பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் ==============================
தொடர் 4: வேற்றுக்கிரக வேஷம்
Episode 58: ஜின்களால் மனித உடல்களில் மேலாட முடியுமா? - தொடர்ச்சி...
ஜின்களால் மனித உடல்களில் மேலாட முடியுமா? (தொடர்ச்சி...)
சென்ற எபிசோடில் நாம் குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரங்கள் மூலம் ஜின்கள் மனித உடலினுள் மேலாடலாம்; நோய்களைத் தோற்றுவிக்கலாம் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டோம். இப்போது அவ்வாறான குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களின் வெளிச்சத்தில் ஒருசில இமாம்கள் இது பற்றி என்ன கூறியிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்:
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்): ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ அப்துல்லாஹ் இப்னு அஹ்மத் (இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்களின் மகன்) கூறுகிறார்:
“ஜின்கள் மனித உடலினுள் மேலாட முடியாது என்று சிலர் வாதிடுகிறார்களே?” என்று நான் எனது தந்தையிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “என் அன்பு மகனே, அவர்கள் பொய் சொல்கிறார்கள். (ஜின்கள் மேலாடுவது மட்டுமல்லாமல்), ஒரு மனித உடலினுள் ஜின்கள் புகுந்து கொண்டு, (சில சமயம்) அவனது நாவின் மூலம் பேசவும் செய்யும்” என்று பதிலளித்தார்கள்.
இந்தச் சம்பவம் குறித்து இமாம் இப்னு குதாமாவின் கருத்தாக இமாம் இப்னு தைமியா (ரஹ்), தனது ஃபத்தாவாவில் பின்வருமாறு மேற்கோள் காட்டுகிறார்:
“(இமாம் அஹ்மத்) அவர்கள் கூறிய விடயம் என்பது, பரவலாக அறியப்பட்ட ஓர் உண்மையாகும். (ஜின்கள் மேலாடிய) ஒரு மனிதருக்கு அனேகமான சந்தர்ப்பங்களில் வலிப்பு ஏற்படுவது மட்டுமல்லாமல், அவ்வாறான சந்தர்ப்பங்களில் யாராலும் புரிந்து கொள்ள முடியாத விசித்திரமான பாஷைகளில் அவர்கள் பேசுவதும் உண்டு. மேலும், ஓர் ஒட்டகத்தை வீழ்த்தும் அளவுக்கு (ஜின் மேலாடியிருக்கும்) அவரது உடலைக் கடுமையாகத் தாக்கினாலும் கூட, அவர்களுக்கு அது ஒரு பொருட்டாகவே இருக்காது. அதை அவர்கள் உணரவும் மாட்டார்கள். மேலும், அவர்கள் நாவிலிருந்து அப்போது வெளிப்படும் (விசித்திரமான) வார்த்தைகளை அவர்களே கூட அறிய மாட்டார்கள்.
(ஜின்கள் மேலாடுவதால்) வலிப்பு ஏற்பட்டோர், மற்றும் ஏனையோர் கூட சில சமயங்களில் தன்னாலேயே அங்குமிங்கும் இழுபட்டுச் செல்வதுமுண்டு. அல்லது, அவர்கள் அமர்ந்திருக்கும் விரிப்பு / கம்பளம் போன்றவை இனம்புரியாத ஒரு சக்தியால் இழுக்கப் படுவதும் உண்டு. மேலும், சில சமயம் பாத்திரங்கள் அங்குமிங்கும் (அந்தரத்தில்) நகர்வதும் உண்டு. இது போன்ற (அமானுஷ்யமான) பல்வேறு செயல்கள் நடப்பதுண்டு.
இவ்வாறான செயற்பாடுகளை நேரடியாகக் காண்போர் யாராக இருந்தாலும், அவர்களது (வலிப்பு ஏற்பட்டோரது) நாவின் மூலம் பேசுவதும், பொருட்களை அங்குமிங்கும் நகர்த்துவதும் நிச்சயமாக மனிதன் அல்ல என்பதை உடனே புரிந்து கொள்வார்கள்.”
