பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் ==============================
தொடர் 5: சூத்திரதாரிகள்
Episode 67: நகருயிர் சார்ந்தோர் (Reptilians / Draconians) – தொடர்ச்சி – 6
நகருயிர் சார்ந்தோர் (Reptilians / Draconians) – தொடர்ச்சி – 6: ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சக்தி அதிர்வலைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம், மனித DNA இல் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்பதை நாம் சென்ற எபிசோடில் ஆதாரங்களோடு பார்த்தோம். இனி இந்த அடிப்படையில் ஜின்கள் எவ்வாறு மனித DNA இல் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.
ஏற்கனவே நாம் பார்த்த பிரகாரம், நம்மில் ஒவ்வொருவரது DNA சுருள்களும் தனித்துவமான ஓர் அதிர்வெண்ணிலேயே அதிர்ந்து கொண்டிருக்கின்றன. இந்தத் தனித்துவமான அதிர்வெண்ணில் திட்டமிடப்பட்ட, துல்லியமான மாற்றங்களை வேறு சக்தி அதிர்வலைகள் மூலம் ஏற்படுத்தும் போது, நமது DNA இன் தன்மைகள் மாற்றமடைய ஆரம்பிக்கின்றன. அதற்கேற்ப நம் குணாதிசயங்களிலும் அந்த மாற்றங்கள் பிரதிபலிக்க ஆரம்பிக்கின்றன.
சக்தி அதிர்வலைகளையே தமது பூர்வீகமாகக் கொண்ட ஜின்கள் உண்மையில் இவ்வாறு தான் நமது DNA இல் வெற்றிகரமாக மாற்றங்களை ஏற்படுத்துகின்றனர். அதிலும் குறிப்பாக, நம்மோடு எப்போதும் கூடவே இருக்கும் “கரீன்” எனும் ஷைத்தானிய ஜின், நமது DNA இல் தற்காலிகமான அதிர்வு மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலமே, நமது உணர்வுகளையும், ஆசாபாசங்களையும் இப்லீஸ் எதிர்பார்க்கும் விதத்தில் மாற்றியமைத்து, அதன் மூலம் நம்மைப் பாவத்தின் பால் இட்டுச் செல்வது சாத்தியப் படுகிறது.
ஆனால், ஜின்களுக்கு இந்த ஆற்றல் இருக்கிறது என்பதற்காக, அவர்கள் நினைத்த நேரத்திலெல்லாம், நினைத்தவாறெல்லாம் மனிதர்களாகிய நமது மரபணுக்களில் முழு அளவில் மாற்றங்களை ஏற்படுத்தி விட முடியுமென்று கூறுவதாக இங்கு யாரும் தவறாகப் புரிந்து விடவும் கூடாது. அவர்களது ஆற்றல்களுக்கும் சில வரையறைகள் இருக்கத் தான் செய்கின்றன.
நமது DNA இல் மாற்றங்களை ஏற்படுத்தும் அனுமதியை நாமாக ஜின்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்காதவரை, பலவந்தமாக ஜின்களால் நமது மரபணுக்களில் மாற்றங்களை ஏற்படுத்தி விட முடியாது. நமது புரிதலுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒருவிதமான பாதுகாப்பையும் சேர்த்தே அல்லாஹ் நமக்குள் ஏற்படுத்தி வைத்திருக்கிறான். அந்தப் பாதுகாப்பு அரண் உறுதியாக இருக்கும் வரை நமது மரபணுக்களில் பாரிய மாற்றங்களை ஜின்களால் ஏற்படுத்த முடியாது. இந்தப் பாதுகாப்பு தகர்க்கப் படும் போது மட்டுமே நமது மரபணுக்களில் விளையாடும் அனுமதி ஜின்களுக்குக் கிடைக்கிறது.
