பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் ==============================
தொடர் 5: சூத்திரதாரிகள்
Episode 65: நகருயிர் சார்ந்தோர் (Reptilians / Draconians) – தொடர்ச்சி – 4:
Episode 66: நகருயிர் சார்ந்தோர் (Reptilians / Draconians) – தொடர்ச்சி – 5:
இலுமினாட்டிகள் என்று அழைக்கப் படும் ஒரு ஷைத்தானியப் படைப்பிரிவை மனித இனத்துக்குள் எவ்வாறு இப்லீஸைச் சேர்ந்த ஷைத்தானிய ஜின்களால் உருவாக்க முடிந்தது?
மனித இனத்தைக் கருவருக்கும் ஷைத்தானிய ஜின்களின் திட்டத்துக்கு உதவி செய்யும் மனித இனத்தைச் சேர்ந்த துரோகிகளாக இலுமினாட்டிகள் மாறியது ஏன்? எவ்வாறு இந்த மாற்றம் நிகழ்ந்தது?
இந்தக் கேள்விகளுக்கான விடைகளைப் புரிந்து கொள்வதாக இருந்தால், அதற்கு முன், மனிதர்கள் மீது இந்த Reptilian ஜின்களுக்குப் பௌதீக ரீதியிலான ஆதிக்கம் அதிகரிப்பதற்கு ஏதுவாகை அமையக் கூடிய ஒருசில அடிப்படைக் காரணிகளை நாம் சரியாக அடையாளம் கண்டு, புரிந்து கொள்ள வேண்டும். இதைச் சரியாகப் புரிந்தால் தான், இலுமினாட்டிகள் எனும் மனித ஷைத்தான்களை ஷைத்தானிய ஜின்கள் உருவாக்கியதன் அடிப்படை புரியும். எனவே, இந்த அடிப்படைக் காரணிகள் பற்றிக் கொஞ்சம் விலாவாரியாக அலசலாம்.
இந்தத் தொடரின் முதலாவது பாகத்தில் நாம் அறிவியல் / விஞ்ஞானம் சார்ந்த பல அடிப்படைகளைப் பற்றி அலசினோம். அந்த அடிப்படைகளில் ஒருசிலதை இங்கு நாம் மீட்டிக் கொள்வதன் மூலம் மட்டுமே இப்போது நான் சொல்லப் போகும் சில அடிப்படைகள் சரியாகப் புரியும். எனவே, இந்தத் தொடரின் முதல் பாகத்தை வாசிக்காதவர்கள் திரும்பிச் சென்று வாசித்து விட்டு வருவதற்கு இதுவே சிறந்த தருணமாக இருக்குமென்று கருதுகிறேன்.
ஏற்கனவே இந்தத் தொடரின் முதல் பாகத்தில், இந்தப் பிரபஞ்சத்தில் சடப்பொருள் என்று எதுவுமே கிடையாது; அனைத்துமே சக்தி அதிர்வலைகளின் பிரதிபலிப்புக்கள் மட்டுமே என்பதை நாம் பார்த்தோம். இந்த மொத்தப் பிரபஞ்சமுமே இயங்குவது பல்வேறுபட்ட அதிர்வலைகளின் மாறுபட்ட அதிர்வெண்களுக்கமைய மட்டுமே என்பதையும் நாம் பார்த்தோம். இந்த அடிப்படைகளை மனதில் வைத்துக் கொண்டு இப்போது ஒருசில உண்மைகளை நாம் தெரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.
இந்தப் பிரபஞ்சத்தில் ஒவ்வொரு மனிதனையும் அல்லாஹ் தனித்துவமான ஒரு பிறவியாகவே படைத்திருக்கிறான். ஒவ்வொரு மனிதனது தனித்துவத்துக்கும் அடிப்படையில் பொறுப்பாக இருப்பது அவனது DNA எனும் மரபணு விரிபரச் சுருள் தான்.
