பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் ==============================
தொடர் 5: சூத்திரதாரிகள்
Episode 65: நகருயிர் சார்ந்தோர் (Reptilians / Draconians) – தொடர்ச்சி – 4:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சென்ற எபிசோடில் நாம் இலுமினாட்டிகளுக்கும், ஷைத்தானிய ஜின்களுக்குமிடையில் திரைமறைவில் இருக்கும் இரகசிய உறவுகள் பற்றி சற்று விளக்கமாகப் பார்த்தோம். அந்த விளக்கங்களை உறுதிபடுத்தும் மார்க்க ஆதாரங்களை இப்போது பார்க்கலாம்:
ஆதாரம் 1: மனிதர்களிலுள்ள ஆண்களில் சிலர், ஜின்களிலுள்ள சில ஆண்களைக் கொண்டு பாதுகாவல் தேடிக் கொண்டிருந்தனர். இதனால் அவர்கள் (மனிதர்கள்), இவர்களுக்கு (ஜின்களுக்கு) தலைக்கணத்தை (இதன் மூலம்) அதிகமாக்கி விட்டனர். (அல்குர்ஆன் 72:6)
ஆதாரம் 2: ஒரு கூட்டத்தாரை அவன் நேர் வழியிலாக்கினான்; இன்னொரு கூட்டதாருக்கு வழிகேடு உறுதியாகி விட்டது. ஏனெனில் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வை விட்டு ஷைத்தான்களை பாதுகாவலர்களாக்கிக் கொண்டார்கள் - எனினும் தாங்கள் நேர்வழி பெற்றவர்கள் என்று (அவர்கள்) எண்ணுகிறார்கள். (அல்குர்ஆன் 7:30)
மேற்குறிப்பிடப்பட்ட இரண்டு வசனங்களிலும் வழிகெட்ட சில கூட்டத்தாரைப் பற்றிக் கூறும் போது அவர்கள், ஷைத்தானிய ஜின்களைத் தமது “பாதுகாவலர்களாக” ஆக்கிக் கொண்டார்கள் எனும் கருத்தை அல்லாஹ் கூறுகிறான். இங்கு “பாதுகாவலர்களாக” என்பதன் மூலம் அல்லாஹ் வரையறுப்பது, ஜின்களை அவர்கள் தமது “ரப்பாக” (கடவுளாக) பொருந்திக் கொண்டார்கள் என்பதைத் தான்.
அதாவது, இங்கு அல்லாஹ் கூறும் கருத்து, ஷைத்தானிய ஜின்களைக் கடவுள்களாக வணங்கி வழிபடும் இலுமினாட்டிகளைப் போன்ற கூட்டத்தவர்கள் மனிதர்களில் இருக்கிறார்கள் என்பது தான்.
இவ்வாறு ஷைத்தான்களை வணங்கும் மனிதர்களில் ஒரு சாரார், தாம் வணங்கிக் கொண்டிருக்கும் தீய சக்திகளை உண்மையில் நல்ல சக்திகள் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தாம் வணங்கும் ஷைத்தான்களை தேவர்கள், வானவர்கள் என்பது போலவே இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்லீஸ் தான் உண்மையான நல்ல கடவுள் என்பது போலவும், அவனைச் சார்ந்த ஷைத்தானிய ஜின்கள் தாம் உண்மையில் மனித இனத்தைக் காக்கும் வானவர்கள் என்பது போலவுமே இவர்களில் அனேகமானோர் தலைகீழாக நம்பிக்கையூட்டப்பட்டு ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறானவர்களுக்கு செருப்படி கொடுப்பது போலவே பின்வரும் வசனத்தில் வானவர்கள் கூறும் சாட்சியங்கள் அமைந்திருப்பதைப் பார்க்கலாம்:
ஆதாரம் 3: அவர்கள் அனைவரையும் அவன் ஒன்று திரட்டும் அந்நாளில் வானவர்களிடம், "இவர்கள் தானா உங்களை வணங்கிக்கொண்டு இருந்தார்கள்?" என்று (வானவர்களை வணங்கி வந்தவர்களைக் காட்டிக்) கேட்பான். (இதற்கு வானவர்களோ,) "நீ மிகத் தூய்மையானவன்; நீயே எங்கள் பாதுகாவலன்; இவர்கள் அல்லர். மாறாக இவர்கள் ஜின்களையே வணங்கி வந்தார்கள்; இவர்களில் பெரும்பாலோர் அவர்கள் (ஜின்கள்) மீதே நம்பிக்கை கொண்டிருந்தார்கள்" என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் 34 : 40-41)
மேலே நாம் கூறிய விளக்கத்தை இங்கு வானவர்களின் வாக்குமூலம் உறுதிப் படுத்துகிறது. வானவர்களை / தேவர்களை வணங்குவதாக நினைத்துக் கொண்டு வணங்கிய மனிதர்களெல்லாம் உலகில் வணங்கி வந்தது உண்மையில் வானவர்களை அல்ல; ஷைத்தானிய ஜின்களை மட்டுமே என்பதை இங்கு வானவர்களின் வாக்குமூலமே தெளிவு படுத்தி விடுவதைப் பார்க்கலாம்.
