ரா_பிரபு
பாகம் 10 : ராட்சதனின் கட்டிடங்கள்
சில சின்ன வயது கதைகளில் அக்காலத்தில் ராட்சதர்கள் வாழ்ந்தாக சொல்வார்கள். ஆனால் நாம் ஆதார பூர்வமாக கண்டெடுத்த நிஜ ராட்சதர்கள் டைனோசர்கள் தானே தவிர மனிதர்கள் இல்லை. ஆனால் சில மனிதனால் கட்ட பட்ட அமைப்புகள் பார்ப்பதற்கு ராட்சத உருவமைப்பு கொண்ட மனிதனால் கட்ட பட்டிருபது போல தெரிவது தான் ஏன் என்று புரியாத மர்மமாக உள்ளது. அது போன்ற சில உதாரணங்களை தான் இன்று பார்க்க போகின்றோம்.
முதலில் அமேசானின் அடர்ந்த காட்டில் ஆளரவமற்ற Ecuador எனும் இடத்தில காணப்படும் அந்த பிரமிட் போன்ற அமைப்பு....அங்கே போகலாம் வாங்க..
☯ Ecuador megalith :
தோராயமாக 80 மீட்டர் அடித்தளம் மற்றும் 80 மீட்டர் உயரம் கொண்ட அந்த அமைப்பு 2 டன் எடை கொண்ட பெரிய பெரிய கல்லை கொண்டு அடுக்கி செய்ய பட்ட அமைப்பு ஆகும். இப்படி பல நூறு கணக்கில் கற்கள் வெட்ட பட்டு அடுக்க பட்டுள்ளன.
அதற்க்கு மேலே ஏறி சென்றால் அங்கே காண படும் சமதள அமைப்பு மதகுருகள் சடங்குகளை செய்ய பயன்பட்டு இருக்கலாம் என்கிறார்கள். அது ஒரு பலி பீடமாக இருக்கலாம் எண்பவர்களும் உண்டு. அதில் மர்மத்தை கூட்டிய விஷயம் என்ன வென்றால் அங்கு கிடைத்த உளி சுத்தி போன்ற கருவிகள் தான் .காரணம் அது எதுவுமே சாதாரண மனிதன் பயன் படுத்தும் அளவில் இல்லை எல்லாமே ராட்சத வடிவில் இருந்தன. அப்போ அந்த நகரம் நிஜமாகவே ஒரு மறைந்த ராட்சதர்களின் நகரமா ? என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியாது. இது போதாது என்று பாறைகளில் தெளிவாக பதிந்து இருக்கும் ராட்சத வடிவ கால் தட படிமங்கள் கிடைத்து இன்னும் பயமுறுத்துகின்றன.
அமேசான் காட்டுக்குள் அந்த பகுதியில் வாழ்ந்த ராட்சதர்கள் வரலாற்று பக்கத்தில் இருந்து அழிக்க பட்டுள்ளார்கள் என்று கருதும் ஆட்கள் உண்டு.
✴ ✴ ✴ ✴
☯ Inka wall : அடுத்தாக பார்க்க போவது மேலே பார்த்ததை விடவும் அட்டகாசமான ஒரு கட்டமைப்பு. 'பெரு'வில் உள்ள அந்த வி்சித்திர கல் சுவரை கிட்ட தட்ட 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டியது இன்கா பேரரசின் ஆட்கள்.
அந்த கற்சுவர் சில பல டன் எடை கொண்ட தனி தனி கற்களால் கட்ட பட்டுள்ளது .வெறும் கல்லை அடுக்கி வைத்திருப்பதில் என்ன ஆச்சர்யம் என்று நினைத்தால் அப்படி அல்ல அந்த கற்கள் ஒன்றோடு ஒன்று பொருந்தும் படி ஏதோ பிரெட் துண்டை அடுக்கியது போல அவ்வளவு நேர்த்தியாக பிசிறு இல்லாமல் வெட்ட பட்டு ஆங்காங்கே zig zag வடிவில் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு காகிதம் கூட நுழைய முடியாத அளவு கொஞ்சம் கூட இடைவெளி இல்லாமல் அவ்வளவு பெரிய கற்களை ஒன்றோடு ஒன்று அடுக்கி பொருத்தியது எப்படி என்று இன்று வரை தீராத மர்மமாகவே உள்ளது. (Inka wall என தேடி பாருங்க) அந்த கற்கள் வடிவமைப்பு வான சாஸ்திரங்களை சந்திர பூமி சுழற்சிகளை குறிக்கும் வகையில் அமைந்து இருப்பதாகவும் ஒரு ஆய்வு சொல்கிறது.
