Posted By:Hajas On 8/26/2015 12:36:27 AM |
|
டைனோசர்களை காணவில்லை – Wanted Dead or Alive...........பாகம் 1
by David Praveen
இந்த கட்டுரை, டைனோசர் போன்ற மிகப் பெரும் உயிரினங்கள் எப்படி திடுதிப்பென்று இந்த பூமியில் இருந்து அழிந்துப்போயின என்பதைக் குறித்து தேடல் ஒன்றை நடத்த இருக்கிறது. சுமார் 70 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூமியில் வாழ்ந்ததாக நம்பப்படும் டைனோசர்கள் அழிந்தது குறித்து ஆய்வுளகில் இரு வேறுக் கருத்துக்கள் நிலவுகின்றன.
டைனோசர்கள் அழிந்தது குறித்து அறிந்து வைத்திருக்கும் நம்மில் பலருக்கு அந்த அழிவிற்கு காரணம் எது என்பது குறித்து ஆய்வுளகில் இன்றளவும் நிலவி வரும் கருத்து வேறுபாடுகள் தெரியாமலிருந்து வருகிறது. டைனோசர்களின் அழிவிற்கு காரணம் என்றுப் பரவலாக சொல்லப்பட்டு வரும் விசயம் உண்மைதானா இல்லை வேறு ஏதும் காரணம் இருக்கிறதா என்பதை ஆதாரங்களுடன் பேசப் போகிறது இந்த கட்டுரை.
என் எழுத்துக்களை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு நான் ஒரு விசயத்தை திரும்ப திரும்ப வலியுறுத்துவதைக் குறித்த பரிட்சயம் இருக்கலாம். அது பள்ளிகளிலும், வெகு சன ஊடகங்களிலும், இணையத்திலும் வரலாறு என்று சொல்லப்படும் விசயங்கள் அனைத்தும் போலிகள் என்பது. அப்படியான ஒரு போலிதான் டைனோசர்கள் ஒரே இரவில் இந்த பூமியிலிருந்து அழிந்துவிட்டன என்பதும் அதற்கு சொல்லப்படும் காரணமும்.
குழாயடி சண்டைகளை தூக்கிச் சாப்பிடும் சண்டைகள் இந்த விசயத்தில் புதைப் படிவங்களை (fossils) ஆராயும் அறிவியலாளர்களான paleontologist-கள் மத்தியில் நடந்து வருகிறது. குழுக்களாக பிரிந்துக்கொண்டு ஒருவர் மீது ஒருவர் மண்ணை வாரித் தூற்றிக்கொள்ளாதது ஒன்றுதான் மிச்சம். பொதுவாக paleontologist-கள் என்றில்லாமல் எல்லா வகை ஆராய்ச்சியாளர்களும் நம்மூர் சினிமா டைரக்டர்களைப் போன்ற உளவியல் கொண்டவர்கள்தான்.
தங்கச்சி சென்டிமென்ட் கதை வெற்றிப் பெற்றுவிட்டால் தொடர்ச்சியாக தங்கச்சி சென்டிமென்ட் படங்களாக எடுத்து தள்ளி நமக்கு பேதியை கிளப்பிவிடுவார்கள் அல்லவா (இப்பொழுது ஆலிவுட் படங்களை சுட்டு நமக்கு பீதியை கிளப்பும் டிரென்ட் ஓடிக்கொண்டிருக்கிறது) அதேப்போலத்தான் ஆராய்ச்சியாளர்களும். எந்த கருத்து (hypothesis) கரச்சலை கிளப்புகிறதோ அந்த கருத்துக்கு பின்னாலே மற்ற ஆராய்ச்சியாளர்களும் ஓடுவார்கள். உதாரணத்திற்கு டார்வீனின் பரிணாமக் கொள்கையை எடுத்துக்கொள்வோம். குரங்கிலிருந்து மனிதன் என்று டார்வின் ரகளைக் கிளப்ப மற்ற ஆராய்ச்சியாளர்களும் தங்கள் பங்கிற்கு அதில் இன்று வரை ரகளைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
இப்படியான ஒரு சங்கதிதான் டைனோசர்களின் அழிவுக் குறித்த hypothesis-யும். அதாவது 65 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றளவுள்ள விண் கல் ஒன்று பூமியில் வந்து மோத அதன் காரணமாக பூமியில் அக்கடா என்று சுற்றித் திரிந்த ஒட்டுமொத்த டைனோசர்களும் ஒரே இரவில் ஒரேடியாக மண்டையைப் போட்டுவிட்டன என்று சொல்லப்படும் கருத்து. இந்த கருத்தை முதன் முதலில் கிளப்பிவிட்டவர்கள் Luis Alvarez மற்றும் Walter Alvarez. இந்த இருவரும் 1980-ல் புகழ்பெற்ற Science பத்திரிக்கையில்தான் முதன் முதலாக இப்படி ஒரு அள்ளு சில்லை கிளப்பிவிட்டார்கள்.
பத்தவச்சிட்டீங்களேடா பரட்டைங்களா என்கிற ரீதியில் தொடங்கியது ஆராய்ச்சியாளர்களிடையே அடிதடி. பெத்தோஸ் சாங்கு பின்னாடி கதற ஒரே நைட்டில் டைனோசர்கள் மண்டையைப்போட இது என்ன தமிழ் சினிமாவா என்று கேட்காத குறையாக ஆராய்ச்சியாளர்களில் ஒரு குரூப்பு செல்லாது செல்லாது என்று முண்டா முறுக்க, ஏய் அதான் சொல்றமுல கல் விழுந்துச்சி டைனோசருங்க பல்லுத் தெறிச்சு பரலோகம் போயிடுச்சுங்க இதுக்கு மேல என்னா வேணும் என்று மக்களின் கழுத்தில் கத்தி வைக்காத குறையாக மற்றொரு குரூப்பு லுங்கியைத் தூக்கிக் கட்டியது.
அடுத்த தொடரிலும்......
பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5, இறுதி.
https://www.facebook.com/photo.php?fbid=1536253546621258&set=a.1398919533687994.1073741828.100007098817905&type=1
|