ஆதாரம் 4: மேலும் அவர்கள் அனைவரையும் அவன் ஒன்று சேர்க்கும் (மறுமை) நாளில், (ஜின்களைப் பார்த்து), "ஓ! ஜின்களின் கூட்டத்தாரே! மனிதர்களில் அதிகமானோரை நீங்கள் (வழிகெடுத்து) உங்களுடன் சேர்த்துக் கொண்டீர்களே!" (என்று கூறுவான்). அதற்கு மனிதர்களில் அவர்களது (ஜின்களது) நண்பர்கள், "எங்கள் இறைவா! எங்களில் சிலர் சிலரைக் கொண்டு பயன் அடைந்திருக்கின்றோம். நீ எங்களுக்கு விதித்த கெடுவையும் (இப்போது) அடைந்தும் விட்டோம்" என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் 6:128)
இந்த வசனம் சந்தேகத்துக்கே இடமில்லாத வகையில் இலுமினாட்டிகளுக்கும், ஷைத்தானிய ஜின்களுக்கும் இடையிலிருக்கும் எல்லா இரகசியக் கொடுக்கல்வாங்கல்களையும் பட்டவர்த்தனமாகப் போட்டு உடைத்து விடுகிறது.
மனிதர்களில் அதிகமானோரை வழிகெடுத்து, நரகின் பால் கூட்டிச் செல்வதில் ஷைத்தானிய ஜின்களின் நேரடிப் பங்களிப்பை மட்டும் இங்கு அல்லாஹ் சொல்லிக் காட்டுவதோடு நிறுத்தி விடவில்லை. ஷைத்தானிய ஜின்களின் சதிகாரக் கூட்டத்தில் இலுமினாட்டிகளைப் போன்ற கேடு கெட்ட சில மனிதர்கள் கூட அங்கத்தவர்களாக இருக்கிறார்கள் என்பதையும், மற்றும் இருதரப்பினருக்குமிடையில் திரைமறைவில் கொடுக்கல் வாங்கல்கள் உறவுகள் கூட நடப்பதுண்டு என்பதையும் இந்த வசனம் நேரடியாகவே உறுதிப் படுத்துகிறது.
“மனிதர்களில் அதிகமானோரை வழிகெடுத்து விட்டீர்களே” என்று ஜின்களை விளித்து அல்லாஹ் குற்றம் சாட்டும் போது, அவர்களோடு உறவுகளைப் பேணி வந்த இலுமினாட்டி போன்ற மனிதர்களே அந்தக் குற்றச்சாட்டுக்கு, “எங்களில் சிலர் சிலரைக் கொண்டு பயன் அடைந்திருக்கின்றோம்” என்று பதிலளி்க்கின்றார்கள். அதாவது, “எங்களுக்கு ஜின்கள் உதவினார்கள்; நாங்கள் ஜின்களுக்கு உதவினோம். இதன் விளைவாக நம் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் உலகில் பயனடைந்து கொண்டோம்” என்பதைத் தான் இங்கு ஷைத்தானின் ஊழியர்களான மனிதர்கள் பதிலளிக்கிறார்கள்.
இலுமினாட்டிகளுக்கும், ஷைத்தானிய ஜின்களுக்கும் இடையில் திரைமறைவில் நிகழும் கொடுக்கல்வாங்கல்களை நிரூபிக்க இதை விடவும் ஒரு நேரடி ஆதாரம் தேவையே இல்லை. இனி மேலும் ஓர் ஆதாரத்தைப் பார்க்கலாம்.
ஆதாரம் 5: நம்பிக்கை கொண்டோரின் நேசன் அல்லாஹ்வே (ஆவான்). இருள்களிலிருந்து அவர்களை அவன் வெளிச்சத்தின் பால் கொண்டு வருகின்றான். ஆனால், நிராகரிப்பவர்களுக்கோ – தீய சக்திகளே (ஷைத்தான்களே) அவர்களின் நேசர்களாவர்; வெளிச்சத்திலிருந்து அவர்களை அவை இருள்களின் பால் கொண்டு செல்கின்றன. அவர்களே நரகவாசிகள்; அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பர். (அல்குர்ஆன் 2:257)
இங்கு இன்னொரு தகவலை அல்லாஹ் பதிவு செய்கிறான். அல்லாஹ்வை மாத்திரம் சார்ந்திருக்கும் முஃமின்களைத் தன் நேசத்துக்குரியவர்களாக அல்லாஹ் ஆக்கிக் கொள்கிறான் என்றும், இதன் வி்ளைவாக நல்லடியார்களை அல்லாஹ் இருள்களிலிருந்து காப்பாற்றி, வெளிச்சம் மிக்க திசை நோக்கிக் கூட்டிச் செல்கிறான் என்றும் கூறுகிறான்.
அதே நேரம், அல்லாஹ்வை நிராகரித்தவர்களைப் பொருத்த வரை, அவர்கள் அல்லாஹ்வின் பாதுகாப்பிலிருந்து தூரமாகி விடுவதால், அவர்களோடு நேசம் பாராட்டுவதற்கு ஷைத்தானிய சக்திகள் வந்து சேர்கின்றன என்றும் அல்லாஹ் கூறுகிறான். இதை இன்னொரு விதத்தில் கூறுவதென்றால், யாரெல்லாம் அல்லாஹ்வால் கைவிடப் பட்டு விடுகிறார்களோ, எந்தப் பாதுகாப்பும் இல்லாமல், அனாதரவாக விடப்பட்டிருக்கும் அவர்களைத் தேடி ஷைத்தானிய ஜின்கள் வருவது மட்டுமல்லாமல், அவர்கள் மீது உண்மையான நேசம் கொண்ட தோழர்களைப் போல் தம்மை அவர்களிடம் காட்டிக் கொள்ளவும் செய்கிறார்கள்.
