பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் =============================
தொடர் 3: திரைமறைவில் ஜின்கள்
Episode 30: கரீன் (கூட்டாளி):
Episode 31: கரீன் (கூட்டாளி) – தொடர்ச்சி - 1:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
“கரீன்” எனும் இந்த ஜின் இனத்துக்கு மனிதர்கள் மீது பௌதீக ரீதியில் பாரிய ஆதிக்கங்களைச் செலுத்தும் அதிகாரம் இல்லை. மனிதனது உணர்ச்சிகளில் மட்டுமே இவர்களுக்கு ஆதிக்கம் செலுத்தும் ஆற்றலும், அதிகாரமும் உள்ளது. உணர்ச்சிகள் விசயத்தில் இவர்கள் புகுந்து விளையாடுவார்கள். அந்த அளவுக்கு இவர்கள் அதில் கைதேர்ந்தவர்கள். உண்மையில், மனிதனது உணர்ச்சிகளில் ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் மனிதனை அல்லாஹ்விடமிருந்து தூரமாக்குவதே இவர்களுக்கு ஒப்படைக்கப் பட்டிருக்கும் பிரதான பணி.
தொழுகைக்காக நிற்கும் போதும், நல்ல காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதும் மனிதனது இரத்தவோட்டத்திலும், மூளையின் செயற்பாட்டிலும் கரீன் தான் சோர்வை ஏற்படுத்துகிறான். இதனால் தான் இவ்வாறான காரியங்களின் போது நமக்குக் கொட்டாவியோடு தூக்கம் வருகிறது.
வழிகேட்டின் பால் நம்மை இட்டுச் செல்லக் கூடிய கெட்ட காரியங்களை நெருங்கும் பொழுது, அலாதியான ஓர் உற்சாகத்தையும், ஆசையையும் அவற்றின் மீது கரீன் தான் தோற்றுவிக்கிறான். இதனால் தான் நேர்மையாக வாங்கிச் சாப்பிடும் மாம்பழத்தை விட, திருடிச் சாப்பிடும் மாம்பழம் நமக்கு அதிகம் ருசிக்கிறது.
ஓர் ஆண், தனிமையில் ஒரு பெண்ணோடு ஒரேயொரு நிமிடம் தரித்திருக்க நேர்ந்தால் கூட போதும்; அந்தக் கணமே உடலுக்குள் இருக்கும் பாலுணர்வு சார்ந்த ஹோர்மோன்கள் அனைத்தையும் தாறுமாறாகச் சுரக்கச் செய்து, இரத்தத்தில் ஆறாக ஓட விடுவதும் இதே கரீன் தான். இதனால் தான் ஓர் ஆணும், பெண்ணும் கெட்ட நோக்கம் இல்லாமலே தனித்திருந்தாலும் கூட, அவர்களையும் மீறித் தப்பு தண்டாக்கள் நடந்து விடுகின்றன.
சாதாரணப் பிரச்சினைக்காக ஒரு மனிதனுக்கு சற்றே கோபம் வந்தாலும், அந்தக் கோபத்தையே பெரிதாக்கி, அதன் மூலம் அந்த மனிதனது நிதானத்தையே நிலைகுலையச் செய்வதும் இதே கரீன் தான்.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். சுருக்கமாக கூறினால், மனிதனுக்குள் இருக்கும் பல்வேறு உணர்ச்சிகளைத் தேவைக்கேற்ப தூண்டுவதன் மூலம் அல்லாஹ்வின் கருணையிலிருந்தும், பாதுகாப்பிலிருந்தும் அந்த மனிதனைத் தூரமாக்குவதிலும், அதே நேரம் அந்த மனிதனை ஏனைய ஷைத்தானிய ஜின்களின் கைகளில் ஒப்படைக்கும் பணியிலும் கரீனுக்கு இருக்கும் பங்களிப்பு அளப்பரியது. ஏனைய ஷைத்தானிய ஜின்களின் கையில் ஒப்படைப்பது என்றால் என்ன என்று சிலருக்கு இங்கு ஒரு கேள்வி எழலாம். இதற்கான பதிலை இன் ஷா அல்லாஹ் சற்று நேரத்தில் நோக்கலாம்.
