பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் ==============================
தொடர் 4: வேற்றுக்கிரக வேஷம்
Episode 45 – நரை நிறத்தவர்கள் (தொடர்ச்சி 04)
Episode 46: “ஹொப்கின்ஸ்வில்” பூதம் (Hopkinsville goblin):
“ஹொப்கின்ஸ்வில்” பூதம் (Hopkinsville goblin): ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இது இன்னொரு வகையான வேற்றுக்கிரகவாசி இனம். சிறிய அளவிலான உடலமைப்பைக் கொண்டவர்கள் இவர்கள். ஓரளவு பச்சை நிறம் சார்ந்த, வெள்ளி நிறத்தில் மிளிரக் கூடிய உடலமைப்பைக் கொண்டவர்கள்.
இது மிகவும் பிரபலமான இனம் கிடையாது. அரிதாக ஓரிரு சந்தர்ப்பங்களில் மட்டுமே இவர்கள் பற்றிய குறிப்புக்களைக் காண முடிகிறது. அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒரு சம்பவத்தை மட்டும் இங்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்:
சம்பவம்: ~~~~~~~~ 1955, ஆகஸ்ட் 21 ஆம் திகதி, அமெரிக்காவின் ஒதுக்குப்புறமான ஓர் ஊராக இருக்கும், ஹொப்கின்ஸ்வில் போலீஸ் நிலையத்துக்கு ஓர் அவசர முறைப்பாடு வந்து சேர்ந்தது. ஐந்து வளர்ந்தவர்களும், மற்றும் ஏழு சிறுவர்களுமாக ஒரு குழுவினர் ஹொப்கின்ஸ்வில் போலீஸ் நிலையத்துக்கு அரக்கப்பரக்க ஓடி வந்து இந்த முறைப்பாட்டைச் செய்தனர். முறைப்பாடு இது தான்:
சிறிய உடலமைப்பைக் கொண்ட பல வேற்றுக்கிரகவாசிகள் பறக்கும் தட்டுக்களில் வந்ததாகவும், வந்த இவர்கள் தமது பண்ணையைத் தாக்க ஆரம்பித்ததாகவும், உடனே தம் வசமிருந்த துப்பாக்கிகள் சகிதம் இந்த வேற்றுக்கிரகவாசிகளோடு தான் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதாகவும் இந்தப் பன்னிரண்டு பேரும் போலீஸ் நிலையத்தில் வாக்குமூலம் கொடுத்தனர். மேலும், இந்தச் சண்டை கிட்டத்தட்ட நான்கு மணித்தியாலங்களாகத் தொடர்ந்து நடந்ததாகவும், தம்மால் இயன்ற அளவுக்கு அவர்களைத் தடுத்து நிறுத்த எல்லா விதங்களிலும் தாம் போராடியதாகவும் இவர்கள் குறிப்பிட்டனர்.
வந்தவர்களுள், எல்மர் சட்டன் (Elmer Sutton), மற்றும் பில்லி ரே டெய்லர் (Billy Ray Taylor) ஆகிய வளர்ந்த இருவர் வாக்குமூலம் கொடுக்கையில், குறைந்த பட்சம் அவர்கள் இருவரும் மட்டுமே கிட்டத்தட்ட பதினைந்து வேற்றுக்கிரகவாசிகளைச் சுட்டு வீழ்த்தியதாகக் குறிப்பிட்டனர். இது அல்லாமல் ஏனையோரும் தம்மால் இயன்ற அளவுக்குத் துப்பாக்கிச் சூடு நடத்தியதன் மூலம் பல வேற்றுக்கிரகவாசிகளை வீழ்த்தினர் என்றும் குறிப்பிட்டனர். ஆனால், ஆச்சரியம் என்னவென்றால், இவ்வாறு வீழ்ந்த அந்தக் குள்ள வேற்றுக்கிரகவாசிகள் ஒவ்வொருவரும், அடுத்த கணமே மீண்டும் நிலத்திலிருந்து முளைப்பது போல் எழுந்து, வாசல் மூலமும், ஜன்னல்கள் மூலமும் உள்ளே வருவதற்கு மீண்டும் மீண்டும் முயற்சித்துக் கொண்டே இருந்தார்கள் என்பது தான்.