அதாவது, ஒவ்வொரு மனிதனையும் தனித்துவம் மிக்கவனாக அடையாளப் படுத்தக் கூடிய அவனது தோற்றம், முகஜாடை, கண்கள், நிறம், பருமன், குரல், பேச்சு, மூளை, சிந்தனைத் திறன், சிந்திக்கும் முறை, குணாதிசயங்கள், உணர்ச்சி மட்டங்கள், உணர்வுகளைக் கையாளும் விதம், சுற்றுச் சூழலுக்கேற்ற இசைவாக்கம்... போன்ற அனைத்துமே அவனது DNA எனும் மரபணுச் சுருள்களில் தோற்றுவிக்கப் பட்டிருக்கும் தனித்துவமான மாற்றங்களின் விளைவுகள் தாம். யாராலும் மறுக்க முடியாத உண்மை இது.
இந்த உண்மையைச் சற்று ஆழமாக சிந்திக்கும் போது இன்னோர் உண்மை நமக்கு இலகுவாகப் புலப்படும். அதாவது, ஒருவனது குணாதிசயங்கள், சிந்தனைத் திறன், சிந்திக்கும் விதம், உடை, நடை, பாவனை ஆகியவற்றை இன்னொருவர், தான் விரும்பும் விதத்தில் மாற்றியமைக்க விரும்பினால், அந்த மனிதனது DNA இல் அதற்கேற்ற சில மாற்றங்களை ஏற்படுத்தினாலே போதும்; எதிர்பார்க்கும் மொத்த மாற்றங்களும் அவனிடம் இயல்பாகவே ஊற்றெடுப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கலாம்.
பொதுவாகச் சராசரி மனிதர்களாகிய நாம், நமது குழந்தைகளை வளர்க்கும் போது, அவர்களை நாம் ஆசைப் படுவது போல் நல்ல குணாதிசயங்களும், ஆரோக்கியமும் மிக்கவர்களாக வளர்ப்பதற்கு எவ்வாறெல்லாம் முயற்சிக்கிறோம்? தினமும் அந்தக் குழந்தைக்கு நல்ல விடயங்களைச் சொல்லிக் கொடுப்பதன் மூலமும், தினசரி பயிற்சிகள் அளிப்பதன் மூலமும், தீயவற்றைத் தவிர்க்கும் சூழலை அமைத்துக் கொடுப்பதன் மூலமும் சுற்றி வளைத்து அவர்களது குணாதிசயங்களை வடிவமைக்க மட்டுமே சாதாரண மனிதர்களாகிய நம்மால் முடிகிறது.
ஆனால், இதே குழந்தைகளின் குணாதிசயங்களை நல்லவையாக மாற்றுவதற்கு இவ்வளவு கஷ்டப்படாமல் இன்னொரு குறுக்கு வழி இருக்கிறது. அது தான் அந்தக் குழந்தையின் DNA இல் தகுந்த மாற்றங்களை ஏற்படுத்துவது. ஆனால், இந்த வழியில் நமது குழந்தைகளின் குணாதிசயங்களை வடிவமைக்க நம்மால் முடியாது. ஏனெனில், நமக்கிருக்கும் ஞானமும், தொழினுட்பமும் இதற்குப் போதாது. எனவே தான் நாம் சுற்றி வளைத்து முயற்சிக்கிறோம்.
ஆனால், ஜின்களைப் பொருத்தவரை நிலைமை இவ்வாறில்லை. மனித DNA யில் சில வகையான மாற்றங்களைத் தோற்றுவித்து, அதன் மூலம் மனித குணாதிசயங்கள் போன்றவற்றை மாற்றியமைக்கும் ஆற்றல் ஜின்களுக்கு உண்டு. இந்த ஆற்றலை ஜின் இனத்தவர்களுக்கு அல்லாஹ் ஏற்கனவே வழங்கியிருக்கிறான். மேலும், இது சார்ந்த தொழினுட்ப ஞானம் கூட ஜின்களிடம் உண்டு.