பொதுவாக வேறெந்த வகையான ஷைத்தானிய ஜின்களாக இருந்தாலும், அவர்களை நம்மிடமிருந்து துரத்துவதற்கும், அவர்களிடமிருந்து பாதுகாவல் பெற்றுக் கொள்வதற்கும் இஸ்லாம் நமக்குப் பல வழிகளைக் கற்றுத் தந்திருக்கிறது. உதாரணத்துக்கு குறிப்பிட்ட சில குர்ஆன் வசனங்களை ஓதுவதன் மூலம் ஷைத்தானிய ஜின்களிடமிருந்து நாம் பாதுகாக்கப் படுகிறோம் என்று அனேகமான ஹதீஸ்களில் கூறப்பட்டிருப்பதைக் காணலாம். இதேபோல் அதான் சப்தம் கேட்கும் போது ஷைத்தான்கள் அந்த இடத்திலிருந்து அலறியடித்துக் கொண்டு ஓடி விடும் என்று கூட ஹதீஸ் கூறுகிறது. மேலும், ரமழான் மாதம் வந்து விட்டால், ஷைத்தான்கள் விலங்கிடப் படுகின்றன என்று கூட மார்க்கம் கூறுகிறது.
இவ்வாறான ஹதீஸ்களில் எல்லாம் கூறப்பட்டிருப்பது போல், குர் ஆன் ஓதும் போது ஷைத்தான்கள் ஓடுகின்றன என்பதும், அதான் சத்தம் கேட்கும் போது ஷைத்தான்கள் ஓடுகின்றன என்பதும், ரமழான் மாதம் வந்து விட்டால் ஷைத்தான்கள் விலங்கிடப் படுகின்றன என்பதும் எல்லாமே உண்மை; இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், இதுவெல்லாம் ஏனைய ஷைத்தானிய ஜின் இனத்தவருக்குத் தான் பொருந்தும். இவை அனைத்திலுமிருந்து “கரீன்” எனப்படும் ஜின் இனத்துக்கு அல்லாஹ் விதிவிலக்கு வழங்கியிருக்கிறான். இதை ஏற்கனவே நாம் குறிப்பிட்ட மார்க்க ஆதாரங்கள் மூலமும், மற்றும் இன்னும் பல ஆதாரங்கள் மூலமும் இலகுவாகப் பிரித்தறிந்து கொள்ளலாம்.
அதாவது, ஏனைய ஜின் இனத்தவரிடமிருந்து பாதுகாக்கும் பொருட்டு ஓதப்படும் எந்தக் குர்ஆன் வசனத்தாலும் கரீன்கள் ஓடுவதில்லை; அதான் சப்தம் கேட்டாலும் கரீன்கள் ஓடுவதில்லை; ரமழான் வந்தாலும் கரீன்கள் விலங்கிடப் படுவதில்லை. இன் ஷா அல்லாஹ் பிந்திய பகுதிகளில் நாம் நோக்கவிருக்கும் வேறு பல வகையான ஷைத்தானிய ஜின் இனத்தவர்கள் தான் ரமழானில் விலங்கிடப் படுகிறார்கள்; குர்ஆன் வசனத்தைக் கேட்டால் ஓடுகிறார்கள்; அதான் சப்தம் கேட்டு ஓடுகிறார்கள்.
கரீனைப் பொருத்தவரை, தான் நியமிக்கப் பட்ட மனிதனை ஒரு கணம் கூட பிரியாமல், மரணம் வரை கூடவே இருப்பது தான் அவனது பிரதான பணி. எனவே இந்தப் பணிக்கு இடையூறு செய்யாமலிருக்கும் பொருட்டு அல்லாஹ் கரீனுக்கு மாத்திரம் இவ்வாறான பாதுகாவல்களிலிருந்து விதிவிலக்குக் கொடுத்திருக்கிறான்.
“கரீன்”களுக்கு ஒப்படைக்கப் பட்டிருக்கும் பணியின் பிரதான நோக்கம்: ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ “கரீன்”களின் பிரதான பணி என்பது, மனித உணர்ச்சிகளில் விளையாடுவதன் மூலம் மனிதனது நிதானத்தை நிலைகுலையச் செய்து, அதன் மூலம் அவனை அல்லாஹ்வின் கருணையிலிருந்து தூரமாக்குவதும், ஏனைய ஷைத்தானிய ஜின்களிடம் மனிதனை ஒப்படைப்பதும் தான் என்பதை ஏற்கனவே கூறினோம்.