ஷைத்தான்களின் இந்தப் பொய்யான நேசத்தை உண்மையென்று நம்பும் இறைநிராகரிப்பாளர்கள், உடனே அவர்களின் போலியான நேசத்தில் மயங்கி, அவர்களது பொறுப்பில் தம்மை ஒப்படைத்தும் விடுவார்கள். இவ்வாறு ஒப்படைக்கப் படும் இவர்களை உண்மையில் ஷைத்தான்கள் அழைத்துச் செல்வது, இன்னுமின்னும் இருள்கள் நிறைந்த அதள பாதாளத்துக்கு மட்டுமே என்பது தான் இங்கு கூறப்படும் கருத்து.
இந்தக் கருத்தை அப்படியே இன்றைய இலுமினாட்டிகளோடு பொருத்திப் பார்த்தால், இது எவ்வளவு தத்துரூபமாக, ஆச்சரியப்படத்தக்க அளவுக்குப் பொருந்திப் போகிறது என்பதைச் சிந்திப்போர் புரிந்து கொள்ளலாம். இனி இன்னோர் ஆதாரத்தை வேறொரு கோணத்திலிருந்து பார்க்கலாம்.
ஆதாரம் 6: "எனக்கும் மேலாக நீ கண்ணியப் படுத்திய இவரை(ஆதமை)ப் பார்த்தாயா? கியாம நாள் வரை எனக்கு நீ அவகாசம் கொடுத்தால், இவரது சந்ததிகளில் சிலரைத் தவிர (மற்ற அனைவரையும்) நிச்சயமாக நாசம் செய்வேன்" என்று (இப்லீஸ்) கூறினான்.
"நீ போ (அவ்வாறே செய்து கொள்). அவர்களில் யாரெல்லாம் உன்னைப் பின்பற்றுகிறார்களோ, நிச்சயமாக நரகம் தான் உங்கள் கூலியில் நிரப்பமானதாக இருக்கும்.” என்று (அல்லாஹ்) கூறினான்.
"இன்னும் அவர்களில் உனக்கு முடிந்தோரை உன் குரலைக் கொண்டு வழி கெடுத்துக் கொள்; உன் குதிரைப் படையையும், காலாட்படையையும் அவர்களுக்கு எதிராக ஏவிக் கொள்; அவர்களது பொருட் செல்வங்களிலும், குழந்தைகளிலும் நீ பங்காளியாகிக் கொள்; அவர்களுக்கு வாக்குறுதிகளையும் அளித்துக் கொள்!" (என்றும் அல்லாஹ் கூறினான்). (அல்குர்ஆன் 17:62-64)
இதற்கு முன்பும் அடிக்கடி நாம் பார்த்த ஓர் ஆதாரம் தான் இது. மீண்டும் இங்கும் கொண்டுவருகிறோம். அல்லாஹ்வுக்கும், இப்லீஸுக்கும் இடையில் நடக்கும் இந்த உரையாடலில் ஆதம் (அலை) அவர்கள் மீது இப்லீஸுக்கு இருக்கும் கொலைவெறி இங்கு தெளிவாகத் தெரிகிறது. பொறாமையின் விளைவாகத் தன்னை மறந்து வெறி தலைக்கேறிய நிலையில் இங்கு இப்லீஸ் அல்லாஹ்வையே எதிர்த்துப் பேசத் துணிந்து விட்டான் என்றால், மனிதர்கள் மீது அவனுக்கு இருக்கும் வெறி எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
அல்லாஹ்விடம் இங்கு சவால் விடும் இப்லீஸ், கியாம நாள் வரை மனித இனத்தவர்களை மொத்தமாக நாசம் பன்னாமல் தான் ஓயப் போவதே இல்லையென்று தான் இங்கு சபதம் செய்கிறான். இந்தச் சபதத்துக்கு அல்லாஹ் “அப்படியொன்றும் உன்னால் செய்து கிழித்து விட முடியாது” என்று பதில் சொல்லியிருக்கலாம். ஆனால் அப்படிச் சொல்லவில்லை. மாறாக, அவனது சபதத்தை நிறைவேற்ற அவனுக்கு அனுமதியளிப்பதாகவே அல்லாஹ்வின் பதில் அமைந்திருக்கிறது.
அனுமதியளித்ததோடு மட்டும் அல்லாஹ் நின்று விடவில்லை; இப்லீஸின் சபதத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான வசதி வாய்ப்புகளைக் கூட அல்லாஹ்வே இங்கு வலிந்து அவனுக்குக் கொடுக்கவும் செய்கிறான். மனிதர்களை நாசம் செய்வதற்காகவென்றே குதிரைப்படை, காலாட்படை என்று ஜின்களின் பல படைப் பிரிவுகளைக் கூட அவனுக்கு அல்லாஹ் கொடுக்கிறான். மேலும், மனிதர்களது “பொருட் செல்வத்தில்” பங்காளியாகிக் கொள்ளும் அதிகாரத்தையும் அல்லாஹ்வே இங்கு இப்லீஸுக்குக் கொடுக்கிறான்.
