பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் ==============================
தொடர் 4: வேற்றுக்கிரக வேஷம்
Episode 57: ஜின்களால் மனித உடல்களில் மேலாட முடியுமா?
ஜின்களால் மனித உடல்களில் மேலாட முடியுமா? ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்தத் தலைப்பும் சற்றி விரிவாக அலசப்பட வேண்டிய ஒன்று. ஏனெனில், இந்தத் தலைப்பையொட்டியும் அனேகமான பகுத்தறிவு வாதிகள் ஜின்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் ஆற்றல்களைப் பொய்ப்பிக்க முனைவதுண்டு.
ஒரு மனிதனது உடலில் ஜின்கள் நுழைவது / ஊடுறுவுவது / மேலாடுவது என்பது சர்வசாதாரணமான ஒரு நிகழ்வு; இதில் அதிசயப் படுவதற்கோ, சந்தேகிப்பதற்கோ எதுவுமே இல்லையென்பது தான் மாக்கத்தின் நிலைபாடு. இனி இதைச் சில ஆதாரங்களின் அடிப்படையில் உறுதிப் படுத்திக் கொள்ள முயற்சிப்போம்.
ஆதாரம் 1: “வட்டியை உண்போர் (மறுமையில் எழுப்பப்படும் போது) ஷைத்தானால் தாக்கப்பட்டுப் பித்துப் பிடித்தவரைப் போல் அல்லாமல் (எழுந்து) நிற்கவே மாட்டார்கள். ‘வியாபாரமும் வட்டியைப் போன்றதே’ என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம்.” (அல்குர்ஆன் 2:275)
இந்த வசனத்தின் சரியான அர்த்தம் என்னவென்பதை விளக்கும் ஒருசில இமாம்களின் தஃப்ஸீர்களைச் சற்று நோக்குவோம்.
இமாம் குர்துபி: “மனித உடல்களுக்குள் நுழைந்து, மனிதருக்குப் பைத்தியம் பிடிக்கச் செய்யும் ஆற்றல் ஷைத்தானுக்கு (ஜின்னுக்கு)க் கிடையாது என்றும்; வலிப்பு நோய் என்பது பௌதீக அம்சங்கள் சார்ந்த ஒரு நோய் மட்டுமே என்றும்; ஜின்களால் (ஜின்கள் உடலில் மேலாடுவதால்) மனிதர்களுக்கு வலிப்பு நோய் ஏற்படுவதில்லை என்றும் சிலர் வாதிடுகிறார்கள். அவர்களின் வாதங்கள் தவறானது என்பதை நிரூபிக்கும் மிக வலுவான ஓர் ஆதாரமே இந்த வசனம்.” (தஃப்ஸீர் குர்துபீ: பாகம் 3, பக்கம் 355, இலக்கம் 12)
இமாம் இப்னு கதீர்: மேலுள்ள குர்ஆன் வசனத்தையும், இமாம் குர்துபியின் விளக்கத்தையும் மேற்கோள் காட்டி விட்டு, மேலதிகமாக: “ஒரு மனிதனை ஷைத்தான் (ஜின்) தாக்கும் போது, அவனுக்கு ஏற்படும் வலிப்பு நோயால் அவன் துடிப்பதைப் போன்ற அதே தோற்றத்திலேயே மறுமையில் (வட்டியை உண்டோர்) எழுப்பப் படும் போதும், அவர்கள் (கை கால்களை உதறிக் கொண்டும், இழுத்துக் கொண்டும்) சுய நினைவற்ற நிலையில் நிற்பார்கள்.” (தஃப்ஸீர் இப்னு கதீர்: பாகம் 1, பக்கம் 32)
இமாம் தபரி: “இந்த வசனத்தின் அர்த்தம், ஷைத்தான் அவனை (வட்டியை உண்டவனை) வாழ்வில் நிலைகுலையச் செய்து விடுகிறான் என்பதாகும். ஜின்கள் மேலாடுவதால் அவதிப் படுவோரின் நிலையும் உலகில் இவ்வாறு தான் இருக்கிறது. இங்கு ஷைத்தானின் தீண்டல் என்பது பைத்தியத்தையே குறிக்கிறது.” (தஃப்ஸீர் அத் தபரி / ஜாமி’ அல் பயான் அன் த’வீலுல் குர்ஆன்)
மேற்கூறப்பட்ட விளக்கங்களின் அடிப்படையில், ஜின்களால் மனித உடல்களுக்குள் மேலாடலாம் என்பது மட்டுமல்லாமல், அதன் மூலம் பைத்தியம், வலிப்பு போன்ற நோய்களைக் கூட மனிதர்களுக்குத் தோற்றுவிக்கும் ஆற்றல் ஜின்களுக்கு இருக்கிறது என்பது மேற்கண்ட குர்ஆன் வசனத்தின் மூலம் இங்கு ஊர்ஜிதமாகிறது.