இந்த முறைப்பாட்டின் விசித்திரத் தன்மை கருதி, காவல் துறை சார்பாக உடனே விசாரித்த போது, இவர்கள் குறிப்பிட்டது போல் ஊருக்குள் பல மணித்தியாலங்களாக ஒரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடந்தது வேறு பல சாட்சிகள் வாயிலாகவும் நிரூபணமானது. ஆனால், யார் யாருக்கிடையில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நிகழ்ந்தது என்பது குறித்து அனேகமானோர் அறியவில்லை. காரணம் இந்தச் சம்பவமே இரவில் நடந்தது தான்.
துப்பாக்கிச் சூடு நடந்தது உறுதிப்படுத்தப் பட்டதும், உடனே காவல் துறை சார்பாக நான்கு போலீஸ் அதிகாரிகளும், ஐந்து மானிலப் படையணி வீரர்களும், மூன்று டெப்பியுட்டி ஷெரிஃப்களும், மேலும் அண்மையிலிருக்கும் அமெரிக்க இராணுவ முகாமிலிருந்து வரவழைக்கப்பட்ட நான்கு இராணுவ பொலிஸ் அதிகாரிகளுமாக ஒரு குழு, சட்டன் பண்ணை என்று அழைக்கப்படும் சம்பவம் நடந்த தளத்தை நோக்கி விரைந்தது. காவல் துறை சென்று பார்த்த போது அங்கு எந்த வேற்றுக்கிரகவாசிகளையும் காண முடியவில்லை. ஆனால், தாறுமாறான துப்பாக்கிச் சூட்டுக்கான பல தடயங்களை பண்ணையின் எல்லா இடங்களிலும் அவர்களால் காண முடிந்தது.
சம்பவத்தின் போது இந்தப் பண்ணையில் வசித்தவர்களது பெயர்ப் பட்டியல்: Glennie Lankford எனும் பெண், அவரது இரண்டு பிள்ளைகள் Lonnie மற்றும் Charlton, Mary, மற்றும் இரண்டு மகன்கள், Elmer "Lucky" Sutton, இவரது மனைவி Vera, John Charley "J.C." Sutton, இவரது மனைவி Alene, Alene இன் சகோதரன் O.P. Baker, மற்றும் Billy Ray Taylor, மற்றும் அவரது மனைவி June.
இதில், Taylors தம்பதியரும், மற்றும் "Lucky", மற்றும் Vera Sutton ஆகியோர் ஊர் ஊராகக் களியாட்டம் நடத்தும் தொழில் செய்யக் கூடியவர்கள் என்றும், இவர்கள் அன்று குறிப்பிட்ட பண்ணை வீட்டில் விருந்தினராக வந்திருந்தவர்கள் என்பதும் கூட குறிப்பிடப் பட்டிருந்தது.
மறுநாள் காலை, பண்ணை வீட்டுக்கு இரண்டு போலீஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளுக்காகச் சென்றிருந்த போது, அங்கு அவர்கள் இருக்கவில்லை. அயலவர்களிடம் விசாரித்த போது அவர்கள், பண்ணையைக் காலி செய்து விட்டு அவர்கள் அதிகாலையிலேயே சென்று விட்டதாகக் குறிப்பிட்டார்கள். போகும் போது, “குறிப்பிட்ட வேற்றுக்கிரகவாசிகள் மறுபடியும் அதிகாலை 3.30 மணியளவில் மீண்டும் வந்ததார்கள்” என்றும், இனிமேலும் இங்கிருக்கப் பயமாக இருக்கிறதென்றும் அவர்கள் கூறி விட்டே சென்றதாகவும் அயலவர்கள் குறிப்பிட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து மேலதிகமாகத் தேட விரும்புவோர் பின்வரும் இணைப்பு வாயிலாகத் தமது தேடலை ஆரம்பிக்கலாம்:
https://en.wikipedia.org/wiki/Kelly–Hopkinsville_encounter
ஹொப்கின்ஸ்வில் பூதங்கள் பற்றி இதை விட விரிவாக சொல்வதற்குப் பெரிதாக ஒன்றுமில்லை. எனவே இவர்கள் குறித்து இத்தோடு நிறுத்திக் கொண்டு, இனி இன்னோர் இனத்தவர் பற்றி சற்று விரிவாக நோக்கலாம்.
