pregnancy week calculator by due date pregnancy month calculator hk.onkyo.com பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் =============================
தொடர் 3: திரைமறைவில் ஜின்கள்
Episode 31: கரீன் (கூட்டாளி) – தொடர்ச்சி - 1:
Episode 32: கரீன் (கூட்டாளி) – தொடர்ச்சி - 2:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கடந்த எபிசோடில் குர்ஆன் வசனம் 13:11 இல் சொல்லப் பட்டிருக்கும் நான்கு பிரதான செய்திகளையும் ஒவ்வொன்றாகத் தகுந்த விளக்கங்களுடன் பார்த்தோம். இனி, அந்த விளக்கங்களைத் தொகுப்பதன் மூலம் பெறப்படும் பேருண்மை என்னவென்பதைப் பார்க்கலாம்.
இந்த நான்கு செய்திகளுக்கும் இடையில் ஒன்றோடொன்று நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது என்பதனால் தான் அல்லாஹ் இந்த வசனத்தில் இந்த நான்கு செய்திகளையும் ஒன்றோடொன்று சேர்த்துச் சொல்லியிருக்கிறான் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், தனித்தனியாக சொல்லப்பட்டிருக்கும் இந்த நான்கு செய்திகளுக்கு இடையில் இருக்கும் அந்தப் பொதுப்படையான சம்பந்தம் என்னவென்பது தான் நம்மில் அனேகமானோருக்கு இதுவரை புரியாத புதிராக இருக்கலாம். அதை இப்போது தெளிவு படுத்திக் கொள்ளலாம்.
அந்த சம்பந்தம் என்பது வேறெதுவும் அல்ல; இப்லீஸ் என்பவனின் திட்டங்களுக்கு அமைய, அவனது படையணிகளான ஷைத்தானிய ஜின்கள் மூலம் ஆதம் (அலை) அவர்களது சந்ததிகளாகிய மனிதர்களுக்கு எதிராக அரங்கேற்றப்படும் சதித்திட்டங்களில் இருந்தும், தாக்குதல்களிலிருந்தும், முஸீபத்துக்களிலிருந்தும் முஃமின்களை அல்லாஹ், வானவர்கள் மூலம் பாதுகாக்கிறான் எனும் மறைமுகமான செய்தி தான் அந்த சம்பந்தம். அதாவது, இந்த வசனத்தில் தனித்தனியாக சொல்லப்பட்டிருக்கும் நான்கு வேறுபட்ட செய்திகளுக்கும் இடையிலான பொதுப்படையான சம்பந்தம் என்பது இந்த உண்மை தான்.
இந்த சம்பந்தத்தை நான் வெறும் ஊகத்தின் அடிப்படையில் கற்பிக்கவில்லை. இது தான் சரியான விளக்கம் என்பதை வேறு பல ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. அவற்றின் அடிப்படையிலேயே இந்த விளக்கத்தை நான் சரிகாண்கிறேன். இதற்கான நியாயங்களை நிரூபிக்கும் ஒருசில வாதங்களையும், அவற்றுக்கான தகுந்த ஆதாரங்களையும் இனி நோக்கலாம்:
விளக்கம்: எந்தவொரு மனிதனுக்கும் அல்லாஹ் அநீதியிழைப்பவன் அல்ல. அடியார்கள் விசயத்தில் அல்லாஹ் நீதிக்கு முரணாகப் பாரபட்சம் காட்டுபவனல்ல. எனவே, ஒவ்வொரு மனிதனது வாழ்க்கையின் ஆரம்ப அத்தியாயத்தையும் பாரபட்சமின்றி, சம அளவான சிறப்புகள் வழங்கப்பட்ட நிலையில் நல்ல விதமாகவே அல்லாஹ் ஆரம்பித்து வைக்கிறான். அதாவது அல்லாஹ்வின் பூரண கருணையையும், பாதுகாப்பையும் பெற்ற ஒரு முஃமினாகவே ஒவ்வொரு குழந்தையையும் இவ்வுலகில் பிறக்குமாறு செய்கிறான். இதைப் பின்வரும் ஆதாரங்கள் மூலம் புரிந்து கொள்ளலாம்:
ஆதாரம் 1: ஆகவே, நீர் உம்முகத்தை தூய (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கமே முற்றிலும் திருப்பி நிலைநிறுத்துவீராக! எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள். (அல்குர்ஆன் 30:30)
ஆதாரம் 2: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ, அதைப்போல, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான(மார்க்கத்)தில் தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தை விட்டுத் திருப்பி) யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ, நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கி விடுகின்றனர். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1385
மேற்கூறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் நாம் புரிந்து கொள்ளும் உண்மை என்ன? எந்தவொரு மனிதனாக இருந்தாலும், அவன் பிறக்கும் போது எந்தப் பாரபட்சமும் காட்டப்படாமல், முஃமின் என்ற அந்தஸ்த்திலேயே அல்லாஹ்வால் நோக்கப் படுகிறான். இதன் விளைவாக ஒரு முஃமினை அல்லாஹ் எவ்வாறெல்லாம் பொறுப்பேற்பதாக வாக்களித்திருக்கிறானோ, அந்த எல்லா அடிப்படைகளிலும் ஒவ்வொரு குழந்தையையும் பொறுப்பேற்றுக் கொள்கிறான்.