ஆதாரம் 2: “மேலும் நமது அடியார் ஐயூபை நினைவு கூர்வீராக. அவர் தம் இறைவனிடம் “நிச்சயமாக ஷைத்தான் என்னைத் துன்பத்தாலும், வேதனையாலும் தீண்டி விட்டான்” (என்று கூறிய போது) “உமது காலால் (நிலத்தைத்) தட்டுவீராக; குளிர்ச்சியான குளி(க்கும் நீரூற்றும்), மற்றும் பானமும் இதோ இருக்கிறது” (என்று கூறினோம்). (அல்குர்ஆன் 38:41-42)
இந்த வசனங்களில் ஐயூப் (அலை) அவர்கள் என்ன நோயால் / நோய்களால் அவதிப் பட்டார்கள் என்பது கூறப்படவில்லை. ஆனால், ஷைத்தானின் தீண்டலால் (ஜின் தீண்டியதால்) ஐயூப் (அலை) அவர்கள் பலவிதமான இன்னல்களுக்கும், வேதனை தரும் நோய்களுக்கும் ஆளாகியுள்ளார்கள் என்பது தெளிவான வசன நடையில் நேரடியாகவே சொல்லப் பட்டிருக்கிறது. ஜின்களால் மனித உடல்களில் ஊடுறுவிப் பல பிரச்சினைகளையும் தோற்றுவிக்கலாம் என்பதற்கு இதுவும் ஒரு நேரடி ஆதாரம்.
ஆதாரம் 3: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அறிவித்ததாவது: ஒருமுறை நபி (ஸல்) அவர்களிடம் “நுஷ்ராஹ்” (ஒருவரின் உடலினுள் மேலாடியிருக்கும் ஜின்னை விரட்டுவதற்கு மாந்திரீகம் / சூனியம் செய்வது) குறித்துக் கேட்கப் பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அது (எல்லாமே) ஷைத்தானுக்குரிய வேலைகள்” என்று பதிலளித்தார்கள். ஸுனன் அபூதாவூத்: பாடம் 29, ஹதீஸ் 14 தரம்: ஸஹீஹ் (அல்பானி)
இந்த ஹதீஸ் மூலம் நமக்கு மேலும் சில தகவல்கள் உறுதியாகின்றன. அதாவது, ஜின்கள் மனித உடலில் மேலாடுவது, மற்றும் அதை விரட்டுவதற்காக, நபிகளார் காட்டித் தராத ஏனைய (சூனியம் / மாந்திரீகம்) போன்ற வழிமுறைகளை நாடுவது... இது எல்லாமே ஷைத்தானுக்கு உரிய செயல்கள் என்று நபியவர்கள் நேரடியாகவே கூறியிருப்பதைப் பார்க்க முடிகிறது.
மேலும், ஜின்களுக்கும், சூனியத்துக்கும் இடையில் இருக்கும் நேரடித் தொடர்புகளையும் இந்த ஹதீஸ் சந்தேகத்துக்கே இடமில்லாதவாறு நிரூபிக்கிறது. அதாவது, சூனியம் செய்யப்படுவதும், சூனியம் வெட்டப் படுவதும் ஆகிய இரண்டுமே ஷைத்தானிய ஜின்களைச் சார்ந்த ஒரு கலை என்பது இங்கும் நிரூபணமாகிறது. (குறிப்பு: இது சம்பந்தமான மேலதிக ஹதீஸ் ஆதாரங்களை “சூனியம்” பற்றிய எனது தொடரில் காணலாம்)
ஆதாரம் 4: உஸ்மான் இப்னு அப்துல் ஆஸ் (ரழி) அறிவித்ததாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாயிஃப் நகருக்கு என்னை ஆளுநராக நியமித்திருந்த காலப்பகுதியில், எனது தினசரித் தொழுகைகளுக்குள் பல குழப்பங்கள் ஏற்படலாயின. தொழுகையின் போது நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதையே அறியாதவனாக மாறும் அளவுக்கு (சுய நினைவையே இழக்கும் ஞாபக மறதி) இந்தக் குழப்பங்கள் அதிகரித்தன.