✴ ✴ ✴ ✴
☯ Ural mountain megalith russya : பிரமாண்ட கல் அமைப்புகள் உலகின் பல மூலைகளில் காண கிடைபத்தை பார்க்க முடிகிறது உதாரணமாக மேற்கு ரஷ்யயாவில் வடக்கு தெற்காக 2000 கிலோ மீட்டருக்கு பரவி இருக்கும் Ural mount பகுதியில் சில பிரமாண்ட கல் அமைப்புகள் உள்ளன. அதில் பிரமாண்ட பெரிய பெரிய கல்லை கொண்டு அமைக்க பட்ட குகை வழி அமைவுகள் உள்ளன ஆள் அரவமற்ற அந்த இடங்களில் யாரால் எப்படி அவைகள் அமைக்க பட்டன என்பது மர்மமாகவே உள்ளது.
✴ ✴ ✴ ✴
☯ "Baalbek lebanon" இது ரோம் பேரரசின் பண்டைய கால மெகா கட்டமைப்புக்கு சான்றாக இருக்கிற ஒரு இடம் ஆகும். இங்குள்ள 2000 ஆண்டு பழமை வாய்ந்த ஜூபிடர் கோவில் மொத்தம் 3000 டன் எடை கொண்ட கற்களை கொண்டு வடிவமைக்க பட்டுள்ளது .(இதனுடன் ஒப்பிடும் போது ஸ்டோன் ஹென்ச் கல் தூணின் எடை 40 இல் ஒரு பங்கு தான் ) இந்த கற்கள் அருகே உள்ள limestone quarry, யிலிருந்து வெட்டி எடுக்க பட்டவை. அங்கே ஜெர்மன் ஆர்க்கையாலஜிஸ்டுகள் ஒரு வெட்ட பட்ட கல்லை கண்டெடுத்தார்கள். அந்த கல் மனித வரலாற்றில் மனிதனால் வெட்ட பட்ட கற்களில் மிக பெரியது என்கிறார்கள். அதன் ஒரே ஒரு கல் தூண் எடை 1650 டன். யார் இதை வெட்ட சொன்னார்கள் ஏன் வெட்டினார்கள் என்ற தகவல்கள் ஏதும் தெளிவாக இல்லை.
✴ ✴ ✴ ✴
☯ The Stone Spheres of Costa Rica : இது costa rica வின் டெல்டா பகுதிகளில் 1930 களில் கண்டெடுக்க பட்ட மர்மமான கல் உருண்டைகள் ஆகும். இந்த கல் உருண்டைகள் கோலி குண்டுகளை போல மிக சிறப்பாக உருண்டையாக செதுக்க பட்டு கிட்ட தட்ட 300 கணக்கில் கிடைத்தன. அவை களின் அளவு சில செண்டி மீட்டர் சுற்றளவு தொடங்கி 2 மீட்டர் வரை கொண்டவை இவற்றில் சிலதின் எடை 16 டன். பெரும்பாலும் அனைத்து கற்களும் கிரானைடில் செதுக்க பட்டவை. இவைகள் terraba ஆற்று படுக்கைகளில் இருந்து அடித்து வரப்பட்டு கிடைத்து இருக்கலாம் என்கிறார்கள் . இன்று அந்த அழகிய மர்ம கல் உருண்டைகள் அங்குள்ள அரசு அலுவலகம் முன் ,மருத்துவ மனைகளில், பள்ளிகளில், அருங்காட்சியகங்களில் அலங்காரத்திற்காக வைக்க பட்டுள்ளன. அரைகுறையாக செதுக்க பட்ட உருண்டை ஏதும் அங்கே கிடைக்க வில்லை.
இந்த கற்களை அக்காலத்தில் வேலை மெனக்கெட்டு பண்டைய காலத்தினர் ஏன் செதுக்கினார்கள் என்பது மர்மமாகவே உள்ளது.
✴ ✴ ✴ ✴
உலகின் சில பிரமாண்ட கட்டமைப்புகளை ராட்சதர்கள் தான் கட்டி இருக்க வேண்டும் என்பதில்லை. ராட்சதர்கள் மேல் நம்பிக்கை கொண்ட மனிதர்கள் ராட்சதர்களை திருப்தி படுத்த கட்டிவையாக இருக்கலாம். அல்லது ஜூபிடர் போன்ற கடவுள் கோவில்களில் தங்கள் கடவுளின் பிரம்மாண்டத்தை கணக்கில் கொண்டு அவருக்கு பொருத்தமானதாக கருதி அந்த தேவைக்கு அதிக பிரம்மாண்டத்தை கட்டிடத்தில் உட்புகுத்தி இருக்கலாம். கிட்ட தட்ட இதே போன்ற ஒரு பிரமாண்டம் நம் ஊரில் உண்டு . அது ..."தஞ்சை பெரிய கோவில்."