இந்தப் பொறுப்பேற்றல் என்பதில், அந்தக் குழந்தைக்கான பாதுகாப்பும் உள்ளடங்கும். இதற்கமைய, அந்தக் குழந்தையைப் பாதுகாக்க நியமிக்கப் படும் வானவர்கள், ஷைத்தான் சார்ந்த முஸீபத்துகளிலிருந்து ஒரு முஃமினை எப்படிப் பாதுகாப்பார்களோ, அதே அடிப்படையில் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு அமைய பாதுகாக்க ஆரம்பிப்பார்கள்.
வானவர்களின் இந்தப் பாதுகாப்பு ஒரு மனிதனைச் சுற்றி இருக்கும் வரை “கரீன்” எனப்படும் ஜின் இனத்தைத் தவிர வேறு எந்த விதமான ஷைத்தானிய ஜின்களாலும் அந்தக் குழந்தையை நெருங்க முடியாது.
வானவர்களின் இந்தப் பாதுகாப்பு என்பது, இப்லீஸுக்கு ஒரு மிகப்பெரிய அசௌகரியம். ஏனெனில், அவனால் நினைக்கும் விதங்களிலெல்லாம் அந்தக் குழந்தையை அனுக முடியாதவாறு வானவர்கள் தடையாக நிற்பார்கள். எனவே, இந்தத் தடையை இல்லாமல் செய்வதற்கு இப்லீஸ் ஒரு திட்டத்தை வகுத்திருக்கிறான்.
ஆரம்பத்தில் அவன் கைவசம் இருக்கும் ஒரே ஆயுதம் “கரீன்” எனப்படும் ஜின் மட்டும் தான். ஏனெனில், கரீன்களுக்கு மட்டுமே வானவர் பாதுகாப்பு இருக்கும் நிலையில் கூட அந்த மனிதனோடு ஒட்டியிருக்க அனுமதியுண்டு. எனவே, கரீனை வைத்துத் தான் இப்லீஸ் தனது முதலாவது காய் நகர்த்தலை ஆரம்பிப்பான். அந்தக் குழந்தையின் பெற்றோர் மூலம் அந்தக் குழந்தையை வானவர்களின் பாதுகாப்பிலிருந்து மெல்ல மெல்லத் தூரமாக்குவதற்கு கரீனை உபயோகிப்பான்.
உதாரணத்துக்கு பெற்றோருக்குச் சாட்டப்பட்டிருக்கும் கரீன்கள் மூலம், குஃப்ரான, ஷிர்க்கான, பாவமான காரியங்களை அவ்வீட்டில் தொடர்ச்சியாகச் செய்யுமாறு பெற்றோரின் உணர்ச்சிகளைத் தூண்டிக் கொண்டே இருப்பான். அந்தக் குழந்தை வளரும் வீட்டுச் சூழலை, வானவர்கள் வெறுக்கும் ஒரு சூழலாக மாற்றுமாறு கரீன்கள் மூலம் அதன் பெற்றோரைத் தூண்டுவான். வீட்டில் நாய் போன்ற மிருகங்களை செல்லப் பிராணிகளாக வளர்த்தல், சாராயம், இசை, நடனம், ஆபாசக் கேளிக்கைகள் போன்ற கெட்ட காரியங்களிலேயே அந்த வீடு சதாவும் மூழ்கியிருக்கும் வண்ணம் முயற்சித்துக் கொண்டே இருப்பான்.