உண்மையில், மனித DNA இல் தற்காலிக மாற்றங்களை ஏற்படுத்தும் ஆற்றல் ஜின்களுக்கு இருப்பதால் தான், இந்த ஆற்றலைக் கொண்டு மனித உணர்வுகளை ஒரு நொடிப்பொழுதில் தலைகீழாக மாற்றியமைத்து, அதன் மூலம் மனிதர்களைப் பாவத்தின் பால் இட்டுச் செல்லும் காரியத்தை “கரீன்” எனும் ஷைத்தானிய ஜின்கள் தினமும் வெற்றிகரமாகச் செய்து முடிப்பது கூட சாத்தியப் படுகிறது.
மேலும், ஜின்களிடம் இருக்கும் இந்த ஆற்றல், நமது வழிமுறை போன்ற சுற்றி வளைத்துக் குணாதிசயங்களை மாற்றும் தொழினுட்பமல்ல; மாறாக நேரடியாகவே நமது DNA இல் மாற்றங்களை ஏற்படுத்தும் ஆற்றலே இது. இதனால் தான், பல சந்தர்ப்பங்களில் நமது கட்டுப்பாட்டையும் மீறி, ஷைத்தானின் ஆதிக்கம் நமது உணர்வுகளில் மேலோங்குகின்றன. இதை உறுதிப் படுத்துவதாகவே பின்வரும் ஹதீஸ் அமைந்துள்ளது:
ஆதாரம் 1: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அனஸ் இப்னு மாலிக் (ரழி) அறிவித்ததாவது: மனிதனுக்குள் இரத்தம் ஓடுவதைப் போலவே ஷைத்தானும் ஓடிக் கொண்டிருக்கிறான். ஸுனன் அபூதாவூத்: பாடம் 42, ஹதீஸ் 124 தரம்: ஸஹீஹ் (அல்பானி)
ஆதாரம் 2: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக இப்னு உமர் (ரழி) அறிவித்த செய்தி: அறிந்து கொள்ளுங்கள்! ஓர் ஆண், ஓர் (அந்நியப்) பெண்ணோடு தனித்திருக்கும் போது, மூன்றாவதாக ஷைத்தான் கூட இல்லாமல் தனித்திருப்பதே இல்லை. ஜாமிஉத் திர்மிதி: பாடம் 33, ஹதீஸ் 8 தரம்: ஸஹீஹ் (தாருஸ்ஸலாம்)
ஆதாரம் 3: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக ஜாபிர் (ரழி) அறிவித்ததாவது: (கணவன் வீட்டில் இல்லாத நிலையில்) தனியாக இருக்கும் பெண்களிடம் நீங்கள் செல்ல வேண்டாம். ஏனெனில், உங்களுக்குள் இரத்தம் ஓடிக் கொண்டிருப்பதைப் போல் ஷைத்தான் ஓடிக் கொண்டிருக்கிறான். ஜாமிஉத் திர்மிதி: பாடம் 12, ஹதீஸ் 27 தரம்: ஹஸன் (திர்மிதி / தாருஸ்ஸலாம்)
மேற்கூறப்பட்ட ஹதீஸ்களில் நபியவர்கள் என்ன கூறுகிறார்கள்? மனிதர்களாகிய நமது உணர்வுகளைத் தாம் விரும்பும் போது தலைகீழாக மாற்றிவிடும் ஆற்றல் ஷைத்தானிய ஜின்களுக்கு உண்டு என்பதையே இங்கு நபியவர்கள் கூறுகிறார்கள்.
மேலும், மனித உணர்வுகளில் ஏற்படும் இந்தத் தலைகீழ் மாற்றமானது, மனித இரத்தத்தில் ஓடிக் கொண்டிருக்கும் ஷைத்தான் வாயிலாகவே ஏற்படுத்தப் படுவதாகவும் இங்கு நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். இரத்தவோட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ஜின், மனித உணர்வுகளில் மாற்றம் ஏற்படுத்துவதாக இருந்தால், இரத்தவோட்டத்தில் பயணிக்கும் அந்த ஜின், உள்ளே உயிர்க்கலங்களுக்குள் இருக்கும் DNA இல் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலமே இது சாத்தியம்.
