பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் ==============================
தொடர் 4: வேற்றுக்கிரக வேஷம்
Episode 56: ஜின்களால் நோய்களை ஏற்படுத்தலாமா?
ஜின்களால் நோய்களை ஏற்படுத்தலாமா? ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மனித உடலினுள் மூன்று வகையான சுற்றோட்டங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.
1. குருதிச் சுற்றோட்டம் 2. நரம்பு மண்டத்தினூடு கடத்தப்படும் சமிக்கைச் சுற்றோட்டம் (Signals) 3. சக்தி சார் சுற்றோட்டம் (Energy Circulation).
இதில் முதல் இரண்டு சுற்றோட்டங்கள் பற்றி அனைவருக்கும் தெரியும். ஏனெனில், அவையிரண்டும் ஆங்கில மருத்துவத்தால் கூட முன்மொழியப் படுபவை. ஆனால், மூன்றாவது சக்திச் சுற்றோட்டம் என்பது ஆங்கில மருத்துவக் கோட்பாடுகளில் இல்லாத ஒன்று.
ஆனால், தொன்று தொட்டு வழக்கத்திலுள்ள ஏனைய மருத்துவக் கோட்பாடுகளிலெல்லாம் இந்த மூன்றாவது சுற்றோட்டம் பல்வேறு பெயர்களில் அழைக்கப் படுவதுண்டு. உதாரணத்துக்கு ஆயுர்வேத / சித்த மருத்துவக் கோட்பாடுகளில் “சூடு / குளிர்மை” என்றும், ஹோமியோபத்தி மருத்துவத்தில் “உயிர் வலு” (Vital Force) என்றும், பாரம்பரிய சீன மருத்துவம் சார்ந்த கோட்பாடுகளில் “நேர் / மறை சக்திகள்” (Ying / Yang) என்றும், அக்குபங்க்சரில் “மெரீடியன்” (வர்மப் புள்ளிகள்) என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கப் படுவதெல்லாம் இந்த மூன்றாவது சக்திசார் சுற்றோட்டத்தின் பிரதிபலிப்புகளைத் தான்.
ஒரு மனிதனது உடல் எந்த நோய் நொடிகளும் இல்லாமல் சீராக இயங்க வேண்டுமென்றால், மேற்குறிப்பிடப்பட்ட மூன்று சுற்றோட்டங்களும் தடையின்றியும், குறைகளின்றியும், தகுந்த சமநிலைகளோடும் சீராக இருக்க வேண்டும். இந்த மூன்று சுற்றோட்டங்களில் ஏதாவதொரு சுற்றோட்டத்தில் சிறியதொரு குழப்பம் ஏற்பட்டாலும், அடுத்த கணமே அந்த மனிதனது உடல் நோய்வாய்ப் பட்டு விடும்.
நோய்வாய்ப்பட்ட மனிதன், அந்த நோயிலிருந்து நிவாரணம் பெற வேண்டுமென்றால், குழம்பிய சமநிலையைச் சீர்செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு குழம்பிய சமநிலையை / குழம்பிய சுற்றோட்டங்களைச் சீர் செய்யும் செயன்முறையையே நாம் எளிய நடையில் மருத்துவம் என்கிறோம். சுருக்கமாகக் கூறினால் மருத்துவம் என்பதன் அடிப்படை இது தான்.
அடுத்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய இன்னோர் அடிப்படை உண்மை என்னவென்றால், இந்த மூன்று சுற்றோட்டங்களுக்கும் இடையில் ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடர்புகள் இருக்கின்றன என்பது தான். ஒரு சுற்றோட்டத்தின் சமநிலை என்பது அனேகமான சந்தர்ப்பங்களில் மற்றச் சுற்றோட்டத்தின் தன்மையிலும் தங்கியிருக்கும். குறிப்பாக இந்த மூன்று சுற்றோட்டங்களையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைக்கும் விதமாக நமது உடல் முழுவதும் ஓர் ஊடகத்தைப் போல் ஓடிக் கொண்டிருக்கும் பிரதான பதார்த்தமே இரத்தம் என்பது.