இவ்வாறான இடைவிடாத பல முயற்சிகளின் விளைவாக அல்லாஹ்வுக்கு வெறுப்பூட்டக் கூடிய அடிப்படையில் வளர்க்கப் படும் குழந்தைகளை, வானவர்களின் பாதுகாப்பிலிருந்து மெல்ல மெல்லத் தூரமாக்க முயற்சிப்பான். காலப் போக்கில் அந்தக் குழந்தை ஒரு காஃபிரான / முஷ்ரிக்கான குழந்தையாக வளர வளர... அதற்குரிய வானவர்களின் பாதுகாப்பும் குறைந்து கொண்டே செல்லும். வானவர்களின் பாதுகாப்பு குறையக் குறைய, இப்லீஸின் படையைச் சேர்ந்த ஏனைய ஜின் இனத்தவர்களுக்கு அந்தக் குழந்தையை நெருங்கும் வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்லும். இறுதியில் பாதுகாப்பு முற்றாகத் தளர்த்தப் பட்ட பின், அந்த மனிதன் மீது இப்லீஸுக்கு முழு அதிகாரமும் கிடைத்து விடும். அதன் பிறகு அந்த மனிதனைத் தான் விரும்பும் விதத்தில் இப்லீஸ் கையாளலாம்.
இது தான் இப்லீஸின் திட்டம். இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக அரங்கேற்றுவதற்கு கரீன்களின் பங்களிப்பு மிக மிக அவசியம். ஆரம்ப கட்டத்தில் கரீன் வெற்றி பெற்றால் மட்டுமே இதில் இப்லீஸ் வெற்றி பெறுவது சாத்தியம். ஒரு வேளை அந்தக் குழந்தை சரியான ஈமானிய அடிப்படையில் வளர்க்கப் பட்டு, ஒரு முஃமினாக வளர்ந்து விட்டால், அந்த மனிதனை நெருங்கும் வாய்ப்புக்கள் இப்லீஸின் ஏனைய ஜின் இனத்தவருக்குக் கிடைப்பது குதிரைக் கொம்பாக மாறி விடும். இவ்வாறான நிலைமைகளில், கரீன்களைத் தவிர வேறெந்த ஜின் இனத்தவர்களாலும் அந்த முஃமினான மனிதனை ஒருபோதும் அனுக முடியாதவாறு அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு அமைய, வானவர்களால் அந்த முஃமின் தொடர்ந்தும் பாதுகாக்கப் பட்டுக் கொண்டே இருப்பான்.
இதன் விளைவாக முஃமின்கள் விசயத்தில் கரீன்களின் ஆதிக்கம் மட்டுமே தொடர்ந்து கொண்டிருக்கும். அதாவது உள்ளத்தில் ஆசைகளைத் தூண்டுதல், ஊசலாட்டங்களை ஏற்படுத்துதல், வணக்க வழிபாடுகளின் போது சோர்வை ஏற்படுத்துதல், பாவங்களின் பால் ஆசையைத் தூண்டுதல் போன்ற காரியங்களில் மட்டுமே கரீன்கள் வாயிலாக முஃமின்கள் மீது இப்லீஸுக்கு மறைமுகமான அதிகாரம் இருக்கும். இதைத் தாண்டி, பௌதீக ரீதியாக ஆதிக்கம் செலுத்துதல், கரீன் அல்லாத வேறு வகையான முரட்டு ஜின்களை அந்த முஃமினின் உடலுக்குள் புக வைத்தல், பௌதீக ரீதியில் அவன் மீது தாக்குதல் தொடுத்தல், அந்த மனிதனது வீட்டுக்குள் அத்து மீறி நுழைந்து, அவனது குடும்பத்துக்குள் இருக்கும் நிம்மதியைக் குழைத்தல் போன்ற நேரடி அதிகாரங்கள் எதுவும் முஃமின்கள் மீது இப்லீஸுக்கு இருக்காது.
அதே நேரம் காஃபிர்கள், முஷ்ரிக்குகள், மற்றும் முஸ்லிமாக இருந்தும் பாவிகளாக இருப்போர் போன்றோரின் விசயத்தில் நிலைமை தலைகீழாக இருக்கும். இவ்வாறானவர்கள் மீது இப்லீஸுக்குப் பூரண அதிகாரம் இருக்கும். அவன் நினைக்கும் விதங்களிலெல்லாம் இவ்வாறான மனிதர்களது வாழ்வில் ஆதிக்கம் செலுத்தலாம். இதற்கு வானவர்கள் தடையாக நிற்க மாட்டார்கள். ஒரு வகையில் சொல்லப் போனால், “இவனை நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள்; ஏனெனில், இவன் அல்லாஹ்வின் பொறுப்பிலிருந்து தூரமாக்கப் பட்டவன்” எனும் அடிப்படையில், அந்த மனிதனுக்குரிய வானவர்கள் ஷைத்தானின் செயல்திட்டங்களில் குறுக்கிடாமல் விலகியே இருப்பார்கள்.