மனிதர்களது பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் இப்லீஸின் இந்த அதிகாரத்தின் மூலமே பல நூற்றாண்டுகளாக உலக பொருளாதாரத்தின் பெரும் பகுதியை இலுமினாட்டிகள் எனும் தனது முகவர்கள் மூலம் தனது கட்டுப்பாட்டுக்குள் இப்லீஸ் வைத்துக் கொண்டிருக்கிறான். பொருளாதாரதின் மீது தனக்கிருக்கும் இந்த ஆதிக்கத்தை வைத்துத் தான், ஹராமாக உழைப்போரும், இலுமினாட்டிகளும் செல்வச் செழிப்போடு வாழ்பவர்களாகவும், ஹலாலான உழைப்பில் வாழ முயற்சிப்போரில் அனேகமானோர் மிகவும் கஷ்டப்பட்டே பொருளாதாரத்தைத் திட்டும் விதமாகவுமே இன்றைய உலக பொருளாதாரத்தை இப்லீஸ் திட்டமிட்டு வடிவமைத்திருக்கிறான். இந்தத் திட்டத்தை உலகில் அரங்கேற்றுவதற்கு இலுமினாட்டிகளை அடியாட்களாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான்.
ஆதாரம் 7: மேலும், நீங்கள் என்னையன்றி அவனையும் (இப்லீஸையும்), அவனது சந்ததியரையும் (ஷைத்தானிய ஜின்களையும்) (உங்கள்) நேசர்களாக எடுத்துக் கொள்வீர்களா? அவர்களோ உங்களுக்குப் பகைவர்களாக இருக்கிறர்கள். அக்கிரமக்காரர்கள் (இவ்வாறு) மாற்றிக் கொண்டது மிகவும் கெட்டதாகும். (அல்குர்ஆன் 18:50)
இந்த வசனத்திலும் அல்லாஹ் மீண்டும் நமது கருத்தை இன்னும் உறுதிப் படுத்துகிறான். அல்லாஹ்வின் நேசத்தைப் பெறுவதற்கு முயற்சிப்பதற்குப் பதிலாக இப்லீஸின் சந்ததிகளாகிய ஷைத்தானிய ஜின்களின் நேசத்தை பெறுவதற்கு முயற்சிப்பவர்களை அல்லாஹ் எச்சரிக்கிறான். மேலும், அல்லாஹ்வின் நேசத்துக்குப் பாத்திரமாவதை விட, இப்லீஸின் நேசத்துக்குப் பாத்திரமாகும் விதத்தில் தமது உறவுகளை மாற்றிக் கொள்வோரை அல்லாஹ் இங்கு அக்கிரமக் காரர்கள் என்றே அழைக்கிறான்.
இதையும் கொஞ்சம் இலுமினாட்டிகளோடு பொருத்தி யோசித்துப் பாருங்கள். இலுமினாட்டிகளை மிஞ்சிய வடிகட்டிய அக்கிரமக் காரர்கள் யாருமே இன்றைய உலகில் கிடையாது. அதாவது இங்கு உணர்த்தப்படும் மறைமுகமான கருத்து, இந்தப் பூமியில் அளவுக்கதிகம் அக்கிரமம் செய்யக் கூடிய கூட்டத்தவர்கள் எப்பொழுதுமே ஷைத்தானிய ஜின்களின் கூட்டாளிகளாகவே இருப்பார்கள் என்பது தான்.
ஆதாரம் 8: மேலும் (அவர்கள் / நயவஞ்சகர்கள்) முஃமின்களைச் சந்திக்கும் போது, "நாங்கள் ஈமான் கொண்டிருக்கிறோம்" என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் தமது ஷைத்தான்களுடன் தனிமையில் இருக்கும்போது, "நிச்சயமாக நாங்கள் உங்களுடன் தான் இருக்கிறோம்; நிச்சயமாக நாங்கள் (அவர்களைப்) பரிகாசம் செய்பவர்களாகவே இருக்கிறோம்" எனக் கூறுகிறார்கள். (அல்குர்ஆன் 2:14)
இந்த வசனத்திலிருக்கும் “ஷைத்தான்கள்’ எனும் பதத்துக்குப் பரவலாக வழங்கப்படும் வியாக்கியானம், “இதிலிருக்கும் ஷைத்தான்கள் எனும் பதம், அன்றைய அரேபியாவில் நபி (ஸல்) அவர்களை எதிர்த்த கெட்ட மனிதர்களையே குறிக்கிறது” என்பது தான். இதை மறுப்பதற்கில்லை. ஆனால், இந்த அர்த்தத்தில் மட்டும் தான் இந்த வசனம் “ஷைத்தான்கள்” எனும் பதத்தைக் கூறுகிறது; ஜின் இனத்தைச் சேர்ந்த ஷைத்தானை இந்த இடத்தில் அல்லாஹ் குறிக்கவே இல்லை” என்று யாருமே இதை வைத்து வாதிட்டு விட முடியாது. அவ்வாறு வாதிடுவதற்கான எந்த முகாந்திரத்தையும் அல்லாஹ் இங்கு ஏற்படுத்தவில்லை. “ஷைத்தான்கள்” எனும் பதம் இங்கு பொதுப்படையாகவே கூறப் பட்டுள்ளது.
ஒரு விடயத்தை இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டும். குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடும் பல செய்திகள், எல்லாக் காலத்துக்கும், பிரதேசங்களுக்கும் பொருந்தும் விதமாகவே கூறப்பட்டிருக்கும். அதாவது, இந்தக் குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் அரேபியாவிலிருக்கும் ஒருவர் இதை வாசிக்கும் போது, அச்சொட்டாக அக்கால அரபுகளுக்கென்றெ எழுதப்பட்ட ஒரு நூல் போலவே இந்தக் குர்ஆனை அவர் கண்டுகொள்வார்.