இவ்வாறு உணர்ச்சிகளைத் தூண்டி, பாவம் செய்ய வைப்பதன் மூலம், வேறு வகையான ஜின் இனத்தவர்களின் கையில் மனிதனை ஒப்படைப்பது எவ்வாறு சாத்தியம்? எனும் கேள்வி இங்கு எழுகிறது. இதற்கான ஒரு விளக்கத்தையும் நாம் தெரிந்து கொள்வது அவசியம். எனவே இது குறித்தும் சற்று பார்ப்போம்:
முதலில் ஒரு குர் ஆன் வசனத்தைப் பார்ப்போம். அதன் பின் விளக்கத்துக்குள் நுழைவோம்:
மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய(வானவர்கள்)வர்கள் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனைப் பாதுகாக்கிறார்கள். எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை. அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (அல்குர்ஆன் 13 : 11)
இந்த வசனத்துக்குள் ஒரு மாபெரும் உண்மை பொதிந்திருக்கிறது. அதைச் சரியாக இனங்கண்டு கொண்டாலே போதும்; நமது தேடலுக்கான விடை கிடைத்து விடும். இந்த வசனம் சொல்லும் செய்தி என்னவென்பதைக் கொஞ்சம் தனித்தனியாக பிரித்து நோக்கி விட்டு, அந்த விளக்கங்களை மீண்டும் சரியான ஒழுங்கில் ஒருங்கிணைக்கும் போது உண்மை வெளிப்படும் இன் ஷா அல்லாஹ்.
இந்த ஒரு வசனத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட செய்திகளை அல்லாஹ் ஒருங்கிணைத்துக் கூறியிருப்பதை அவதானிக்கலாம். பொதுவாக பல செய்திகளை ஒரே வசனத்தில் அல்லாஹ் சேர்த்துச் சொல்வதாக இருந்தால், கண்டிப்பாக அந்தச் செய்திகள் ஒவ்வொன்றுக்கும் இடையில் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கும். சம்பந்தம் இல்லாமல், பல செய்திகளை இணைத்து ஒரே வசனத்துக்குள் அல்லாஹ் ஒருபோதும் சொல்லவே மாட்டான். அந்தச் சம்பந்தம் என்னவென்பதை சரியாக இனம்கண்டு கொள்வதற்கே அனேகமான சந்தர்ப்பங்களில் ஹதீஸ்களையும், தகுந்த ஹதீஸ்கள் கைவசம் இல்லாத நிலையில் அவற்றைச் சரியாகப் பிரித்தறிந்து புரிந்து கொள்ளும் அறிவையும் அல்லாஹ் நமக்கு வழங்கியிருக்கிறான். எனவே, இந்த அனுகுமுறையின் அடிப்படையில் இனி இந்தச் செய்திகள் ஒவ்வொன்றுக்கும் இடையில் இருக்கும் சம்பந்தம் என்னவென்பதை நமது சக்திக்கு உட்பட்ட விதத்தில் பார்க்கலாம்:
முதலில் இந்த வசனங்களில் என்னென்ன செய்திகள் சொல்லப் பட்டிருக்கின்றன என்பதைப் பட்டியலிட்டுக் கொள்ளலாம்:
செய்தி 1: மனிதனைப் பாதுகாக்கும் விதமாக அவனைச் சூழ வானவர்களை அல்லாஹ் நியமித்து வைத்திருக்கிறான்.
இதன் விளக்கம்: ஒவ்வொரு மனிதனுக்கும் என்று நியமிக்கப் பட்டிருக்கும் மரணம், அல்லது நோய் போன்ற நிகழ்வுகள் நேரும் வரை, ஏனைய சந்தர்ப்பங்களில் அவனது உடலையோ, ஆன்மாவையோ பாதிக்கும் விதமான தீங்குகள் எதுவும் அவனை அனுக விடாமல் பாதுகாப்பதே இந்த வானவர்களின் பணி. அவை எந்த விதமான தீங்குகளாக இருந்தாலும் சரியே. அவை விபத்துக்களாக இருக்கலாம்; நியமிக்கப் படாத அடிப்படையில் அனுக வரும் நோய் துன்பங்களாக இருக்கலாம்; வேறு விதமான முஸீபத்துக்களாக இருக்கலாம்; அதே போல் கெட்ட ஜின்கள் / ஷைத்தான்கள் போன்றவற்றின் மூலம் விடுக்கப்படும் பௌதீக ரீதியான தாக்கங்கள் / பாதிப்புகளாகக் கூட அவை இருக்கலாம். இவ்வாறான எல்லா விதமான தீங்குகளிலும் இருந்து அந்த மனிதனைப் பாதுகாப்பது தான் இந்த வானவர்களின் பணி.