வடநாட்டு வெள்ளையர்கள் (Nordic Aliens): ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இவர்கள் குறித்தும் சற்று விரிவாகவே நோக்கப்பட வேண்டியிருக்கிறது. ஏனெனில், பிரபலமான வேற்றுக்கிரகவாசி இனங்களுள் இவர்களும் குறிப்பிடத் தக்கவர்கள்.
Nordic எனும் ஆங்கிலப் பதத்துக்குப் பொதுவாக வழங்கப்படும் அர்த்தம், ஸ்காண்டினேவியா (ஸ்வீடன், நோர்வே, டென்மார்க், ஃபின்லாந்து) போன்ற வட துருவத்தை அண்டிய பிரதேசங்களைச் சார்ந்த வெள்ளை இன மனிதர்கள் என்பது தான். பொதுவாகப் பணி படர்ந்த, குளிர் பிரதேசங்களான வட ஐரோப்பா, மற்றும் வட ரஷ்யா போன்ற பிரதேசங்களில் வாழும் வெள்ளையர்களே Nordic என்று அழைக்கப் படுகிறார்கள். இங்கு வாழும் வெள்ளையர்களுக்கென்று தனித்துவமான சில அங்க அடையாளங்கள் உண்டு. மிக உயரமான (ஆறடிக்கும் மேற்பட்ட) உடலமைப்பு, தூய வெள்ளை நிறத்துக்கு நெருக்கமான பொன்நிற முடி (Blond Hair), நீல நிறக் கண்கள், மிகவும் வெளிறிய சருமம் போன்ற அங்க அடையாளங்களைக் கொண்டவர்களே இந்த Nordic வெள்ளையர்கள்.
இந்த வேற்றுக்கிரகவாசிகள் Nordic Aliens என்று அழைக்கப் படுவதற்கான காரணம், இந்த வேற்றுக்கிரகவாசிகள் உருவத்தில் மனிதர்களை போலவே இருப்பார்கள் என்பது தான். குறிப்பாக இவர்களுள் அனேகமானோர், வடநாட்டு வெள்ளையர்களைப் போன்ற (வெண்பொன் நிற முடி, வெளிறிய சருமம், மிகவும் உயரமான நிமிர்ந்த உடல், அனேகமாக நீல நிறக் கண்கள்...) தோற்றத்திலேயே இருப்பார்கள்.
இவர்களுள் அனேகமானோர் வடநாட்டு வெள்ளையர்களை ஒத்த தோற்றத்தில் இருந்தாலும், அரிதாக ஒருசிலர் வெள்ளையர் அல்லாத, ஆசிய நாட்டு (குறிப்பாக சீனா சார்ந்த) மனிதர்களது சாயலிலும் தோன்றியிருப்பதற்கான சான்றுகளும் உண்டு. நரை நிறத்தவர்கள் போலவே, இவர்கள் குறித்தும் ஏராளமான ஆதாரபூர்வமான சம்பவங்கள் நம்பகமான பல சான்றுகள் சகிதம் பதிவாகியுள்ளன.