அதே நேரம் இதே குர்ஆனை இன்றைய உலகில் மேலைத்தேய நாட்டிலிருக்கும் ஒருவர், தனது அறிவியல் பின்னணிகளை வைத்து வாசித்தால், அவரது பார்வையில் இது அன்றைய அரபுகளுக்கு மட்டுமே எழுதப்பட்ட ஒரு நூல் என்பது போல் தோற்றமளிக்காது. மாறாக, இன்றைய உலகில் நடக்கும் பல உண்மைகளை அன்றே இந்தக் குர்ஆன் ஆருடம் கூறியிருப்பதைப் போலவே அவர் இதைக் கண்டுகொள்வார். இது தான் இந்தக் குர்ஆனின் மகத்துவம்.
எல்லாக் காலங்களுக்கும் பொருந்தும் விதமாகப் பல செய்திகளைப் பொதித்து அல்லாஹ் அருளியிருக்கும் அற்புதமே இந்தக் குர்ஆன். இதன் விளைவாக, அறிவியல், மற்றும் தகவல்கள் சார்ந்த பல குர்ஆன் வசனங்களைப் பொருத்தவரை, ஒரே வசனத்திலிருந்து, சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ற புதுப்புது வியாக்கியாங்கள் காலத்துக்குக் காலம் அதிலிருந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். இவ்வாறான வசனங்களிலிருந்து தத்தம் காலத்துக்கும், பிரச்சினைகளுக்கும் பொருந்தக் கூடிய மிக நெருக்கமான பொருளை எடுத்துக் கொள்ள வேண்டியது அந்தந்தக் காலங்களில் வாழும் மக்களைச் சார்ந்தது.
இந்த அடிப்படையிலேயே மேற்கூறப்பட்ட குர்ஆன் வசனத்திலிருக்கும் “ஷைத்தான்கள்” எனும் பதத்தை நாம் அனுகுகிறோம். அதாவது, இவ்வசனத்திலிருக்கும் “ஷைத்தான்கள்” எனும் பதம், அன்றைய அரேபியாவில் நபி (ஸல்) அவர்களை எதிர்த்த கெட்ட மனிதர்களைக் குறித்திருக்கும் அதே வேளை, இன்றைய காலத்தில் இதிலிருக்கும் “ஷைத்தான்கள்’ எனும் பதம், கெட்ட மனிதர்களை மட்டும் குறிக்கவில்லை; இலுமினாட்டிகளோடு இரகசியத் தொடர்பிலிருக்கும் ஷைத்தானிய ஜின்களையும் சேர்த்தே குறிக்கிறது என்பதே இங்கு நமது நிலைபாடு.
வெளியுலகில் நல்லவர்கள் போலவும், மனித இனத்தவர்களின் மேன்மைக்காகப் பாடுபடுபவர்கள் போலவும் நடித்து, நயவஞ்சகர்களாக முழு மனித சமூகத்தவரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கும் இன்றைய இலுமினாட்டிகள், தனிமையில் தாம் வணங்கும் தமது ஷைத்தானிய ஜின்களைச் சந்திக்கும் போது, “நாம் என்றுமே உங்களைச் சார்ந்தோர் தான். உங்களோடு சேர்ந்து நாங்களும் இந்த முட்டாள் மனித இனத்தவர்களைப் பரிகசிக்கிறோம்” என்றே கூறுகிறார்கள் எனும் அர்த்தம் இங்கு அழகாக வெளிப்படுவதை யாருமே மறுத்து விட முடியாது.
இனி இன்னோர் ஆதாரத்தைச் சற்று மாறுபட்ட கோணத்திலிருந்து பார்க்கலாம்.
ஆதாரம் 9: (தர்மம் செய்வதால்) வறுமை (உண்டாகிவிடும் என்று, அதைக்) கொண்டு ஷைத்தான் உங்களைப் பயமுறுத்துகிறான்; ஒழுக்கங்கெட்ட செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான். ஆனால் அல்லாஹ்வோ, (தருமம் செய்வோருக்குத்) தனது மன்னிப்பையும், மிக்க செல்வத்தையும் வாக்களிக்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் சூழ்ந்தவன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் 2:268)
இந்த வசனத்தை நாம் இங்கு கொண்டுவந்திருப்பது இலுமினாட்டிகளுக்கும், ஷைத்தானிய ஜின்களுக்கும் இடையிலிருக்கும் தொடர்புகளை நேரடியாக நிரூபிக்கும் நோக்கத்தில் அல்ல. மாறாக, இந்த வசனத்தின் வெளிச்சத்தில் இன்றைய உலகில் இலுமினாட்டிகள் மூலம் இப்லீஸ் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் சில சதித்திட்டங்களை அம்பலப் படுத்துவதற்கு மட்டுமே இதை இங்கு கொண்டு வருகிறோம். அவற்றைக் கொஞ்சம் விலாவாரியாகப் பார்க்கலாம்.
“தர்மம் செய்தால், செல்வம் தூய்மையடையும்”; “தர்மம் செய்தால், செல்வம் பெருகும்”; “தர்மம் செய்தால், நிம்மதி கிடைக்கும்”; “தர்மம் செய்தால், அல்லாஹ்வின் அருள் கிடைக்கும்”... இது போன்ற செய்திகளையே நமது மார்க்கம் நமக்கு ஆணித்தரமாகக் கூறுகிறது.