மேலும் அவர் கூறுகிறார்: “ஜின்கள் மனித உடல்களுள் மேலாடுகிறது எனும் உண்மையை எந்தவோர் இமாமும் மறுத்ததில்லை. யாராவது இதை மறுப்பதாக இருந்தாலோ, அல்லது ஜின்களால் மனித உடல்களில் மேலாட முடியாதென்று இஸ்லாம் கூறுவதாக யாராவது கூறினாலோ, நிச்சயமாக அவர் இஸ்லாத்தின் பெயரில் பொய் கூறுகிறார். இவ்வாறான (அமானுஷ்யமான) செயல்கள் நடப்பதில்லை (ஜின்கள் மனித உடல்களில் மேலாடுவதில்லை) என்று கூறுவதைச் சரிகாணும் விதமாக ஷரீஆவில் எந்தவோர் ஆதாரம் கூட கிடையாது.” (இமாம் இப்னு தைமியாவின் மஜ்மூ’ அல் ஃபத்தாவா: 19 / 12)
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்), மற்றும் இமாம் இப்னு குதாமா ஆகியோரின் நிலைப்பாடு இது. இனி இன்னோர் இமாம் என்ன கூறுகிறாரென்று பார்க்கலாம்:
இமாம் இப்னு தைமியாஹ் (ரஹ்): ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ “...... இதனால் அல்-ஜப்பாரி, அபு பக்ர் அர் ராஸி, போன்ற முஃதஸிலா கூட்டத்தாரைச் சேர்ந்த பலர், ஜின்கள் உடலில் மேலாடுவதால் வலிப்பு ஏற்படுகிறது என்பதை மறுக்கிறார்கள். ஜின்கள் எனும் ஓர் இனம் இருப்பதை இவர்கள் மறுக்காத போதும், அது மேலாடுவதை மறுக்கிறார்கள். ஜின்கள் எனும் ஓர் இனம் இருப்பதை நேரடியாக உறுதிப் படுத்தும் பல ஹதீஸ்கள் இருப்பதைப் போல், ஜின்கள் மேலாடுவதை உறுதிப்படுத்தும் ஹதீஸ்கள் இல்லையென்பதே இவர்கள், தமது வாதத்துக்குக் கற்பிக்கும் நியாயம். ஆனால், இதை (ஹதீஸ்களை) இவர்கள் தவறாகவே புரிந்து கொண்டுள்ளார்கள்.
“மகாலாத் அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமா’அஹ்” எனும் நூலில் அல் அஷ்’அரி குறிப்பிடுவது போல், அவர்கள் (அஹ்லுஸ் ஸுன்னாவைச் சேர்ந்த) அனைவரதும் உறுதியான நிலைபாடு, ஜின்களால் மனித உடல்களில் மேலாட முடியும் என்பது தான். அல்லாஹ் இதைத் தனது திருமறையில் பின்வருமாறு உறுதிப் படுத்துகிறான்: “வட்டியை உண்பவன், ஷைத்தானால் தாக்கப்பட்டுப் புத்தி பேதலித்தவனைப் போலவே அன்றி (மறுமையில் எழுந்து) நிற்கவே மாட்டான்.” (2:275)” (மஜ்மூ’ அல் ஃபத்தாவா: 19/12)
ஷெய்ஃகுல் இஸ்லாம் இப்னு தைமியா (ரஹ்) மேலும் கூறுகிறார்கள்:
“ஜின்கள் எனும் ஓர் இனம் இருக்கிறது என்பதை அல்லாஹ்வின் வேதநூலாகிய குர்ஆனும், அவனது தூதர் (ஸல்) அவர்களின் ஸுன்னாவும், மற்றும் இந்த உம்மத்தில் தோன்றிய ஸலஃபு இமாம்களின் ஏகோபித்த கருத்துக்களும் எவ்வாறு உறுதிப் படுத்துகின்றனவோ, அதே போல், ஜின்களால் மனித உடல்களினுள் மேலாட முடியும் எனும் உண்மையும் கூட இதே அடிப்படையில் அஹ்லுஸ் ஸுன்னா இமாம்களின் ஏகோபித்த கருத்தாக உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.
அல்லாஹ் தனது திருமறையில் பின்வருமாறு கூறுகிறான்: “வட்டியை உண்பவன், ஷைத்தானால் தாக்கப்பட்டுப் புத்தி பேதலித்தவனைப் போலவே அன்றி (மறுமையில் எழுந்து) நிற்கவே மாட்டான்.” (2:275)”
மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறிய, “ஆதமின் மகனுக்குள் ஷைத்தான் இரத்தம் ஓடுவதைப் போல் ஓடிக் கொண்டிருக்கிறான்” எனும் ஸஹீஹான ஹதீஸ் கூட இதை உறுதிப் படுத்துகிறது.