மனிதர்களாகிய நம் ஒவ்வொருவரையும் சுற்றி அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கும் தீய சக்திகளுக்கு எதிரான வானவர்களின் பாதுகாப்பு என்பது, அவரவர் ஈமானின் அளவிலேயே தங்கியிருக்கிறது என்பதை ஏற்கனவே நாம் முந்திய பாகங்களில் விரிவாகப் பார்த்து விட்டோம். அது போன்ற ஓர் அடிப்படையிலேயே இதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, ஜின்களின் ஆதிக்கத்திலிருந்து நமது DNA பாதுகாக்கப் படுவது கூட நமது ஈமான் சார்ந்த அம்சங்களிலேயே தங்கியிருக்கிறது.
நமது குணாதிசயங்களும், சிந்தையும் நமது கட்டுப் பாட்டில் இருக்க வேண்டுமா? அல்லது ஷைத்தானிய ஜின்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டுமா என்பதைக் கூட நமது செயற்பாடுகள் மூலம் உண்மையில் ஆரம்பத்தில் நாம் தான் தீர்மாணிக்கிறோம். நமது தீர்மாணங்களுக்கு அமையவே பிறகு நமது உணர்வுகள் மீது ஜின்களின் கட்டுப்பாட்டின் அளவு நிர்ணயமாகிறது. சுருக்கமாகச் சொன்னால் இதைப் புரிவது சற்று கடினம் தான். எனவே இதைச் சற்று விலாவாரியாகப் பார்க்கலாம்.
முதலில் நாம் ஓர் அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். ஜின்களை அல்லாஹ் தூய சக்தியின் வடிவங்களாகவே படைத்திருக்கிறான் என்பதை நாம் ஏற்கனவே அறிகிறோம். ஆனால், மனிதர்களை அல்லாஹ் உண்மையில் படைத்திருப்பது மண்ணால் மட்டுமல்ல என்பதைத் தான் நம்மில் அனேகமானோர் புரிந்து கொள்ளத் தவறுகின்றனர்.
அதாவது, மனித உடலை அல்லாஹ் படைத்திருப்பது மண்ணைக் கொண்டு தான் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துமில்லை. ஆனால், இவ்வாறு மண்ணால் படைக்கப்பட்ட மனித உடலுக்குள் பிறகு ரூஹ் எனும் ஆன்மாவை ஊதுவதன் மூலமே அதை ஒரு முழு மனிதனாக அல்லாஹ் மாற்றுகிறான். இந்த ரூஹ் ஊதப்படாத வரை, அந்த உடல் வெறும் சடலம் மட்டுமே; முழு மனிதன் அல்ல.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஊதப்படும் “ரூஹ்” எனும் இந்த ஆன்மாவே ஒரு மனிதனை “மனிதன்” எனும் அடிப்படையில் முழுமைப் படுத்துகிறது. அதாவது, இதை இன்னொரு விதத்தில் கூறுவதென்றால், மனிதன் என்பதில் ஒரு பாதியே களிமண்ணால் படைக்கப் பட்ட அவனது உடல். அடுத்த பாதி என்பது அவனது “ரூஹ்” எனும் ஆன்மாவே.
இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால், மனிதனது ஒரு பாதியாக இருக்கும் அவனது உடல் மட்டுமே மண்ணால் படைக்கப் பட்டது. அதை மொத்தமாக இயக்கும் அவனது “ரூஹ்” எனும் ஆன்மா, களிமண்ணால் படைக்கப் பட்ட ஒன்றல்ல; அதுவும், ஜின்களைப் போன்ற இன்னொரு வகையான தூய சக்தி மட்டுமே.