இதன் விளைவாக, இவ்வாறானவர்களை இப்லீஸ் தனது திட்டங்களுக்கு அமைய எப்படி வேண்டுமானாலும் கைப்பொம்மைகளைப் போல் ஆட்டிப் படைப்பான். சிலரைத் தொடர்ச்சியாகத் துன்புறுத்திக் கொண்டே இருப்பான். அவர்கள் குடும்பங்களில் நெருக்கடிகள், கஷ்டங்கள், கவலைகள் என்று தொடர்ச்சியாக அனுபவிக்குமாறு பல ஷைத்தானிய ஜின்களையும் அவர்களிடம் ஏவி விட்டு, அதன் மூலம் அவர்களை நோவினை செய்து கொண்டே இருப்பான். இவ்வாறான நோவினைகளிலிருந்து தப்புவதற்காக, வேறு வழியில்லாமல் திருட்டு, ஏமாற்றுத் தொழில், பெரும் பாவங்கள், ஷிர்க், மற்றும் குஃப்ர் போன்ற காரியங்கள் வாயிலாக, அல்லாஹ்வை மறுத்தவர்களாகவும், இறுதியில் தனது காலடியில் வந்து சாஷ்டாங்கம் செய்வோராகவும் அவர்களை மாற்ற இப்லீஸ் முயற்சிப்பான்.
இன்னொரு புறம் இன்னும் சிலரைத் தனது அடிமைகளாகவும், சேவகர்களாகவும் இப்லீஸ் தேர்ந்தெடுத்துக் கொள்வான். இவ்வாறு தேர்ந்தெடுத்துக் கொள்ளப்பட்டவர்களுக்குப் பல விதங்களிலும் பல்வேறு ஷைத்தானிய ஜின்கள் வாயிலாக மறைமுகமாக உதவிகளை இப்லீஸ் செய்வான். அவர்களுக்கு இவ்வுலகின் சுகபோகங்களுக்கான வாசல்களைத் திறந்து விடுவான். இதன் விளைவாக இவ்வாறானவர்கள் வெளிப்பாரவைக்கு எந்தக் கஷ்டங்களையும் அனுபவிக்காதவர்கள் போலவும், அழகான ஒரு நிறைவான வாழ்க்கையை இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் போலவும் மக்கள் பார்வையில் தோற்றமளிப்பார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் இப்லீஸின் அடியார்களாகவும், சேவகர்களாகவும் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மனிதர்களில் அனேகமானோர் அறிய மாட்டார்கள். சில சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட அந்த மனிதர்களே கூட இதை உணர்ந்திருக்க மாட்டார்கள். அவ்வளவு நேர்த்தியாக இதில் இப்லீஸின் திட்டங்கள் வகுக்கப் பட்டிருக்கும்.
இவ்வாறான இப்லீஸின் சேவகர்களுக்கு ஒரு சிறந்த உதாரணமாக இன்றைய உலகின் மொத்த ஆட்சி அதிகாரங்களையும், சுகபோகங்களையும் தமது கைவசம் வைத்துக் கொண்டு, ஆண்டு அனுபவித்துக் கொண்டிருக்கக் கூடிய இலுமினாட்டிகளைக் குறிப்பிடலாம். இவர்கள் வசம் தான் இந்த உலகின் எல்லா சௌபாக்கியங்களும் குவிந்திருக்கின்றன. இவர்கள் தாம் எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள். அதே நேரம் திரைமறைவில் இவர்கள் இப்லீஸின் திட்டங்களுக்கு இவ்வுலகில் செயல்வடிவம் கொடுப்பதில் எவ்வாறெல்லாம் அவனது அடிமைகளாகவும், சேவகர்களாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது தேடிப் பார்ப்போருக்கு மட்டுமே புரியும்; ஏனையோருக்குப் புரியாது. இது தான் உண்மை.