அதாவது, ஒரு மனிதனது ஆரோக்கியம் தங்கியிருக்கக் கூடிய இந்த மூன்று சுற்றோட்டங்களுக்கும் இரத்தத்துக்கும் இடையில் நெருக்கமான நேரடி சம்பந்தங்கள் உண்டு. சுற்றோட்டங்களின் சமநிலை குழம்புவதால் மனித உடலினுள் ஏதும் பிரச்சினை / நோய் ஏற்பட்டால், அதை உடனே பிரதிபலிக்கும் கண்ணாடியைப் போல் தொழிற்படுவதன் மூலம், அனேகமான சந்தர்ப்பங்களில் இரத்தமே அந்த நோயைக் காட்டிக் கொடுப்பதும் உண்டு. இதனால் தான் அனேகமான சந்தர்ப்பங்களில் ஒரு மனிதனின் நோயை அடையாளம் கண்டுகொள்ள முயற்சிக்கும் வைத்தியர்கள், அவரது இரத்தத்தை முதலில் பரிசோதிக்கிறார்கள்.
சுருக்கமாக நமது எளிய நடையில் இதை கூறுவதென்றால், ஒரு மனிதனது இரத்தவோட்டமும், அதிலிருக்கும் பதார்த்தங்களும், அதனூடு கடத்தப்படும் கண்ணுக்குத் தெரியாத சக்தி சார்ந்த அம்சங்களும் சீராக இருக்கின்றன என்றால், அவரது உடல் ஆரோக்கியமும் சீராக இருக்கிறது என்றே பொருள்.
அதே போல், யாருக்காவது ஒரு மனிதனது உடலில் நோயை ஏற்படுத்த வேண்டுமென்றால், அவனது இரத்தத்தில் எதையாவது கலப்படம் செய்வதன் மூலமோ, அல்லது அவனது இரத்தவோட்டத்தைக் குழப்புவதன் மூலமோ, அல்லது அதனூடு பயணிக்கும் சக்தி சார்ந்த அம்சங்களைச் சீர்கெடுப்பதன் மூலமோ அந்த இரத்தத்தின் தன்மைகளைச் சற்று மாற்றி விட்டாலே போதும்; அடுத்த கணமே அவனது உடலில் நோய் ஏற்பட்டு விடும்.
இதை இன்னொரு விதத்தில் கூறுவதென்றால், ஒரு மனிதனது இரத்தவோட்டத்தின் மீது யாருக்கு ஆதிக்கம் இருக்கிறதோ, அவ்வாறான ஒருவருக்கு அந்த மனிதனது உடலினுள் நோய்களை ஏற்படுத்துவது ஒன்றும் கடினமான காரியமல்ல. இந்த அடிப்படை உண்மையை மனதில் ஆழமாகப் பதிய வைத்துக் கொண்டு பின்வரும் ஆதாரத்தைக் கூர்ந்து கவனியுங்கள்:
ஆதாரம் 1: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அனஸ் இப்னு மாலிக் (ரழி) அறிவித்ததாவது: மனிதனுக்குள் இரத்தம் ஓடுவதைப் போலவே ஷைத்தானும் ஓடிக் கொண்டிருக்கிறான். ஸுனன் அபூதாவூத்: பாடம் 42, ஹதீஸ் 124 தரம்: ஸஹீஹ் (அல்பானி)
இப்போது இந்த ஹதீஸின் வெளிச்சத்தில் மீண்டும் ஒரு முறை மேலே கூறப்பட்ட விளக்கத்தைச் சிந்தித்தால் உண்மை பட்டென்று புரிந்து விடும். இருந்தாலும் சற்று விளக்கமாகக் கூறுவதே சிறந்ததென்று எண்ணுகிறேன்.
ஒரு மனிதனது உடலுக்குள் எங்கெல்லாம் இரத்தம் பயணிக்கிறதோ, அங்கெல்லாம் ஷைத்தானிய ஜின்களுக்கும் ஆதிக்கம் இருக்கிறது என்பதை இந்த ஹதீஸ் பட்டவர்த்தனமாகக் கூறுகிறது. ஆனால், எந்தெந்த மனிதர்களின் உடலினுள் ஷைத்தானின் இந்த ஆதிக்க எந்த அளவுக்கு செல்லுபடியாகும் என்பதை அந்தந்த மனிதனின் ஈமானின் தரத்துக்கேற்ப அல்லாஹ்வே தீர்மாணிக்கிறான் என்பதை நாம் ஏலவே வேறொரு தொடரில் பார்த்த் விட்டோம். அவற்றை இங்கு மீட்டுவது நேர விரயம். எனவே, நமது தலைப்புக்கு சம்பந்தப்பட்ட அம்சத்தை மட்டும் பார்க்கலாம்.