இந்த அடிப்படையில் மனிதர்களுக்கும் ஜின்களுக்கும் இடையிலிருக்கும் அடிப்படை வித்தியாசத்தை பின்வருமாறு இலகுவாகப் பாகுபடுத்திக் கூறலாம்:
மனிதனது உடல் என்பது களிமண்ணால் படைக்கப் பட்டிருக்கும் அதே வேளை; அவனது ஆன்மா என்பது தூய சக்தியால் மட்டுமே படைக்கப் பட்டுள்ளது. அதே நேரம் ஜின்களைப் பொருத்தவரை, அவர்களது உடல், மற்றும் ஆன்மா ஆகிய இரண்டுமே தூய சக்தியால் படைக்கப் பட்டுள்ளன. இவ்வளவு தான் வித்தியாசம். அதாவது, உடலில் மட்டுமே மனிதனுக்கும் ஜின்களுக்கும் அடிப்படையில் வேறுபாடுகள் உள்ளன. ஆன்மாவைப் பொருத்தவரை இரு தரப்பினரும் சமனானவர்களே.
இந்த அடிப்படையை மனதில் பதிய வைத்துக்கொண்டு இனி நாம் மேலே தொடர்கிறோம்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வியாபித்திருக்கும் ஆன்மா எனும் தூய சக்தியைப் பலசாலியாக ஆக்க வல்ல மிகச் சிறந்த ஒரே ஆயுதம் ஈமான் மட்டுமே.
இயல்பான நிலையில் ஒரு முஃமின், நிறைவான ஈமானோடு இருக்கும் போது, அவனது உடலுக்குள் ஜின்கள் எனும் தீய சக்திகள் நுழைய முடியாத அளவுக்கு அவனது ஆன்மா எனும் தூய சக்தி மிகவும் பலசாலியாக இருக்கும். மேலதிகமாக, அவனுக்கு அல்லாஹ் புறத்திலிருந்தும் பாதுகாவல் கிடைத்துக் கொண்டிருக்கும்.
இந்த அடிப்படையில், நிறைவான ஈமானோடு ஒரு மனிதன் இருக்கும் போது, அவனுக்கென்று அனுமதிக்கப் பட்டிருக்கும் “கரீன்” எனும் ஷைத்தானிய ஜின்னுக்கு மட்டுமே அவனுக்குள் நுழையும் அனுமதி இருக்கும். ஆதலால், உள்ளத்தில் ஆசைகளைத் தூண்டுதல், ஊசலாட்டங்களை ஏற்படுத்தல் போன்ற, கரீன்களுக்கே உரிய மட்டுப்படுத்தப்பட்ட ஆதிக்கங்களை மட்டுமே அந்த முஃமினின் DNA இல் தற்காலிகமாகத் தோற்றுவிக்கலாம். இதைத் தாண்டிய வேறெந்த மாற்றங்களையும் ஜின்களால் அவனுக்குள் ஏற்படுத்தி விட முடியாது.
இதை நாம் ஏற்கனவே விரிவாகப் பார்த்து விட்டோம். தலைப்பின் முக்கியத்துவம் கருதி மீண்டும் ஒருமுறை இங்கு சுருக்கமாக மீட்டிக் கொள்கிறோம். மேலும், இதை உறுதிப்படுத்தும் ஒருசில மார்க்க ஆதாரங்களைக் கூட இங்கு இன்னொரு தடவை மீட்டிக் கொள்கிறோம்.
ஆதாரம் 1: மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய (வானவர்கள்) இருக்கிறார்கள். அல்லஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனைப் பாதுகாக்கிறார்கள் (அல்குர்ஆன் 13:11)
ஆதாரம் 2: "நிச்சயமாக (முஃமினான) என்னுடைய அடியார்கள் மீது உனக்கு எந்த அதிகாரமுமில்லை" (என்றும் அல்லாஹ் கூறினான்; அந்த நல்லடியார்களைப்) பொறுப்பேற்றுக் கொள்ள உமது இறைவன் போதுமானவன். (அல்குர்ஆன் 17:65)
ஆதாரம் 3: ஈமான் கொண்டு, தம் இறைவனை முற்றிலும் சார்ந்திருப்போர் மீது நிச்சயமாக அவனுக்கு (ஷைத்தானுக்கு) எவ்வித அதிகாரமுமில்லை. அவனைத் தம் பாதுகாவலனாக்கிக் கொள்வோர் மீதும், இறைவனுக்கு இணைகற்பிப்போர் மீதுமே அவனது அதிகாரமெல்லாம் (செல்லுபடியாகும்). (அல்குர்ஆன் 16:99-100)
முஃமின்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் இந்தப் பாதுகாப்பையுத் தளர்த்தும் முயற்சியிலும், அவனது ஆன்மாவின் பலத்தைக் குன்றச் செய்யும் முயற்சியிலுமே “கரீன்”கள் எப்பொழுதும் முழுமூச்சாக முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனையும் பாவியாக மாற்றுவதற்கு அவனது கரீன் முயற்சிப்பதே அவனைப் பாதுகாப்பற்ற, பலவீனனாக மாற்றுவதற்குத் தான்.