“தர்மம் செய்வதால் ஒருவனது இரணத்தில் குறைவு ஏற்படுவதில்லை; ஏனெனில் ஒவ்வொரு மனிதனது இரணத்துக்கும் அல்லாஹ் மட்டுமே பொறுப்பாளன். எனவே, அல்லாஹ் நமக்கு வழங்கும் செல்வத்தில் ஒரு பகுதியை நாம் அனுபவிப்பதோடு, இன்னொரு பகுதியை மற்றவருக்கும் கொடுக்க வேண்டும்.” என்பதே அல்லாஹ் நமக்குச் சொல்லியிருக்கும் செய்தி.
இந்தச் செய்திக்குத் தலைகீழான ஒரு செய்தியையே ஒவ்வொரு மனிதனது உள்ளத்துக்குள்ளும் இப்லீஸ் விதைத்த விரும்புகிறான்.
“தர்மம் செய்தால், இருக்கும் செல்வம் சுருங்கி விடும். தொடர்ந்தும் கொடுத்துக் கொண்டேயிருந்தால், படிப்படியாக இருக்கும் சேமிப்புக் குறைந்து, இறுதியில் ஓட்டாண்டியாக வேண்டிய நிலை ஏற்படும். எனவே, கஷ்டப்பட்டு சம்பாதித்தவற்றை அனுபவிப்பது போக மீதத்தைப் பத்திரமாகச் சேமித்து வைக்க வேண்டும். ஏனெனில், சேமிப்பு ஒன்றே நம்மை எதிர்காலத்தில் பாதுகாக்கும்.”
இது தான் ஒவ்வொரு மனிதனது உள்ளத்துக்குள்ளும் இப்லீஸ் விதைக்க விரும்பும் அடிப்படைக் கருத்து. இந்தக் கருத்தை இப்லீஸ் இரண்டு அடிப்படைகளில் மனித உள்ளங்களில் விதைக்கிறான்.
முதலாவது அடிப்படை: ஒவ்வொரு மனிதனுக்குமென்று சாட்டப்பட்டிருக்கும் “கரீன்” எனும் ஜின் வாயிலாக அவனது உள்ளத்துக்குள் வறுமை பற்றிய அச்சத்தை அதிகரிக்கச் செய்து, அதன் மூலம் கஞ்சத்தனத்தை அவனுக்குள் வளர்க்க முயற்சிக்கிறான்.
இரண்டாவது அடிப்படை: “சேமிப்பு ஒன்றே சிறந்தது” / “நாளைய தேவைகளுக்காக இன்றே சேமித்து வைப்போம்” / “இருப்பதையெல்லாம் இப்போதே மற்றவருக்குக் கொடுத்து விட்டால், நாளை நமக்கென்று தேவை ஏற்படும் போது எவனுமே நமக்குக் கொடுக்கப் போவதில்லை”... என்பன போன்ற சுயநலம் மிக்க பல சித்தாந்தங்களை இன்றைய உலக கலாச்சார மாற்றங்களினூடாக விதைத்து, கஞ்சத்தனத்தை ஒரு “ட்ரெண்ட்” ஆக இன்றைய உலகில் இப்லீஸ் உருவாக்கியிருக்கிறான். இதை நாம் இன்று கண்கூடாகக் காணலாம்.
இலுமினாட்டிகளால் உருவாக்கப் பட்டதே இன்றைய உலகின் உயிர் நாடியாக விளங்கும் வங்கி முறைப் பொருளாதாரம். உண்மையில் இந்த வங்கிகள் நமக்குச் சொல்லும் அடிப்படைச் செய்தி என்னவென்பதைப் புரிந்து கொண்டாலே, இலுமினாட்டிகள் இந்த முறையை உருவாக்கியதற்கான அடிப்படை நோக்கங்களைப் புரிந்து கொள்ளலாம். பல்வேறு பரப்புரைகள் மூலமாகவும், விளம்பரங்கள் வாயிலாகவும், நவீன பொருளியல் கற்கை நெறிகளினூடாகவும் வங்கிகள் நமக்குச் சொல்லும் அடிப்படைச் செய்திகள் இவை தாம்:
“நீங்கள் கஷ்டப்பட்டு உழைப்பதை வேறெவருக்கும் கொடுக்க வேண்டியதில்லை; அடுக்கடுக்காகச் எமது வங்கிகளில் சேமித்து வையுங்கள்.”
“உங்கள் சேமிப்பு மட்டுமே உங்களை எதிர்காலத்தில் பாதுகாக்கும். எனவே, உங்கள் செல்வங்களை வங்கிகளில் சேமியுங்கள்.”
“சிறிய வயதிலேயே சேமிக்கும் பழக்கத்தைக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள்; ஏனெனில், சேமிப்பு ஒன்றே சிறந்தது.”
“சேமிப்பை ஊக்குவிக்க நாம் உங்களுக்கு வட்டி கூடத் தருகிறோம்”
வாசகர்கள் ஒவ்வொருவரும் நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள்; இந்தச் செய்திகளைத் தவிர வேறெந்தச் செய்தியையாவது எந்த வங்கியாவது நமக்குச் சொன்னதுண்டா? இந்தத் தாத்பர்யம் அல்லாத வேறெந்தத் தாத்பர்யத்தின் அடிப்படையிலாவது உலகில் எந்த வங்கியாவது இயங்கியதுண்டா? இல்லை.