நாம் பார்க்கும் எல்லா கோவில் கோபுரங்களும் அகல வாட்டத்தில் விரிந்து காணப்படுவதை பார்க்கலாம். ஆனால் தஞ்சை கோவில் பிரதான விமானம் பிரமிட் வடிவத்தை ஒத்த கூர் வடிவ கோபுர அமைப்பை கொண்டது. 'பெரு' கல் சுவரில் இன்கா இனத்தினர் பயன் படுத்திய கற்களின் inter lock தொழில் நுட்பத்தை ஒத்து தஞ்சை கோவில் கோபுரம் சுட்ட செங்களையோ அல்லது ஒட்டும் பசைக்கு கார வேலையோ துளியும் பயன் படுத்தாமல் கற்கள் தங்களுக்குள் பொருந்தி கொள்ளும் இன்டர் லாக் சிஸ்டம் படி வடிவமைக்க பட்டுள்ளது. இந்த கோபுரத்தின் மேலே உள்ள கலச அமைப்பின் எடை மட்டும் 81 டன். அதாவது ஒரே நேரத்தில் கிட்ட தட்ட 13 நன்கு வளர்ந்த ஆப்ரிக்க யானைகள் ஒன்று சேர்ந்து ஏறி நிற்பதற்கு சமம். இந்த மொத்த கோபுரம் வேறு எந்த கோபுரமும் இல்லாத அளவில் 1 லட்சத்து 30 ஆயிரம் டன் எடை கொண்டது.
அந்த கோவிலின் தூண்கள் சாதாரண தூண்களை காட்டிலும் அதிக பிரமாண்டமாக ராட்சத தனமாக உள்ளது. வாயிலில் வரவேற்கும் துவாரபாலகரும் வழக்கத்தை விட அதிக பிரமாண்டமாக 12 அடி உயரம் கொண்டவராக மிரட்டுவதை பார்க்கலாம். திரை படங்களில் கதாநாயகனின் வலிமை எடுத்து சொல்ல சில buildup காட்சி அமைப்புகள் வைக்க படுவதை போல துவாரபாலகரின் பிரம்மாண்டத்தை நாம் கற்பனை செய்ய அதை செய்த சிற்பி ஒரு காரியம் செய்து உள்ளார். அதாவது ஒரு யானையை ஒரு பாம்பு விழுங்குவதை போன்ற ஒரு சிற்பம் செய்துள்ளார். அந்த பிரமாண்ட பாம்பு எங்கேயுள்ளது என்றால் துவாரபாலகர் கையில் வைத்திருக்கும் கதை ஆயுதத்ததில் ஒரு சிறு புழு போல காட்ட பட்டுள்ளது. (அதாவது யானையை பாம்பு விழுங்குகிறது என்றால் அது எவ்வளவு பிரமாண்டமானதாக இருக்கும் அந்த பாம்பு துவாரபாலகரின் முன் புழு போல இருக்கும் என்றால் அப்போ துவாரபாலகர் வடிவம் எவ்வளவு பிரமண்டமானது என்று நம்மை கற்பனை செய்ய வைக்க ஏற்பாடு )
உள்ளே இருக்கும் கர்ப்ப கிரக சுவரின் அகலம் எதோ அணு உலை சுவரை போல 13 அடி அகலத்தில் செய்ய பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக அந்த கோவிலின் நாயகனின் லிங்க வடிவம் வழக்கமான வடிவம் போல இல்லாமல் கிட்ட தட்ட 13 அடி உயரம் 5 அடி அகலம் கொண்டது. இப்படி ஒவொரு அடியிலும் அசாத்திய பிரமாண்டம் காட்டும் தஞ்சை கோவில் சந்தேகம் இல்லாமல் உலக அதிசய கட்டிடங்களில் ஒன்று தான்.
✴ ✴ ✴ ✴
சில மர்மங்கள் நம்மை ஆச்சர்ய படுத்தி 'அட 'என ரசிக்க வைப்பவை... சில மர்மங்கள் நம்மை அச்சுறுத்தி 'ஐயோ' என அலற வைப்பவை .அப்படி திகில் கிளப்பும் சில மர்மங்கள் பற்றி அடுத்ததாக பார்ப்போம்.
மர்மங்கள் தொடரும்............🕷🕷
|