கரீனின் இந்த முயற்சி வெற்றி பெற்றால், நாளடைவில் அந்த மனிதனுக்கான அல்லாஹ்வின் பாதுகாப்பு நீங்கி விடும்; அவனது ஆன்மாவும் பலமிழந்து போய் விடும். இவ்வாறு பாதுகாப்பற்ற நிலையில் நிர்க்கதியாக நிற்கும் ஒரு மனிதனின் பலமிழந்த ஆன்மாவைத் தோற்கடித்து, அவனது உடலுக்குள் நுழைந்து, அவனைத் தமது அடிமையாகச் சிறைப் பிடித்துக் கொள்வது ஒன்றும் ஷைத்தானிய ஜின்களுக்குக் கடினமான காரியமல்ல.
இவ்வாறு ஷைத்தானிய ஜின்களின் பூரண கட்டுப்பாட்டுக்குள் ஒரு மனிதன் சென்று விட்ட பின், அவனது மரபணுக்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் பூரண அதிகாரம் ஜின்களுக்குக் கிடைத்து விடும். பின்வரும் ஆதாரம் இதை அழகாக உறுதிப் படுத்துவதைப் பார்க்கலாம்.
ஆதாரம் 4: எவர் அளவற்ற அருளாளனை நினைவுகூர்வதை விட்டும் (வேறு புறம்) திரும்பிக் கொள்கிறாரோ, அவருக்கு நாமே ஒரு ஷைத்தானைச் சாட்டி விடுகிறோம்; அவன் அவருக்கு நெருங்கிய தோழனாகி விடுகிறான். (அல்குர்ஆன் 43:36)
முஃமினாக இருக்கும் நிலையில், ஒவ்வொரு மனிதனது ஆன்மாவையும் மிகவும் பலமுடையதாகப் படைத்திருக்கும் அல்லாஹ், அதே நேரத்தில் அதில் சில பலவீனங்களையும் சேர்த்தே படைத்திருக்கிறான். இந்தப் பலவீனங்கள் எனும் ஓட்டைகள் வாயிலாகவே தகுந்த சந்தர்ப்பம் வரும் போது ஷைத்தானிய ஜின்கள் மனிதருக்குள் ஊடுறுவுகின்றனர்.
ஷைத்தானிய ஜின்கள் மனித உடலுக்குள் நுழைவதற்கு வசதியாக, அவ்வப்போது நமக்குள் திறந்து கொள்ளும் பிரதான வாசல்களாகப் பின்வரும் ஐந்து பலவீனங்களைக் குறிப்பிட்டுக் கூறலாம்:
தனிமை, குற்ற உணர்வு, கோபம், பயம், கவலை ஆகிய இந்த ஐந்து பிரதான அம்சங்களே மனிதர்களுக்குள் ஷைத்தானிய ஜின்கள் நுழையும் பிரதான வாசல்களாகத் தொழிற்படும் மனித பலவீனங்கள்.