ஜின்களால் மனித உடலினுள் மேலாட முடியும் எனும் உண்மையையும், அதன் மூலம் வலிப்பு ஏற்படுகிறது எனும் உண்மையையும் எந்த இமாமும் மறுத்ததே இல்லை. யார் இதை மறுத்து, ஜின்கள் மனித உடல்களினுள் மேலாடுவதை இஸ்லாம் மறுப்பதாகக் கூறுகிறாரோ, அவர் நிச்சயமாகப் பொய் கூறுகிறார். ஏனெனில், அவர்களது கூற்றுக்குச் சார்பாக ஷரீஆவில் எந்தவோர் ஆதாரமும் கிடையாது.” (மஜ்மூ’ அல் ஃபத்தாவா: பாகம் 24, பக்கம் 276, 277)
வலிப்பு நோய் ஏற்படுவது குறித்து விளக்கும் போது இமாம் இப்னு தைமியா பின்வருமாறு கூறுகிறார்கள்:
“வலிப்பு நோய் என்பதன் வாயிலாக ஒரு ஜின் ஒரு மனிதனைத் தீண்டுவதற்குப் பல்வேறு காரணங்கள் இருப்பதுண்டு. சில சமயங்களில் ஒரு மனிதருக்கு இன்னொரு மனிதரோடு ஏற்படுவது போன்ற அசை, காதல் போன்றவை கூட இந்தத் தீண்டலுக்கு (மேலாடலுக்கு) காரணமாக அமைவதுண்டு. அல்லது, வெறுப்பு, கோபம், பழிவாங்கல் இது போன்ற காரணங்களுக்காகக் கூட இது நடப்பதுண்டு. அனேகமான சந்தர்ப்பங்களில் இதுவே காரணமாக இருக்கிறது.
உதாரணத்துக்குச் சில மனிதர்கள் தாம் அறியாத நிலையில், தமக்கு எதிரில் படுத்திருக்கும் ஜின் மீது (வெட்டவெளியில்) சிறுநீர் கழித்தல், சுடுநீரை வீசியெறிதல் போன்ற காரியங்களைச் செய்வதன் மூலம் நோவினைக்கு ஆளாகும் சில ஜின்கள், அதனால் கோபம் கொண்டு, அவர்களைத் தண்டிக்கும் நோக்கத்தோடும் இவ்வாறு மேலாடுவதுண்டு. நமது பார்வையில் அந்த மனிதர் செய்த காரியம் அறியாத நிலையில் செய்ததாக இருந்தாலும், இவ்வாறான ஜின்கள், அந்த மனிதன் அதை வேண்டுமென்றே செய்ததாக நினைத்துக் கொண்டு, பழிவாங்க வருவதுண்டு.
மேலும், அறியாமை மிக்க, வழிகெட்ட, கொடூர சிந்தை கொண்ட சில ஜின்கள் இவ்வாறு மனிதர்களைப் பழிவாங்க வரும் போது, அளவு கடந்து அந்த மனிதனை நோவினை செய்யவும் ஆரம்பிப்பதுண்டு. இது அல்லாமல் மேலும் சில ஜின்கள், சில மனிதர்கள் பயத்திலோ / துன்பத்திலோ துடிப்பதைப் பார்த்துச் சிரிக்கும் நோக்கத்தில் அவர்களை நகைச்சுவைப் பொருட்களைப் போல் கையாள முயற்சிப்பதும் உண்டு.