இதில், விபத்துக்கள், மற்றும் உயிரைப் பறிக்கக் கூடிய ஆபத்துக்கள் போன்றவற்றிலிருந்து நியமிக்கப்பட்ட நேரம் வரை ஒரு மனிதனைப் பாதுகாத்தல் என்பது, நல்லோர் தீயோர், முஸ்லிம், காஃபிர் என்று எந்தப் பாகுபாடுமில்லாமல் எல்லோருக்கும் பொதுப்படையாக வழங்கப் பட்டிருக்கும் பாதுகாவல்கள். இவை பற்றி இங்கு நாம் அலச வேண்டியதில்லை. இவ்வாறான பாதுகாப்புகளுக்கு மேலதிகமாக, ஒவ்வொரு மனிதனுக்கும் என்று தனித்துவமான அடிப்படையில் நேருகின்ற மறைமுகமான முஸீபத்துக்கள், மற்றும் கெட்ட ஜின்கள் / ஷைத்தான்கள் போன்றவற்றின் மூலம் ஏற்படும் அச்சுறுத்தல்கள் போன்றவற்றிலிருந்து மனிதர்களை இவ்வானவர்கள் பாதுகாப்பது குறித்தே இங்கு நாம் கவனம் செலுத்துகிறோம்.
செய்தி 2: அல்லாஹ்வின் கட்டளையால் அவ்வானவர்கள் அந்த மனிதனைப் பாதுகாக்கிறார்கள்.
இதன் விளக்கம்: அல்லாஹ்வால் நியமிக்கப் பட்டிருக்கும் இந்த வானவர்கள், தாம் நியமிக்கப் பட்டிருக்கிறோம் என்பதற்காக 24 மணித்தியாலமும் எல்லா விதமான தீங்குகளிலிருந்தும் எல்லா மனிதர்களையும் ஒரே மாதிரி பாதுகாத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்று புரிந்து விடக் கூடாது. அவ்வாறு பாதுகாப்பதில்லை. மாறாக, எந்தெந்த சந்தர்ப்பங்களில் அவனை என்னென்ன தீங்குகளிலிருந்து பாதுகாக்க வேண்டும்; அதே போல் எந்தெந்த சந்தர்ப்பங்களில் அவனைப் பாதுகாக்காமல் அவனை விட்டு விலகி விட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளை பிறப்பிக்கிறானோ, அந்தக் கட்டளைகளுக்கு ஏற்ப மட்டுமே இவ்வானவர்கள் தமது பணியைச் செய்கிறார்கள் என்பது தான் இதன் அர்த்தம்.
சுருக்கமாகக் கூறுவதென்றால், “இன்ன நேரத்தில் அவனுக்கு நிகழும் இன்ன தீங்கிலிருந்து அவனை நீ பாதுகாக்க வேண்டும்; இன்ன நேரத்தில் அவனுக்கு நிகழும் இன்ன தீங்கிலிருந்து நீ அவனைப் பாதுகாக்காமல், அவனை விட்டு விலகி விட வேண்டும்” என்று அல்லாஹ் விடுக்கும் கட்டளைகளுக்கு அமைய மட்டுமே இவ்வானவர்கள் மனிதர்களைப் பாதுகாக்கிறார்கள். இது தான் இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் இந்தச் செய்தியின் அர்த்தம்.
செய்தி 3: எந்தவொரு சமுதாயத்தவரும் தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை.
இதன் விளக்கம்: மனிதனின் பாதுகாப்புக்காக நியமிக்கப் பட்டிருக்கும் இவ்வானவர்கள், எப்போது அந்த மனிதனை முஸீபத்துக்களில் இருந்து பாதுகாக்க வேண்டும்; எப்போது பாதுகாக்காமல் விலகி விட வேண்டும் என்பதை அல்லாஹ் தீர்மாணிப்பது கூட, அந்தந்த மனிதனது நடவடிக்கைகளிலேயே தங்கியிருக்கிறது.
அதாவது, ஒரு மனிதன் என்னென்ன அடிப்படைகளில் தமது வாழ்வை அமைத்துக் கொண்டால் மட்டுமே, அவனைத் தான் பொறுப்பேற்பதாக அல்லாஹ் வாக்களித்திருக்கிறானோ, அந்த அடிப்படைகளில் அவன் வாழும் போது மட்டுமே அல்லாஹ் அவனை ஷைத்தான் சார்ந்த முஸீபத்துக்களிலிருந்து பாதுகாக்கத் தீர்மாணிக்கிறான். அவ்வாறு தீர்மாணிக்கும் போது மட்டுமே, அந்த மனிதனை ஷைத்தான் சார்ந்த முஸீபத்துக்களிலிருந்து பாதுகாக்குமாறு இவ்வானவர்களுக்கு அல்லாஹ் கட்டளை பிறப்பிக்கிறான். அந்தக் கட்டளைகளுக்கு அமைய மட்டுமே வானவர்கள், அந்த மனிதனை ஷைத்தான் சார்ந்த முஸீபத்துக்களிலிருந்து பாதுகாக்கிறார்கள்.