இதன் பாரதூரத்தை உணர்ந்த நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்திக்க (மதீனா) சென்றேன். (என்னைக் கண்டதும் நபியவர்கள்) “அப்துல் ஆஸின் மகனா?” என்று கேட்டார்கள். நான், “ஆம் அல்லாஹ்வின் தூதரே” என்று பதிலளித்தேன். பிறகு அன்னவர்கள், “உம்மை இங்கு வர வைத்தது எது?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதரே, எனது தொழுகைகளின் போது நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதையே மறந்து போகும் அளவுக்கு நான் மிகவும் குழம்பிப் போகிறேன்.” என்று பதிலளித்தேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அது ஷைத்தான் (ஆவான்). எனக்கு அருகில் வாருங்கள்” என்று அழைத்தார்கள். எனவே நான் அன்னாரின் பக்கத்தில் சென்று, எனது முன் பாதங்களின் மீது (அத்தஹிய்யாத்தில் அமர்வது போல்) அமர்ந்தேன். பிறகு அன்னார் தனது கையால் எனது நெஞ்சில் (சற்று பலமாக) அடித்தவாறே எனது (வாயைத் திறந்து,) வாயினுள் தமது உமிழ்நீரை உமிழ்ந்தார்கள். அவ்வாறு செய்து கொண்டே, “அல்லாஹ்வின் எதிரியே, வெளியேறு..!!” என்று கூறினார்கள். இவ்வாறு மூன்று தடவை செய்தார்கள். அதன் பிறகு அன்னவர்கள், “உமது வேலையை இப்போது தொடரலாம்” என்று கூறினார்கள்.
உஸ்மான் மேலும் கூறினார்: “நிச்சயமாக அதன் பிறகு (எனது தொழுகைகளில்) எந்தக் குழப்பத்தையும் நான் உணரவே இல்லை”. ஸுனன் இப்னு மாஜா: பாடம் 31, ஹதீஸ் 3677 தரம்: ஸஹீஹ் (தாருஸ்ஸலாம்)
ஷைத்தானிய ஜின்கள் மனித உடலினுள் புகுந்து கொண்டு, மனிதர்களது சுயநினைவையே பாதிக்கும் அளவுக்குக் குழப்பங்களை ஏற்படுத்துவதுண்டு என்பதையும், அவ்வாறு உடலினுள் மேலாடும் ஷைத்தானிய ஜின்களை நபி (ஸல்) அவர்களே அடித்துத் துரத்தியிருக்கிறார்கள் என்பதையும் நிரூபிக்க இந்த ஓர் ஆதாரமே போதுமானது.
அதாவது இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் ஒரு திருடனைத் துரத்துவது போல், உஸ்மான் (ரழி) அவர்களுக்குள்ளிருந்து கொண்டு, தொல்லை கொடுக்கும் ஷைத்தானிய ஜின்னைத் துரத்துகிறார்கள். அதாவது பகுத்தறிவாளர்கள் நையாண்டி செய்யும் பாஷையிலேயே கூறுவதென்றால், இங்கு நபி (ஸல்) அவர்களே பேயோட்டுவது போல் ஜின் ஓட்டியிருக்கிறார்கள்.
ஜின்கள் மேலாடுவதன் அடிப்படைத் தாத்பர்யத்தை மார்க்கத்தின் வெளிச்சத்தில் புரிந்து கொள்ள விரும்புவோருக்கு, மிகவும் தத்துரூபமாகவும், எளிமையான நேரடி வசனங்கள் மூலமும் இந்த ஹதீஸ் கூறும் விளக்கமே போதுமானதாக இருக்கும். இனி இந்த ஹதீஸின் கருத்தை இன்னும் உறுதிப்படுத்துவது போல் அமைந்துள்ள இன்னும் சில ஆதாரங்களையும் பார்க்கலாம்.