இந்தப் பலவீனங்களுள் எதற்கும் ஒரு மனிதன் உள்ளாகாத வரையில், அவனது உடலுக்குள் கரீன் தவிர்ந்த ஏனைய ஷைத்தானிய ஜின்களால் ஊடுறுவ முடியாது. ஏனெனில், எப்பேர்ப்பட்ட ஜின் தான் வந்தாலும், அந்த ஜின்னின் சக்தியை எதிர்த்து நிற்கும் அளவுக்கு அவனது ஆன்மா எனும் சக்தி அப்போது மிகவும் பலசாலியாக இருக்கும்.
பொதுவாக, ஒரு மனிதன் சரியான ஈமானோடு இருக்கும் போது மட்டுமே இந்த அசுர பலம் அவனது ஆன்மாவுக்கு இருக்கும். இதனால் தான் முஃமின்கள் விடயத்தில் அல்லாஹ் பிரத்தியேகமாக நாடினாலே ஒழிய எந்த ஜின்னின் ஆட்டமும் பலிப்பதில்லை.
அதே நேரம், ஒருவனது ஈமான் குறைவடையும் போது, அதற்கேற்றாற் போல் அவனது உள்ளத்துக்குள் தீய எண்ணங்களின் ஆதிக்கங்களும் வலுப்பெற ஆரம்பிக்கும். இந்தத் தீய எண்ணங்களின் விளைவாக அவன் பாவச் செயல்களில் தொடர்ந்தும் ஈடுபடத் தொடங்கும் போது, நாளடைவில் அவனது ஆன்மாவில் குற்ற உணர்வு எனும் பலவீனம் குடிகொள்ளத் தொடங்கும்.
இதற்கு மேலதிகமாக, பொறாமை, ஆணவம், வஞ்சகம், பேராசை போன்ற தீய எண்ணங்களின் விளைவினாலும் ஒரு மனிதனது உள்ளத்துக்குள் குற்ற உணர்வு, தனிமையுணர்வு, கோபம், அச்சம், விரக்தி, கவலை ஆகிய உணர்வுகள் இன்னுமின்னும் மேலிடும். இவ்வாறான சந்தர்ப்பங்களின் போதும் அவனது ஆன்மாவின் பலம் இன்னுமின்னும் குன்றி விடும்.
தனிமையுணர்வு, குற்ற உணர்வு, கோபம், அச்சம், கவலை போன்ற உணர்வுகள் மூலம் மனிதருக்குள் தோற்றுவிக்கப் படும் இவ்வாறான பலவீனங்களே, மனிதருக்குள் ஷைத்தானிய ஜின்கள் ஊடுறுவும் வாசலாக அமைந்து விடுகின்றன. இந்த உண்மைகளைப் பின்வரும் மார்க்க ஆதாரங்கள் உறுதிப் படுத்துவதைப் பார்க்கலாம்:
ஆதாரம் 1: யார் மீது ஷைத்தான்கள் இறங்குகிறார்கள் என்பதை நான் உமக்கு அறிவிக்கட்டுமா? ஒவ்வொரு பொய்யன் மீதும், பாவியின் மீதுமே (அவர்கள்) இறங்குகிறார்கள். (அல்குர்ஆன் 26:221-222)
பாவச் சுமைகள் மூலம் குற்ற உணர்விலேயே ஊறித் திளைத்துப் போன பெரும் பாவிகளுக்குள்ளேயே ஷைத்தானிய ஜின்கள் இறங்குகிறார்கள் என்பதை இந்த வசனத்தில் அல்லாஹ் தெளிவாக ஊர்ஜிதப் படுத்தியிருப்பதைப் பார்க்கலாம். அதாவது, “குற்ற உணர்வு” எனும் பலவீனம், மனிதருக்குள் நிறைந்து விடும் போது, அந்தப் பலவீனம் எனும் வாசல் வழியாக ஷைத்தானிய ஜின்கள் மனிதர்களுக்குள் ஊடுறுவுகிறார்கள் எனும் நமது கருத்தை இந்த வசனம் சந்தேகத்துக்கே இடமில்லாதவாறு நிரூபிக்கிறது.