எனவே, இரத்தவோட்டத்தின் மூலம் உணர்வுகளை மாற்றுதல் என்பது, DNA சார்ந்த மாற்றம் என்பதே இந்த ஹதீஸ்களிலிருந்து வெளிப்படும் மிகச் சரியான அர்த்தம்.
மனித DNA இல் மாற்றங்களை ஏற்படுத்த வல்ல ஜின்களின் இந்த ஆற்றல் என்பது, முழுக்க முழுக்க சக்தி அதிர்வெண்களின் அடிப்படையிலானது. ஏற்கனவே நாம் முந்திய பாகங்களில் பார்த்தது போல், சக்தி அதிர்வெண்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதிலும், சக்தி அதிர்வெண்களைத் துல்லியமாகக் கையாள்வதிலும் நாம் நினைப்பதை விடவும் ஜின்கள் மிகவும் திறமைசாலிகள்.
மேலும், மனிதர்களைப் போலல்லாது ஜின்கள், நெருப்பு சார்ந்த தூய சக்தி அதிர்வலைகளின் வெளிப்பாடுகளாலேயே படைக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களின் பூர்வீகமே தூய சக்தி அதிர்வலைகளின் அடிப்படையிலானது. எனவே, சக்தி அதிர்வலைகளில் புகுந்து விளையாடுவதென்பது ஒன்றும் அவர்களுக்குக் கடினமான காரியமில்லை.
இப்போது நாம் கேட்க வேண்டிய கேள்வி, சக்தி அதிர்வலைகளில் மாற்றம் ஏற்படுத்துவதன் மூலம் மனித DNA இல் எவ்வாறு மாற்றங்களை ஏற்படுத்தலாம்? என்பது தான். இந்தக் கேள்விக்கான விரிவான பதில் ஏற்கனவே நமது தொடரின் முந்திய பாகங்களில் சொல்லப் பட்டு விட்டன. எனவே, விரிவான விடையை இங்கு சொல்லப் போவதில்லை. கேள்விக்கான பதிலை மட்டும் சுருக்கமாக இங்கு மீட்டிக் கொள்ளலாம்.
மனித DNA என்பது, மனிதனது மொத்தப் பூர்வீகத்தையுமே தனக்குள் சுருக்கி உள்ளடக்கியிருக்கும் ஒரு தகவல் களஞ்சியம் மட்டுமல்ல; மனித உடற்கலங்கள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்வதற்கும், மற்றும் மனித உடற்கலங்கள் சுற்றுச் சூழலோடு மேற்கொள்ளும் தொடர்பாடல்களுக்கும் கூட, DNA தான் ஒரு Quantum Antenna ஆகத் தொழிற்பட்டு உதவுகிறது.
இந்தப் பிரபஞ்சத்திலிருக்கும் எல்லாப் படைப்பினங்களையும் போல், மனித DNA கூட குறிப்பிட்ட ஓர் அதிர்வெண்ணில் அதிர்ந்து கொண்டிருக்கும் ஓர் அதிர்வலையைப் போலவே தொழிற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க அம்சன் என்னவென்றால், ஒவ்வொரு மனிதனது உடற்கலங்களிலும் இருக்கும் DNA சுருள்கள், தமக்கென்ற தனித்துவமான ஓர் அதிர்வெண்ணிலேயே அதிர்ந்து கொண்டிருக்கின்றன.
DNA இன் இந்த அதிர்வெண்ணில் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டால் கூட, அதன் விளைவால் அந்த DNA இன் தன்மையே மாறி விடுவதுண்டு. அதாவது, ஒரு மனிதனது DNA தனது இயல்பான அதிர்வெண்ணில் அதிர்ந்து கொண்டிருக்கும் போது மட்டுமே அந்த மனிதன் நூறு வீதம் அவனாகவும், ஆரோக்கியமானவனாகவும், இயல்பான நிலையிலும் இருக்க முடியும்.