இந்த வேற்றுக்கிரகவாசி இனத்தவர்கள் Nordic என்ற பெயரில் மட்டுமல்ல; வேறு பல பெயர்களிலும் அழைக்கப் படுவதுண்டு. உதாரணத்துக்கு வின்வெளிச் சகோதரர்கள் (Space Brothers), ப்ளீடியன் (Pleiadeans), வெள்ளிக் கிரகவாசிகள் (Venusians), உயர்ந்த வெள்ளையர்கள் (Tall whites) போன்ற பெயர்களில் பல்வேறு தரப்பினரால் அழைக்கப் படுவதெல்லாம் இந்த இனத்தவர்கள் தாம்.
இவர்களின் உடலமைப்பைப் பொருத்தவரை, கிட்டத்தட்ட 6 – 7 அடி உயரம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களில் ஆண்களுக்கு அனேகமாக பொன்நிறத்திலான, தோள் புஜத்தைத் தொடும் அளவுக்கு நீண்ட ஜடை முடி இருக்கும். பெண்களுக்கு இடுப்பளவு நீண்ட அழகிய வெள்ளை நிறம் சார்ந்த பொன்னிறக் கூந்தல் இருக்கும். சாதாரணமாக இவர்களது கண்கள் ஓரளவு ஒளிரக் கூடிய நீல நிறத்தில் இருக்கும். பார்ப்பவர் மயங்கிக் கவரப் படும் அளவுக்குக் கண்களில் ஒரு வசீகரம் குடிகொண்டிருக்கும். அவ்வப்போது கண்கள் வேறு நிறங்களுக்கு மாறுவதும் உண்டு. அதாவது ஒளிரும் நீல நிறத்திலிருந்து, கருநீலம், பச்சை, சிவப்பு போன்ற நிறங்களுக்கும் இந்தக் கண்கள் நிறம்மாறக் கூடியவையாக இருக்கும்.
இவர்களுள் அனேகமானோர் ஆண்களே வருகை தருவதுண்டு. ஒருசில சந்தர்ப்பங்களில் பெண்களும் வருகை தந்திருக்கிறார்கள். இவர்களது மேனியின் நிறம் வெள்ளையர்களின் நிறத்தை விடவும் சற்று அதிகம் வெளிறிய நிறத்தில் காணப்படும். இவர்களில் ஆண்கள், உயர்ந்த, மெலிந்த, உறுதிமிக்க, அஜானுபாகுவான, கம்பீரத் தோற்றத்தில் இருப்பார்கள். பெண்களும் அதே போல் மிகவும் உயரமானவர்களாகவும், மெல்லிய உடலமைப்பைக் கொண்டவர்களாகவும், அதே நேரம் உறுதி மிக்கவர்களாகவும் இருப்பார்கள். பொதுவாகவே இவர்களது தோற்றம் மனதைக் கொள்ளை கொள்ளும் அளவுக்கு அழகானதாக இருக்கும். மேலும், அனேகமான சந்தர்ப்பங்களில் உடலோடு ஒட்டினாற்போன்ற ஆடைகளையே இவர்கள் உடுத்தியிருப்பார்கள்.
மேலும், இவர்கள் மனிதர்களோடு சம்பாஷனைகளை மேற்கொள்ளும் போது, உதடுகளைத் திறந்து வாய்மொழியில் பேசுவதற்குப் பதிலக டெலிபதி போன்ற எண்ணப் பரிமாற்றங்கள் மூலமே கலந்துரையாடல்களை மேற்கொள்கிறார்கள் என்று தான் அனேகமானோர் வாக்குமூலங்களில் குறிப்பிடப் பட்டிருக்கிறது.