உண்மையில், குற்ற உணர்வு என்பது ஒரு மனிதனுக்குள் தொடர்ச்சியாக இருக்கவே கூடாத ஒன்று. அவ்வப்போது நாம் செய்யும் தவறுகளால் அடிக்கடி நமக்குள் குற்ற உணர்வு ஏற்படுவது சகஜம். ஆனால், அவ்வாறு நமக்குள் தோன்றும் குற்ற உணர்வுகளைக் கூட அந்தந்த சந்தர்ப்பங்களிலேயே, தகுந்த பரிகாரங்கள் மூலம் நமக்குள்ளிருந்து களைந்து விட வேண்டும் என்பதையே இஸ்லாம் வலியுறுத்துகிறது.
இதனால் தான் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு அநீதி இழைத்துத் தவறு செய்து விட்டால், காலதாமதம் செய்யாமல், சம்பந்தப்பட்ட நபரிடம் அதற்கான மன்னிப்பை அவர் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டுமென்று மார்க்கம் வலியுறுத்துகிறது. மேலும், நமது பாவங்கள் மூலம் ஏற்படும் குற்ற உணர்வுகள் எதையுமே நமக்குள் பூட்டி வைத்துக் கொள்ளாமல், உடனுக்குடன் அந்தச் சுமைகளை அல்லாஹ்விடம் இறக்கி வைத்து, அவனிடம் மன்றாடி மன்னிப்பைப் பெற்றுக் கொள்வதற்காகவே எந்த நிலையிலும் தவ்பாவின் வாசலை அல்லாஹ் திறந்தே வைத்திருக்கிறான்.
உண்மையில் பாவமன்னிப்பின் வாசலை அனுதினமும் அல்லாஹ் திறந்து வைத்திருப்பது கூட அல்லாஹ்வின் எல்லையற்ற கருணையின் வெளிப்பாடு தான் என்பதை இந்தக் கோணத்திலிருந்து கூட நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
அதாவது, பாவங்கள் மூலம் உள்ளத்தில் ஏற்படும் குற்ற உணர்வு என்பது விஷத்தைப் போன்றது. காலதாமதம் செய்யாமல், அதை அல்லாஹ்வின் சன்னிதியில் கக்கி, அவனிடம் அழுது மன்றாடி, அதற்கான நிவாரணத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இது தவறும் பட்சத்தில், இந்தக் குற்ற உணர்வே உள்ளுக்குள் இருந்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக நமது ஆன்மாவின் பலத்தைக் குன்றச் செய்து விடும். இந்தப் பலவீனத்தையே வாசலாக உபயோகித்து ஷைத்தானிய ஜின்கள் நமக்குள் ஊடுறுவி, நம்மை மொத்தமாக ஆட்கொண்டு விடுவதற்கான அச்சுறுத்தல்கள் மிகவும் அதிகம்.
இவ்வாறு மனிதர்கள் ஷைத்தானிய ஜின்களின் கைகளுக்குள் அடிமைகளாகச் சிறைப்பட்டு விடுவதை அல்லாஹ் விரும்பவில்லை. அதனால் தான், அதிலிருந்து மனிதனைக் காக்கும் பொருட்டு, அவனுக்குள் இருக்கும் குற்ற உணர்வைக் களைந்தெறிவதற்கான வாய்ப்பை ஒவ்வொரு கணமும் தவ்பா செய்வதன் மூலம் மனிதனுக்கு வழங்கி, அவனை மன்னிப்பதற்குத் தயாராக அல்லாஹ் அன்போடு காத்திருக்கிறான். இதை விடவுமா அல்லாஹ்வின் கருணைக்கு ஓர் எடுத்துக் காட்டு வேண்டும்?
இனி மேலும் ஓர் ஆதாரத்தைப் பார்க்கலாம்.