இயல்பான அதிர்வெண்ணுக்கு மாற்றமான அதிர்வெண்ணில் ஒரு மனிதனது DNA அதிரத் தொடங்கினால், அவனது உடல் / உள ஆரோக்கியம், குணாதிசயங்கள் ஆகியவற்றில் பாரிய மாற்றங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. இதை இலகுவாகப் புரிந்து கொள்வதற்கு நம்மில் அனேகமானோர் ஏற்கனவே அறிந்த, இன்றைய அறிவியல் சார்ந்த சில உதாரணங்களைப் பார்க்கலாம்.
பலநூற்றுக் கணக்கான அண்மைக்கால விஞ்ஞான ஆய்வுகளின் பிரகாரம், கையடக்கத் தொலைபேசியைத் தொடர்ச்சியாக உபயோகிப்போரின் மூளை உயிர்க்கலங்கள், சிதைவடைகின்றன (Brain cells damage) எனும் ஓர் உண்மை இன்றைய உலகில் பரவலாக அறியப்பட்ட ஒன்று என்பதை நாமறிவோம்.
கையடக்கத் தொலைபேசியால், மூளையின் கலங்கள் எவ்வாறு பாதிப்படைவதாகச் சொல்லப் படுகிறது?
கைபேசியைக் காதில் வைத்துப் பேசும் போது, கைபேசியிலிருந்து வெளிப்படும் சில சக்தி அதிர்வலைகள் தலையினூடு ஊடுறுவி, மூளையின் உயிர்க்கலங்களைச் சிதைவடையச் செய்வதன் மூலம் புற்று நோய் உட்பட மேலும் பல நோய்கள் ஏற்படுவதற்குக் கூட கைபேசியிலிருந்து வெளிப்படும் சில அதிர்வலைகள் காரணமாக அமைகின்றன என்பதே அனைத்து ஆய்வுகளும் ஏகோபித்து ஒத்துக் கொண்ட உண்மை.
இந்த உண்மையிலிருந்து மேலும் இரண்டு உண்மைகள் வெளிப்படுகின்றன.
மனித மூளையின் கலங்களைச் சிதைவடையச் செய்யும் ஆற்றல் கொண்ட பொருளாகக் கைபேசியிலிருந்து வெளிப்படுவது, குறிப்பிட்ட அதிர்வெண்களில் அதிரும் சில சக்தி அதிர்வலைகள் மட்டுமே.
அதே போல் மனித மூளைக் கலங்கள் சிதைவடைகிறது என்பதன் மூலம் இங்கு உண்மையில் குறிப்பிடப் படுவது, குறிப்பிட்ட உயிர்க்கலங்களின் DNA சிதைவடைவதைத் தான்.
ஆக, இந்த ஒரு சிறிய உதாரணம் மூலம், சாதாரண மனித தொழினுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட சக்தி அதிர்வலைகளுக்கே மனித DNA இல் சிதைவுகளைத் தோற்றுவிப்பதன் மூலம், அதில் மாற்றங்களை ஏற்படுத்த முடிகிறதென்பது இங்கு நிரூபணமாகிறது. மேலும் ஓர் உதாரணத்தைப் பார்க்கலாம்.
இன்றைய அறிவியல் உலகின் பல ஆய்வுகள் பிரகாரம் கண்டறியப் பட்டிருக்கும் இன்னோர் உண்மை தான், சிதைவடைந்த மனித DNA க்களை சீர் செய்து, அதன் வாயிலாகச் சில நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் இசைக்கு இருக்கிறது என்பது. அதாவது, சில வகையான இசைக் கருவிகளிலிருந்து புறப்படும் குறிப்பிட்ட அதிர்வெண்களின் அடிப்படையிலான ஒலி அலைகளுக்கு (அதாவது சக்தி அதிர்வலைகளுக்கு) மனித DNA இல் மாற்றங்களை ஏற்படுத்தும் ஆற்றல் இருக்கிறது எனும் உண்மை தான் இங்கு கூட ஊர்ஜிதப் படுத்தப் படுகிறது.