இந்த விளக்கங்கள் கூட எனது ஊகத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட விளக்கங்களல்ல. இந்த விளக்கங்கள் தாம் சரியான விளக்கங்கள் என்பதைப் பல மார்க்க ஆதாரங்கள் உறுதிப் படுத்துகின்றன. அவற்றுள் ஒருசில ஆதாரங்களை இப்போது பார்க்கலாம்:
ஆதாரம் 1: எனது அடியார்களில் உன்னைப் பின்பற்றிய வழிகேடர்களைத் தவிர மற்றவர்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை (என்று இப்லீஸைப் பார்த்து இறைவன் கூறினான்). (அல்குர்ஆன் 15 : 42)
ஆதாரம் 2: நம்பிக்கை கொண்டோர் மீதும், தமது இறைவனையே சார்ந்திருப்போர் மீதும் அவனுக்கு (இப்லீஸுக்கு) அதிகாரம் இல்லை. தன்னைப் பாதுகாப்பாளனாக ஆக்கிக் கொண்டோர் மீதும், இறைவனுக்கு இணைகற்பிப்போர் மீதுமே அவனுக்கு அதிகாரம் உள்ளது. (அல்குர்ஆன் 16 : 99-100)
இந்த இரண்டு வசனங்கள் மூலமும் என்ன செய்தி சொல்லப்படுகிறது? ஏற்கனவே நாம்மால் முன்வைக்கப்பட்ட விளக்கம் தான் சரியானது என்பதை இவ்விரு வசனங்களும் சந்தேகத்துக்கு இடமின்றி உறுதிப்படுத்துகின்றன.
அதாவது, ஏற்கனவே நமது விளக்கத்தில் முஃமின்கள் விசயத்தில் கரீன்களைத் தவிர வேறெந்த ஷைத்தானிய ஜின்களுக்கும் நேரடியாக அந்த முஃமினை அனுகி, அவன் மீது ஆதிக்கம் செலுத்தும் அதிகாரம் சுத்தமாக இல்லையென்று கூறினோம். ஏனெனில், ஷைத்தானிய ஜின்கள் நேரடியாக அனுக முடியாதவாறு அந்த முஃமினை வானவர்கள் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று விளக்கம் சொன்னோம். ஆனால், கரீன்கள் எனப்படும் ஷைத்தானுக்கு மட்டும் அல்லாஹ் இதில் விதிவிலக்கு வழங்கியிருப்பதால், அவனுக்கு மட்டும் முஃமின், காஃபிர் என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் எல்லா மனிதர்களிடமும் அதிகாரம் உண்டு என்பதையும் ஆதாரங்களோடு விளங்கிக் கொண்டோம்.
அதே நேரம், அந்த மனிதன் முஃமின் அல்லாமல் ஒரு வழிகெட்டவனாகவோ, காஃபிராகவோ இருந்தால், அவனது வழிகேட்டின் தரத்துக்கு அமைய அவன் மீது இப்லீஸுக்கும், அவனைச் சார்ந்த ஏனைய ஷைத்தானிய ஜின்களுக்கும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் அதிகாரம் உள்ளது என்பதையும் விளக்கமாக முன்வைத்தோம்.
இந்த விளக்கங்களைத் தான் இவ்வசனங்கள் அழகாக உறுதிப்படுத்துகின்றன. அதாவது, அல்லாஹ்வை மட்டுமே சார்ந்திருக்கும் முஃமின்கள் மீது இப்லீஸுக்கு எந்தவிதமான நேரடி அதிகாரமும் இல்லை; மாறாக கரீன்கள் வாயிலாக வழங்கப் பட்டிருக்கும், வரையறுக்கப்பட்ட ஒரு மறைமுகமான ஆதிக்கம் மட்டுமே உள்ளது என்பதை இவ்வசனங்கள் தெளிவான மொழி நடையில் கூறுகின்றன.
அதே போல், அல்லாஹ்வைச் சாராமல், ஷைத்தான்களைச் சார்ந்திருக்கும் காஃபிர்கள், முஷ்ரிக்குகள், மற்றும் வழிகெட்டோர் போன்றவர்கள் மீது இப்லீஸுக்கும், அவனது ஏனைய ஷைத்தானிய ஜின்களுக்கும் பௌதீக ரீதியிலும், ஆன்மீக ரீதியிலும் நேரடியாகவே அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் அதிகாரம் இருக்கிறது என்பதையும் இவ்வசனங்கள் அழகாக உறுதிப் படுத்துகின்றன.
எனவே, இவ்வசனங்கள் மூலம், ஏற்கனவே நாம் முன்வைத்த விளக்கங்களின் ஒரு பகுதி இங்கு நிரூபனமாகி விட்டது. இனி அடுத்த பகுதிகள் குறித்த ஆதாரங்களையும் பார்ப்போம்.
இன் ஷா அல்லாஹ் வளரும்...
- அபூ மலிக்
Episode 33: கரீன் (கூட்டாளி) – தொடர்ச்சி - 3 |