ஆதாரம் 2: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: “தனியாகப் பயணிக்கும் ஒருவர் ஷைத்தான் ஆவார். இருவராகப் பயணிப்போர், இரண்டு ஷைத்தான்களாவர். மூவராகப் பயணிப்போரே பிரயாணிகளாவர்.” முவத்தா மாலிக்: பாடம் 54, ஹதீஸ் 1801 / அபூதாவூத்: 2607 / திர்மிதி: 1674)
மனிதர்கள் தூரப் பிரயாணங்களை மேற்கொள்ளும் போது, இரண்டுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் தூரப் பயணங்களை மேற்கொள்வதே ஷைத்தானிய சக்திகளின் ஆதிக்கத்திலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு உகந்தது என்பதையே இங்கு நபி (ஸல்) அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளார்கள். அதாவது, தனிமையில் தூரப் பயணங்களை மேற்கொள்வதையும், மற்றும் தங்குவதையும் நபி (ஸல்) அவர்கள் இங்கு தடுத்துள்ளதைப் பார்க்க முடிகிறது.
பொதுவாகத் தனிமையில் மேற்கொள்ளப்படும் தூரப் பிரயாணங்களின் போது, இரவுத் தங்கல்களைத் தனிமையில் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்களுக்குள் ஏற்படும் தனிமையுணர்வையும் தவிர்க்க முடியாது. இவ்வாறான தனிமையுணர்வுகளே அவர் மீது ஷைத்தானிய ஜின்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு வாசலாக அமைந்து விடலாம் என்பது தான் இங்கு உணர்த்தப்படும் உள்ளார்ந்த கருத்து. இதை இன்னும் உறுதிப்படுத்தும் இன்னோர் ஆதாரத்தையும் பாருங்கள்:
ஆதாரம் 3: ம’தின் பின் அபூ தல்ஹா அல் ய’மூரி அறிவித்த செய்தி: ஒருமுறை அபூ தர்தா (ரழி) அவர்கள், “நீர் எங்கு வசிக்கிறீர்?” என்று என்னிடம் கேட்டார்கள். “ஹிம்ஸ் எனும் ஊருக்குப் பக்கத்தில்” என்று நான் பதிலளித்தேன். அதைக் கேட்ட அபூ தர்தா (ரழி) அவர்கள், “ஓர் ஊரிலோ, அல்லது குக்கிராமத்திலோ மூன்று பேர் இருந்து, அவர்களுக்குள் தொழுகை நிலைநாட்டப் படவில்லையென்றால், ஷைத்தான் அவர்களைத் (தனது பூரண) கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறான். எனவே, ஒரு கூட்டமைப்பைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். ஏனெனில், தனியாக இருக்கும் ஆடுகளையே ஓநாய்கள் (பிடித்துச்) சாப்பிடுகின்றன.” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூற, நான் கேட்டுள்ளேன் என்று கூறினார்கள். ஸுனன் அன் நஸா’இ: பாடம் 10, ஹதீஸ் 71 / 847 தரம்: ஸஹீஹ் (தாருஸ்ஸலாம்)
ஆக, தனிமை, மற்றும் அது சார்ந்த உணர்வு என்பதைக் கூட ஒரு வாசலாக உபயோகித்து, ஷைத்தானிய ஜின்கள் நமக்குள் ஊடுறுவுகிறார்கள் எனும் உண்மையை மேலுள்ள ஹதீஸ்கள் அழகாக உறுதிப் படுத்துகின்றன.
மேலும் ஓர் ஆதாரத்தைப் பார்க்கலாம்.