ஒலி எனும் சக்தி அதிர்வலைகளிலிருந்து, ஏழு சுரங்கள் எனும் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பிரத்தியேகமான அதிர்வெண்களை மட்டும் கொண்ட ஒலி அலைகளின் தொகுப்பையே நாம் இசை என்று அழைக்கிறோம்.
இசை எனும் வடிவிலான ஒலியின் இந்த அதிர்வலைகளுக்கு, மனித DNA இல் மாற்றங்களை ஏற்படுத்தி, அவனது ஆரோக்கியம், மனநிலை, குணாதிசயங்கள் ஆகியவற்றை மாற்றியமைக்கும் ஆற்றல் இருக்கிறது என்பதையே இதன் மூலம் இன்றைய விஞ்ஞானம் ஊர்ஜிதப் படுத்துகிறது. விஞ்ஞானம் மட்டுமல்லாது, இஸ்லாம் கூட இதைப் பின்வருமாறு ஊர்ஜிதப் படுத்துகிறது.
சாராயம் குடிப்பது மார்க்கத்தில் தடை செய்யப் பட்டுள்ளது. சாராயத்தில் மனித உடலுக்கு ஒருசில நன்மைகள் இருந்த போதும், நன்மைகளை விட அதில் தீமைகளே அதிகம் இருப்பதாலேயே சாராயத்தை இஸ்லாம் தடை செய்துள்ளது. இதே அடிப்படையிலேயே இசை கூட இஸ்லாத்தில் வெறுக்கப் பட்ட ஒன்றாக இருக்கிறது.
அதாவது, இசைக் கருவிகள் மூலம் புறப்படும் சக்தி அதிர்வலைகளுக்குச் சில வகையான நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் இருப்பது, உண்மையில் ஒரு நல்ல விடயம் தான். ஆனால், இந்த நன்மைகளை விடவும் மிகவும் பயங்கரமான ஒரு தீமை இசையில் இருப்பதனாலேயே இசையை இஸ்லாம் வெறுக்கிறது. அது என்ன பயங்கரமான தீமை?
மனித DNA இல் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் மனிதனது குணாதிசயங்களையே மாற்றி விடும் ஆற்றல் இசைக்கருவிகளிலிருந்து புறப்படும் ஒலி அதிர்வலைகளுக்கு இருக்கிறது. இசையின் இந்த ஆற்றலை இப்லீஸ் தனது திட்டங்களுக்குப் பயன்படுத்திக் கொள்கிறான்.
ஒரு மனிதன் அடிக்கடி இசையைச் செவிமடுக்கும் வழக்கமுடையவாக இருக்கும் போது, இசைக்கருவிகளின் ஒலி அதிர்வலைகள் மூலம், அவனது DNA இல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த DNA மாற்றங்களின் விளைவாக, அந்த மனிதனது எண்ணவோட்டம், மற்றும் மனோபாவம் ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பிக்கின்றன. இந்த மாற்றங்களைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, அதன் மூலம் இறுதியில் அந்த மனிதனது ஈமானுக்கே இப்லீஸ் வேட்டு வைக்கிறான். இதனால் தான் இஸ்லாம் இசைக் கருவிகளை ஷைத்தானின் கருவிகள் என்று கூறுகிறது.