மேலும் நான் கூறுகிறேன்: இவ்வாறான தொல்லைகளிலிருந்து ஒருவர் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டுமென்றால், அவர் அல்லாஹ்வின் திருநாமத்தைக் கொண்டு மட்டுமே காத்துக் கொள்ள முடியும். அதாவது, ஒருவர் தனது வாழ்வில் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் அல்லாஹ்வின் பெயரைக் கூறியே ஆரம்பிப்பவராக இருக்க வேண்டும். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்தவொரு காரியத்தைச் செய்தாலும், அதை அல்லாஹ்வின் பெயரைக் கூறியே ஆரம்பிப்பவராக இருந்துள்ளார்கள். உதாரணத்துக்குச் சாப்பிடுதல், நீர் அருந்துதல், வாகனத்தின் மேல் ஏறுதல், ஆடைகளைக் களைதல், உடலுறவு கொள்ளுதல்.. போன்ற எந்தக் காரியமாக இருந்தாலும், அல்லாஹ்வின் பெயரைக் கொண்டே அந்தச் செயல் ஆரம்பிக்கப் படும். (மஜ்மூ’ அல் ஃபத்தாவா: 19/39)
இவ்வாறான ஜின் மேலாடல்களால் பாதிக்கப்பட்ட ஒருவருக்குப் பரிகாரம் செய்யும் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றிக் குறிப்பிடும் போது ஷெய்குல் இஸ்லாம் இமாம் இப்னு தைமியா (ரஹ்) பின்வருமாறு கூறுகிறார்கள்:
“ஒரு ஜின், மனிதனைத் தாக்கி, உடலினுள் புகுந்திருப்பது தெரிய வந்தால், முதலில் அந்த ஜின்னுக்கு அல்லாஹ்வின் சட்டங்களைக் குறித்தும், நபி (ஸல்) அவர்களின் போதனைகளைக் குறித்தும் (தஃவா செய்து) எச்சரிக்க வேண்டும். இவ்வாறு எச்சரிக்கும் போது, அவர்கள் (ஜின்கள்) செய்யும் காரியம் (உடலில் புகுவது) பாவமான காரியம் என்பதை மார்க்க ஆதாரங்களின் அடிப்படியில் (அவர்களுக்கு) நிரூபித்துக் காட்ட வேண்டும். மேலும், அதற்கு (ஜின்னுக்கு) நல்லதைச் செய்யுமாறு ஏவ வேண்டும்; தீயதைத் தவிர்ந்து கொள்ளுமாறு எச்சரிக்க வேண்டும். ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் செய்வது போலவே (தஃவா) செய்ய வேண்டும்.
ஏனெனில், அல்லாஹ் தனது திருமறையில் “ஒரு தூதரை அனுப்பி (எச்சரிக்கை செய்யாமல், எவரையும்) நாம் ஒருபோதும் தண்டிக்க மாட்டோம்” (17:15) என்று கூறுகிறான்.”
மேலும் இமாம் கூறுகிறார்: “இவ்வாறு எச்சரிக்கை செய்த பின்பும் அந்த ஜின், உள்ளிருந்து வெளியேற மறுத்துப் பிடிவாதம் பிடிக்குமாக இருந்தால், அதன் பிறகு அதை மிரட்டவோ, சபிக்கவோ, (ஓதிப் பார்ப்பதன் மூலம்) துரத்தவோ முயற்சிக்கலாம். இவ்வாறு செய்வதற்கு முன்மாதிரியாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாழ்வில் படிப்பினை உண்டு. ஒரு தடவை ஒரு ஷைத்தான் கையில் ஓர் எறிநட்சத்திரத்தை ஏந்திப் பிடித்துக் கொண்டு, அதைக் கொண்டு நபி (ஸல்) அவர்களின் முகத்தைத் தாக்க எத்தனித்த போது, அன்னவர்கள் “உன்னை விட்டும் நான் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்; அல்லாஹ்வின் பெயரால் உன்னை நான் சபிக்கிறேன்” என்று மூன்று தடவை கூறினார்கள். இதிலும் நமக்கு முன்மாதிரி இருக்கிறது. (மஜ்மூ’ அல் ஃபத்தாவா: 19/42)
இதுவரை இமாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்களது இது குறித்த நிலைபாட்டைப் பார்த்தோம். இனி இன்னோர் இமாமையும் பர்க்கலாம்.
இமாம் இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்களின் நிலைபாடு: ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ஃஜாத் அல் ம’ஆத் எனும் தனது நூலில் இமாம் இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்:
“வலிப்பு நோய், மற்றும் அது சார்ந்த பைத்தியம் என்பது இரண்டு அடிப்படைகளில் ஏற்படுகின்றது:
1. பூமியில் வாழக்கூடிய தீய சக்திகளால் (ஜின்களால்) ஏற்படுவது 2. உடலுக்குள் உருவாகும் அடைப்புகள் / கட்டிகள் போன்றவற்றால் ஏற்படுவது
இதில் இரண்டாவது வகையைச் சேர்ந்தது, மருத்துவர்கள் கூறும் விளக்கங்களின் அடிப்படையிலானது.
ஆனால், (முதலாவது வகையாகிய) தீய சக்திகள் சார்ந்ததை, மார்க்க ஞானம் பெற்ற தலைசிறந்த உலமாக்கள் / இமாம்கள் மருத்துவ ரீதியில் குணப்படுத்த முயற்சிப்பதில்லை. ஏனெனில், இதற்கு மருத்துவத்தை விடவும், உள்ளே மேலாடியிருக்கும் தீய சக்தியை(ஜின்னை)த் துரத்துவதே சரியான தீர்வைத் தரும் என்பதை அவர்கள் அறிவார்கள்.”