மனித உடலினுள் நுழைந்து கொண்டு, இரத்தத்தோடு இரத்தமாக ஓடிக் கொண்டிருக்கும் கரீன் எனும் இந்த ஷைத்தான் பிரதானமாக மனித உணர்வுகளை ஆட்டிப் படைப்பதே நரம்பு மண்டலங்களினூடு கடத்தப்படும் உணர்வு சார் சமிக்கைகள், மற்றும் சக்தி சார் சுற்றோட்டம் ஆகியவற்றின் ஊடாகத் தான். தேவைக்கேற்ப அவ்வப்போது போது மனித உள்ளங்களில் ஆசை, கோபம், வெறுப்பு, சொர்வு போன்ற ஒவ்வோர் உணர்வையும் தட்டியெழுப்புவதில் கரீன் எனும் இந்த ஷைத்தானின் பங்களிப்பு அளப்பரியது.
உணர்வுகளைத் தூண்டுதல் என்பது, நமது உடலினுள் இருக்கும் சுற்றோட்டங்களில் தேவைக்கேற்ப ஹோர்மோன் மாற்றங்களை ஏற்படுத்துதல் என்றும் பொருள்படும். நமது உடலின் சுற்றோட்டங்களினுள் இவ்வளவு ஆற்றல்களும் அதிகாரங்களும் வழங்கப்பட்டிருக்கும் ஜின்களுக்கு, அந்தச் சுற்றோட்டத்தைக் கொஞ்சம் குழப்பியடிப்பதன் மூலம் நோய்களை ஏற்படுத்துவதென்பது ஒன்றும் சிரமமான காரியமல்ல என்பதை இதன் மூலம் சிந்திப்போர் இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.
நோய்களை ஏற்படுத்துதல் தொடர்பான அடிப்படையைத் தக்க ஆதரத்தோடு பார்த்து விட்டோம். இனி இன்னும் ஒருசில ஆதாரங்கள் மூலம் இது குறித்த மேலும் சில தகவல்களையும் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.
ஆதாரம் 2: அத்தா இப்னு ரபாஹ் அறிவித்ததாவது: ஒருமுறை இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் “சுவர்க்கத்துக்குரிய ஒரு பெண்ணை உங்களுக்கு நான் காண்பிக்கட்டுமா?” என்று கேட்டார்கள். “ஆம், நிச்சயமாக” என்று அத்தா கூறவே, இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் ஒரு கரிய நிறப் பெண்ணைச் சுட்டிக் காட்டி, “இந்தப் பெண் ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே, நான் வலிப்பு நோயால் அவதிப்படுகிறேன். மேலும், எனக்கு வலிப்பு ஏற்படும் போதெல்லாம் எனது அவ்ரத் வெளிப்பட்டு விடுகிறது. எனக்காக பிரார்த்தியுங்கள்’ எனக் கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘இதை உம்மால் சகித்துக் கொண்டு உறுதியாக இருக்க முடியுமென்றால், உமக்கு சுவர்க்கம் கிடைக்கும். ஆனால், (இதற்குப் பகரமாக, உமது நோய் தான் குணமாக வேண்டுமென்று) நீர் விரும்பினால், நான் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்; அல்லாஹ் நிவாரணத்தைத் தருவான்’ என்று கூறினார்கள். அதற்கு அந்தப் பெண், ‘நான் (சுவர்க்கத்துக்காக இந்த நோயை) சகித்துக் கொள்கிறேன். ஆனால், எனது அவ்ரத் வெளியாகாமல் இருக்க மட்டும் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று கேட்டுக் கொண்டார். அவ்வாறே நபி (ஸல்) அவர்களும் பிரார்த்தித்தார்கள்.”