இதுவரை இவர்களைச் சந்தித்த மனிதர்களிடமெல்லாம் இவர்கள் தம்மைப் பற்றி அறிமுகப் படுத்திக் கொள்ளும் போது, அறிவிலும், பண்பாட்டிலும், நாகரீகத்திலும், நல்ல குணங்களிலும் சிறந்து விளங்கும் மேன்மக்கள் என்பது போலவே இவர்கள் அறிமுகமாகியிருக்கிறார்கள். இவர்களது நாகரீகம் மிக்க உடை நடை பாவனைகளின் விளைவாக, இவர்களைக் குறித்து அனேகமான ஆய்வாளர்கள் கூட நல்லெண்ணமே வைத்துள்ளார்கள். இதன் விளைவாக, மனிதர்கள் மத்தியில் இவர்கள் பின்வருமாறு தான் இதுவரை அறியப் பட்டிருக்கிறார்கள்:
இவர்கள் அறிவிலும், பண்பாட்டிலும் மனிதர்களை விடவும் விருத்தியடைந்த ஓர் இனத்தவர்கள். இவர்களிடம் சில மந்திர சக்திகள் கூட இருக்கின்றன. அதே நேரம் இவர்கள் கருணையுள்ளம் கொண்டவர்கள். இவர்கள், கதைகளிலும், காவியங்களிலும் வர்ணிக்கப்படும் தேவதைகள் போன்ற ஓர் இனத்தவர்கள். பல்லாயிரம் ஆண்டுகளாக மனித இனத்தவர்களின் வளர்ச்சி, நடவடிக்கைகள் மீது இவர்கள் மிகவும் அவதானம் செலுத்தி வருகிறார்கள். பூமியின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பது குறித்தும், உலக சமாதானம் குறித்தும் இவர்களுக்கு அதிக அக்கறை இருக்கிறது. மனித இனம் நாகரீகத்திலும், பண்பாட்டிலும் இன்னும் பல படித்தரங்கள் வளர வேண்டும்; சுப்பீட்சமாகவும் சமாதானமாகவும் மனித இனத்தவர்கள் பூமியில் வாழ வேண்டும் என்பதில் அதிக அக்கறை கொண்ட இனத்தவர்கள் இவர்கள்.
இவ்வாறான பல நல்ல நோக்கங்களின் அடிப்படையில் அவ்வப்போது சில மனிதர்களை இவர்கள் நேரில் வந்து சந்திப்பதும் உண்டு. சமயங்களில் இந்த நல்ல நோக்கங்களின் அடிப்படையில் சில மனிதர்களிடம் பௌதீக ரீதியிலான தொடர்புகளை இவர்கள் ஏற்படுத்திக் கொள்வதும் உண்டு. அன்பு, அகிம்சை, அமைதி போன்றவற்றின் மீதே எப்போதும் இவர்கள் ஈடுபாடு காட்டுகிறார்கள். சுருக்கமாகச் சொல்லப் போனால், இந்தப் பூமியின் மீதும், இதில் வாழும் மனித இனத்தவர்கள் மீதும் மனிதர்களுக்குக் கூட இல்லாத அளவு அக்கறையும், பாசமும், கரிசணையும் இந்த வேற்றுக்கிரகவாசி இனத்தவர்களுக்குத் தான் இருக்கிறது.
இது தான் இவர்கள் குறித்து பல ஆய்வாளர்கள் உட்பட இன்று அனேகமானோர் உள்ளங்களில் இருக்கும் நம்பிக்கையும், நிலைபாடும்.
ஆனால், இதுவெல்லாம் உண்மையா? அல்லாஹ் மீது சத்தியமாக இல்லை. இது அவ்வளவும் சம்பந்தப்பட்ட மனிதர்களிடம் இந்த வேற்றுக்கிரகவாசிகள் மிகவும் கச்சிதமாக நடத்தி விட்டுச் செல்லும் திட்டமிடப்பட்ட நாடகங்கள். உண்மை தலைகீழானது. ஏனைய வேற்றுக்கிரகவாசிகளைப் போலவே இவர்களும் முதல் தரப் பொய்யர்கள்; பித்தலாட்டக் காரர்கள்; ஏமாற்றுக் காரர்கள்; நடிகர்கள்.