இசை மூலம் தீமைகளுக்கு வழிவகுக்கும் இவ்வாறான மாற்றங்கள் மனித DNA க்களில் ஏற்படுகிறது என்பதை ஒருபுறம் இவ்வாறு ஊர்ஜிதப் படுத்தும் இஸ்லாம், இன்னொரு புறம் இதற்கு நேர் எதிரான இன்னொரு வகையான ஒலி அதிர்வலைகள் மூலம் மனித உடல், மற்றும் உள நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கிறது என்பதையும் மறைமுகமாகக் கூறுகிறது. பின்வரும் ஆதாரங்களைக் கவனியுங்கள்:
ஆதாரம் 1: மேலும், முஃமின்களுக்கு அருளையும், நோய் நிவாரணியையும் உள்ளடக்கியதாகவே நாம் குர்ஆனை இறக்கிவைத்தோம். ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. (அல்குர்ஆன் 17:82)
ஆதாரம் 2: மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு ஒரு நல்லுபதேசமும், (உங்கள்) நெஞ்சுக் கூட்டுக்குள் உள்ளவற்றுக்கு நோய் நிவாரணமும் வந்துள்ளது. மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், அருளாகவும் உள்ளது. (அல்குர்ஆன் 10:57)
ஆதாரம் 3: "ஈமான் கொண்டவர்களுக்கு (மட்டுமே) இது ஒரு வழிகாட்டியும், நோய் நிவாரணமுமாகும்" என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 41:44)
மேற்கூறப்பட்ட குர்ஆன் வசனங்களுக்குப் பகுத்தறிவுவாதிகள் விளக்கம் கூறும் போது, “இந்த வசனங்கலிலிருக்கும் நோய் நிவாரணி என்பது, உடல் நோய்களுக்கான நிவாரணத்தைக் குறிக்கவில்லை; உள்ளத்தில் இருக்கும் வழிகேடு எனும் நோயை மட்டுமே குறிக்கிறது” என்று கூறுவதுண்டு. ஆனால், இந்த விளக்கம் முழுக்க முழுக்க மனோ இச்சையின் அடிப்படையில் மட்டுமே ஆனது. அவர்களது வாதத்தை நிரூபிப்பதற்கான எந்தவிதமான மார்க்க ஆதாரங்களும் அவர்களிடம் இல்லை.
உண்மையில் இந்த வசனங்கள் மூலம் அல்லாஹ் குறிப்பிடுவது உடல் / உள நோய்கள் ஆகிய இரண்டு வகையான நோய்களையும் தான் என்பதை, இது சார்ந்த ஹதீஸ்களோடு இந்த வசனங்களை இணைத்துப் பார்க்கும் போது புரிந்து கொள்ளலாம். அதாவது, பல்வேறு விதமான நோய்களுக்கு நபி (ஸல்) அவர்களது காலத்தில் குர்ஆனைக் கொண்டு ஓதிப் பார்த்த சம்பவங்களைக் குறிக்கும் ஹதீஸ்களின் வெளிச்சத்தில் இதைப் புரியும் போது, இது உடல் நோய்களையும் சேர்த்தே குறிக்கிறது என்பதை இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.
ஓதிப்பார்த்தல் குறித்து இஸ்லாம் கூறும் அடிப்படைக் கருத்து, உடல் ரீதியாகவோ, உள ரீதியாகவோ நோயுற்ற ஒரு மனிதருக்கு நிவாரணத்தை வேண்டி, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தவராக ஒரு மனிதர் குர்ஆன் வசனங்களை ஓதிப் பார்க்கும் போது, அவரது நோய் குணமடைகிறது என்பது தான்.