இதே ஹதீஸின் இன்னோர் ஆதாரபூர்வமான அறிவிப்பும் இருப்பதாகக் குறிப்பிடும் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்: அந்த அறிவிப்பில், அந்தப் பெண் நபி (ஸல்) அவர்களிடம் முறையிடும் போது “எனக்கு இவ்வாறு (வலிப்பு) ஏற்படும் போது, தீயவன் (ஷைத்தான்) எனது அவ்ரத்தை மக்களுக்குப் பகிரங்கப் படுத்தி விடுவதையே நான் அஞ்சுகிறேன்” என்று கூறியதாகவும், அதற்கேற்ப நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்ததாகவும், இதன் பிறகு அந்தப் பெண்ணிடம் ஷைத்தான் வரப் போவது போன்ற உணர்வு ஏற்படும் போதெல்லாம் உடனே கஃபாவை நாடிச் சென்று அங்கு அடைக்கலம் பெற்று விடுவதாகவும் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. (ஃபத்ஹுல் பாரி: 10/115)
அதாவது இந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட வலிப்பு நோய் என்பது ஷைத்தானிய ஜின் மூலம் ஏற்பட்டதாகவே புரியப் பட்டுள்ளது என்பது தான் இங்கு சுட்டிக்காட்டப் பட்டிருக்கும் கருத்து.
ஆதாரம் 3: ஆயிஷா (ரழி) அறிவிப்பதாவது: அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களின் மனைவியாகிய உம்மு ஹபீபா பிந்த் ஜஹ்ஷ் (ரழி) அவர்கள் “இஸ்திஹாதா” (மாதவிடாய் அல்லாத தொடர்ச்சியான உதிரப் போக்கு) எனும் நோயால் பாதிக்கப் பட்டிருந்தார்கள். அதிலிருந்து அவர் தூய்மையடையவே இல்லை. இவரது நோய் குறித்து நபி (ஸல்) அவர்களிடம் வினவப் பட்ட போது அன்னவர்கள், “அது மாதவிடாய் கிடையாது; கர்ப்பப் பையினுள் (ஷைத்தான்) உதைப்பதாலேயே அது ஏற்படுகிறது. எனவே, அவரது வழமையான மாதவிடாய் நாட்களைப் போல் இதைக் கணித்து, (அந்த நாட்களில் மட்டும்) அவர் தொழாமல் இருக்கட்டும். அதன் பிறகு (ஏனைய இரத்தப் போக்குடைய நாட்களில்), ஒவ்வொரு தொழுகைக்கும் அவர் குளித்துக் கொள்ளட்டும்.” என்று கூறினார்கள்.
இந்த அறிவிப்பிலிருக்கும் “கர்ப்பப்பையினுள் உதைத்தல்” எனும் வாசகம், இதே ஹதீஸின் மற்ற அறிவிப்புக்களில் “ஷைத்தான் உதைப்பதால்” என்று நேரடிப் பதமாகவே குறிப்பிடப் பட்டிருக்கிறது. அதாவது, ஷைத்தான் அவரது தொழுகையைப் பாழ்படுத்துவதற்காக மாதவிடாயைக் குழப்புவதையே இது குறிப்பிடுவதாகக் கூறப்படுகிறது. ஸுனன் நஸாயி: பாடம் 1, ஹதீஸ் 211 தரம்: ஸஹீஹ் (தாருஸ்ஸலாம்)
இந்த ஹதீஸிலிருந்து, ஷைத்தானிய ஜின்களின் தலையீடுகளால் கர்ப்பப்பை சார்ந்த நோய்கள் ஏற்படுவதாக நபி (ஸல்) அவர்களே நேரடியாக உறுதிப்படுத்தியிருப்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த ஹதீஸுக்கு மாற்று விளக்கம் கூறுவதன் மூலம், இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் ஷைத்தான் எனும் பதத்துக்கு வேறு அர்த்தம் கற்பிக்க யாரும் முனைந்தால், அவர்களுக்கு சாட்டையடியாகப் பின்வரும் ஹதீஸ் அமைந்திருப்பதைப் பார்க்கலாம்:
ஆதாரம் 4: அஸ்மா பிந்த் உனைஸ் (ரழி) அறிவித்ததாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான், “அல்லாஹ்வின் தூதரே, ஃபாத்திமா பிந்த் அபூ ஹுபைஷ் எனும் பெண்ணுக்குத் தொடர்ச்சியான (மாதவிடாய் அல்லாத) உதிரப் போக்கு இருந்து கொண்டேயிருந்தது. அவ்வாறிருந்த காலம் முழுவதும் அவர் தொழுகையை நிறைவேற்றவில்லை.” என்று கூறினேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் மிகத் தூயவன்! நிச்சயமாக இது (உதிரப் போக்கு) ஷைத்தான் புறத்தில் இருந்தே ஏற்படுகிறது. நீர் நிரம்பிய ஒரு குளிக்கும் பாத்திரத்தினுள் அவரை (ஃபாத்திமாவை) இறங்கி, அமரச் சொல்லுங்கள். (அவ்வாறு அமர்ந்திருக்கும் போது) நீரின் மேற்பரப்பு மஞ்சள் நிறமாக மாறினால்... ழுஹர், மற்றும் அஸர் தொழுகைகளுக்காக ஒரு குளியலும்; மஃரிப், மற்றும் இஷா தொழுகைகளுக்காக ஒரு குளியலும்; ஃபஜ்ர் தொழுகைக்காக ஒரு குளியலும் என்று தினமும் அவர் (மூன்று முறை) குளிக்க வேண்டும். இடைப்பட்ட நேரங்களில் அவர் வுழூ செய்து கொள்ளலாம்.” என்று கூறினார்கள்.
அபூதாவூத் கூறுகிறார்: தொடர்ச்சியாகக் குளிப்பது அவருக்கு (ஃபாத்திமாவுக்கு) சிரமமாக அமைந்த போது, நபி (ஸல்) அவர்கள், இரண்டிரண்டு தொழுகைகளைச் சேர்த்துத் தொழுமாறு அவருக்குப் பணித்ததாகவும் இப்னு அப்பாஸ் (ரழி) கூறியதாக முஜாஹித் அறிவித்தார். ஸுனன் அபூதாவூத்: பாடம் 1, ஹதீஸ் 296 தரம்: ஸஹீஹ் (அல்பானி)
இந்த ஹதீஸில் சந்தேகத்துக்கே இடமில்லாதவாறு நேரடி வாசகங்கள் மூலம் விளக்கம் சொல்லப் பட்டிருக்கிறது. மாதவிடாய் அல்லாத மேலதிகமான உதிரப் போக்குகள் சார்ந்த நோய்கள் ஏற்படுவதில் ஷைத்தானிய ஜின்களின் தலையீடுகள் இருக்கின்றன என்பது இங்கு உறுதியாகிறது. இதிலிருந்து, மனித உடல்களினுள் நோய்களை ஏற்படுத்தும் ஆற்றல் ஜின்களுக்கு உண்டு என்பது இங்கு மீண்டும் நிரூபணமாகிறது. இனி இன்னோர் ஆதாரத்தின் வாயிலாகவும் மேலும் சில தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
ஆதாரம் 5: அபூ மூஸா அல் அஷ்’அரி (ரழி), மற்றும் இப்னு உமர் (ரழி) ஆகியோர் வாயிலாக அறிவிக்கப்பட்ட செய்தி: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நிச்சயமாக எனது உம்மத் “தஅன்”, மற்றும் “தாஊன்” ஆகியவற்றின் மூலம் உயிரிழப்புக்களைச் சந்திக்கும்” என்று கூறினார்கள். அப்போது சிலர், “அல்லாஹ்வின் தூதரே, “தஅன்” (ஈட்டியால் குத்தப் படுதல்) என்றால் என்னவென்பதைப் புரிந்து கொண்டோம். ஆனால், “தாஊன்” (கொள்ளை நோய் - Plague) என்றால் என்ன?” என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஜின் இனத்தைச் சேர்ந்த உங்கள் எதிரிகளால் நீங்கள் குத்தப்படுவது தான் அது. யார் அதன் மூலம் மரணிக்கிறாரோ, அவர் உயிர்த்தியாகியாவார்” என்று பதிலளித்தார்கள். (முஸ்னத் அஹ்மத்: 19528)
குறிப்பு: இமாம் இப்னு ஹஜர், இமாம் ஸுயூத்தி, இமாம் திம்யாதி, இமாம் அல்பானி ஆகியோர் இந்த ஹதீஸ் பற்றிக் கூறுகையில், “இருந்தாலும் இது குறித்து அறிஞர்களுக்கிடையில் ‘இஃக்திலாஃப்’ (கருத்துவேறுபாடு / இஜ்மா இல்லாத நிலை) இருக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். பார்க்க: அத் தர்ஃகீப் வத் தர்ஹீப் (2/293), இர்வா அல் ஃஹலீல் (1637), மஜ்மா’அ அஸ்ஸவா’இத் (2/314)
மேலுள்ள இமாம்களின் கூற்றுக்களின் அடிப்படையில், இந்த அறிவிப்பு பற்றி இமாம்களுக்கிடையில் ஏற்கனவே கருத்துவேறுபாடுகள் நிலவுவதால், இந்த ஹதீஸைத் தனித்து முன்வைக்கப்படும் ஓர் ஆதாரமாக நாம் எடுத்துக் கொள்ள முடியாது.