உண்மையில் இந்தச் செய்தி என்ன சொல்ல வருகிறது?
பொருளாதாரத்தைப் பொருத்தவரை இஸ்லாத்தின் நிலைபாடு, “சம்பாதிக்கும் செல்வத்தில் ஒரு பகுதியை அனுபவிக்க வேண்டும்; இன்னொரு பகுதியை தர்மம் செய்ய வேண்டும். அதற்குப் பிறகு ஏதும் எஞ்சினால், அதைச் சேமித்து வைப்பதில் தவறில்லை.
இந்த நிலைபாட்டுக்குத் மாற்றமாகச் சிலர் தாம் சம்பாதிக்கும் மொத்தத்தையும் யாருக்குமே கொடுக்காமல் அடுக்கடுக்காகச் சேமித்து வைப்பதுண்டு. இவ்வாறானவர்களையே நாம் கஞ்சர்கள் என்று அழைக்கிறோம். கஞ்சர்களை இஸ்லாம் வன்மையாகக் வெறுக்கிறது.
பொருளாதாரம் என்பது ஓர் ஆற்றொழுக்கைப் போல் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும்; ஓரிடத்தில் அளவுக்கதிகம் தேங்கி விடக் கூடாது. தேங்கினால், அதுவே அருவருக்கத்தக்கதாக ஆகி விடும். இது தான் மார்க்கத்தின் நிலைபாடு. சுருக்கமாகச் சொன்னால், சேமிக்கும் பழக்கத்தை இஸ்லாம் மொத்தமாகத் தடை செய்யவில்லை. அதே நேரம் பொருளாதாரத்தைச் சேமிப்பதையே அடிப்படையாகக் கொண்ட எந்தக் கோட்பாட்டையும் இஸ்லாம் ஒருபோதும் சரிகண்டதில்லை.
இந்த நடைமுறைக்கு முற்றிலும் தலைகீழான ஒரு வழிமுறையில் தான் வட்டியை அடிப்படையாகக் கொண்ட நவீன பொருளியல் மூலமும், வங்கி வலைப்பின்னல்கள் மூலமும் இலுமினாட்டிகள் இன்றைய உலகின் மொத்தப் பொருளாதாரத்தையும் வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள். இலுமினாட்டிகளின் இந்தப் பாரிய செயல்திட்டம் உண்மையில் யாருடைய திட்டத்தை அமுல் படுத்துகிறது? இப்லீஸின் திட்டத்தை மட்டுமே என்பது தான் இதற்கான ஒரே பதில்.
அடுத்தவனுக்கும் கொடுக்கச் சொல்லி இஸ்லாம் போதிக்க, அடுத்தவனிடம் இருப்பதையும் பிடுங்கி, அதையும் பதுக்கி வைப்பது எப்படி என்பதையே இலுமினாட்டிகளால் வடிவமைக்கப் பட்டிருக்கும் வட்டியை அடிப்படையாகக் கொண்ட இன்றைய பொருளாதாரம் உலகுக்குப் போதிக்கிறது.
இதன் விளைவாக, “தர்மம் செய்வோரே புத்திசாலிகள்” என்று இஸ்லாம் கற்பித்த “ட்ரெண்ட்” செத்துப் போய், “கஞ்சனாக இருப்பவனே புத்திசாலி; தர்மம் செய்பவன் இளிச்சவாயன்” எனும் ஒரு புதிய “ட்ரெண்ட்” இன்றைய உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.
இப்லீஸின் திட்டம், ஷைத்தானிய ஜின்கள் மூலம் இலுமினாட்டிகளுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டு, அது இன்று இலுமினாட்டிகள் வாயிலாக உலகில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
மேற்குறிப்பிடப்பட்ட குர்ஆன் வசனம் கூறும், “வறுமையைக் கொண்டு ஷைத்தான் உங்களை அச்சுறுத்துகிறான்” எனும் கருத்தை இன்றைய உலகில் தத்துரூபமாக நாம் பார்ப்பதைப் போல் இதற்கு முன் எந்தச் சமூகத்தவர்களும் பார்த்திருக்க மாட்டார்கள்.
இதே போல தான் இந்தக் குர்ஆன் வசனம் சொல்லும் அடுத்த செய்தியும் அமைந்திருக்கிறது.
“ஒழுக்கங்கெட்ட செயல்களைச் செய்யுமாறும் (ஷைத்தான்) உங்களை ஏவுகிறான்.” எனும் வாசகத்தின் பொருளையும் இன்றைய உலகின் கலாச்சாரப் பின்னணியோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.
பாலியல் தேவை ஏற்படும் போது காலதாமதம் செய்யாமல் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதே இஸ்லாம் கூறும் அடிப்படைக் கட்டளை. இந்தக் கட்டளை கூட இன்று தலைகீழாகவே உலகில் பின்பற்றப்படுகிறது.
“இளமைக் காலத்தில் நண்பர்களோடும், காதலர்களோடும் அனுபவிக்க வேண்டிய எவ்வளவோ சுவாரசியமான அம்சங்கள் வாழ்வில் இருக்கின்றன. இளமைக் காலத்திலேயே திருமணம் செய்தால், வாழ்வின் பல இன்பங்களை Enjoy பன்ன முடியாது. பொறுப்புக்கள் அதிகம். பிரச்சினைகள் அதிகம். எனவே, இளமைக் காலத்தை நண்பர்களோடும், காதல் ஜோடிகளோடும் ஜாலியாகக் கழித்து விட்டு, பிறகு நிதானமாக செட்டில் ஆகிக் கொள்ளலாம்.” என்பது தான் இன்றைய உலகின் இளவட்டங்களின் ஏகோபித்த சிந்தனைப் போக்கு. அனேகமான முஸ்லிம்கள் கூட இதற்கு விதிவிலக்கில்லை.