இதை இன்னொரு விதத்தில் எளிமையாகக் கூறுவதென்றால், எல்லா மனிதர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும் பொதுப்படையான பாதுகாவல்களுக்கு மேலதிகமாக, முஃமின்களுக்கென்று பிரத்தியேகமான மேலும் சில பாதுகாப்புகள் இந்த வானவர்கள் மூலம் வழங்கப்படுகின்றன. இவ்வாறான மேலதிக பாதுகாப்பு என்பது முக்கியமாக ஷைத்தானிய ஜின்களிடமிருந்து ஏற்படும் முஸீபத்துக்களில் இருந்து அந்த முஃமினைப் பாதுகாக்கும் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது.
செய்தி 4: மேலும், அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீமையை நாடினால், அதைத் தடுப்பவர் எவருமில்லை. அவனைத் தவிர அவர்களுக்குத் உதவி செய்வோர் எவரும் இல்லை.
இதன் விளக்கம்: அல்லாஹ்வின் விருப்பத்துக்குரிய முஃமின்களாக இருந்தால் கூட, அல்லாஹ் நாடிய போது மட்டுமே அவர்களைப் பாதுகாக்குமாறு வானவருக்கு உத்தரவிடுவான். சில சந்தர்ப்பங்களில் அந்த முஃமின்களைச் சோதித்துப் பார்க்க விரும்பினாலோ, அல்லது அவர்கள் செய்த சிறு பாவங்களுக்கான தண்டனைகளை இவ்வுலகிலேயே நிறைவேற்றி முடித்து, அவற்றின் மூலம் அவர்களின் பாவங்களையெல்லாம் இங்கேயே கழித்து, மறுமையில் அவர்களைத் தூய்மையானவர்களாக எழுப்ப நினைத்தாலோ அவர்களையும் சில முஸீபத்துக்கள் அண்டும் விதமாக வானவர்களின் பாதுகாப்பை அல்லாஹ் தற்காலிகமாக நீக்குவான். இதன் மூலம் அவர்களைச் சில முஸீபத்துக்களோடு போராட விடுவான். இந்த முஸீபத்துக்கள் எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். அவை நோய் துன்பங்களாக இருக்கலாம்; அல்லது ஷைத்தான் சார்ந்த மறைவான முஸீபத்துக்களாகக் கூட இருக்கலாம். அல்லாஹ்வின் மிகுந்த நேசத்துக்குப் பாத்திரமான நபி (ஸல்) அவர்களே சில காலம் சூனியத்தால் (ஷைத்தான் சார்ந்த முஸீபத்தால்) பாதிக்கப்பட்டுத் துன்பப் பட்ட சம்பவம் கூட இந்த உண்மையை நிரூபிக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
ஆக மொத்தத்தில் இந்த குர் ஆன் வசனத்தில் நான்கு பிரதான செய்திகள் சொல்லப் பட்டிருக்கின்றன. அந்த நான்கு செய்திகளையும் பட்டியல் போட்டுப் பார்த்து விட்டோம். இனி இந்த நான்கு செய்திகளுக்கும் என்னால் வழங்கப் பட்டிருக்கும் விளக்கங்கள் என்னென்ன ஆதாரங்களின் அடிப்படையில் எடுக்கப் பட்டிருக்கின்றன என்பதையும், இந்த நான்கு செய்திகளையும் சம்பந்தப் படுத்துவதன் மூலம் வெளிப்படும் பேருண்மை என்னவென்பதையும், அந்த உண்மைக்கும், “கரீன்” எனப்படும் ஷைத்தானிய ஜின் இனத்தவருக்கும் இடையில் இருக்கும் சம்பந்தம் என்னவென்பதையும் இன் ஷா அல்லாஹ் அடுத்த எபிசோடில் நோக்கலாம்.
இன் ஷா அல்லாஹ் வளரும்...
- அபூ மலிக்
Episode 32: கரீன் (கூட்டாளி) – தொடர்ச்சி - 2: |