மேலும் இப்னுல் கய்யிம் தனது நூலில் குறிப்பிடுகிறார்:
ஜின் தீண்டலால் ஏற்படும் வலிப்பைக் குணப்படுத்துவதில் இரண்டு அம்சங்கள் கருத்திற்கொள்ளப்பட வேண்டும். ஒன்று, ஜின்னால் தீண்டப்பட்டவர் சார்ந்தது. மற்றது ஜின்னைத் துரத்துபவர் (ஓதிப் பார்ப்பவர்) சார்ந்தது.
1. ஜின் மேலாடியவரைப் பொருத்தவரை, அவரது உள்ளத்தில் ஏகத்துவம் உறுதியாக இருப்பதும், அவர் தனது இறைவன் பால் மட்டுமே (நிவாரணத்துக்காக) சார்ந்திருப்பதும் நோயைக் குணப்படுத்துவதற்கு அதிகம் உதவுகிறது. ஏனெனில், நிச்சயமாக இந்த வகையான நிவாரணம் (ஜின்னைத் துரத்துதல்) என்பது கிட்டத்தட்ட (ஷைத்தானோடு) ஒரு யுத்தம் செய்வதைப் போன்றது தான். எனவே, போராடுபவர் (நோயாளி) தன் எதிரியை அல்லாஹ் கூறும் அடிப்படையில் எதிர்கொள்ளாதவரை போராட்டத்தில் வெற்றி பெறுவது முடியாத காரியம். (ஏகத்துவ நம்பிக்கையோடு அல்லாஹ்வைச் சார்ந்திருக்கும்) இந்த முறையென்பது உண்மையில் வலுவான ஆயுதத்தை ஏந்திக் கொண்டிருக்கும் உறுதிமிக்க ஒரு கையைப் போன்றது. இரண்டுமே (வலுவான ஆயுதம், உறுதி மிக்க கை) இதற்கு அவசியம். இந்த இரண்டில் ஒன்று குறைந்தால் கூட, அதை நிவர்த்தி செய்ய எவ்வளவு நீண்ட வாளைக் கொண்டு வந்தால் கூட பிரயோசனமில்லை. இரண்டுமே இல்லாமலிருப்போர் நிலை எப்படியிருக்கும்? தவ்ஹீத் இல்லாத, நளிந்து போன இதயத்தையும், இறையச்சமில்லாத குணப்படுத்தல் வழிமுறையையும் வைத்துக் கொண்டும் இதற்குத் தீர்வு காணவே முடியாது. நிராயுதபாணியாக நிற்பதைப் போன்ற ஒரு நிலையே இது.
2. குணப்படுத்த முயற்சிப்பவரைப் (ஓதிப்பார்ப்பவரைப்) பொருத்த மட்டில், அவரும் இந்த இரண்டு அம்சங்களும் (சரியான இறைநம்பிக்கை, ஜின்னைத் துரத்துவதற்கு மார்க்கம் காட்டித் தந்த சரியான வழிமுறை) சரியாக அமையப் பெற்றவராக இருக்க வேண்டும். இவ்வாறு சரியான அடிப்படையை உடையவராக அவர் இருக்கும் போது, அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு அந்த ஜின்னிடம் “இந்த மனிதனை விட்டு நீ வெளியேறு” என்று அவர் கூறினால் கூட சில சமயங்களில் அது போதுமானதாக ஆகி விடுகிறது. அல்லது “பிஸ்மில்லாஹ்”, “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” என்பன போன்ற இலகுவான சில சொற்களைக் கூறினால் கூட, அந்த ஜின் ஓடி விடுவதற்கு அது போதுமானதாக ஆகி விடுவதும் உண்டு. நபி (ஸல்) அவர்கள் கூட (சில சமயங்களில்) இவ்வாறு “அல்லாஹ்வின் எதிரியே, வெளியேறு. நான் அல்லாஹ்வின் தூதர்” என்று சுலபமான ஒருசில வார்த்தைகளின் மூலம் ஜின்களைத் துரத்தியடித்ததுமுண்டு.