ஆதாரம் 4: ஸுலைமான் இப்னு சுர்த் (ரழி) அறிவித்த செய்தி: அல்லாஹ்வின் தூதுர் (ஸல்) அவர்களோடு ஒருமுறை நான் அமர்ந்திருந்தேன். அப்போது இரண்டு மனிதர்கள் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டு தகராறு செய்து கொண்டிருந்தார்கள். அதில் ஒருவருடைய முகம் மிகவும் கோபத்தால் சிவந்து போயிருந்தது. மேலும், அவரது கழுத்து நரம்புகள் புடைத்துப் போயிருந்தன. இதைப் பார்த்துக் கொண்டிருந்த நபியவர்கள், “இவரது கோபத்தை ஒரே நொடியில் தணிக்கும் ஒரு வார்த்தை எனக்குத் தெரியும். ‘ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்’ எனும் அந்த ஒரு வார்த்தையை இவர் இப்போது கூறினால், இவரது கோபம் அடுத்த கணமே பறந்து போய் விடும்” என்று கூறினார்கள். உடனே ஒருவர் சென்று அந்த மனிதரிடம் “ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுமாறு அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள்” என்று கூறவே, அந்த மனிதர், “எனக்கென்ன பைத்தியமா?” என்று அதே கோபத்தோடு திருப்பிக் கேட்டார். ஸஹீஹுல் புகாரி: பாடம் 59, ஹதீஸ் 91 / 3282
ஆதாரம் 5: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: (கோபத்தில் ஏசும் போது) உங்கள் சகோதரனை (சக முஸ்லிமை) நோக்கி நீங்கள் ஆயுதத்தை நீட்டிக் காட்ட வேண்டாம். ஏனெனில், அவர் அறியாத நிலையில் ஷைத்தான் அவரைத் தூண்டி, அவர் தாக்கி, அதன் மூலம் அவர் நரகப் படுகுழியில் வீழ்ந்து விடலாம். ஸஹீஹுல் புகாரி: பாடம் 92, ஹதீஸ் 23 / 7072
ஆதாரம் 6: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரழி) அறிவித்ததாவது: உங்களில் எவரும் (கோபத்தில்) தம் சகோதரனை நோக்கி ஆயுதத்தைக் காட்டி (சைகை செய்து) விட வேண்டாம். ஏனெனில், அவர் அறியாத நிலையில் (சுய நினைவற்ற நிலையில்) அவரது கையிலிருக்கும் ஆயுதத்தை ஷைத்தான் இயக்கி (அவரைத் தாக்கி), அதன் மூலம் அவர் நரகப் படுகுழியில் வீழ்ந்து விடலாம். ஸஹீஹ் முஸ்லிம்: பாடம் 45, ஹதீஸ் 165 / 2617
தன்னிலை மறந்து போகும் அளவுக்குக் கோபம் எனும் உணர்வு ஒரு மனிதரை ஆட்கொள்ளும் போது, ஷைத்தானிய ஜின்களின் பூரண கைப்பாவையாக அந்த மனிதர் மாறி விடும் அளவுக்குக் கோபம் எனும் உணர்வு ஆபத்தானது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
ஒருவர் அளவு கடந்து கோபப் படும் போது, அந்தக் கோபம் எனும் பலவீனத்தையும் ஒரு வாசலாக உபயோகித்து ஷைத்தானிய ஜின்கள் ஒரு மனிதனுக்குள் ஊடுறுவ முடியும் எனும் உண்மையை மேற்கூறப்பட்ட ஹதீஸ்கள் மிகவும் தெளிவாக எடுத்துரைக்கின்றன.
மனித உணர்வுகளின் அடிப்படையிலான பலவீனங்களை வாசல்களாக உபயோகித்து, அவற்றின் மூலமே நமக்குள் ஷைத்தானிய ஜின்கள் ஊடுவுகின்றனர் என்பதைத் தக்க ஆதாரங்களோடு நாம் உறுதிப் படுத்திக் கொண்டோம். இனி, இவ்வாறான மனிதப் பலவீனங்கள் மூலம் ஷைத்தான்கள் ஊடுறுவும் இந்தப் பொறிமுறை எவ்வாறு நிறைவேறுகிறது என்பதை விஞ்ஞானத்தின் ஒளியில் ஓர் உதாரணத்தின் மூலம் இன் ஷா அல்லாஹ் அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.
இன் ஷா அல்லாஹ் வளரும்...
- அபூ மலிக்
|