ஆதாரம் 5: மேலுள்ள ஹதீஸை இன்னும் ஊர்ஜிதப் படுத்துவது போல் முஸ்னத் அஹ்மத் கிரந்தத்திலும் இன்னொரு செய்தி பதிவாகியுள்ளது. அஸ் ஸாரி இப்னு ஆமிர் (ரழி)யிடமிருந்து, அவரது மகன் அல் வாஸிஃ கேட்டு, அவரது மகள் உம்மு அபான் அறிக்கும் அந்தச் செய்தி இது தான்:
ஒருமுறை அஸ் ஸாரி இப்னு ஆமிர், புத்தி பேதலித்த நிலையிலிருந்த தனது மகனை (அல்லது மருமகனை) அழைத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்ற சம்பவத்தைக் கூறும் போது பின்வருமாறு கூறினார்:
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நாம் சென்ற போது நான் அன்னாரிடம், “எனது மகனுக்கு (அல்லது மருமகனுக்கு) புத்தி பேதலித்துள்ளது. எனவே, நிவாரணத்தைக் கேட்டு அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதற்காக அவனை உங்களிடம் அழைத்து வந்துள்ளேன் (அல்லாஹ்வின் தூதரே)” என்று கூறினேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவனை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று கூறினார்கள். உடனே நான் கால்நடைகளின் (குதிரைகள்) கூட்டத்தோடு விட்டு விட்டு வந்த அவனைக் கூட்டி வரச் சென்றேன். அவனது பிரயாண உடைகளைக் களைந்து விட்டு, நல்ல உடையொன்றை அணிவித்து, அவனைக் கையால் பிடித்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதரிடம் கூட்டி வந்தேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவனை என் பக்கத்தில் கொண்டு வந்து, அவனது முதுகுப் புறத்தை என் பக்கம் திருப்பிப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்று பணித்தார்கள். பிறகு அவனது ஆடையால் இழுத்துப் பிடித்துக் கொண்டு அன்னவர்கள், தமது அக்குளின் வெண்மை நிறம் தெரியும் அளவுக்கு (கையை ஓங்கி) அவனது முதுகில் தொடர்ந்து பலமாக அடிக்கலானார்கள். இவ்வாறு அடித்துக் கொண்டே அன்னவர்கள், “அல்லாஹ்வின் எதிரியே, வெளியேறு..! அல்லாஹ்வின் எதிரியே, வெளியேறு..!!” என்று கூறினார்கள்.
அதன் பிறகு சிறுவன் பார்க்கும் பார்வையில் (அவன் குணமாகி விட்டதற்கான) மாற்றம் தெரிந்தது. முன்பு பார்த்துக் கொண்டிருந்த (பித்துப் பிடித்த) பார்வையைப் போலல்லாமல், ஆரோக்கியமான பார்வையையே (அவன் கண்களில்) பார்க்க முடிந்தது.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவனைத் தமக்கு நேர் எதிரில் இருத்தினார்கள். கொஞ்சம் தண்ணீர் கொண்டு வருமாறு கூறி, அதன் மூலம் அவனது முகத்தைக் கழுவினார்கள். பிறகு அன்னவர்கள் அல்லாஹ்விடம் அவனுக்காகப் பிரார்த்திக்கலானார்கள்.
இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்ததன் விளைவாக அவன் சித்த சுவாதீனத்தோடு இருந்ததைப் போல் (அதற்கு முன்) என்றுமே இருந்ததில்லை.
- முஸ்னத் அஹ்மத்: பாகம் 4 / ஹதீஸ் 171, 172 இமாம் பைஹகி, மற்றும் ஹாக்கிம் ஆகியோர் இந்தச் செய்தியை ஸஹீஹ் என்று கூறியுள்ளார்கள். மேலும், இதன் அறிவிப்பாளர் உம்மு அபான் என்பவர் “மக்பூலா” (ஏற்றுக்கொள்ளத்தக்க அறிவிப்பாளர்) என்பதாகவே இப்னு ஹஜரின் கருத்தும் இருக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேல், இந்தச் செய்தியை உறுதிப்படுத்தும் விதமாகவே இதற்கு முன் நாம் பார்த்த இப்னு மாஜாவின் ஸஹீஹான அறிவிப்பும் இருக்கிறது. இனி இன்னோர் ஆதாரத்தையும் பார்த்து விடலாம்.