இதை இன்றைய அறிவியலின் அடிப்படையில் பின்வருமாறு இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்:
நோயுற்ற ஒருவர், தனக்குத் தானாகவோ, அல்லது அவருக்கு இன்னொருவரோ ஓதிப் பார்க்கும் போது, ஓதிப் பார்க்கும் அவர் ஒரு முஃமினாக இருக்கும் பட்சத்தில், அவரிடமிருந்து இரண்டு வகையான சக்தி அதிர்வலைகள் வெளிப்படுகின்றன:
1. குர்ஆன் வசனங்களை அவர் உச்சரிப்பதன் மூலம் வெளிப்படும் பிரத்தியேகமான ஒலி அதிர்வலைகள் (Sound waves)
2. அல்லாஹ்வின் மீது அசையாத நம்பிக்கையோடு அதை அவர் ஓதும் போது, அவரது ஈமான் மூலம் அதீத சக்தி பெற்ற அவரது எண்ணவோட்ட அதிர்வலைகள் (Brain Waves / Alpha waves)
இந்த இரண்டு வகையான சக்தி அதிர்வலைகளும் நோயுற்ற மனிதரின் DNA இல் ஏற்பட்டிருக்கும் தீய மாற்றங்களைச் சீர்செய்து, இயல்பு நிலைக்கு அதை மாற்றி விடுகின்றன. இதன் மூலமே அந்த மனிதனது நோய் குணமடையுமாறு அல்லாஹ் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறான். இலகுவான நடையில், விஞ்ஞானத்தின் ஒளியில் ஓதிப் பார்த்தலின் தாத்பர்யம் இது தான்.
உண்மையில் ஓதிப் பார்த்தல் மூலம் நோய்கள் குணமடைவது கூட விஞ்ஞான அடிப்படையில் நிகழும் ஒரு மருத்துவமே. ஆனால், இந்த விஞ்ஞானத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளும் அளவுக்கோ, அல்லது அது எவ்வாறு மனித DNA இல் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் நோய்களைக் குணமாக்குகிறது என்பதைத் துல்லியமாகக் கண்டறியும் அளவுக்கோ நவீன விஞ்ஞானம் இன்னும் வளர்ச்சியடையவில்லை.
தனது தொழினுட்பங்களால் புரிந்து கொள்ள முடியாத அனைத்தையுமே “பொய் / மூட நம்பிக்கை” என்று மறுப்பது தான் நவீன உலகின் நாத்திக விஞ்ஞானத்தின் பண்பு. எனவே தான், தனது தொழினுட்பத்தால் புரிந்து கொள்ள முடியாத ஓதிப்பார்த்தல் சார்ந்த மருத்துவ சித்தாந்தத்தை இன்றைய உலகின் நாத்திக விஞ்ஞானம் மூட நம்பிக்கையென்று மறுத்துக் கொண்டிருக்கிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால், பகுத்தறிவு வாதம் பேசும் நமது உலமாக்களுள் ஒருசிலர் ஓதிப் பார்ப்பதை நிராகரிப்பது கூட இந்த நாத்திக விஞ்ஞானத்தின் மீது கொண்ட குருட்டு நம்பிக்கையின் விளைவாகத் தான்.
சக்தி அதிர்வலைகள் மூலம் மனித DNA இல் அதிர்வெண்களின் அடிப்படையில் பாரிய மாற்றங்கள ஏற்படுத்தலாம் என்பதை இதுவரை நாம் சில ஆதாரங்களின் வாயிலாக உறுதிப் படுத்திக் கொண்டோம். இப்போது நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டியது ஒரேயோர் உண்மையை மட்டுமே.
சாதாரண மனிதர்களாகிய நம்மிடமிருந்து இலகுவாக வெளிப்படக் கூடிய ஒலி, இசை, கைபேசி அதிர்வலைகள் போன்ற சக்தி அதிர்வலைகளுக்கே மனித DNA இல் இவ்வளவு மாற்றங்களை ஏற்படுத்த முடியுமாக இருந்தால், சக்தி அதிர்வலைகளையே தமது பூர்வீகமாகக் கொண்டு படைக்கப் பட்டிருக்கும் ஜின்களுக்கு மனித DNA இல் எவ்வளவு மாற்றங்களை ஏற்படுத்த முடியுமாக இருக்கும்? சிந்தித்துப் பார்ப்போருக்கு உண்மை புரியும்.
இன் ஷா அல்லாஹ் வளரும்...
- அபூ மலிக்
|