அதே நேரம், இந்த ஹதீஸ் கூறும் இதே கருத்தை, வேறு வழிகளில் உறுதிப்படுத்தக் கூடிய ஆதாரபூர்வமான / விமர்சனங்களுக்கு உள்ளாகாத, ஸஹீஹான வேறு ஹதீஸ்கள் இருக்குமேயானால், அவ்வாறான ஸஹீஹான ஹதீஸ்களின் மேலதிக விளக்கமாக இந்த ஹதீஸை நாம் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
அவ்வாறு இந்தச் செய்தியை உறுதிப்படுத்தக் கூடிய ஆதாரபூர்வமான வேறு அறிவிப்புகள் ஏதும் இருக்கின்றனவா? ஆம், நிச்சயமாக உண்டு. பின்வரும் ஹதீஸ்களைச் சற்று உன்னிப்பாகக் கவனியுங்கள்:
ஆதாரம் 6: நபி (ஸல்) கூறியதாக அனஸ் இப்னு மாலிக் (ரழி) அறிவித்ததாவது: “கொள்ளை நோய் (Plague) என்பது, முஸ்லிம்கள் ஷஹீதாக்கப் படும் காரணிகளுள் ஒன்றாகும். (கொள்ளை நோயால் இறப்பவும் உயிர்த்தியாகியே)” (ஸஹீஹுல் புகாரி: பாடம் 56, ஹதீஸ் 46)
ஆதாரம் 7: நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரழி) அறிவித்ததாவது: “மஸீஹுத் தஜ்ஜாலும், கொள்ளை நோயும் மதீனாவினுள் நுழைய முடியாது” (ஸஹீஹுல் புகாரி: பாடம் 76, ஹதீஸ் 46)
ஆதாரம் 8: நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அறிவித்ததாவது: “மதீனாவின் வாசல்களை வானவர்கள் காவல் காத்துக் கொண்டிருப்பார்கள். (எனவே,) கொள்ளை நோயும், தஜ்ஜாலும் அதனுள் (மதீனாவினுள்) நுழைய முடியாது.” (ஸஹீஹுல் புகாரி: பாடம் 29, ஹதீஸ் 14)
இவை மட்டுமல்லாது, இந்தக் கருத்தில் இது போன்ற இன்னும் ஏராளமான ஸஹீஹான அறிவிப்புகள் பல்வேறு கிரந்தங்களிலும் பதிவாகியுள்ளன. நமது ஆய்வுக்குப் போதுமான ஒருசிலதை மட்டுமே இங்கு சுட்டிக்காட்டியிருக்கிறேன்.
மேலே பட்டியலிடப்பட்ட மூன்று ஹதீஸ்களின் நேரடிக் கருத்துக்களிலிருந்தே சில உண்மைகளை இலகுவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அந்த உண்மைகளைக் கொஞ்சம் விலாவாரியாக நோக்கலாம்:
உண்மை 1: நபி (ஸல்) அவர்கள், கொள்ளை நோயை ஏனைய நோய்களைப் போன்ற அடிப்படையில் குறிப்பிடவே இல்லை. ஏனைய நோய்களுக்கு இல்லாத சில மேலதிக வரைவிலக்கணங்களை இங்கு நபியவர்கள் கொள்ளை நோய்க்கு வழங்கியிருப்பதைப் பார்க்க முடிகிறது.