ஆதாரம் 6: ய’லா இப்னு முர்ராஹ் (ரழி) அறிவித்ததாக, அப்துர் ரஹ்மான் இப்னு அப்துல் அஸீஸ் அறித்து, அவரிடமிருந்து உஸ்மான் இப்னு ஹக்கீம் கேட்டு, அவரிடமிருந்து அப்துல்லாஹ் இப்னு நுமைர் அறிவிக்கும் செய்தி:
ய’லா இப்னு முர்ராஹ் (ரழி) கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்த போது, வேறு யாருமே காணாத மூன்று விடயங்களை நான் மட்டும் பார்த்திருக்கிறேன். (அவற்றுள் ஒரு சம்பவம்):
ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் ஒரு பிரயாணத்தில் இணைந்து பயணித்துக் கொண்டிருந்தேன். அப்போது வழியில் ஒரு பெண் தனது பிள்ளையைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பதைக் கண்டோம். அந்தப் பெண், “அல்லாஹ்வின் தூதரே, இந்தக் குழந்தை ஒரு சாபத்தால் பீடிக்கப் பட்டிருக்கிறது. நமக்கு இது மிகவும் துன்பத்தையளிக்கிறது. இவன் தினமும் எண்ணிலடங்காத தடவைகள் (வலிப்பு நோயால்) தாக்கப் படுகிறான்.” என்று கூறினாள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவனை என்னிடம் தாருங்கள்” என்று கூறினார்கள். உடனே அவள் பிள்ளையைத் தூக்கி அன்னாரிடம் கொடுத்தாள். அவனை அல்லாஹ்வின் தூதர் ஒரு (குதிரையின்) சேணத்தின் மேல் இருத்தினார்கள். பிறகு அவனது வாயைத் திறந்து, அதனுள் தமது சில எச்சில் துளிகளை மூன்று முறை உமிழ்ந்தார்கள். அத்தோடு அன்னவர்கள் “அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு... நான் அல்லாஹ்வின் அடியான்.. தொலைந்து போ அல்லாஹ்வின் எதிரியே” என்று கூறினார்கள்.
பிறகு அன்னவர்கள் குழந்தையை அவளிடம் கொடுத்து விட்டு, “நாம் இவ்வழியாகத் திரும்பி வரும் போது இவனை பற்றி எனக்குக் கூறுங்கள்” என்று கூறிவிட்டுப் புறப்பட, நாம் அங்கிருந்து சென்று விட்டோம். பிறகு அவ்வழியாக நாம் திரும்பி வந்த போது அந்தப் பெண், மூன்று (வேறோர் அறிவிப்பில் இரண்டு) ஆடுகள் சகிதம் நம்மை எதிர்கொண்டாள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உனது குழந்தை எப்படியிருக்கிறது?” என்று கேட்டார்கள். அதற்கு அவள், “சத்திய மார்க்கத்தோடு உங்களை நம்மிடம் அனுப்பியவன் (அல்லாஹ்) மீது ஆணையாக, இதுவரை அவனிடம் நாம் எந்தக் கோளாறையும் காணவில்லை (குணமடைந்து விட்டான்). தயவு செய்து இந்த மூன்று ஆடுகளையும் அன்பளிப்பாகப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறினாள். அதற்கு நபியவர்கள் என்னிடம், “இறங்கிச் சென்று அதில் ஓர் ஆட்டை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்; மீதி இரண்டையும் அவளிடமே கொடுத்து விடுங்கள்” என்று கூறினார்கள்.