மனிதர்கள் தம்மை நல்லவர்களென்றும், நல்ல நோக்கத்தில் மனிதர்களுக்கு உதவ முன்வந்திருக்கும் வேற்றுக்கிரகவாசிகள் என்றும் நம்ப வேண்டும் என்பதற்காகவே இவர்கள் இவ்வாறெல்லாம் வேஷமிட்டு நடிக்கிறார்கள். இந்த முகமூடிகளுக்கெல்லாம் பின்னால் ஒளிந்திருப்பது வேறு யாருமல்ல; வழமை போல் சில ஷைத்தானிய ஜின்கள் மட்டுமே.
இவர்களது நாடகங்களை ஒவ்வொன்றாகத் தோலுரித்துக் காட்டப் போனால் பலநூறு பக்கங்கள் எழுத வேண்டி ஏற்படும். அந்த அளவுக்கு இது குறித்து நேரவிரயம் செய்வது இந்த ஆய்வின் நோக்கமல்ல. அது நமது ஆய்வின் பயணத்தை வேறு திசைகளில் திருப்பி விட வாய்ப்பிருக்கிறது. வேறொரு சமயம் சந்தர்ப்பம் அமைந்தால் அவை குறித்து விரிவாக நோக்கலாம். ஆனால், இந்த ஆய்வில் ஒருசில உதாரணங்களை மட்டும் ரத்திணச் சுருக்கமாகச் சுட்டிக் காட்டுவதன் மூலம், இவர்கள் நல்லவர்களல்ல; நடிகர்கள் என்பதைப் புரிந்து கொண்டால் போதுமானது.
இந்த அடிப்படையில், ஒருசில ஆய்வாளர்களின் கருத்துக்கள் பிரகாரம் இவர்களை நேரில் சந்தித்தோர் இவர்கள் குறித்து வெளிப்படுத்திய ஒருசில கருத்துக்களை முதலில் இங்கு உதாரணமாக நோக்கலாம்:
உதாரணம் 1: C.D.B. Bryan என்பவரால் எழுதப்பட்ட “Close Encounters of the Fourth Kind: Alien Abduction, UFOs, and the Conference at M.I.T.” எனும் நூலில் (பக்கம் 30–31) பின்வருமாறு குறிப்பிடப் படுகிறது: அமெரிக்க சேர்ந்த சமூக சேவகர் John Carpenter என்பவர், Nordic வேற்றுக்கிரகவாசிகளால் கடத்தப்பட்ட பலரைப் பேட்டி கண்ட போது, அவர்கள் அனைவரும் இந்த வேற்றுக்கிரகவாசிகள் குறித்து வர்ணிக்கும் போது “பெற்றோர்கள் பிள்ளைகள் மீது பாசம் காட்டுவதைப் போல் மனித இனத்தவர் மீது பாசம் காட்டக் கூடிய, பொறுப்புணர்வு மிக்க, எப்போதும் இன்முகத்தோடும், என்றும் இளமையுடனும் இருக்கக் கூடிய, இந்தப் பிரபஞ்சத்திலிருக்கும் அனைத்தையும் பற்றிய ஞானம் மிக்க ஓர் இனத்தவர்” என்றே வர்ணிப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
உதாரணம் 2: "Mythmaking in Alien Abduction Narratives" எனும் நூலில் (பக்கம் 51) Stephanie Kelley-Romano கூறுகையில், Nordic இனத்தவர்கள், ஆன்மீக வளர்ச்சியில் அதிக நாட்டம் கொண்டவர்கள் என்றும், சந்திக்கும் மனிதர்கள் மீது அளவற்ற அன்பு செலுத்தும் கருணை மிக்க இனத்தவர்கள் என்றும், மனிதர்களது பாதுகாவலர்கள் என்றும் அனேகமான மனிதர்கள் நம்புவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
இதன் தொடர்ச்சியை இன் ஷா அல்லாஹ் அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.
இன் ஷா அல்லாஹ் வளரும்...
- அபூ மலிக்
Episode 47: (Nordic Aliens தொடர்ச்சி 01) |