மேலும், இது போன்ற சில நிகழ்வுகளை எனது ஆசிரியரின் (இப்னு தைமியா) வாழ்வில் கூட நான் பார்த்ததுண்டு. சில வேளைகளில் ஜின் மேலாடியிருக்கும் சில நோயாளியிடம் அன்னார் யாரையாவது தூது அனுப்பி, “இது போல் மனித உடல்களுள் மேலாடுவது பாவ காரியம். அல்லாஹ் இதை அனுமதிக்கவில்லை. எனவே இந்த மனிதனை விட்டு வெளியேறுமாறு ஷெய்ஹ் (இப்னு தைமியா) உன்னிடம் கூறச் சொன்னார்” என்று மேலாடிய ஜின்னிடம் கூறுமறு ஆசிரியர் அனுப்புவதும் உண்டு. இவ்வாறு கூறிய பல சந்தர்ப்பங்களில் (மேலதிக ஓதிப் பார்த்தல்களின் தேவை கூட இல்லாமல்) சில ஜின்கள் வெளியேறிச் சென்று, நோயாளிகள் குணமடைந்திருப்பதும் உண்டு.
மேலும் சில சந்தர்ப்பங்களில் ஆசிரியரே (இப்னு தைமியா) நேரடியாகச் சென்று நோயாளியை (ஜின்னை) சந்திப்பதும் உண்டு. இந்த அடிப்படையில் நீங்கிச் சென்ற ஜின்கள் கூட உண்டு.
அரிதாக ஒருசில சமயங்களில் அடங்காத சில ஜின்கள் விடயத்தில் ஷெய்ஹ் (இப்னு தைமியா) அவர்களை அடிப்பதும் உண்டு. ஆனால், இவ்வாறு அடித்து, அந்த ஜின் வெளியேறிய பின் அந்த மனிதனுக்குச் சுயநினைவு திரும்பிய பிறகு பார்த்தால், அவர் அடிவாங்கியதற்கான எந்தத் தடயங்களையும் அவரிடம் காண முடிவதும் இல்லை; அவர் உடலில் அடி வாங்கியதையொட்டி எந்தவிதமன வலி, வேதனைகள் கூட இருப்பதில்லை. இவ்வாறான பல சம்பவங்களை நாம் நேரடியாகவே பார்த்திருக்கிறோம்.
சுருக்கமாகக் கூறுவதென்றால், இந்த அடிப்படையில் வலிப்பு நோய்களுக்கு (ஓதிப்பார்த்தல் மூலம்) மருத்துவம் செய்வதை, குறுகிய மனப்பான்மையுள்ள, (மார்க்கம் குறித்த) சரியான சிந்தனைத் தெளிவில்லாத மூடர்களே மறுப்பார்கள்.
அனேகமான சந்தர்ப்பங்களில் மார்க்கத்தில் ஈடுபாடில்லாத, மற்றும் தம் நாவிலும், உள்ளத்திலும் ஈமானின் சுவடுகள் மறைந்து போன, அல்லாஹ்வின் நினைப்பு உள்ளத்தில் அருகிப் போன மனிதர்களையே தீய சக்திகள் அதிகம் தீண்டுகின்றன. இவ்வாறான மனிதர்களைத் தீண்டுவது தீய சக்திகளுக்குச் சுலபம். ஏனெனில், இவர்கள் அல்லாஹ்வின் பாதுகாவலிலிருந்து தூரமாக்கப் பட்டவர்கள் என்பதால், நிராயுதபாணியாகவே நிற்பவர்கள்.
(ஃஜாத் அல் ம’ஆத் (அர்னாவுத் பதிப்பு): பக்கம் 67-69)
மேலும் ஓர் எடுத்துக் காட்டு: ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ அப்துல்லாஹ் இப்னு மஸ்’ஊத் (ரழி) அவர்களைத் தொட்ட ஒரு செய்தி, இமாம் நவவி (ரஹ்) அவர்கள் வாயிலாகப் பதிவாகியுள்ளது. அந்தச் செய்தி இது தான்:
ஒருமுறை ஜின் மேலாடியிருக்கும் ஒருவருக்கு ஓதிப் பார்க்கும் போது இப்னு மஸ்’ஊத் (ரழி) அவர்கள், சில குர்ஆன் வசனங்களைக் காதில் ஓதினார்கள். உடனே (உள்ளிருந்த ஜின் வெளியேறிட), அந்த மனிதருக்குக் குணமாகி விட்டது. இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறிய போது அன்னவர்கள் இப்னு மஸ்’ஊத் (ரழி)யிடம், “அவரது காதில் நீர் எதை ஓதினீர்?” என்று கேட்டார்கள். அதற்கு இப்னு மஸ்’ஊத் (ரழி), “நான் அவரது காதில் “உங்களை நாம் வேடிக்கைக்காகப் படைத்தோமென்றும், எம்மிடம் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்பட