கொள்ளை நோயால் பாதிக்கப் பட்டு உயிரிழப்பவர் உயிர்த்தியாகி என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். ஹதீஸ்களில் பெயர் குறிப்பிடப்பட்ட ஒருசில அம்சங்களைத் தவிர, எல்லா நோய்களுக்கும் இந்த வரைவிலக்கணத்தை நபியவர்கள் வழங்கியதில்லை. இவ்வாறு கூறியதன் அர்த்தம் தான் என்ன?
அனேகமான சந்தர்ப்பங்களில் எந்த மருந்துக்கும் அடங்காத இந்த நோயின் உக்கிரத் தன்மையைக் கருத்திற் கொண்டு உயிர்த்தியாகிக்கு வழங்கப் படுவது போன்ற கூலி வழங்கப் படுவதாக இதற்கு ஓர் அர்த்தத்தை நம்மில் சிலர் கற்பித்தாலும், அதை விடப் பொருத்தமான இன்னோர் அர்த்தம் இதனுள் இருக்கிறது.
இஸ்லாத்தின் பார்வையில் ஒருவர் உயிர்த்தியாகியாக வேண்டுமென்றால், அவர் நிச்சயம் ஒரு காஃபிருடனோ, அல்லது ஓர் அநியாயக் காரனுடனோ, அல்லது குறைந்த பட்சம் தன் பக்கம் நியாயத்தை வைத்துக் கொண்டு ஓர் எதிரியுடனோ போராடி இறப்பதன் மூலம் மட்டுமே அது சாத்தியம்.
கொள்ளை நோயைப் பொருத்தவரை, பாதிக்கப்படும் நோயாளி எந்தக் காஃபிருடனும் போரிடுவதில்லை; எந்த அநியாயக் காரனுடனும் போரிடுவதும் இல்லை. ஆனால், கண்ணுக்குத் தெரியாத ஒரு துஷ்டனோடு அந்த நோயாளி மரணம் வரை போராடுகிறான். அது வேறு யாருமல்ல; அந்த நோயை அவனுக்குள் தோற்றுவித்து, அதன் மூலம் அவனை அழிக்க முயற்சிக்கும் ஷைத்தானிய ஜின் தான் அது. இந்த ஷைத்தானிய ஜின்னோடு போராடி மரிப்பதாலேயே அந்த முஸ்லிமுக்கு உயிர்த்தியாகி எனும் அந்தஸ்த்து வழங்கப் படுகிறது.
இந்த அர்த்தத்தில் தான் நபியவர்கள் உயிர்த்தியாகி என்பதை இங்கு குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று இதை நேரடி அர்த்தத்தில் புரியும் போது, ஏற்கனவே நாம் பார்த்த முஸ்னத் அஹ்மத் 19528 ஆம் இலக்க ஹதீஸின் “ஜின் இனத்தைச் சேர்ந்த உங்கள் எதிரிகளால் நீங்கள் குத்தப்படுவது தான் கொள்ளை நோய்” எனும் வாசகத்தின் பொருள் இன்னும் உறுதியாகிறது. இதன் மூலமும் ஜின்களால் மனித உடலினுள் நோய்களை உண்டாக்கலாம் என்பது மீண்டும் ஒருமுறை இங்கு நிரூபணமாகிறது.
உண்மை 2: தஜ்ஜாலும், கொள்ளை நோயும் மதீனா நகரினுள் நுழைய முடியாதவாறு வானவர்கள் அதன் வாசல்களைக் காவல் காத்துக் கொண்டிருப்பதாக மேலுள்ள ஹதீஸ்களின் நபி (ஸல்) அவர்கள் இன்னொரு தகவலையும் கூறியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் தான் என்ன?
