்பவில்லை. எல்லோரையும் போல் வாழ்வதற்கே அவர்கள் மீண்டும் முயற்சித்தனர்.
ஆனால், அமைதியாக வாழ்வதற்கு அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளிலெல்லாம் ஒரேயடியாக மண்ணள்ளிப் போட்டது போல் 1965, ஒக்டோபர் மாதம் 25ம் திகதி ஒரு பத்திரிகைப் பிரசுரம் அவர்கள் வாழ்வையே தலைகீழாக மாற்றி விட்டது.
அன்றைய தினம், Boston Traveler எனும் பத்திரிகையின் முதல் பக்கச் செய்தியாக “UFO Chiller: Did THEY Seize Couple?” எனும் தலைப்பில் ஹில் தம்பதியரின் கடத்தல் சம்பவம் பற்றிய செய்தி கொட்டை எழுத்துக்களில் பிரசுரமாகியது. காட்டுத்தீ போல் செய்தி நாலாபக்கமும் பரவத் தொடங்கி விட்டது.
கடத்தல் சம்பவம் நடந்த புதிதில் ஹில் தம்பதியர் ஒருமுறை ஊர் தேவாலயத்தில் தமக்கு அறிமுகமான ஒருசிலரோடு சம்பவம் பற்றிப் பகிர்ந்து கொண்ட தகவல்களின் ஆடியோ பதிவு செய்யப்பட்ட பிரதியொன்று எப்படியோ பத்திரிகை ஆசிரியர் “ஜோன் லட்ரெல்” (John H. Luttrell) என்பவர் கைக்குக் கிடைத்து விட்டிருந்தது. இதை வைத்து மேலதிக தேடல்களையும் மேற்கொண்ட ஆசிரியர் லட்ரெல், ஹில் தம்பதியரை உளவியலாளர் ஸைமன் அறிதுயிலுக்கு உட்படுத்திய செய்திகளையெல்லாம் மோப்பம் பிடித்து விட்டிருந்தார். மேலும், ஹில் தம்பதியரைப் பேட்டிகண்ட பல பறக்கும்தட்டு ஆய்வாளர்களின் அறிக்கைகல் மூலம் பெறப்பட்ட பல குறிப்புகளைக் கூட லட்ரெல் சேகரித்துக் கொண்டார். இதைவிட வேறென்ன வேண்டும் ஒரு பத்திரிகை ஆசிரியருக்கு? உடனே தனது பேனாவை முடுக்கி விட்டார். செய்தி பத்திரிகையில் வெளிவந்து விட்டது.
ஒக்டோபர் மாதம் 26ம் திகதி, இதே செய்தியை சர்வதேச செய்தி முகவர் நிறுவனமாகிய “United Press International (UPI)” தனது மீடியா வட்டாரத்தில் மீள்-பிரசுரம் செய்ததும், அத்தோடு செய்தி சர்வதேச மட்டத்தில் பிரசித்தி பெற ஆரம்பித்து விட்டது. அதுவரை யாரென்றே அறியப்படாமல் இருந்த ஹில் தம்பதியர் மீது உலகமே தனது கவனத்தைக் குவிக்க ஆரம்பித்து விட்டது. இதைத் தொடர்ந்து உலக அரங்கில் இந்தச் சம்பவத்தையொட்டிப் பல ஆய்வுகள், ஆக்கங்கள், கதைகள், திரைக்கதைகள் என்று வெளிவரத் தொடங்கின.
1966ம் ஆண்டு, “ஜோன் ஃபுல்லர்” (John G. Fuller) எனும் நூலாசிரியர், ஹில் தம்பதியரையும், மற்றும் உளவியலாளர் ஸைமனையும் தொடர்பு கொண்டு, இந்தச் சம்பவம் குறித்துத் தான் ஒரு விரிவான நூலை எழுத விரும்புவதாகவும், அதற்கு இருதரப்பாரின் சம்மதமும் தேவையென்றும் கேட்டுக் கொண்டார். இருதரப்பாரும் சம்மதித்ததோடு மட்டுமல்லாமல், அவருக்குத் தேவையான ஆவணங்கள், மற்றும் ஆதாரங்கள் போன்றவற்றையும் இரு தரப்பினருமே தம் சார்பாக ஃபுல்லருக்கு வழங்கினர்.
இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தான் மேற்கொண்ட ஆய்வின் வெளிப்பாடாக, “The Interrupted Journey” எனும் தலைப்பில் “ஜோன் ஃபுல்லர்” ஒரு நூலை எழுதி வெளியிட்டார். இந்த நூலில் பெட்டி தனது கைப்பட வரைந்த நட்சத்திரத் தொகுதியின் வரைபடத்தின் பிரதி கூட உள்ளடக்கப் பட்டது. புத்தகம் வெளியிடப்பட்ட உடனேயே அது உலகப் பிரசித்தி பெற ஆரம்பித்து விட்டது. திரும்பத் திரும்ப பல பதிப்புகள் அச்சிட்டு வெளியிடும் அளவுக்கு இந்த நூல் சர்வதேச வரவேற்பைப் பெற்றது.
1969ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25ம் திகதி, மூளையில் ஏற்பட்ட ஒரு கட்டியின் காரணமாக பார்னி, தனது 46வது வயதில் இறந்து விட்டார். பெட்டி ஹில் 85 வயது வரை உயிரோடிருந்தார். பிறகு 2004, ஒக்டோபர் மாதம் 17ம் திகதி புற்று நோயால் அவரும் இறந்தார்.
இது குறித்த மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ள விரும்புவோர் பின்வரும் இணைப்புகளிலிருந்து தமது தேடல்களை ஆரம்பிக்கலாமென்று கருதுகிறேன்:
Source (Grey Aliens / Barney Hills): https://en.wikipedia.org/wiki/Grey_alien https://en.wikipedia.org/wiki/Barney_and_Betty_Hill https://en.wikipedia.org/wiki/Donald_Keyhoe
நரை நிறத்தவர்கள் குறித்த முதலாவது உண்மைச் சம்பவம் இது. இன்னொரு சம்பவத்தை இன் ஷா அல்லாஹ் அடுத்த எபிசோடில் அலசலாம்.
இன் ஷா அல்லாஹ் வளரும்...
- அபூ மலிக்
|