மாட்டீர்களென்றும் நீங்கள் நினைத்து விட்டீர்களா?” (23:115) எனும் குர்ஆன் வசனம் தொடக்கம், அந்த சூராவின் இறுதி வரை ஓதினேன்” என்று பதிலளித்தார்கள். அதைக் கேட்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(இறை நம்பிக்கையில்) உறுதி பெற்ற ஒரு மனிதர் இந்த வசனத்தை ஒரு மலையிடம் ஓதிக் காட்டினால், அந்த மலையே (தவிடுபொடியாகி) மறைந்து போயிருக்கும்” என்று கூறினார்கள். (இமாம் நவவியின் “கித்தாபுல் அத்கார்”: பக்கம் 120-121)
இந்தக் குர்ஆன் வசனத்தை ஜின் மேலாடியிருப்போருக்கு ஓதிப் பார்ப்பது பற்றி இமாம் இப்னுல் கய்யிம் (ரஹ்) பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்:
““உங்களை நாம் வேடிக்கைக்காகப் படைத்தோமென்றும், எம்மிடம் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்பட மாட்டீர்களென்றும் நீங்கள் நினைத்து விட்டீர்களா?” (23:115) எனும் இந்த வசனத்தை நமது ஷெய்ஹ் (இப்னு தைமியா) (ஜின் மேலாடியிருப்போர் காதில்) அடிக்கடி ஓதிப் பார்ப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
இது பற்றிய ஒரு சம்பவத்தை அன்னார் என்னிடம் கூறினார்கள். ஒருமுறை ஷெய்ஹ் (இப்னு தைமியா) அவர்கள் இந்த வசனத்தைப் பைத்தியம் பிடித்திருந்த ஒருவரின் காதில் ஓதிக் கொண்டிருக்கும் போது திடீரென்று அந்த மனிதருக்கு உள்ளிருந்த ஜின், வேதனை தாங்க முடியாமல் அலறுவது போல் (விசித்திரமான தொனியில்) “யீஈஈஈஈஈஸ்ஸ்” என்று கீச்சிட்டுக் கத்தியது.
உடனே அவர் (இப்னு தைமியா) கையிலிருந்த கம்பினால் அந்த மனிதரின் கழுத்தில் (புடைத்திருந்த) நரம்பைக் குறி வைத்துத் தொடர்ச்சியாக (பலமாக) அடிக்கலானார்கள். அன்னாரின் கைகள் சோர்வடையும் வரை இவ்வாறு அடித்துக் கொண்டே இருந்தார்கள். பக்கத்திலிருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களோ, ஷெய்ஹ் (இப்னு தைமியா) இவ்வாறு தொடர்ந்து அடிப்பதால் அந்த மனிதன் இறந்தே போய் விடுவானோ என்று பயந்து போகும் அளவுக்கு அடித்துக் கொண்டே இருந்தார்கள்.
இவ்வாறு தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்த பொழுது, (உள்ளிருந்த ஜின் வேதனை மிக்க ஈனக் குரலில்) “(என்னால் போக முடியாது); இவரை நான் காதலிக்கிறேன்” என்று கதறியது. அதற்கு ஷெய்ஹ் (இப்னு தைமியா), “அவர் உன்னைக் காதலிக்கவில்லை” என்று பதிலளித்தார்கள். அதற்கு உள்ளிருந்த ஜின், “எனக்கு இவரோடு சேர்ந்து ஹஜ்ஜுக்குப் போக வேண்டும் (என்று ஆசையாக உள்ளது)” என்று கூறியது. அதற்கு இப்னு தைமியா, “அவருக்கு உன்னோடு ஹஜ் செய்யப் போவதில் இஷ்டமில்லை” என்று பதிலளித்தார்கள்.
இறுதியில் அந்த ஜின், “உங்கள் கண்னியத்துக்குக் கட்டுப்பட்டு நான் இவரிடமிருந்து வெளியேறுகிறேன்” என்று கூறியது. அதற்கு அவர் (இப்னு தைமியா), “இல்லை; அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு மட்டுமே நீ இங்கிருந்து வெளியேற வேண்டும்.” என்று கூறினார்கள். அதற்கு அந்த ஜின், “சரி அப்படியே செல்கிறேன்” என்று கூறியது.