தஜ்ஜால் என்பதோ மனிதரை வழிகெடுக்கப் போகும் ஒரு கெட்ட மனிதன். கொள்ளை நோய் என்பதோ ஒரு நோய் மட்டுமே. ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத இரண்டு அம்சங்கள் இவை. இவ்வாறு ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத இரண்டு அம்சங்களை ஒரே செய்தியில் சம்பந்தப்படுத்தி, நபியவர்கள் கொள்ளை நோயையும் தஜ்ஜால் எனும் மனிதனைப் போல் ஏன் வர்ணிக்க வேண்டும்? சம்பந்தம் இல்லாமல் ஒருபோதும் நபியவர்கள் இவ்வாறு இரண்டையும் சம்பந்தப் படுத்திக் கூறியிருக்கவே மாட்டார்கள். அந்தச் சம்பந்தம் தான் என்ன?
இதற்கான விடை மிகவும் இலகுவானது. இரண்டுமே இப்லீஸின் பிரதிநிதிகள். அதாவது, தஜ்ஜால் எனும் மனிதன் எவ்வாறு இப்லீஸின் ஒரு முக்கிய பிரதிநிதியாக இவ்வுலகில் தோன்றிப் பல கோடி மனிதர்களை வழிகெடுக்கவும், துன்புறுத்தவும் போகிறானோ, அதே போல் ஜின் இனத்தைச் சேர்ந்த இப்லீஸின் பல பிரதிநிதிகளே மனித இனத்தின் மீது அவ்வப்போது போர் தொடுக்கும் விதமாகவும், துன்புறுத்தும் விதமாகவும் கொள்ளை நோய்களைக் கொண்டு வருகிறார்கள்.
இதனால் தான் இந்த இரண்டு தரப்பைச் சேர்ந்த இப்லீஸின் பிரதிநிதிகளையும் (தஜ்ஜால் / கொள்ளை நோய்க்குரிய ஜின்கள்) மதீனாவினுள் நுழைய விடாமல், வாசலில் வானவர்கள் காவல் காத்துக் கொண்டிருக்கிறார்கள் எனும் கருத்து இதிலிருந்து வெளிப்படுகிறது.
இந்த அர்த்தத்தில் தான் நபியவர்கள் தஜ்ஜாலையும், கொள்ளை நோயையும் ஒரே செய்தியில் சம்பந்தப்படுத்திக் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று இதை நேரடி அர்த்தத்தில் புரியும் போது, ஏற்கனவே நாம் பார்த்த முஸ்னத் அஹ்மத் 19528 ஆம் இலக்க ஹதீஸின் “ஜின் இனத்தைச் சேர்ந்த உங்கள் எதிரிகளால் நீங்கள் குத்தப்படுவது தான் கொள்ளை நோய்” எனும் வாசகத்தின் பொருள் இன்னும் ஒருபடி உறுதியாகிறது. இதன் மூலமும் ஜின்களால் மனித உடலினுள் நோய்களை உண்டாக்கலாம் எனும் கருத்து மீண்டும் ஒருமுறை இங்கு நிரூபணமாகிறது.
ஜின்களால் மனித உடலினுள் சில வகையான நோய்களைத் தோற்றுவிக்கலாம் என்பதை இதுவரை பல ஆதாரங்கள் மூலம் இங்கு நிரூபித்து விட்டோம். இவ்வாறு ஜின்கள் மூலம் ஏற்படும் நோய்களெல்லாம் பொதுவாக ஜின்கள் மனித உடல்களினுள் நுழைவதன் மூலம் / கூடுவதன் மூலம் / மேலாடுவதன் மூலம் தான் ஏற்படுகிறது எனும் ஒரு கருத்தும் இதன் மூலம் இங்கு வெளிப்படுகிறது.
இதன் விளைவாக, இந்தக் கருத்து மார்க்கத்தில் கூறப்பட்ட கருத்துத் தானா? மனித உடல்களினுள் ஜீன்கள் நுழைந்து, மேலாடலாமா? என்பன போன்ற பல புதுக் கேள்விகளும் இங்கு முளைத்து விட்டன. எனவே, இந்தக் கேள்விகளுக்கான பதில்களையும் விரிவாக மார்க்க ஆதாரங்களின் அடிப்படையில் வழங்க வேண்டியது கடமையாகி விட்டது. இது பற்றி இன் ஷா அல்லாஹ் அடுத்த எபிசோடில் அலசலாம்.
இன் ஷா அல்லாஹ் வளரும்...
- அபூ மலிக்
Episode 57: ஜின்களால் மனித உடல்களில் மேலாட முடியுமா? |