இது யார் உருவாக்கிய “ட்ரெண்ட்”? யார் கற்பித்த கலாச்சாரம் இது? எவ்வாறு இந்தக் கலாச்சாரம் மனித சமூகத்துக்குள் ஊடுறுவியது?
“கல்வி கற்பதற்கு ஆண்களுக்கு இருக்கும் அதே உரிமை பெண்களுக்கும் இருக்கிறது” எனும் கருப்பொருளுக்குத் தப்பான வியாக்கியானம் கொடுத்ததன் விளைவாக, ஆரம்பப் பள்ளிப் பருவத்திலேயே ஆண்களையும், பெண்களையும் ஒரே வகுப்பறையில் அடைத்து வைக்கிறது இலுமினாட்டிகளின் நவீன கல்வித்திட்டம். இதன் விளைவாக, பூப்பெய்துவதற்கு முன்னரே சிறுவர்களுக்கு எதிர்ப்பாலினத்தவர் மீது இனக்கவர்ச்சி ஏற்பட்டு விடுகிறது.
படிக்கப் போகும் போதும், வேலைக்குப் போகும் போதும் வழி நெடுகிலும் நவீன போக்குவரத்துச் சாதங்களில் ஆண், பெண் இருபாலாரும் வயது வித்தியாசமின்றி ஒட்டிக் கொண்டும், உரசிக் கொண்டுமே தினசரி நேரத்தில் ஒரு பகுதியை கழிக்கிறது. இதன் விளைவாக ஒவ்வொருவர் உள்ளத்திலும் விதைக்கப்படும் விரசமும், ஆபாசமும் சொல்லி மாளாது. நின்ற நிலையிலேயே நெரிசலான வண்டிகளில் நடக்கும் “இடித்தல்” உடலுறவுகள் ஏராளம். விரும்பியோ, விரும்பாமலோ இவ்வாறான போக்குவரத்துக்களில் ஈடுபடுவோர் விபச்சாரம் செய்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் பலருக்குண்டு.
இன்னொரு புறம் வேலைக்குப் போகிறேனென்று பெண்களில் ஒரு சாரார் Handbag ஐத் தோளில் தொங்கப் போட்டுக் கொண்டு மஹ்ரமானோர் துணையில்லாமல் அவிழ்த்து விட்ட ஆடுகள் போல் ஊரெல்லாம் சுற்ற, அவர்களைக் கண்களாலும், கைகளாலும் கற்பழிக்கவென்றே ஒரு கூட்டம் மெனக்கெட்டு அலைந்து கொண்டிருக்க, வேலைத்தளங்களில் இவர்களை முறைகேடாக அனுபவிக்கவென்றே சக தொழிலாளிகள், மேலதிகாரிகள் என்று இன்னொரு கூட்டம் குறி வைத்துக் காய் நகர்த்த.....
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இஸ்லாத்தின் கட்டளைகளுக்கு நேர் எதிரான நடைமுறைகளை இன்றைய உலகில் அவிழ்த்து விட்டது மட்டுமல்லாமல், “இது தான் இன்றைய உலகின் ட்ரெண்ட்” என்பது போல் உலக கலாச்சாரமே தலைகீழாக மாறியிருக்கிறதே.... இந்த மாற்றத்தை உலகில் திட்டமிட்டு ஏற்படுத்தியது யார்? இதற்கும் ஒரே பதில், இலுமினாட்டிகள் என்பது தான். இலுமினாட்டிகள் இதை ஏன் திட்டமிட்டுச் செய்கிறார்கள்? இப்லீஸின் திட்டம் இது என்பதால் மட்டும் தான்.
ஆக, இந்தக் குர்ஆன் வசனத்தின் வெளிச்சத்தில் இன்றைய உலகின் கலாச்சாரச் சீரழிவுகளுக்கு இலுமினாட்டிகளே காரணம் என்பதைக் கண்டுகொண்டோம். மேலும், இதையெல்லாம் இலுமினாட்டிகள் தம் சுய விருப்பத்தின் அடிப்படையில் செய்யவில்லை. மாறாக, இப்லீஸ் அவர்களிடம் ஒப்படைத்திருக்கும் பணியையே இலுமினாட்டிகள் உலகில் கச்சிதமாக அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் மேற்கண்ட வசனத்தின் வெளிச்சத்தில் நாம் புரிந்து கொண்டோம்.
இலுமினாட்டிகளுக்கும், ஷைத்தானிய ஜின்களுக்கும் இடையிலிருக்கும் கள்ளத் தொடர்புகளை இதுவரை நாம் பல ஆதாரங்களின் வெளிச்சத்தில் அறிந்து கொண்டோம். இனி, இப்லீஸின் சந்ததிகளுக்கும், இலுமினாட்டிகளுக்கும் இடையில் ஏற்பட்ட இந்தப் பிரிக்க முடியாத உறவுகள் என்னென்ன அடிப்படைகளில் ஏற்பட்டது என்பதை இன் ஷா அல்லாஹ் அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.
இன் ஷா அல்லாஹ் வளரும்...
- அபூ மலிக்
|