அதன் பிறகு பைத்தியம் பிடித்திருந்த மனிதர் தெளிவான சிந்தையோடு எழுந்து அமர்ந்து சுற்றுமுற்றும் பார்த்து விட்டு, “கண்ணியத்துக்குரிய ஷெய்ஹ் (இப்னு தைமியா) அவர்களின் சபைக்கு நான் ஏன் வந்திருக்கிறேன்?” என்று குழப்பத்தோடு கேட்டார். அதற்கு சுற்றியிருந்த பார்வையாளர்கள், “அதிருக்கட்டும்; அவரிடம் நீர் வாங்கிய அத்தனை அடிகளினதும் வேதனை எப்படியிருக்கிறதென்று முதலில் கூறுங்கள்” என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், “நான் எந்தத் தவறும் செய்யாதிருக்கும் போது ஷெய்ஹ் எதற்காக என்னை அடிக்க வேண்டும்?” என்று திருப்பிக் கேட்டார். அப்போது அங்கிருந்தோர், அந்த மனிதருக்குத் தான் அடிவாங்கியது பற்றிய எதுவுமே ஞாபகமில்லையென்பதையும், அதன் வேதனையைக் கூட அவர் உடலில் உணரவில்லை என்பதையும் புரிந்து கொண்டார்கள்.
இது மட்டுமல்லாமல், பல சந்தர்ப்பங்களில் ஷெய்ஹ் (இப்னு தைமியா) நோயாளிகளுக்கு ஓதிப் பார்க்கும் போது ஆயத்துல் குர்ஸீயையும் அடிக்கடி ஓதுவதுண்டு. மேலும், ஓதிப்பார்க்கும் ஏனையோருக்கு அன்னார் அறிவுரை கூறும் போது “முஅவ்விதத்தைன்” (பாதுகாப்புத் தேடும் இரண்டு குல் ஸூராக்கள்) வசனங்களோடு சேர்த்து ஆயத்துல் குர்ஸீயையும் ஓதுமாறு அடிக்கடி அறிவுறுத்துவார்கள்.
(ஃஜாத் அல் ம’ஆத் (ஷுஐப் அர்னாவுத் பதிப்பு): பாகம் 4, பக்கம் 67-69)
சென்ற எபிசோடில், ஏற்கனவே நாம் ஜின்கள் மேலாடியிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே ஓதிப்பார்த்துள்ளார்கள் என்பதை ஆதாரங்களோடு உறுதிப்படுத்திக் கொண்டோம். இந்த எபிசோடில், நபி (ஸல்) அவர்களின் அந்த முன்மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு அஹ்லுஸ் ஸுன்னாவைச் சேர்ந்த பெரும் பெரும் இமாம்கள் கூட ஜின்களை விரட்டுவதற்கு ஓதிப் பார்த்துள்ளார்கள் என்பதையும் தக்க ஆதாரங்களுடன் பார்த்து விட்டோம்.
இவற்றிலிருந்தெல்லாம் நமக்கு என்ன புலப்படுகிறது?
நபி (ஸல்) அவர்கள் முதல் இமாம்கள் வரை மார்க்கத் தெளிவு பெற்ற அனைத்து நல்லடியார்களும் மனித உடல்களுள் ஜின்கள் மேலாடலாம் என்பதைத் தெளிவாகவே ஊர்ஜிதப் படுத்தியுள்ளார்கள். அது மட்டுமல்லாமல், இவ்வாறு மேலாடிய ஜின்களைத் துரத்துவதற்கு மார்க்கம் கற்றுத்தந்த பல வழிமுறைகளையும் கூட கையாண்டிருக்கிறார்கள்.
அதாவது, இதைப் பகுத்தறிவு வாதம் பேசும் முஃதஸிலாக் கோட்பாடுடையோரின் நையாண்டிப் பாஷையில் கூறுவதென்றால், நபி (ஸல்) அவர்கள் தொடக்கம் இமாம்கள் வரை நேர்வழி பெற்ற அனைத்து நல்லடியார்களும் “பேயோட்டுவது போல்” ஜின் ஓட்டித் தானிருக்கிறார்கள்.
எனவே, மார்க்க வரம்புகளை மீறாமல், ஜின் மேலாடியிருக்கும் மனிதர்களுக்கு ஓதிப் பார்ப்பவர்களை (ருக்யா செய்பவர்களை)ப் பார்த்து இனிமேலும் யாராவது “பேயோட்டி” என்று நையாண்டி செய்வதாக இருந்தால், அவர் அறிந்து கொள்ளட்டும்; அவர்கள் நையாண்டி செய்வது, “ருக்யா” செய்பவரை அல்ல; அல்லாஹ்வின் தூதரையும், அன்னாரை முழுமையாகப் பின்பற்றும் இமாம்களையும் தான்.
இன் ஷா அல்லாஹ் வளரும்...
- அபூ மலிக்
|