முஸ்னத் அஹ்மத்: (29/89), ஹதீஸ் எண். 17548 / (4/170,171,172) முஸ்தத்ரக் (4163) இல், இமாம் ஹாக்கிம் இந்த அறிவிப்பை ஸஹீஹ் என்று கூறியிருக்கிறார்; இமாம் தஹபீயும் இதற்கு உடன்படுகிறார். தர்ஃஹீப் (3/158) இல், அல் முதிரீ இதன் அறிவிப்பாளர் சங்கிலி “ஜய்யித்” (நன்று) என்று கூறுகிறார். ஸில்ஸிலத்துல் அஹாதீஸ் அஸ் ஸஹீஹா (485) இல் ஷெய்ஹ் அல்பானி, “இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள், மற்றும் துனைச் சங்கிலிகள் ஆகியவை “ஜய்யித்” (நன்று) ஆகவே உள்ளது” என்று கூறுகிறார். இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்களது ஜாத் அல் ம’ஆத் (1986 இன் 14வது குவைத் பதிப்பு) (பாகம் 4, பக்கம் 68) இல், ஷுஐப் அர்னாவுத் இந்த அறிவிப்பை ஸஹீஹ் என்று உறுதிப் படுத்தியுள்ளார்.
இது அல்லாமல் இந்தச் செய்தியின் மேலும் சில அறிவிப்புகள் தபரானி, பைஹக்கி போன்றவற்றிலும் உள்ளன. அவை சற்று மாறுபட்ட வாசகங்களோடும், சுருக்கமான வடிவமாகவுமே உள்ளன.
ஆனால் இந்த அறிவிப்பில் சில மேலதிகத் தகவல்களைக் காண முடிகிறது. அதாவது, தனது குழந்தைக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது என்று மட்டும் கூறாமல் அந்தப் பெண், தினமும் தனது குழந்தைக்குக் காலையிலும் மாலையிலும் வலிப்பு நோய் ஏற்படுவதாகவும் கூறியதாகப் பதிவாகியுள்ளது. மேலும், நபி (ஸல்) அவர்கள் இறுதியில் அந்தச் சிறுவனைத் துடைத்து, அவனுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தித்த போது, சிறுவன் வாந்தியெடுத்ததாகவும், வாந்தியோடு சேர்த்துக் கறுப்பு நிறத்திலான, மிகவும் சிறிய ஒரு நாய்க்குட்டி வாயினுள்ளிருந்து வெளியில் விழுந்து, எழுந்து ஓடியதாகவும் பதிவாகியுள்ளது. (இமாம் ஸுயூத்தியின் அல் கஸாயிஸுல் குப்ரா: பாகம் 2, பக்கம் 290)
இது போன்ற பல ஹதீஸ்கள் வாயிலாகவும் திரும்பத் திரும்ப நமக்கு ஓர் உண்மை புலப்படுகிறது. அதாவது பகுத்தறிவாளர்களது நையாண்டிப் பாஷையிலேயே கூறுவதென்றால், நபி (ஸல்) அவர்களே பல தடவைகள் பேயோட்டுவது போல் ஜின் ஓட்டியிருக்கிறார்கள் எனும் உண்மை தான் அது.
அஹ்லுஸ் ஸுன்னாவைச் சேர்ந்த இமாம்களுள் கிட்டத்தட்ட அனைவருமே இதுவரை நாம் பார்த்தது போன்ற பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் மனித உடல்களில் ஜின்கள் மேலாடலாம் என்பதையும், மனித உடல்களுக்குள் ஜின்கள் மேலாடுவதால் குறிப்பிட்ட சில வகையான நோய்கள் ஏற்படுவதுண்டு என்பதையும் ஏகமனதாகச் சரிகாணும் நிலைப்பாட்டிலேயே இருந்திருப்பதைக் காண முடிகிறது.
மேலும், ஜின்களை விரட்டுவதற்கு நபி (ஸல்) அவர்கள் கையாண்டது போன்ற வழிமுறைகளையே கையாள வேண்டுமென்பதிலும் இமாம்களில் அனேகமானோர் ஏகமனதாக இருந்திருப்பதையும் கூட அவதானிக்க முடிகிறது.
இதை உறுதிப் படுத்திக் கொள்வதற்குத் தேவையான ஒருசில உதாரணங்களை இனி நாம் அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.
இன் ஷா அல்லாஹ் வளரும்...
- அபூ மலிக்
Episode 58: ஜின்களால் மனித உடல்களில் மேலாட முடியுமா? - தொடர்ச்சி... |