நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்!
( தொடர்- 6 )
கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்.
( தொடர்- 1 ), ( தொடர்- 2 ) , ( தொடர்- 3 ) , ( தொடர்- 4 ) , ( தொடர்- 5 )
மஸ்ஜிதுல்குபாவை கண்டதும் உணர்ச்சிப்பெருக்கால்,என் கண்களிலிருந்து தாரை,தாரையாய் வழிந்தோடிய கண்ணீர்த்துளிகளை கூட துடைக்கமுடியாமல் சட்டென பள்ளிக்குள் நுழைந்தேன்.
பள்ளியின் நாலாபுறத்திலும் ஓடினேன்,அங்குமிங்கும் தேடினேன்,ஏன் தெரியுமா?????
கோமான் நபி(ஸல்)அவர்கள் தமது திருக்கரத்தால் கட்டிய முதல் பள்ளி மட்டுமல்ல,(ஸல்)அவர்கள் இமாமாக தொழுகை நடத்திய முதல் பள்ளியும் அதுதான்!

நான் மஸ்ஜிதுல்குபாவிற்குள் நுழைந்ததும் எனது நெற்றியை தரையில் வைக்கும் முன்பே எம்பெருமானார்(ஸல்)அவர்களின் நெற்றி இந்த இடத்தில் பட்டிருக்குமோ,அந்த இடத்தில் பட்டிருக்குமோ,என்ற சிந்தனையிலேயே,
பள்ளியின் நாலாபுறத்திலும் ஓடினேன்,அங்குமிங்கும் தேடினேன்,ஆனாலும் எனது மனம் அமைதிபெறவில்லை.
என்னால் எவ்வளவு முடிந்ததோ?அவ்வளவு நேரம் மஸ்ஜிதுல்குபாவின் தரைப்பகுதியின் பெரும்பாலான இடங்களிலும் எனது நெற்றியை வைத்துஅல்லாஹ்வுக்குநன்றி தெரிவிக்கும் வகையில் சஜ்தா செய்தேன்.
லுஹர் வக்தில் பள்ளிக்குள் நுழைந்த நான் அஸர் தொழுகை வரை அங்கேயே இருந்தேன்.அப்போது தான் எம்பெருமானார்(ஸல்)அவர்களின் மதீனாவை நோக்கிய ஹிஜ்ரத் பயணம் என்மனதிற்குள் அசைபோட ஆரம்பித்தது.
பெருமானாரின் வருகையை ஒவ்வொரு நாளும் மதீனத்து மக்கள் ஹர்ரா என்னுமிடத்தில் கூடி நின்று எதிர்பார்ப்பதும் பிறகு சூரியன் மறைய ஆரம்பித்ததும் மீண்டும் மதீனாவுக்கு வந்து விடுவதுமாக ஒருசில நாட்கள் போகவே,
ஒருநாள் வழக்கத்திற்கு மாறாக அதிகாலையிலேயே மதீனத்து மக்கள் ஹர்ரா என்னுமிடத்திற்கு வந்துவிட்டனர்.
அன்றையபொழுது வெயிலின் கொடுமையையும் பொருட்படுத்தாமல் பசியோடும்,தாகத்தோடும் எம்பெருமானாரை இன்முகத்தோடு வரவேற்க வேண்டுமே,என்பதற்காக மிக நீண்ட நேரம் காத்திருந்தும் பெருமானார்(ஸல்)அவர்களை காணவில்லையே என்ற ஏக்கத்தோடு அவரவர்கள் தத்தமது வீடுகளுக்கு திரும்பிவிடுகின்றனர்.
அந்த நேரத்தில் யூதர்களில் ஒருவன் ஏதோ ஒன்றை பார்ப்பதற்காக தனது கோட்டை மீது ஏறினான் அப்போது தூரத்தில் அருமை நாயகம்(ஸல்)அவர்களும்,ஹழ்ரத் அபுபக்கர் சித்தீக்(ரலி)அவர்களும் வெண்மையான ஆடையணிந்து வருவதைப்பார்த்ததும்,
ஓ.. அரபுகளே!நீங்கள் இத்தனை நாளும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அந்த பாக்கியம் இதோ வருகிறது!என்று உயர்ந்த சப்தத்தில் கூறினான்.
இதைக்கேட்டதும் மதீனத்து மக்களின் முகமெல்லாம் மகிழ்ச்சிப்பெருக்கால் அலைபாய்கிறது!கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு ஹர்ரா என்னும் இடம் நோக்கி ஓடினார்கள்.
மதீனத்து மக்களின் பரபரப்பான அசைவுகளாலும்,உற்சாகத்தில் குரலை உயர்த்திப்பேசுவதாலும்,மதீனாவும்,மதீனாவை சுற்றிய பகுதிகளும் அல்லோகலப்பட்டது.
அம்ரு இப்னு அவ்ஃப் குடும்பம் வசிக்கும் பகுதியிலிருந்து அல்லாஹு அக்பர் என்ற தக்பீர் முழக்கம் விண்ணைப்பிளந்தது.
(ஸல்)அவர்களின் வருகையின் மகிழ்ச்சியால் மதீனத்து மக்கள் தக்பீர் முழங்கினர்.நபி(ஸல்)அவர்களை சந்திக்க விரைந்தனர்.சூழ்ந்து நின்று வாழ்த்துக்கூறி வருக!வருக!வென வரவேற்றனர்.
மதீனத்து மக்களின் பாசத்தாலும்,நேசத்தாலும் திக்குமுக்காடிய மனிதருள் மாணிக்கம் மாசில்லா மாமணி ஈருலக சர்தார் எம்பெருமானார்(ஸல்)அவர்கள் அமைதி தவழ வந்து கொண்டிருந்தார்கள்.

அந்த நேரத்தில் தான்,
நிச்சயமாக அல்லாஹ் அவரை பாதுகாப்பவனாக இருக்கிறான்.அன்றி,ஜிப்ரயீலும்,நம்பிக்கையாளர்களிலுள்ள நல்லடியார்களும்,இவர்களுடன் (மற்ற) வானவர்களும்(அவருக்கு)உதவியாக இருப்பார்கள்.(அல்குர்ஆன் -66:4)என்ற வசனம் இறங்கியது.
இந்த வசனத்தின் மூலம் அல்லாஹ்வே, மதீனத்து மக்களை நம்பிக்கையாளர்கள் என்றும் நல்லடியார்கள் என்றும் உலகத்திற்கு தெளிவு படுத்திவிட்டான்.
இவ்வளவு சிறப்பிற்குரிய மதீனத்து மக்களை பற்றிய சிந்தனையுடன் மஸ்ஜிதுல் குபாவின் தலைவாசலில் வந்து நின்று வீதியை நோக்கினேன்.
ஹர்ரா என்னுமிடத்திலிருந்து அழைத்து வரப்பட்ட நபிகள்(ஸல்)அவர்கள் தற்போதைய மஸ்ஜிதுல்குபா அருகில் நெருங்கிய போது குபா பகுதி முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
சஹீஹுல் புகாரியில் நான் படித்த ஹதீஸ்களை இப்போது மஸ்ஜிதுல்குபாவிலிருந்து எண்ணிப்பார்க்கிறேன்.என்னையே மறந்து நின்றேன்......
(ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்)
இன்ஷா அல்லாஹ்...தொடரும்.....
More about Quba Masjid.
http://en.wikipedia.org/wiki/Quba_Mosque
http://www.qubamosque.com/index.php |